Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சென்னை 377

Wall painting at Chennai Central by NIFT
          ‘கல்லூரி சாலை’ பாடலில் வரும் அகலமான செட் சாலையைக் காட்டி “மெட்ராஸ் காட்றாங்க பாரு!”, என்று என் பாட்டி எனக்கு சோறூட்டியதுதான் மெட்ராஸ் பற்றிய என் முதல் நினைவு. சூளைமேட்டில் இருக்கும் அத்தை வீட்டுக்கு செல்லும் வழியில் கூவத்தைக் கடந்தபோது முதன் முதலாக என் மூக்கு பொத்தப்பட்டது இரண்டாவது நினைவு. ஆனால் சென்னைக்கு வந்தபிறகு இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட நினைவுகளை இந்நகரம் எனக்குத் தந்துவிட்டது, தந்துகொண்டிருக்கிறது.

          வரலாற்றில் ஆர்வம் வந்த புதிதில் சென்னையின் கடந்த காலத்தை கற்பனை செய்து பார்த்ததுண்டு. தேவன் பார்த்த ‘டிராம் ஓடிய மெட்ராஸ் ‘ரஸ்தா’க்கள்’, ‘ரத்தம் ஒரே நிற’த்தில் வரும் கறுப்பர் நகரம், போன்றவற்றை சிறுவயதிலேயே வாசித்துவிட்டதால், சென்னை சாதாரண நகரில்லை, நெடும் வரலாற்றைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் இரசவாத நகரென முதலிலேயே தெரிந்துவிட்டது. அதன் சரித்திரப் பக்கங்களை அவ்வப்போது நமக்குத் திறந்துகாட்டும் அழகே தனி. அப்படித்தான் எனக்கு சென்னை பிரான்ஸ்சிஸ் வொயிட் எல்லீஸை அறிமுகம் செய்து வைத்தது.

          சென்னையின் சாலைகளுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்று நான் அவ்வப்போது தேடுவதுண்டு. அப்படி சாந்தி திரையரங்கிற்கு அருகே எல்லீஸ் ரோடுக்கு சென்று ஒரு ஓரமாய் அமர்ந்து யார் இந்த எல்லீஸ் என்று தேட ஆரம்பித்தபோது பல சிலிர்ப்புகளை அத்தேடல் தந்தது. 1810-ல் மெட்ராஸின் கலெக்டராக இருந்தவர். திராவிட மொழிகள் ஒரு தனி மொழிக்குடும்பம் என்று முதன்முதலில் வகைப்படுத்தியது இவர்தான். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் முன்னுரையில் கால்டுவெல் இவரைக் குறிப்பிடுகிறார். சில குறட்பாக்களை மொழிபெயர்ப்பு வேறு செய்திருக்கிறார். அவரைப்பற்றி வாசித்தபிறகு அவர் பெயர் தாங்கிய தெருவின் பெயர்ப்பலகையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தேன். அது தந்த அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பிறகு இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் எல்லீஸின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் கிணற்றுக் கல்வெட்டைக் காண வேண்டும் என்று அவர் குறித்த நினைவுகூரல் நீண்டுக்கொண்டே சென்றது. சென்னை தன்னுள்ளே வைத்திருக்கும் வரலாற்றுப் புதையல்களைக் கண்டெடுக்கும்போது நாம் கடந்தகால மெட்ராஸுடன் உரையாடுகிறோம். அப்படித்தான் அடையாறு யுத்தம் பற்றி வாசித்தபோது சென்னைக்குள் ஒரு யுத்த களமே இருக்கிறது என்று தெரிந்தது. அப்படித்தான் அன்னி பெசண்ட் இங்கு நடமாடி இன்னும் நூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை என்றும் தெரிந்தது.

          சென்னையில் என் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு அதைக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தோ மிதிவண்டியிலோ அளப்பது. கொருக்குப்பேட்டை ரெயில் கிராசிங் அருகே இருக்கும் சிறுத்தெருக்கள், பர்மா பஜாரில் மனித ஈக்களால் மொய்க்கப்படும் அத்தோ கடைகள், அர்மேனியன் தெரு அரிசி மண்டிகள், காசிமேடு போட் பார்க்கிங், பெசன்ட் நகர் இரவுநேர டர்டில் வாக், சென்ட்ரல் ஜென்லாஸ்பத்திரிக்கு வெளியே அருகருகே உள்ள தபால் பெட்டியும் தொலைபேசியும், என ஒவ்வொன்றும் பல காலமாற்றங்களையும் கதைகளையும் சொல்லும். பாரதி நடந்த மெரினா கடற்கரை, நேரு திறந்த கல்லூரிகள், திப்பு சுல்தானின் பீரங்கி உள்ள எழும்பூர் அருங்காட்சியகம், மண்ணெண்ணெய் விற்ற வ.உ.சி, எம்டன் கப்பல் வீசிய குண்டுகள், நேப்பியர் பாலத்தின் கல்வெட்டில் உள்ள இந்திய பொறியியலாளர்களின் பெயர்கள் என தெருவுக்குத் தெரு சென்னை வரலாறு பேசுகிறது.

          நாம் ஒரு சென்னைவாசி என்று எந்த சிக்கலுமில்லாமல் நம்மால் அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனைக்கு என் நண்பனை இரத்தம் கொடுக்க அழைத்துச்சென்றபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது. அருணாசலப் பிரதேசத்திலிருந்து மருத்துவம் பெற இங்கு வந்தவருக்கு இரத்தம் தந்தபோது அவர் தம்பி, “என் அண்ணனுக்குள் இப்போது மெட்ராஸ் இரத்தம் ஓடுகிறது” என்றார். மதராஸி என்ற பொருளில் அல்ல, இந்த நகரம் அவர் அண்ணனுக்காக இரண்டு நபர்களை அனுப்பியது என்ற நன்றியில் எங்களை அவர் மெட்ராஸ்காரர்களாகப் பார்த்தார். வேறொரு மருத்துவமனையில் விஜயவாடாவிலிருந்து தன் அப்பாவின் மருத்துவத்திற்காக வந்திருந்தவர் சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு, “Thank you, son of Chennai” என்ற குறுஞ்செய்தியை அனுப்பி தன் தந்தையைக் காப்பாற்றிய சென்னை என்று தொடர்புபடுத்திக்கொண்டார்.

          சென்னையில் முரண்களும் ஏராளம். தெருநாய்களைப்போல் சாலையில் குறுக்கும் நெடுக்குமாகத் திரியும் மான்கள் உள்ள நிசப்த ஐ.ஐ.டிக்கு வெளியே நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள், ஒரு பெருநகரத்திற்கு உள்ளேயே தேசியப்பூங்கா. எக்ஸ்பிரஸ் அவெனியூவைவிட்டு வெளியே வந்தால் அண்ணா அக்கா என்று கூவியபடி இருபது ரூபாய் வாட்டர் கலர் சித்திர புத்தகம் விற்க சிறுவர்கள் ஓடி வருவார்கள். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சாட்டையால் முதுகில் அடித்துக்கொண்டும் நம் காலில் விழுந்தும் சிறுவர்கள் காசு கேட்பார்கள். அண்ணா சமாதிக்கு அம்மாவைக் கூட்டிச்சென்று வரலாறு பேசியபோதும் சிட்டி சென்டரிலிருந்து ஒரு நிமிடம் நடந்து அது மறைத்துக்கொண்டிருக்கும் சேரியை அடைந்து இதையும் பாருடா என்று என் தம்பியிடம் காட்டியபோதும் சென்னையின் கதையை நாம் தேடப்போய் அதன் கதைசொல்லியாக நாமே மாறிவிடுகிறோம் என்று புரிந்தது. அப்படித்தான் சென்னை உயிர்த்திருக்கிறது, அதன் கதைகளால், அதன் கதைசொல்லிகளால்.

          சென்னையின் எதிர்காலத்தின்மீது கவலை இல்லாமல் இல்லை. ஆம்புலன்ஸ் சிக்கிக்கொள்ளும் வாகன நெரிசல்களில் பல கார்களில் ஓட்டுனர் மட்டுமே இருக்கிறார்கள். சென்னையை நேசித்தாலும், “எல்லாரும் இங்க வந்துட்டா அப்போ ஊர்ல யாரு இருப்பாங்க? நான் கிளம்பறேன்”, என்று சொல்லி என் நண்பன் கிளம்பியே சென்றுவிட்டான். கார் உற்பத்தி என்றால் சென்னை, பொறியியல் கல்லூரிகள் என்றால் சென்னை, ஐ.டி. என்றால் சென்னை, சினிமா கனவில் இருந்தால் சென்னை. பரவலாக்கமோ புணரமைப்போ செய்யாவிட்டால் ஒருநாள் தன் சுமை தாங்காமல் சென்னை விழும், அதையும் தன் கதைகளோடு ஒன்றாக ஆக்கியபடி. பிறந்தநாள் அதுவுமாக அது எதற்கு? வெள்ளமீட்பின்போது இளைஞர் ஆற்றலுக்கும் மனிதத்திற்கும் அடையாளமாக சென்னை காட்டப்பட்டது சென்னைக்கதையின் மற்றொரு அத்தியாயமே. கூவத்தை வெள்ளம் சுத்தப்படுத்திய கதை, சென்னைக்கு வந்திருக்கும் மெட்ரோ சொல்லப்போகும் கதை, என் கதை, உங்களின் கதை என அனைத்தையும் தாங்கியபடி உயிர்த்து நகர்ந்துக்கொண்டிருக்கிறது இந்த அற்புத நகரம். #Chennai377

Comments

  1. நிறைய புதிய கண்ணோட்டம், இந்த கட்டுரையில் இருந்து தெரியவருகிறது விஷ்ணு அண்ணா

    ReplyDelete
  2. bro your huge help is needed to chennai in the next four months... huge rain is expected but same old structures lakes roads ......

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி