Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புனிதமற்ற விவசாயம்; குறைகளுள்ள விவசாயி

          அடுத்த பொருளாதார நெருக்கடி வரும்போது ஐ.டி. துறையை ஒரே ஒரு மாதம் புனித சேவையாக மாற்றிவிடுவோம். ‘ஐ.டி.யும் ஒரு தொழில்தானே’ என்று யாராவது எழுந்தால், “இந்தியாவின் முதுகெலும்பையா தொழில் என்று கொச்சைப்படுத்துகிறாய்” என்று உட்கார வைப்போம். ஒவ்வொரு புராடக்டையும் நான்கு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு அரசாங்கம் கொள்முதல் செய்யட்டும். ‘ஐ.டி.-யில் பணிபுரிபவர் மானஸ்தர், உயிரை விடுவாரே தவிர ஐ.டி.-யை விட மாட்டார்’ என்று ஏற்றிவிடுவோம். ‘இயற்கை ஐ.டி. செய்வோம்’ என்று கம்ப்யூட்டர் கேபிள்களைப் பிடுங்கிவிட்டு சிலேட்டு பல்பத்தைக் கையில் கொடுத்துவிடுவோம். “ஐ.டி.காரர் ஆபீசில் கால் வைத்தால்தான் நம்மால் இண்டெர்நெட்டில் கை வைக்க முடியும்” என்று ஒரு பழமொழியை உருவாக்கி சுற்றில் விடுவோம். ஐ.டி. தொழிலை விட்டு அவர்கள் வெளியேறி விடாதவாறு அருகே பிற தொழில்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். வீட்டு வாடகை தரவில்லையென்றால் குடும்பத்தை நடுத்தெருவிற்கு இழுத்துவிடுவேன் என்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்காரர் மிரட்டட்டும். குறைந்தபட்சம் ஒரு வாரம் தாங்க முடியுமா? கை கொடுக்க யாரும் இல்லாமல், ஆதரவற்ற நிலையில் அலறி அடித்துக்கொண்டு இருபதாவது மாடியிலிருந்து கொத்துக்கொத்தாக ஊழியர்கள் குதிக்க, “பார்த்தாயா நம் ஐ.டி. ஊழியர்களின் மான உணர்ச்சியை!” என்று அப்போது அரசியல் செய்து பார்ப்போம். இன்னும் கூடுதலாக நான்கு கட்டடங்களில் மொட்டை மாடியில் நடமாட்டம் அதிகரிக்கும்.

          இதுதான் விவசாயத்தில் நடக்கிறது. பெண்களை தெய்வமாகப் பார்த்து ஜாதி மதத்தின் பெயரால் பாதுகாக்கிறோம் என்பது எப்படி அடக்குமுறையோ, அதே போல் விவசாயத்தைப் புனிதமாகப் பார்த்து விவசாயியின் மேல் பொறுப்புச் சுமையை ஏற்றுவதும் அடக்குமுறைதான். “விவசாயி தன் உயிரை விட மானத்தை உயர்வாக நினைப்பவர், அவருக்கு விவசாயமே மூச்சு”, போன்ற வசனங்கள் விவசாயிகளுக்கு உண்மையில் கேடு விளைவிப்பவை. நாம் சொகுசாக சோறு தின்ன அவர்களை விவசாயத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கிறோம். விவசாயிக்கு விவசாயம்தான் உயிர் என்றால் எதற்காக அவர்களின் பிள்ளைகளை விவசாயத்தை விட்டு வெளியேறச் சொல்ல வேண்டும்? “லாபமில்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏனென்றால் இது உங்கள் மானப்பிரச்னை” என்று உணர்வுகளைத் தூண்டிவிட்டு, ஏதோ நாம் உயர்ந்த அறத்தளத்தில் இயங்குவதுபோல் திருப்திப்பட்டுக்கொள்கிறோம். ஒன்றைச் செய்து வரும் தோல்வியைவிட, ஒன்றைச் செய்யாமல் இருப்பதால் நடக்கும் துர்நிகழ்வுகளுக்கு எப்படியோ நாம் பொறுப்பாளர்கள் இல்லை என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொள்கிறோம்.

