கடவுள்களும் குருமார்களும் - குஷ்வந்த் சிங்
மறைந்த குஷ்வந்த் சிங்கின் ‘Gods and Godmen of India' நூலை வாசித்து முடித்தேன். கடவுள், மதம், மூடநம்பிக்கை, ஆன்மிக இயக்கங்கள், சாமியார்கள் குறித்த குஷ்வந்தின் கருத்துகள், அனுபவங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றின் தெளிவான தொகுப்பு இது. கடவுள் மற்றும் ஆன்மிகம் குறித்த குஷ்வந்தின் நிலைப்பாடு எவ்வாறு உருவாயிற்று என்பதை 62 கட்டுரைகளில் குஷ்வந்த் சிங்கிற்கே உரிய நகைச்சுவை எழுத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. குஷ்வந்த் சிங் ஒரு ‘அக்னாஸ்டிக்’ என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத, ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாத, தானே உணரும் வரை கடவுள் இல்லைதான் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஒருவகையில் இது கொஞ்சம் அவஸ்தையான நிலைப்பாடும் கூட. கடவுள், பிறவிப்பயன், மரணம் குறித்த கேள்விகள் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கும். மதம், மத அமைப்பு, மதம் சார்ந்த அரசியல் போன்றவற்றில் குஷ்வந்த் பல்வேறு சிக்கல்களைப் பார்க்கிறார். ஒவ்வ...