Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி

          11/05/16 அன்று தி.நகர் காந்தி வாசிப்பு வட்டத்தில் Charles R. DiSalvo எழுதிய “The Man Before the Mahatma: M.K.Gandhi, Attorney of Law" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் காந்தியோடான என் நட்பு இன்னும் ஆழமாக வேரூன்றியது என்றே சொல்லவேண்டும். திரு.அ.அண்ணாமலை அவர்கள் மிக நேர்த்தியாக எடுத்துச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை நினைவில் உள்ளவரை என் கருத்துகளையும் இடையிடையே நுழைத்துத் தருகிறேன். இப்பதிவில் உள்ள அனைத்தும் காந்தி மகாத்மா ஆவதற்கு முன்னால், அல்லது மகாத்மா என்ற அடையாளம் வரத் துவங்கியபோது நிகழ்ந்தவை.

* காந்தியின் முக்கியமான பலம் பேச்சா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவித்துவமான மொழி நடை இல்லை. கம்பீரமான, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் குரல் இல்லை. தொடர்ந்து பல மணி நேரம் பேச உடம்பில் தெம்பும் இல்லை. காந்தியால் சில நிமிடங்களுக்கு மேல் சரளமாகப் பேச வராது. லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்து விட்டு பேச்சு வரவில்லை என்றால் எப்படி? அவர் தொழிலே பேசுவதுதானே? அங்குதான் காந்தி தன் பலத்தை அறிந்துக்கொள்கிறார். அவரால் சரளமாகப் பேச முடியவில்லை. ஆனால் தான் சொல்ல விரும்புவதைப் பொட்டில் அடித்தாற்போல், கச்சிதமாக, மிக எளிய நடையில், தப்பர்த்தம் ஆகாமல் ஒரே பொருள்பட எழுத அவரால் முடிந்தது. விளைவு, ஏகப்பட்ட மனுக்களைப் போட ஆரம்பித்தார். தென் ஆப்பிரிக்காவில் அவர் வென்ற பல வழக்குகள் அவர் மனு எழுதிப்போட்டு வென்றதுதான். இவர் ஏதேனும் பேசினால்தானே நீதிபதி வாக்கியங்களைப் புரட்டிப்போட்டு மாற்றித் தீர்ப்பெழுத? வாதங்கள் எழுத்து வடிவில் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்ததனால் நீதிபதிக்கு அது ஒன்றுதான் உள்ளீடு. உள்ளீடோ குறைபாடற்று ஒரு ஓட்டையும் இல்லாமல் சாமர்த்தியமாக எழுதப்பட்டிருக்க, நீதிபதி நீதி தவற வழியே இல்லை! இந்த அதிகாரி இப்படிச் செய்தார், அந்த அதிகாரி அப்படிச் செய்தார், என்று மனு மேல் மனு போட்டு நீதிபதிகளுக்கே மனு மூலம் இப்படி தலைவலியை உண்டாக்க முடியுமா என்று உணர்த்தியவர் காந்தி. இப்படி காந்தி வென்ற வழக்குகள் ஏராளம். காந்தி இந்தியாவிற்கு வந்து பெரும் தலைவர் ஆன பிறகு அவர் பேசும் இடங்களிலெல்லாம் கூட்டம் அலைமோதும். அவர் பேசுவது அனைவருக்கும் புரியுமா என்றால் இல்லை. அதிகபட்சம் பத்து வரிசைகளாவது அவர் குரலொலி தாண்டுமா என்பதும் சந்தேகம்தான். ஆயினும் அவரைக் காண ஏன் அத்தனைக் கூட்டம் கூடியது? காந்திக்கு இருந்த பிம்பம் நிச்சயமாக அவரது பேச்சினால் கட்டமைக்கப்படவில்லை. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

* சரியாகப் பேசத் தெரியவில்லை என்று காந்தி சந்தித்த கேலிகளும் அதிகம்தான். காந்தி வாதாடுகிறார் என்றால் நீதிமன்றத்தில் ஒரு தனி கூட்டமே கூடிவிடுமாம். பலமுறை சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து நீதிபதி நிலைமையை அமைதிபடுத்தும்படி ஆகியிருக்கிறது. சில முறை நீதிபதியே போதும் பேசியது எனக்கு அப்படி இப்படிப் புரிந்தது என்பதுபோல் பேச்சை நிறுத்தச் சொல்லியதும் நடந்திருக்கிறது. பின்னாளில் காந்தி எதையும் தாங்கும் மனது பெற்றவராக மாறியதற்கு இந்த கேலிகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை காந்தி வளர்த்துக்கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் நூலாசிரியர். தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் சார்ந்த ஒரு நிகழ்வில் காந்தியைப் பேசச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். காந்தி வழக்கம்போல் சரளமாகப் பேச விருப்பப்படாமல் முழு பேச்சையும் எழுத்து வடிவத்தில் எழுதி கொண்டுபோயிருக்கிறார். ஆயினும் அவரால் எழுத்தைப் பார்த்துக் கூட சரியாகப் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் மேடையில் இருந்தவர் காந்தியை நிறுத்தி, காந்தி பேச நினைத்ததைத் தானே பேசிவிடுகிறேன் என்று கூறி காந்தியின் கையிலிருந்து காகிதத்தை வாங்கி அவர் வாசித்து முடித்திருக்கிறார்.

* சரக்கு ஏற்றுமதி குறித்த வழக்கு ஒன்று கையை மீறி சென்றுக்கொண்டிருந்தது. வாய்தா மேல் வாய்தா கேட்டு காந்தி நீதிபதியின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தார்.  மேலும் வழக்கைத் தன் பக்கம் சாதகமாக மாற்ற எப்படியெப்படியெல்லாமோ வாதிட்டுக்கொண்டிருந்தார். நாட்கள் நகர்ந்துக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் நீதிபதி பொறுமை இழந்து, லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்து முடித்த காந்தியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார். “மிஸ்டர் காந்தி, நீங்கள் ஏற்றுமதி சட்டத்தை முதலில் படித்துப் பார்த்திருக்கிறீர்களா?”. நீதிமன்றம் ஒருகணம் அமைதியாகிவிட்டது. ஒரு பாரிஸ்டரைப் பார்த்து, அவர் இந்தியராக இருந்தாலும், இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டாரே நீதிபதி என்று. ஆனால் காந்தியிடமிருந்து சட்டென்று பதில் வந்தது, “இல்லை!”, என்று. நீதிபதி வெலவெலத்துப் போய்விட்டார். ஒரு பாரிஸ்டரைப் பார்த்து அப்படிக் கேட்டது ஒருபுறம் என்றால் பாரிஸ்டர் படித்து வந்த ஒருவர் அவரையே மிஞ்சி உண்மையை உள்ளபடி ஒப்புக்கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. படித்த ஞாபகம் மறந்துவிட்டது என்று சாக்காவது சொல்லியிருக்கலாமே, உண்மையை தைரியமாகப் பேசிவிட்டாரே என்று திக்குமுக்காடிப்போய்விட்டார் நீதிபதி. பின்னர் வழக்கம்போல் இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. தீர்ப்பு காந்தியின் தரப்பிற்கு சாதகமாக வந்தது.

* காந்தி தன் வழக்கில் கட்சிக்காரர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் அவரைக் காப்பாற்ற முயலமாட்டார். அது சத்தியத்திற்கு எதிரானது என்று தீர்மானமாக நம்பினார். காந்தி தென் ஆப்பிரிக்காவில் ஒரு கருப்பின மனிதர் சார்பாகவும் வாதாடியதில்லை. அனைத்துமே இந்தியர்கள் சார்பாகத்தான். ஏன் அப்படி, ஏனென்றால் காந்தி இப்படி, என்று இன்று ஏராளமான கட்டுரைகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் காந்தி கறுப்பின மக்களின் இயக்கங்களுக்கு ஆதரவாக எண்ணற்ற கட்டுரைகளைத் தனது ‘Indian Opinion' பத்திரிகையில் எழுதியிருக்கிறார் என்பதே உண்மை. இதையெல்லாம் காந்தி செய்தாலும் கூட  இன்றும் ஆங்கிலேயர்கள் இந்தியர்கள்பால் செலுத்திய அநீதியை எதிர்த்த காந்திக்குள்ளும் நிறவெறி இருந்ததா என்றெல்லாம் கருத்துகள் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது காந்தியை மறுவாசிப்பு செய்வது மிகவும் அவசியமாகிறது. காந்திக்கு இந்தியர்கள் சார்பாகப் போராடவே நேரம் சரியாக இருந்தது என்று எளிமைப்படுத்தவும் செய்யலாம். அவர் எழுதிய கடிதங்களைத் தோண்டித் துருவி அவர் பிம்பத்தை உடைக்கவும் முயலலாம். பலபேர் முயன்று தோற்றே இருக்கிறார்கள். ஆனால் காந்தி குறித்த வாசிப்பு நடைபெற்றே தீரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மகாத்மா என்பவர் வானத்திலிருந்து கீழே குதித்துவிடவில்லை, அவரை அப்படி ஆக்குகிறோம் என்றால் நாம் அவரிடமிருந்தும் அவரின் வாழ்க்கை முறைகளிடமிருந்தும் தப்பித்துக்கொள்ள முயல்கிறோம், உளவியல் ரீதியாக காந்தியிடம் தோற்றுப்போய்ப் பலவீனமடைகிறோம் என்றே அர்த்தம். அவர் நம்மைப்போல நம்மிடையே உலாவி, கொஞ்சம் கொஞ்சமாகவே உருவானார் என்ற உண்மையை முதலில் ஏற்றுக்கொண்டால்தான் காந்தியின் முறைகளை முழுமைவாதம் என்று கடக்காமல் பின்பற்றவோ நடைமுறைப்படுத்தவோ, ஏன், நிறுவனமயப்படுத்தவோ கூட முடியும்.

* காந்தி இந்தியாவில் செய்த முதல் சத்தியாகிரகமான சம்பாரன் சத்தியாகிரகம் உண்மையில் சத்தியாகிரகமே அல்ல. காந்தி ஒன்றும் இண்டிகோ விவசாயிகளுடன் இணைந்து தரையில் அமர்ந்து  முழுவீச்சில் போராடவில்லை. இப்படி ஒரு பாரபட்சமான முறை இருக்கிறது என்பதைத் தெளிவாக அவருக்கே உரித்த பாணியில் எழுதி வெட்ட வெளிச்சமாக்கினார். ஆங்கிலேய அரசாங்கம் வழிக்கு வந்தது.

* உலகில் அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்வி, எப்படி ஒரு பெரும் சக்தியான பிரிட்டனை காந்தியால் வன்முறை இல்லாமல் வழிக்குக் கொண்டு வர முடிந்தது என்பது. இங்குதான் பலரும் காந்தியை ஆங்கிலேயரின் கைக்கூலி என்றெல்லாம் விமர்சிப்பார்கள். பகத்சிங்கைத் தூக்கில் போட்டார்கள், காந்தியை ஏன் தூக்கில் போடவில்லை என்ற ரீதியில்தான் பெரும்பாலான கட்டுரைகள் செல்லும். காந்தியின் வெற்றியின் இரகசியம் மிக எளிதானது. மாற்றான் வலியை அறித்துக்கொள்ளுதல். பிரிட்டன் உலகிற்குத் தான் அளித்த கொடை என்று பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொள்வது, தன்னுடைய சட்டத்தின் ஆட்சியை (Rule of Law). காந்தி படித்ததோ பாரிஸ்டர். ஆங்கிலேய நீதி முறையின் மீது காந்திக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. சில வழக்குகளில் நீதிபதிகளே நிறவெறியர்களாக இருப்பதை காந்தி கண்டாலும் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையை காந்தி இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். அச்சட்டங்களின் மூலமாகவே காரியத்தை சாதித்துக்கொள்ளும் கலையைக் கற்றார். சதுரங்க ஆட்டத்தில் தோற்கப்போகிறோம் என்றால் என்ன செய்வோம்? குறைந்தபட்சம் டிரா செய்யவாவது முயற்சிப்போம் இல்லையா? அதுபோல் வழக்கு தோற்கப்போகிறது என்றால் தண்டனையின் கடுமையை எவ்வாறு குறைக்கலாம் என்பது காந்தியின் அடுத்தக்கட்ட வியூகமாக இருக்கும். அனைத்தும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் வேறா? அடித்து ஆடுவார் காந்தி. பல வழக்குகளில் தண்டனை குறைக்கப்படும். காந்தியின் இந்த சட்ட அறிவு பின்னாளில் மகாத்மா ஆனபிறகு பல முறை உதவியிருக்கிறது. காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் நேரு காந்தியிடம் அழாத குறையாகக் கேட்டார், ஏன் கையெழுத்துப் போட்டீர்கள் என்று. இந்திய சுதந்திரக் கோரிக்கையை ஆங்கிலேயர்களிடம் விற்றுவிட்டோம் என்று இப்போது பழிப்பார்களே, என்று கடிந்துக்கொண்டார். அதற்கு காந்தி, “நீங்கள் போய் இர்வினுடன் பேசுங்கள், இந்தியாவுக்காக பிரிட்டன் கீழிறங்கி வருமாறு செய்துவிட்டீர்களே இர்வின் என்று தன் நாட்டில் பழிப்பார்கள் என்று புலம்புவார்”, என்றார். அதுதான் காந்தி. எதிராளியிடம் எவ்வளவு தூரம் சமரசம் செய்வது, அவரை எவ்வளவு தூரம் சமரசம் செய்ய வைப்பது என்ற கலையை அவர் அறிந்து வைத்திருந்தார். இதற்குக் காரணம் காந்திக்கு ஆங்கிலேய சட்ட முறைகள் மீதிருந்த அறிவே என்கிறார் நூலாசிரியர்.

* ஆங்கிலேய சட்ட முறைகள் குறித்த அறிவு காந்திக்கு மேலும் பல இடங்களில் உதவியிருக்கின்றன. நாம் பொதுவாகவே வழக்கு, நீதிமன்றம் என்றாலே பயப்படுவோம் இல்லையா? ஆயுள் தண்டனையும் தூக்கு தண்டனையும் நம் கண் முன் வந்துபோகும். ஆனால் காந்திக்குத் தெளிவாகத் தெரியும் எந்தத் தவறை செய்தால் எவ்வளவு தண்டனை கிடைக்கும் என்று. காந்தி ஏன் தூக்கிலிடப்படவில்லை? ஏனென்றால் தூக்கில் போடும் அளவிற்கு காந்தி எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை, அவ்வளவே! சரி, காந்தி இந்த அறிவை எப்படிப் பயன்படுத்தினார்? பதில், சட்ட மறுப்பு இயக்கத்தின் மூலமாக. இந்தியா வருவதற்கு முன்னால் தென் ஆப்பிரிக்காவிலேயே வெற்றிகரமாக இதை செய்துகாட்டியவர் காந்தி. முதலில் மக்கள் எந்த சட்டத்தை மீறப்போகிறார்கள், அதற்கு என்ன தண்டனை என்பதை அவர்களுக்குப் புரியவைத்துவிட்டாலே பயம் குறைந்துவிடும். அப்படித்தான் 1900-களின் நடுப்பகுதியில் காந்தியால் சத்தியாகிரக சட்டமறுப்புப் போராட்டங்களை நடத்தமுடிந்தது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு நாட்கள் தான் சிறை, வாருங்கள் என்று அழைத்துச் சென்று விடுவார். இது வெளியே தெரியவில்லை என்றால் சிறை சென்றதில் பயனில்லை அல்லவா? எனவே போராட்டம் இந்த இடத்தில் இந்த நேரத்தில் துவங்குகிறது என்று உலகின் பல இடங்களில் இருக்கும் தன் நண்பர்களுக்கும் குறிப்பாக இந்தியத் தலைவர்களுக்கும் செய்தி அனுப்பிப் பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். இப்போது ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி வரும் இல்லையா? இதுதான் எதிராளியின் வலியறிந்து செயல்படுதல். இதுவே ஹிட்லரின் ஜெர்மனியாக இருந்திருந்தால் காந்தியை சுட்டு வீழ்த்தி நகர்ந்திருப்பார்கள். பிரிட்டனின் சட்ட ஆட்சி காந்தியின் முறைகளுக்கு ஏற்றவையாக இருந்தன, அல்லது அவைகளுக்கு ஏற்றாற்போல் தன் முறைகளை வகுத்துக்கொண்டார் காந்தி.

* சரி, ஏன் இந்தியா வந்தவுடன் காந்தி சட்டமறுப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை? இந்தியா வந்து பதினைந்து ஆண்டுகள் கழித்து 1930-ல் தான் சட்ட மறுப்பு இயக்கமே துவங்கியது. ஏன் இத்தனை கால அவகாசம்? காரணம் 1915-ல் காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணம். இந்தியாவின் ஏழ்மையையும் வறுமையையும் காந்தி காண்கிறார். இவர்களிடம் போய் சட்டத்தை மீறுங்கள் என்று சொன்னால் போராட்டம் நடத்தி சட்டத்தை மீறி சிறை செல்பவர் காந்தி ஒருவராகத்தான் இருப்பார், உடன் ஒருவரும் வர மாட்டார்கள். இதுவே உண்மை. மக்களிடையே சுதந்திர உணர்வையும் சட்ட மறுப்பிற்கான தைரியத்தையும் ஊட்டி ஒரு பெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்க நிச்சயமாக கால அவகாசம் தேவைப்படும் என்று காந்தி உணர்ந்திருந்தார். ஆகவேதான் இந்தியாவில் காந்தியின் முதல் வெகுசன இயக்கம் ஒத்துழையாமை இயக்கமாக இருந்தது. அதில்தால் எந்த சட்டமும் மீறப்படாதே! அரசாங்கப் பள்ளிக்குப் பிள்ளையை அனுப்ப மாட்டேன், உன் நாட்டுத் துணிகளை அணிய மாட்டேன், உன் அரசாங்க வேலை எனக்குத் தேவை இல்லை, இப்படித்தான் ஒத்துழையாமை இயக்கம் சென்றது, இதில் எந்த காரணத்தை வைத்து தண்டனை கொடுக்க முடியும்? முதல்முறையாக ஒன்றும் செய்ய முடியாமல் சும்மா நின்ற காவல்துறையை அம்மக்கள் கண்டார்கள். விளைவு, தைரியம் பிறந்தது. இப்படித்தான் காந்தி இந்தியாவில் மக்கள் இயக்கத்தைப் படிப்படியாக வளர்த்தார். அவர் ஒன்றும் இந்தியாவில் ஏனோதானோ என்று போராட்டம் நடத்தவில்லை. காந்தியின் போராட்ட முறை அறிவியல் ரீதியானது, படிப்படியான செயல்படுத்தல் மூலமாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை அசைத்துப் பார்ப்பது. இவைகளுக்கு காந்தியின் சத்தியமும் அந்த சத்தியம் கொடுத்த தைரியமும் துணையாக இருந்தன. அதே தைரியம் அவரை ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தவும் வைத்தது. தோற்றப் பொலிவு இல்லாமல், குரல் வலிமை இல்லாமல் வெறும் சட்ட அறிவை வைத்தும் மக்களிடையே நம்பிக்கையை விதைத்தும் ஒரு ஆயுதமேந்தா வெகுசன இயக்கத்தை நடத்தி, அதன் அங்குசத்தைத் தன்னிடம் இறுதிவரை வைத்திருந்த தலைவர் உலகிலேயே காந்தி மட்டும்தான். அப்படித்தான் சௌரி சௌரா நிகழ்விற்குப் பிறகு அவரால் இயக்கத்தை விளக்கணைப்பதுபோல் நிறுத்த முடிந்தது.

* தென் ஆப்பிரிக்காவில் தன் நண்பருக்கு எதிராகவே வழக்கு ஒன்றைத் தொடுத்தார் காந்தி. அவர் பணியை அவர் சரியாக செய்தால் நான் ஏன் வழக்கு போடப்போகிறேன் என்றார்! காந்தி கடைபிடித்த சத்தியம் அவருக்கு அசாதாரணமான தைரியத்தைக் கொடுத்தது. இத்தனைக்கும் அந்த நண்பர் டர்பனில் நடந்த கல்வீச்சிலிருந்து காந்தியைக் காப்பாற்றியவர். சட்ட நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்து, அதன்மூலம் எண்ணற்ற காரியங்களை காந்தி சாதித்தாலும், தன்னை யாரேனும் அவமதித்தால் அதே சட்டத்தின் துணையை நாடமாட்டார். டர்பனில் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் பிடிபட்டபோது காந்தியிடம் வாக்குமூலம் கேட்டார்கள். “சம்பந்தப்பட்டவன் நானாக இருந்தால் சட்டத்தின் உதவியை நாட மாட்டேன், ஏனெனில் என்னை அந்த சம்பவம் பாதிக்காது, போகட்டும் விடுங்கள்”, என்றார் நிதானமாக! அதுதான் காந்தி.

Comments

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்