Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இந்தியாவும் இந்தியும்


          மத்திய அரசின் ’இந்தி திவஸ்’ பற்றிய அறிவிப்பு மீண்டும் இந்தித் திணிப்பு பற்றிய விவாதத்தைத் துவக்கியிருக்கிறது. இந்தியா சுதந்திர நாடான காலத்திலிருந்தே இந்தியின் ‘பெரியண்ணன் மனோபாவம்’ மற்ற மொழிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருந்து வருகிறது. இந்தி எப்படி மற்ற மொழிகளின் இருப்பைப் பற்றிய அறிவையே நம்மிடமிருந்து மறைமுகமாக இல்லாமல் ஆக்குகிறது என்பதை வைத்து மேற்கண்ட வாக்கியத்தை நியாயப்படுத்தலாம். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்த பின்னரும்(நல்லதுதான்), இந்தியின் ஆதிக்கத்தாலும் இந்திய மக்கள் மத்தியில் ஒருவகையான கற்பிதம் இயல்பாகத் தோன்றியது. அது என்ன கற்பிதம்? நாம் பொதுவாக ஒரு மாநிலத்துக்கென்று ஒரு அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிதான் இருக்குமென்றும் ஒரு மாநிலத்தில் ஒரு மொழிதான் பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது என்றும் கற்பிதம் செய்துகொள்கிறோம். அதாவது தமிழ்நாட்டில் தமிழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி என்று சமன்படுத்துகிறோம். இந்த சமன்படுத்தலால் இந்தி எத்தனை மொழிகளின்பால் தன் பெரும்பிம்பத்தினால் நிழல் படர வைத்திருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. விளைவு, கடைசியில் பீகாரில் ’பீகாரி’ மொழி பேசுவார்கள் என்கிற சமன்படுத்தலில் முடிகிறது.

          ’பீகாரி’ என்றொரு மொழியே கிடையாது என்பதே உண்மை. பீகாரில் ஐந்து பெரும்பான்மை மொழிகள் இருக்கின்றன. போஜ்புரி, மைதிலி, மகதி, பஜ்ஜிகா, அங்கிகா(ஆறாவதாக சாந்தாலி இருந்தது. இப்போது அது ஜார்க்கண்ட் பக்கம் சென்றுவிட்டது). வட இந்தியா முழுக்கவே இந்தி படர்ந்திருக்கிறது என்கிற கற்பிதத்தால் வட இந்தியாவில் பேசப்படும் பல மொழிகளின் இருப்பைப் பற்றிய அறிவு நமக்குக் கிட்டுவதில்லை. மத்திய பிரதேசத்தில் சத்தீஸ்கரி என்றோரு மொழி இருப்பதும் அதை இரண்டு கோடி பேர் பேசுகிறார்கள் என்பதும் சத்தீஸ்கர் மாநிலம் உருவான பிற்பாடுதான் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும். இது அத்தனைனையும் இந்தி என்கிற பெரியண்ணன் வந்து மறைத்துக்கொள்வதால் தெரிவதில்லை.

          இரண்டு வருடங்களுக்கு முன் நான் பஞ்சாப் சென்றிருந்தபோது சத்தியமாக பஞ்சாபி தெரியாமல் திணறித்தான் போனேன். வழியில் டெல்லியில் ஒருவர் ஆங்கிலத்தில், “பார்த்தீர்களா? உங்கள் தமிழ்நாடு மட்டும் இந்தியைக் கற்றிருந்தால் இன்று நீங்கள் என்னிடம் இந்தியில் உரையாடியிருக்கலாம் அல்லவா?”, என்றார். அதற்கு நான் சொன்ன பதில், “உங்களிடம் நான் இந்தியில் உரையாடுவதற்கு ஏன் ஏழு கோடி தமிழர்கள் இந்தி கற்க வேண்டும்?”, என்பதுதான். எனக்கு இந்தி கற்கும் தேவை இருக்கிறது; ஃபிரெஞ்சு கற்கும் ஆசை இருக்கிறது. நாக்கில் வெண்ணை தடவினாற்போல் பேசும் அவர்களின் மொழியின்பால் எனக்கு ஈர்ப்பு உண்டு. அதனால் நான் கற்றுக்கொள்ளப்போகிறேன். மாறாக இதே இந்தியையும் ஃப்ரெஞ்சையும் பள்ளியில் கட்டாயப் பாடமாக வைத்திருந்தால் நான் தமிழ், ஆங்கிலம், இந்தி, ஃப்ரெஞ்ச் ஆகிய நான்கு மொழிகளையும் சத்தியமாக வெறுத்திருப்பேன்.

          தமிழகம் எக்காலத்திலும் இந்தியை எதிர்த்ததில்லை. இந்தித் திணிப்பைத்தான் எதிர்த்தது. 1918-இல் சென்னையில் தட்சிண பாரத் இந்தி பிரச்சார் சபா உருவானது. 1922-இல் தமிழகத்தின் முதல் இந்தி ஆசிரியர் பயிற்சி மையம் துவங்கப்பட்டது. எங்கு தெரியுமா? ஈரோட்டில் பெரியார் வீட்டில்! இந்தி திணிக்கப்பட முயற்சிகள் நடந்தபோதுதான் பெரியார் அதனை எதிர்க்க ஆரம்பித்தார். மிக மிக எளிய தர்க்கம். தமிழகம் இந்தியை எதிர்த்திருந்தால் இன்று தமிழகத்தில் ஒரு இந்தி டியூஷன் சென்டர் கூட இருந்திருக்காது. ஆனால் அப்படியா இருக்கிறது நிலைமை? இந்தி கற்க வேண்டுமா? ஒரு நகருக்கு குறைந்த பட்சம் இரண்டு இந்தி கற்றுத்தரும் மையங்கள் இருக்கின்றன. சென்னையில் ஃப்ரெஞ்சு கற்கவேண்டுமா? அல்லையன்ஸ் ஃபிரான்சிஸ் இருக்கிறது. ஜெர்மன் கற்றுக்கொள்ள வேண்டுமா? க்யோத்தே இன்ஸ்டிட்யூட் இருக்கிறது. ரஷ்ய மொழி கற்றுக்கொள்ள வேண்டுமா? ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் இருக்கிறது. ஆக தமிழகத்தில் எந்த மொழியையும் விருப்பப்படி கற்றுக்கொள்ளலாம். பின்னே இது எப்படி இந்தி எதிர்ப்பாகும்?

          சரி, தமிழகம் மட்டும்தான் இந்தித் திணிப்பை எதிர்த்ததா என்றால் அதுவும் இல்லை. பல மாநிலங்களில் தனி மனித அளவில் எதிர்ப்பு இருந்தது. ஆனால் தமிழகம் அளவிற்கு எந்த மாநிலத்திலும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீவிரமாக இல்லை. ஆனால் தீவிரம் இல்லை என்பதற்காக மட்டும் எதிர்ப்பு இல்லை என்று கொள்ள முடியுமா? எதிர்ப்பு என்பது இரண்டு நிலைகளில் வரும். முதல் நிலை மக்களின் அதிருப்தி. இரண்டாம் நிலை அந்த அதிருப்தியை அரசியல் அரங்கில் எதிரொலிப்பது, மற்றும் அந்த மாநில அரசியல் களத்தில் அதற்கு ஒரு சரியான தலைமை அமைவது. இது இரண்டும் அமைவதற்கு முன்னால் அடிப்படையில் அந்த மாநிலத்தில் மாற்றத்திற்கு தயாராக ஒரு சமூக சூழ்நிலை இருந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் போராட்டம் வெற்றியடையும். ஏற்கனவேயே தமிழகத்திற்கும் இந்திக்கும் வரலாற்று ரீதியாக சம்பந்தமே இல்லாதிருந்த நிலையில் 1960-களில் இந்தியாவில் மேற்சொன்ன மூன்று காரணிகளும் இருந்த ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். சுயமரியாதை இயக்கம் மாற்றத்திற்கான சமூக சூழ்நிலையை ஏற்கனவேயே உருவாக்கியிருந்தது. மக்களின் அதிருப்தி இருந்தது. அதை அரசியல் அரங்கில் எதிரொலிக்க அண்ணா என்னும் தலைவர் கிடைத்தார். எனவே தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வெற்றியடைந்தது. பல மாநிலங்களில் இந்தி நேரடியாகவும் உருது மூலமாகவும் வரலாற்று ரீதியான தொடர்பை வைத்திருந்ததால் எதிர்ப்பு பெரிதளவில் இல்லை. சில மாநிலங்களில் எதிர்ப்பு தனி மனித அதிருப்திகளோடு முடிந்து போனது. உதாரணத்திற்கு ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா கர்நாடகத்தில் இந்தியைத் திணிக்கக்கூடாது என்றார். இப்படித் தனி மனிதக் குரல்கள் சில மாநிலங்களில் இருந்தாலும் அவை அரசியல் ஆக்கப்படவில்லை. ஆக, தமிழகம் மட்டும்தான் இந்தித் திணிப்பை எதிர்த்தது என்பதை ஏற்பதற்கில்லை.

          ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிகையான ’பஞ்ச் ஜன்யா’வில் இந்தியைக் கொண்டு ஆங்கிலத்தை விரட்ட வேண்டும் என்கிற கருத்தில் சென்ற வாரம் தலையங்கம் வந்திருக்கிறது. அது அவர்களின் கருத்துரிமை, சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தக் கட்டுரையில் இருக்கும் ஒரு செய்தி முக்கியமானது. அதாவது ஆங்கிலத்தை இந்தியைக்கொண்டு விரட்டும் இந்த முயற்சியில் நாம் ஆங்கிலத்தால் பெற்ற அறிவியல் அறிவையும் வளர்ச்சியையும் இழந்தாலும் பரவாயில்லை என்கிற ரீதியில் சென்றிருக்கிறது அக்கட்டுரை. அப்படிப்பட்டாவது நம் நாட்டில் இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக வைக்க வேண்டும் என்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியை இழந்தாலும் பரவாயில்லை என்றால் என்ன அர்த்தம்? எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இன்று ஆங்கில அறிவியல் சொற்கள் இல்லாமல் ஒரு சைக்கிளைக்கூட உற்பத்தி செய்ய முடியாது. மிதிவண்டியின் பாகங்களை இணைக்கும் நிறுவனம் முதலில் உதிரி பாகங்களின் எண்ணிக்கையையும் பரிணாமங்களையும் அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ‘quotation’ மூலமாக அனுப்ப வேண்டும். இத்தனை பால் பேரிங், இத்தனை ஸ்போக், இத்தனை ரிம், இத்தனை வால்வு என்று. இன்றைய இந்தியை வைத்துக்கொண்டு அது சாத்தியம் அல்ல. ஆனால் தொழில்நுட்பக் கையாடலில் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, ஆங்கிலத்தை விரட்ட வேண்டும் என்று சொல்வது நாட்டின் நன்மைக்காகப் பேசுவதுபோல் தெரியவில்லை. மாறாக மொழிவெறியில் வார்த்தைகளை விடுவதுபோலவே இருக்கிறது.

          தமிழகத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிற குரல் தமிழகத்திலேயே காலம் காலமாக இருந்துகொண்டுதான் வருகிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால் இன்று இந்திக்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மதவாத அமைப்பின் நோக்கத்திற்குத்தான் உதவுகிறார்கள். ஏனெனில் நம்மை ஆள்கிறவர்கள் இவர்களின் முன்னால் சென்ற மாதம் நின்று பவர்பாயிண்ட் ஸ்லைடு போட்டவர்கள். ஆக இவர்களின் அரசியல், இந்தித் திணிப்பை இந்தியாவில் கலாசார தேசியத்தை நிறுவும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது என்பதே. இந்த அரசியலுக்குள் விழுந்துவிட்டால் அதன் கோர விளைவுகள் நாளை நம் தலையில்தான் வந்து விடியும்.

          இந்தியாவை ஒரு கலாசார இழை இணைக்கிறது என்பதைப் பொதுமைப்படுத்த முயலும் போக்கே முதலில் கண்டிக்கத்தக்கது. சிக்கிம் 1975-ல்தான் இந்தியாவில் இணைந்தது. அப்படியென்றால் இணைவதற்கு முன்னால் அதற்கு வேறு கலாசாரம் இருந்ததா? இன்று கச்சத்தீவு நம்மிடம் இல்லை. அப்படியென்றால் அதில் இந்திய கலாசாரம் இல்லையா? அரசமைப்புச் சட்டமே இந்தியாவின் ‘composite culture’ என்றுதான் சொல்கிறது. அதாவது எத்தனையோ கூட்டுக் கலாசாரங்களின் தொகுப்பே இந்தியாவின் ’composite’ கலாசாரம். இந்தியா மொழி சார்ந்த தேசியத்தாலோ கலாசார தேசியத்தாலோ இல்லை. இந்தியாவில் இருப்பது மிகமிக எளிமையான நிலம் சார்ந்த தேசியம். இந்த அடிப்படை தெரியாமல் ஐரோப்பிய பாணியில் ஒரு மொழி சார்ந்த தேசியத்தை முன்வைத்தால் அது இந்திய ஒருமைப்பாட்டிற்குத்தான் ஆபத்து.

          இவர்களின் ரோல் மாடல் உண்மையில் சுவாரசியமானது. ஐரோப்பாவில் ஃபிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் மொழி சார்ந்த தேசியவாதம் உருவானது. ஃபிரான்சைப் பின்பற்றி ஒவ்வொரு நாடாக மொழிவாரியாக உருவாகின. இதில் ஃபிரான்ஸ் உருவாக அவர்கள் கொடுத்த விலை என்ன தெரியுமா? இன்று ‘காலிஷ்’ என்கிற மொழி ஃபிரான்ஸில் கிடையாது. அழிந்துவிட்டது. வேதியியல் ‘periodic table’-இல் ‘காலியம்’ அதன் நினைவை சுமந்துகொண்டிருக்கிறது. இந்த தேசியவாதம் இந்தியாவில் செல்லாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மொழி அடையாளத்தை முன்வைக்க இயலாத அளவிற்கு அத்தனையத்தனை மொழிகளும் அவற்றைப் பேசும் இனக்குழுக்களும் இந்தியாவில் இருக்கின்றன. அப்படியென்றால் எதைத்தான் ‘ரோல் மாடலாக’ வைத்துக்கொள்வது? எதையும் வைத்துக்கொள்ள முடியாது. நவீன இந்தியா மாதிரியான நாடு இதுவரை உலகின் தோன்றியதில்லை. நாம்தான் முதல் நாடு. எனவே நமக்கான பாதையை நாம் நம்முள்ளேயிருந்துதான் தேட முடியும். எப்படி ஐரோப்பிய மதச்சார்பின்மையை இந்தியாவுக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டோமோ, எப்படி அமெரிக்க கூட்டாட்சித் தத்துவத்தை இந்தியாவுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டோமோ, அப்படி நம்முடைய தேசியவாதத்தையும் நமக்கு ஏற்றவாறு நிலம் சார்ந்ததாக வைத்திருக்கிறோம். இல்லை, மொழி அடையாளம் தேவை, ஐநாவில் இந்தியைத்தான் இந்தியாவின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்துவோம் என்றால் என் மொழியை மதிக்காத அரசாங்கத்தை நான் ஏன் மதிக்க வேண்டும் என்கிற போக்குதான் வளரும்.