          விவசாயம் எந்திரமயமாகக்கூடாது என்றால், இயற்கை உரங்களையும் மாடுகளையும்தான் பயன்படுத்த வேண்டும் என்றால், நாம் நம் அலுவலகத்திற்கு மாட்டு வண்டியில்தான் செல்லவேண்டும். டிஜிட்டல் இந்தியாவை மறந்துவிட்டுக் களிமண் தகடுகளில்தான் ஆவணங்களை எழுதவேண்டும், சூப்பர் கம்ப்யூட்டர்களை உடைத்துவிட்டு விரல்களால்தான் அத்தனையையும் எண்ண வேண்டும். விவசாயத்தில் எந்திரத்தையும் தொழில்நுட்பத்தையும் புகுத்தி விளைச்சலை அதிகப்படுத்தாமல், விவசாயியிடம் லாப விலையில் கொள்முதலும் செய்யாமல் இருந்தால், விவசாய நிலம் ரியல் எஸ்டேட் பிளாட்களாக மாறத்தான் செய்யும். அல்லது கார்ப்பொரேட் விவசாயக் கூலிகளாக விவசாயிகள் மாற்றப்பட்டு, பாக்கெட் போடப்பட்ட ஆர்கானிக் உணவுகள் சூப்பர் மார்க்கெட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, நாம் அதை ஏசி காரில் சென்று பெருமிதத்துடன் வாங்குவதுதான் நடக்கும்.

          இரசாயன உரங்களின் மூலம் பயிர்களை மாசுபடுத்தும் விவசாயியைத் தட்டிக்கேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது? ‘அதை நாம்தானே சாப்பிடுகிறோம்’ என்பதுதான் தகுதி என்றால், ஒரு விவசாயியின் மகனோ மகளோ பொறியியல் படிக்க நகரத்திற்கு வந்து, “நான் சுவாசிக்கும் காற்றை நீங்கள்தான் மாசுபடுத்துகிறீர்கள்” என்றால், அதற்கு நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மில் ஒருவர் கூட வண்டியை வெளியே எடுக்க முடியாது, நம் நுகர்வு வெறிக் குப்பைகளை எரிக்க முடியாது. நமக்கு வந்தால் ரத்தம், விவசாயிக்கு வந்தால்? ஆழ்மனதில், நாம் சாப்பிடும் உணவில் விஷம் இருக்கக்கூடாது என்ற சுயநலம்தான் விவசாயி பற்றிய நம் நினைப்புக்குக் காரணம் என்றால், குறைந்தபட்சம் மனசாட்சியைத் தொட்டு அதையாவது ஒப்புக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? நாம் நம்முடைய மனசாட்சியை என்றோ அடமானம் வைத்துவிட்டோம். அது அரித்துக்கொண்டே இருக்கிறது. விவசாயத்தைப் புனிதப்படுத்தியும், “என்ன இருந்தாலும் கிராம வாழ்க்கை போல வருமா?” என்று பழங்கதை பேசியும்  நம் மனசாட்சியை நாம் சொறிந்துகொண்டு நிம்மதி அடைகிறோம். இவ்வளவுதான் நம் உளவியல்.

          ”உணவு விலையைக் கட்டுப்படுத்தாவிட்டால் பணவீக்கம் தாறுமாறாக எகிறும்”, என்கிற தர்க்கம் பொருளாதார ரீதியானது. ஆனால் கேள்வி, இதை ஒரு விவசாயியின் கண்களைப் பார்த்து எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நம்மால் சொல்ல முடியுமா என்பதுதான். “நீ சொல்வது புரிகிறது, இந்தத் தொழில் அப்படியொரு சவாலைக் கொண்டிருப்பது உண்மைதான்”, என்று ஒரு விவசாயி அதை ஏற்றுக்கொள்ளும் நிலையிலா நாம் விவசாயிகளை வைத்திருக்கிறோம்? அறத்தை இழந்துவிட்டு, கண்களை இறுக மூடி, ஆழ்மனத் தளத்தில் விவசாயத்தைப் புனிதப்படுத்தியும் அறிவுத் தளத்தில் பொருளாதார தர்க்கம் பேசியும் நகர்பவர்களாக நாம் மாறிவிட்டோம் என்பதே உண்மை.

          விவசாயி லாபம் ஈட்டும் வகையில் கொள்முதல் விலை இருக்கிறதா? நீர்ப்பாசனத்திற்குத் தேவையான மின்வசதி இருக்கிறதா? நீர்ப்பிடிப்புகள் தயார் நிலையில் இருக்கின்றனவா? நீர்ப்பாசன முறையை நவீனப்படுத்துகிறோமா? குறைந்தபட்சம் பாய்ச்ச நீராவது இருக்கிறதா? குறைந்தபட்ச ஆதரவு விலை நியாயமாக இருக்கிறதா? நபார்டு கடன்கள் மற்றும் முன்னுரிமைக் கடன்கள் சரியான நபர்களுக்குச் சென்றடைகிறதா? இவை யாவும் இல்லையெனில், விவசாயம் பொய்த்தால் மாற்று வேலைவாய்ப்புகளாவது அருகே இருக்கின்றனவா? இவைதான் கேள்விகளாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு விவசாயி விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்து, மாற்று வேலைவாய்ப்புகள் பற்றி யாராவது பேச்சை எடுத்தாலே “இந்தியாவின் முதுகெலும்பையா உடைக்கிறாய்”, என்று உணர்வெழுச்சியில் பொங்குவது தீர்வுக்கான உரையாடலைக் கூடத் துவக்கப் பயன்படாது.

          ‘விவசாயி விவசாயத்தை விட்டுவிட்டால் அப்பொழுது சோறு? இரசாயன உரங்களை வைத்து விவசாயம் செய்தால் நம் பூமி என்னாவது?’, என்று வருங்கால ஆபத்தைத் தடுக்கிறேன் என்ற பெயரில் நிகழ்கால விவசாயிகளை பலிகொடுப்பதுபோன்ற மனிதத் தன்மையற்ற செயல் இருக்க முடியாது. உலகம் அழிய அத்தனையையும் நகரத்தில் நாம் செய்துவிட்டு, அதன்மீது பொருளாதாரத்தையும் அடிப்படை வாழ்வாதாரத்தையும் கட்டமைத்துவிட்டு, ‘நீயாச்சும் நல்லவனா இரு’ என்று விவசாயிகளைப் பிழைக்க விடாமல் செய்வதுபோன்ற குரூரமான செயலை நம்மால் மட்டும்தான் செய்ய முடியும். இல்லையெனில், ஒரு விவசாயி பூச்சி மருந்தைக் குடித்ததும் ‘அவன் மானஸ்தன்யா’ என்று மார்தட்டிக் கொள்ளாமல், நம் சுயநலத்தால் ஒரு உயிர் போனதை எண்ணி நாம் கூனிக்குறுகியிருப்போமே?

          பஞ்சகவ்வியம், இயற்கை உரங்கள் என்று எத்தனை பரிசோதனைகளை வேண்டுமானாலும் செய்யலாம், சிக்கலில்லை. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று சயின்சோ, சூடோ சயின்சோ அத்தனையையும் செய்து பார்க்கலாம். ஆனால் நடைமுறை சிக்கல்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இரசாயன உரங்கள் மூலம் விவசாயம் செய்வது ஏதோ பாவச்செயல்போன்ற கருத்தை உருவாக்குவது, ஒட்டுமொத்தமாகப் பசுமைப் புரட்சியை நிராகரிப்பது, சில ஆண்டுகள் பொறுத்துக்கொண்டால் இயற்கை விவசாயமும் பலன் தரும் என்று நொடிந்து போன விவசாயிக்குப் பாடம் எடுப்பது போன்றவையெல்லாம் பெரும் வன்முறை. அது இயற்கை விவசாய அடிப்படைவாதம். தீர்வு இல்லையென்றால் குறைந்தபட்சம் இருக்கிற அமைப்புகளுக்குள் ஓடாகத் தேயும் விவசாயியின் பிழைப்பை இயற்கையைக் காட்டிக் கெடுக்காமலாவது இருக்கலாம். விவசாயம் சார்ந்த பண்பாட்டு விழாக்களையும் தினங்களையும் கொண்டாடி வழிபடுவது பிரச்னையில்லை. ஆனால் அவற்றைக் காரணமாக வைத்து விவசாயத்திற்கு ஒரு புனித அந்தஸ்தை அளித்து, அதில் மாற்றம் வந்துவிடக்கூடாது என்று காலத்திற்கேற்ற தொழில்நுட்ப நவீனங்களை கவனத்துடன் புகுத்தாமல் வைத்திருப்பதுதான் பிரச்னை. விவசாயியை நல்லவராகவே வைத்திருக்காமல், அவர்களும் பணம் பார்க்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கு நாம் உருவாக்கிய சிக்கலுக்குள் விவசாயியையும் இழுக்கத்தான் வேண்டும். கிராமங்களில் எந்திரச் சொத்துருவாக்கம் நடக்கட்டும். பெருநிறுவனங்கள் சிறு, குறு விவசாயிகளை அழிக்காமல் இருக்க என்னென்ன வழிகள் என்று சிந்திப்போம். லாப நோக்குடைய, புனிதமற்ற, குறைகளுள்ள மனிதர்களாகவே விவசாயிகளைப் பார்க்க ஆரம்பிப்போம். அப்பொழுதுதான் மனசாட்சி உறுத்தாமல் விவசாயியின் கண்களைப் பார்த்து நம்மால் இயற்கை விவசாயம், மண் வள மீட்பு உள்ளிட்டவை குறித்து உரையாட முடியும்.

Photo coutesy: www.yourstory.com

Comments

  1. நல்ல சிந்தனையைத் தூண்டும் கட்டுரை விஷ்ணு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Hey keep posting such good and meaningful articles.

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி