மகாத்மாவிற்கு முந்தைய காந்தி
11/05/16 அன்று தி.நகர் காந்தி வாசிப்பு வட்டத்தில் Charles R. DiSalvo எழுதிய “The Man Before the Mahatma: M.K.Gandhi, Attorney of Law" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் காந்தியோடான என் நட்பு இன்னும் ஆழமாக வேரூன்றியது என்றே சொல்லவேண்டும். திரு.அ.அண்ணாமலை அவர்கள் மிக நேர்த்தியாக எடுத்துச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை நினைவில் உள்ளவரை என் கருத்துகளையும் இடையிடையே நுழைத்துத் தருகிறேன். இப்பதிவில் உள்ள அனைத்தும் காந்தி மகாத்மா ஆவதற்கு முன்னால், அல்லது மகாத்மா என்ற அடையாளம் வரத் துவங்கியபோது நிகழ்ந்தவை. * காந்தியின் முக்கியமான பலம் பேச்சா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவித்துவமான மொழி நடை இல்லை. கம்பீரமான, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் குரல் இல்லை. தொடர்ந்து பல மணி நேரம் பேச உடம்பில் தெம்பும் இல்லை. காந்தியால் சில நிமிடங்களுக்கு மேல் சரளமாகப் பேச வராது. லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்து விட்டு பேச்சு வரவில்லை என்றால் எப்படி? அவர் தொழிலே பேசுவதுதானே? அங்குதான் காந்தி தன் பலத்தை அறிந்துக...