          நேரு பாராளுமன்றத்தில் “இந்தியாவில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை இந்தி பேசாத மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்றார். அது அரவணைத்தலா, மோசடியா என்பது பற்றி இங்கே பலர் அடித்துக்கொள்வார்கள், அது வேறு விஷயம். ஆனால் அவரின் அந்த அறிக்கைதான் அன்று தமிழகத்தில் சூட்டைத் தணித்தது என்பதை மறுக்க முடியாது. அவர் பாராளுமன்றத்தில் அறிக்கை விடுவதற்கு மூன்று ஆண்டுகள் முன்புதான் இலங்கையில் சிங்கள மொழி மட்டும் தேசிய மொழியானது. இன்று இந்தியா எப்படி இருக்கிறது, இலங்கை எப்படி இருக்கிறது? நான் பிரிவினைவாதம் பேசவில்லை. நான் எந்த விதமான இனம் சார்ந்த, மொழி சார்ந்த தேசியவாதத்தையும் முன்வைக்கவில்லை. நான் யதார்த்தம் பேசுகிறேன். கிழக்கு பாகிஸ்தானில் உருதுவைத் திணித்தார்கள். பிய்த்துக்கொண்டு வெளியே போய் வங்கதேசமானது. இது ஏதோ கி.மு. எட்டாம், ஏழாம் நூற்றாண்டில் நடந்ததில்லை. கடந்த ஐம்பதாண்டு கால உலக வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம் இது. சோவியத் யூனியன் வெற்றி பெற்று பல ஆண்டுகள் பிழைத்ததற்கு லெலினின் மொழியரவணைப்புக் கொள்கை ஒரு முக்கியக் காரணம். “வரலாற்றை வாசிக்காதவர்கள் அதன் தவறுகளைத் தொடர்வார்கள்”. ஐரிஷ்காரர் எட்மண்ட் புர்க் சொன்னது இது.

          இந்தித் திணிப்பு வேண்டாம் என்றால் உனக்கு தேசப்பற்று இல்லை என்றொரு அம்பு வருகிறது. தேசப்பற்றை ஒரு மொழியை வைத்து அளவிடும் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஒரு மொழியை அரசாங்கம் தூக்கிப்பிடிக்கிறது என்றால் அது அந்த மொழியைப் பேசாத மக்களின் மொழியடையாளத்தை அவமதிக்கிறது என்றே பொருள். உண்மையில் அவரவர் மொழியை அரசாங்கம் மதித்து சரிசமமாய் பாவித்தாலே இந்தியா தானாக உணர்வு ரீதியாய் ஒன்றுபட்டுவிடும். இந்தி இந்தியாவை இணைக்கும் என்றொரு தவறான பார்வை முன்வைக்கப்படுகிறது. உண்மையில் இந்தித் திணிப்பு இந்தியாவைப் பிளக்கவே செய்கிறது. எப்படி? ராமச்சந்திர குகா இந்திய ஜனநாயகத்திற்கு மூன்றாவது ஆபத்தாக மாவோயிசத்தை முன்வைக்கிறார். மாவோயிசம் சரியா தவறா என்பது வேறு விவாதம். ஆனால் இந்திய ஜனநாயகத்திற்கு அது ஒரு அச்சுறுத்தல். இந்தி இந்தியாவை இணைக்கும் என்கிறார்களே, உண்மையில் மாவோயிசம் இந்தியாவில் வெகு வேகமாக வளர்வதற்கு இந்தித் திணிப்பு ஒரு முக்கியக் காரணம் என்பது அவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு பொதுவான மொழி இருந்தால் மத்தியில் ஆட்சி செய்வது எளிது என்பது தர்க்க ரீதியாகக் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த எளிமையான ஆட்சிக்கு அந்த நாட்டின் ஒருமைப்பாடே விலையாகிவிடும் என்பதுதான் முரண். சரி, இந்தித் திணிப்பால் மாவோயிசம் எப்படி வளர்கிறது?

          இந்தியாவில் ‘கோண்டி’ என்றொரு மொழி இருக்கிறது. வடக்கு தெலங்கானா, வடகிழக்கு மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள ஐம்பது லட்சம் பேர் கொண்ட ஒரு பழங்குடி இனம் இம்மொழியைப் பேசுகிறது. திராவிட இனக்குடும்பம் எந்த மொழியிலிருந்து தோன்றியது என்று கேட்டால் நாம் அனைவரும் ஒரே குரலில் ‘தமிழ்’ என்போமா? ஆனால் தென் கிழக்காக சிந்து சமவெளி நாகரிகம் பரவியபோது கோண்டி மொழி பிறந்தது என்றும் கோண்டியிலிருந்துதான் மற்ற திராவிட மொழிகள் வந்தன என்றும் சிலர் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மொழி கோண்டி. ஆனால் இந்தியின் வருகைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோண்டி மொழியின் வரிவடிவம் தொலைந்துவிட்டது. மக்களும் காலப்போக்கில் தேவநாகரி வரிவடிவத்தில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதன் தீவிரத்தை எளிமையாக உணர்த்தவேண்டுமென்றால், ‘அம்மா இங்கே வா வா’, என்பதை ஃபேஸ்புக்கில் தமிழில் தட்டச்சத் தெரியாமல் ‘Amma inge va va’, என்று அடித்தால் எப்படி இருக்கும்? அதே போன்ற நிலை.

