இந்தியாவும் இந்தியும்
மத்திய அரசின் ’இந்தி திவஸ்’ பற்றிய அறிவிப்பு மீண்டும் இந்தித் திணிப்பு பற்றிய விவாதத்தைத் துவக்கியிருக்கிறது. இந்தியா சுதந்திர நாடான காலத்திலிருந்தே இந்தியின் ‘பெரியண்ணன் மனோபாவம்’ மற்ற மொழிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருந்து வருகிறது. இந்தி எப்படி மற்ற மொழிகளின் இருப்பைப் பற்றிய அறிவையே நம்மிடமிருந்து மறைமுகமாக இல்லாமல் ஆக்குகிறது என்பதை வைத்து மேற்கண்ட வாக்கியத்தை நியாயப்படுத்தலாம். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்த பின்னரும்(நல்லதுதான்), இந்தியின் ஆதிக்கத்தாலும் இந்திய மக்கள் மத்தியில் ஒருவகையான கற்பிதம் இயல்பாகத் தோன்றியது. அது என்ன கற்பிதம்? நாம் பொதுவாக ஒரு மாநிலத்துக்கென்று ஒரு அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிதான் இருக்குமென்றும் ஒரு மாநிலத்தில் ஒரு மொழிதான் பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது என்றும் கற்பிதம் செய்துகொள்கிறோம். அதாவது தமிழ்நாட்டில் தமிழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி என்று சமன்படுத்துகிறோம். இந்த சமன்படுத்தலால் இந்தி எத்தனை மொழிகளின்பால் தன் பெரும்பிம்பத்தினால் நிழல் படர வைத்திருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. ...