சென்னை 377
Wall painting at Chennai Central by NIFT ‘கல்லூரி சாலை’ பாடலில் வரும் அகலமான செட் சாலையைக் காட்டி “மெட்ராஸ் காட்றாங்க பாரு!”, என்று என் பாட்டி எனக்கு சோறூட்டியதுதான் மெட்ராஸ் பற்றிய என் முதல் நினைவு. சூளைமேட்டில் இருக்கும் அத்தை வீட்டுக்கு செல்லும் வழியில் கூவத்தைக் கடந்தபோது முதன் முதலாக என் மூக்கு பொத்தப்பட்டது இரண்டாவது நினைவு. ஆனால் சென்னைக்கு வந்தபிறகு இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட நினைவுகளை இந்நகரம் எனக்குத் தந்துவிட்டது, தந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் ஆர்வம் வந்த புதிதில் சென்னையின் கடந்த காலத்தை கற்பனை செய்து பார்த்ததுண்டு. தேவன் பார்த்த ‘டிராம் ஓடிய மெட்ராஸ் ‘ரஸ்தா’க்கள்’, ‘ரத்தம் ஒரே நிற’த்தில் வரும் கறுப்பர் நகரம், போன்றவற்றை சிறுவயதிலேயே வாசித்துவிட்டதால், சென்னை சாதாரண நகரில்லை, நெடும் வரலாற்றைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் இரசவாத நகரென முதலிலேயே தெரிந்துவிட்டது. அதன் சரித்திரப் பக்கங்களை அவ்வப்போது நமக்குத் திறந்துகாட்டும் அழகே தனி. அப்படித்தான...