          இப்படி இந்தியால் மொழியடையாளத்தை சிறிது சிறிதாக அம்மக்கள் இழந்து கொண்டிருந்த நிலையில்தான் மாவோயிஸ்டுகள் காட்சிக்குள்ளே வருகிறார்கள். அவர்கள் கோண்டி மொழியைக் கற்றுக்கொண்டு அம்மக்களிடம் கோண்டி மொழியில் இயல்பாகப் பேசிப் பழகுகிறார்கள். எனவே இம்மக்களுக்கு ’இவன் நம் ஆள்’, என்கிற பிணைப்பு ஏற்படுகிறது. மேலும் தொலைந்துபோன கோண்டி வரிவடிவத்தை இவர்கள் மீண்டும் கண்டெடுத்து இம்மக்களுக்கு அளித்தார்கள். அவ்வளவுதான். மொத்தமாக இம்மக்கள் மாவோயிஸ்டுகள் பக்கம் சென்றுவிட்டார்கள். உண்மையில் அரசாங்கம் செய்திருக்க வேண்டிய வேலை இது. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? ‘இந்தி திவஸ்’ கொண்டாடுகிறார்கள். ஒரு சமூகத்தின் மொழி, மத, இன அடையாளத்தை யார் மதித்து சமமாக ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களின் பக்கம்தான் இயல்பாக அச்சமூகத்தின் விசுவாசம் செல்லும். ஆனால் அதை மறந்துவிட்டு, இந்தி இந்தி என்று ஒற்றைக்காலில் பிடிவாதம் பிடித்து, இன்று தண்டகாரண்யத்தில் பிரளயம் வெடிப்பதைக் கேள்விப்படும் படித்த அறிவுஜீவி எலைட் மனப்பாடக் கூட்டம், அவர்களின்மேல் தேசத்துரோகிகள் என்று பட்டம் சுமத்தி இராணுவத்தைக் கொண்டு நிலைமையை சமாளிக்க சொல்கிறது. ஒழிக்க வேண்டும்தான். எதை? இதற்கெல்லாம் காரணமான இந்தித் திணிப்பை. கவனிக்க வேண்டும் நான் இந்தியை ஒழிக்க சொல்லவில்லை. இதேபோல் அஸ்ஸாமில் மலையாளத்தைத் திணித்தாலும் குஜராத்தில் தமிழைத் திணித்தாலும் அது எதிர்க்கப்படவேண்டியதே.

          இந்தியாவில் அதிகமாகப் பேசப்படும் மொழி இந்தி(மும்மொழிக்கொள்கை உண்மையில் ஒரு தோல்வி), எனவே அதைக் கட்டாயமாகக் கற்றுக்கொள்ள வேண்டும், என்கிற தர்க்கம் சரியென்றால், உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழி மாண்டரின், வாருங்கள் போய் கட்டாயமாகக் கற்றுக்கொள்ளலாம். மீண்டும் இங்கே தேசபக்தி குறித்து கேள்வி வந்துவிடும், மாண்டரின் அந்நிய மொழி, இந்தி சொந்த மொழி என்று. இந்தியாவின் உருவாக்கத்தை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா ஒரு தேசம் மட்டுமன்று. அது ஒரு ஒன்றுபட்ட உலகின் மாதிரி வடிவம். நேருவிய இந்தியாவில் ஆயிரத்தெட்டு நொட்டைகள், சிக்கல்கள், துன்பங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் அடுத்தக்கட்டம் சர்வதேசியம்(இது அகண்ட பாரதமல்ல). நிரந்தர உலக அமைதிக்கு இந்தியாவிடம் மட்டும்தான் பதில் இருக்கிறது. மாறாக “ஆங்கிலம் என்னும் அந்நிய மொழியை ஏற்றுக்கொண்ட நீங்கள் சொந்த மொழியான இந்தியை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?”, என்று கேட்பது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு தென் ஆப்பிரிக்க கறுப்பின மனிதரிடம், “ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த நீங்கள் ஏன் எங்களிடம் அடிமையாக இருக்க ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?”, என்று கேட்பதுபோல் இருக்கிறது. ஆங்கிலேயரின் கீழ் நாம் அடிமைகளாக இருந்தோம். 1835-ல் மெக்காலே தலைமையில் ஆங்கிலத்தைத் திணித்தனர். நூற்றிப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் வெளியேறிய போது ஆங்கிலம் நம் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக மாறிவிட்டிருந்தது. அதனால் அதன்பால் ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும் இருக்கும் தொழில்நுட்பம் எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்தன. இன்றும் ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்கிறது. ஆனால் இந்திக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமே இல்லை. மீண்டும் மீண்டும் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டதுபோல் இந்தியையும் ஏற்றுக்கொள் என்று சொல்வது மொழியால் அடிமைப்படுத்துவதற்குத்தான் சமம். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

          சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை ஆட்சியாளர்களாலும் அதன் அரசமைப்பு சட்டத்தினாலும் தான் உலகிலேயே முதல் முறையாக 90 சதவீதம் வறுமையால் வாடிய ஒரு மிகப்பெரிய தேசத்தில் சர்வாதிகாரத்திற்கு மாறாக ஜனநாயகம் முளைத்து வெற்றியடைந்தது (ஆப்பிரிக்க கண்டத்தில் இன்னமும் சிக்கல் தீர்ந்தபாடில்லை). அப்போது பல சிக்கல்கள் இருந்தன. இந்தியா உடைந்துவிடும் என்று சர்ச்சில் பயமுறுத்தினார். இப்போதும் பல சிக்கல்கள் இருக்கின்றன. இன்று அரசின் தவறான கொள்கைகளினால் இந்தியா உடைந்துவிடும் என்று அருந்ததி ராய் நியாயமாக பயமுறுத்துகிறார். இருக்கிற பிரச்னையைத் தீர்க்குமா என்று அரசாங்கத்தைப் பார்த்தால் அது ’இந்தி திவஸ்’ கொண்டாடுகிறது; ஐ.நா.வில் இந்தியை முன்னிலைப்படுத்துகிறது; “இந்தி தெரியாவிட்டால் நான் என்ன ஆகியிருப்பேன்?”, என்று பிரதமரே பேசுகிறார். இருக்கிற பிரச்னைகளைத் தீர்க்காமல், பெரிதுபடுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவையெல்லாவற்றையும் இந்த அரசாங்கம் செய்கிறது.

          “ஒரு மனிதனின் அடையாளங்கள் அழிக்கப்பட்டால் அவனை ஓரணியில் திரட்டி அவனுக்குள் மாற்றுக் கட்சியினரின் மீது வெறுப்புணர்ச்சியை எளிதான வளர்த்துவிட முடியும்”, என்று எச்சரிக்கிறார் ஆஷிஸ் நந்தி. இரண்டாம் உலகப் போர் வரை உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்தது. சுதந்திர இந்தியா தன் முதல் தலைமுறையின்போது மாற்று வழியில் செல்ல முயன்றது. இன்று ஐரோப்பிய தேசியவாதங்களின் தாக்கத்தில் ஒரு மொழியை வைத்து நாட்டை இணைத்துவிடலாம் என்று நினைத்து, ஆரம்பித்த இடத்திற்கே செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் உலக வரலாறு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ள பாடம் இதுதான். இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் தேசத்தை இணைக்கிறேன் பேர்வழி என்று ஏதாவதொரு மொழியைத் திணித்தால், அந்த மொழியே இந்நாடு பிளவுபடக் காரணமாகிவிடும். ”வரலாற்றை வாசிக்காதவர்கள் அதன் தவறுகளைத் தொடர்வார்கள்”.


References:

Comments

  1. விஸ்ணு போன்றோர் தேவை உள்ள தேசம் ....வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உணர்ச்சி மேலிடாமல் தர்க்கம் வெளிப்படும் கட்டுரை.

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி