புனிதமற்ற விவசாயம்; குறைகளுள்ள விவசாயி
அடுத்த பொருளாதார நெருக்கடி வரும்போது ஐ.டி. துறையை ஒரே ஒரு மாதம் புனித சேவையாக மாற்றிவிடுவோம். ‘ஐ.டி.யும் ஒரு தொழில்தானே’ என்று யாராவது எழுந்தால், “இந்தியாவின் முதுகெலும்பையா தொழில் என்று கொச்சைப்படுத்துகிறாய்” என்று உட்கார வைப்போம். ஒவ்வொரு புராடக்டையும் நான்கு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு அரசாங்கம் கொள்முதல் செய்யட்டும். ‘ஐ.டி.-யில் பணிபுரிபவர் மானஸ்தர், உயிரை விடுவாரே தவிர ஐ.டி.-யை விட மாட்டார்’ என்று ஏற்றிவிடுவோம். ‘இயற்கை ஐ.டி. செய்வோம்’ என்று கம்ப்யூட்டர் கேபிள்களைப் பிடுங்கிவிட்டு சிலேட்டு பல்பத்தைக் கையில் கொடுத்துவிடுவோம். “ஐ.டி.காரர் ஆபீசில் கால் வைத்தால்தான் நம்மால் இண்டெர்நெட்டில் கை வைக்க முடியும்” என்று ஒரு பழமொழியை உருவாக்கி சுற்றில் விடுவோம். ஐ.டி. தொழிலை விட்டு அவர்கள் வெளியேறி விடாதவாறு அருகே பிற தொழில்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். வீட்டு வாடகை தரவில்லையென்றால் குடும்பத்தை நடுத்தெருவிற்கு இழுத்துவிடுவேன் என்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்காரர் மிரட்டட்டும். குறைந்தபட்சம் ஒரு வாரம் தாங்க முடிய...