Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நூலிலிருந்து சீரிஸ் - 1: நடுநிலை நக்கீஸ்

//அத்தியாயம் 22:

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத்தந்தது. ஜெயமோகன் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘வாழும் கணம்’ ஒன்று என்னை வந்தடைந்தது.

------------------------------------------------------------------------------------

அன்றைய ஒன்பது மணி விவாத நிகழ்ச்சி நிச்சயம் பரவலாகப் பார்க்கப்படும் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பொதுவாக நான் நெறிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் எவ்வாறு விருந்தினர்கள் தங்களின் நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்று கவனிப்பதுண்டு. “என்னைத் தவிர மற்ற அனைவரும் நடுநிலைவாதிகள் அல்ல என்று சொல்ல மாட்டேன், ஆனால் இந்த அறையிலேயே பெரிய நடுநிலைவாதி நான்தான்”, என்று நிறுவ முயற்சிப்பார்கள். அதுதான் அன்றும் நடந்தது.

கோட் சூட் போட்டுக்கொண்டு ஸ்டூடியோ சென்ற போது நால்வரும் ‘உம்’மென்று உட்கார்ந்திருந்தனர். ஒருவர் அந்த நடிகரின் தீவிர ரசிகர், இன்னொருவர் சமூக நீதி செயல்பாட்டாளர். இவர்கள் போக அந்த பெண் பத்திரிகையாளர் பக்கம் நின்று பேச தொலைக்காட்சி நிர்வாகம் பெருந்தன்மையாக இரண்டு பேரை அழைத்திருந்தது.

சமூக நீதி செயல்பாட்டாளர் அதிரடி காட்டினார். “ரசிகக் குஞ்சுமணிகளுக்கெல்லாம் எதுக்கு மரியாதை குடுக்கணும்? இவர்களை ஊக்குவிப்பதே அந்த நடிகர்கள்தான். இதற்கு முன்னால் பல முறை இது போன்ற சம்பவங்கள் நடந்தாலும் இதுவரை ஏதாவது ஒரு நடிகர் தன் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவிச்சிருக்காரா?”

ரசிகர் உடனே பொங்கி ஏதோ கத்த ஆரம்பித்தார். சமூக நீதி அதைப் பொருட்படுத்தாமல், “இருங்க தம்பி நான் இன்னும் முடிக்கல. இப்படி கேரக்டர் கொலை செய்ய உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?...”, என்று இரண்டு நிமிடங்களுக்கு சாட்டையடி கொடுத்தார். திருப்தியாக இருந்தது. அடுத்தவருக்குத் தாவலாம் என்று எண்ணியபோது, ஒரு வினாடி நிறுத்தி, ‘ஹும்ம்ம்’ என்று கணைத்துக்கொண்டார். “இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் அவங்க அந்த அரசியல் தலைவரை கீழ்த்தரமா விமர்சிச்சதும் தப்புதான்”, என்றார். இதைக் கேட்டதும் ரசிகரின் ஆவேசம் கொஞ்சம் குறைந்ததை கவனித்தேன்.

“அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு சார்?”, என்று கேட்டேன்.

“இதையும் நாம சுட்டிக்காட்டணுமில்ல?”

“ஆனா இங்க விவாதமே இணையத்தில் பெண்கள்மீது வீசப்படும் பாலியல் தாக்குதல்தானே?”

“இருந்தாலும் முன்னாடி அவங்க அப்படி பேசினதும் தப்புதானே?”, என்று டேபிளைத் தட்டினார். எனக்குப் புரிந்துவிட்டது.

நடுநிலை காட்டிவிட்டார். முகத்தில் அதற்கான திருப்தி தெரிந்தது.

சரி என்று அடுத்தவருக்குத் தாவினேன். விவாதம் நன்றாகப் போனது. ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனிக்கவே இல்லை. அந்த பெண் பத்திரிகையாளர் சார்பாகப் பேச வந்த இருவரில் ஒருவர் வலதுசாரி, மற்றொருவர் இடதுசாரி என்று தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தார்கள்.

“ஒரு படம் நல்லா இல்லன்னு அந்த அம்மாவோட தனிப்பட்ட கருத்துக்கு இப்படி வன்மத்தைக் கொட்டியிருப்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது”, என்று இடதுசாரி முழங்கினார். ரசிகருக்கு மீண்டும் ஆவேசம் பொங்கியது. அவர் மேலும் தொடர்ந்தார், “ஆனால் இதே வன்மத்தைத்தானே மலம் அள்ளுவோரைப் பற்றிய ஆவணப்படத்தை எடுத்தவரும் எதிர்கொண்டார்? அப்பொழுதெல்லாம் இந்தக் குரல்கள் எங்கே போயின?”

தன் தரப்பு நடுநிலையைக் காட்டிவிட்டார். “whataboutery!", என்று காதில் இ.பி. கத்தினார். “மேடம் இரண்டுமே கண்டிக்கத்தக்கதுதான். இங்கு பெண்கள்மீது திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் மீதான எதிர்ப்பு என்பது அரசியல் நிலைப்பாட்டைக் கடந்து பொதுவான ஒன்றாகத்தானே இருக்கவேண்டும்?”

“எப்படி சார் பொதுவா இருக்க முடியும்? எலீட் லிபரல்கள் இதற்கு மட்டும்தான் குரல் கொடுக்கிறார்கள் அப்படிங்குறத பதிவு செய்யணுமா வேண்டாமா?”, என்றார். ரசிகரின் ஆவேசம் மீண்டும் குறைந்தது.

“நிச்சயமா இந்த ட்விட்டர் தாக்குதல் கண்டிக்கத்தக்கதுதான் சார்! ஆனா இவங்களுக்கு மட்டும் ஏன் இப்படி சப்போர்ட் வருது? அதோ என் பக்கம் நின்னு பேசதானே இன்னொருத்தரைக் கூப்பிட்டீங்க? மகிழ்ச்சி, ஆனா போன வாரம் இவங்களை சீன்லியே காணோமே? ஏன் அப்போ இவங்க குரல் கொடுக்கல?”

பொங்கி எழுந்த வலதுசாரி இரண்டே நிமிடங்களில் அவுரங்கசீப் காலத்திற்கே போய்விட்டார். “நீங்களெல்லாம் அப்பொழுது எங்கே போனீர்கள்?”, என்று இடதுசாரியைக் கேட்டார்.

“நாங்க அப்போ பொறக்கவே இல்ல சார்”

“மேடம் இது விதண்டாவாதம்”, என்று என் பக்கம் திரும்பினார். “சார் என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க? திட்டமிட்டு ஒரு சாரார் மீது வெறுப்பு கொண்டு நடத்தும் தாக்குதல் இது”

எனக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. “ரசிகர்கள் தொடுத்த தாக்குதலை இப்படி உங்கள் அரசியலுக்கு அதற்குள்ளாகவே விரிக்கத்தான் வேண்டுமா? இங்கு தலைப்பே...”

பெரும் சண்டையில் முடிந்துவிட்டது. எனக்கு என்ன வருத்தமென்றால், “அந்த பத்திரிகையாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது” என்று அனைவரும் ஒரு சேர, ஒவ்வொரு அளவில் முழங்கினார்கள். ஆனால் அதற்குப் பிறகு நடந்ததில்தான் எனக்கு வருத்தம். தலைப்பிற்கு ஏற்றபடி ஒரு நிமிடம் பேசிவிட்டு ‘ஆனால்’ என்று அந்த பத்திரிகையாளரின் கடந்த காலத் தவறையோ, அவருக்கு ஆதரவாக நிற்போரின் அரசியலையோ ஐந்து நிமிடம் பேசி, நிகழ்ச்சியை யார் ஹைஜாக் செய்வது என்ற போட்டியில் இறங்கிவிட்டார்கள். நிகழ்வு சார்ந்த நடுநிலையாக இல்லாமல் ஆளாளுக்கு கருத்தியல் சார்ந்த நடுநிலையை எடுத்து விவாதத்தையே நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். என்னன்னமோ நினைத்திருந்தேன். இதற்கு அந்த நடிகர் பொறுப்பா, மன்னிப்பு கேட்க வேண்டுமா, ரசிகர்களை எச்சரிக்க வேண்டுமா, திரைப்படங்களில் காட்டப்படும் ஆணாதிக்க ஹீரோயிசம், என்று விவாதத்தை எப்படியெல்லாமோ கொண்டு போக நினைத்தேன். நடுநிலைவாதியாக இருப்பது வேறு, ஆனால் தன்னுடைய நடுநிலைவாதத்தை நிறுவ முயல்வதன் மூலம் எவ்வாறு நிகழ்வை விட்டுவிட்டு கருத்தியல் இருமைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். இதுதான் என் நடுநிலைமையோ என்று குழப்பமாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்தபோது ரசிகர் உற்சாகமாக இருந்தார்.

“என்ன சார், நீங்க நடுவுல பெருசா பேசவே இல்ல? இத்தனைக்கும் பதில் சொல்ற பெரும் பொறுப்பு உங்ககிட்ட இருந்துச்சே?”

“அதான் மீதி மூணு பேருமே எங்களுக்கு உதவியா பேசிட்டாங்களே சார், அப்புறம் என்ன?”, என்று கண்சிமிட்டினார்.

“சார் ஒரு கேள்வி”

“சொல்லுங்க சார்”

“இல்ல ஒவ்வொருத்தரும் எப்படியெப்படியெல்லாமோ நடுநிலை காட்டுவாங்க. உங்க நடுநிலை எதுன்னு தெரிஞ்சிக்க ஆசை. தலை வெடிச்சிடும் இல்லேன்னா.”

“ஒரு உணர்ச்சி வேகத்துல நாங்க பண்ணது தப்புதான் சார், ஒத்துக்கறேன்.”

அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“என்ன சார்?”

“இல்ல ‘ஆனால்’ போடுவீங்களே, எங்க அது காணோம்னு...”

“நாங்க பண்ணது தப்புதான். ஆனா நாங்களும் கவனிச்சிட்டுதான் வர்றோம். அவங்க தொடர்ந்து என் தலைவன் படத்தைப் பத்தி தரக்குறைவாதான் பேசுறாங்க”

இன்னும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“ஆனா போட்டேனே சார்?”

“ஆனா-னா லிட்ரலா ‘ஆனா’ இல்ல சார். எனக்கு இன்னும் பதில் வரல”

“வேறென்ன பதில் வேணும்? எப்படி தப்பா பேசலாம்? அதுதான் எங்க கோவம் சார். அவ்வளவுதான். அதுவும் ஒரு பொண்ணா இருந்துட்டு...”

“தாங்க் யூ சார். இப்போ விடை கிடைச்சிடுச்சு”, கைகுலுக்கி அனுப்பிவைத்தேன்.

கண்ட்ரோல் ரூம் சென்று இ.பி.யிடம் என் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தேன். விவாதத்தை எப்படியெல்லாமோ கொண்டு போக நினைத்தேனே, என்று புலம்பினேன்.

“முட்டாள். இப்படியெல்லாம் நடக்கணும்னுதானே அவங்களைக் கூப்பிட்டதே?”, என்று தோளில் ஒரு தட்டு தட்டிவிட்டுச் சென்றார்.

ஆக இந்த நான்கு நடுநிலைகளுக்கு மத்தியில் நானும் ஒரு நடுநிலை நக்கியாக நிகழ்ச்சியை முடித்திருக்கிறேன். அது என்னுடைய வருத்தம் என்பது ஒருபுறம். ஆனால், நான் நடுநிலை நக்கியாக இருக்கத்தான் கடமைப்பட்டவன் என்று உணர்ந்தபோது வந்தடைந்த ஜென் தருணம் இருக்கிறதே, அதுதான் என்னை இன்றுவரை தலைசிறந்த ஊடக நெறியாளராக ஃபீல்டில் நிலைக்க வைத்திருக்கிறது.//

- ‘நடுநிலை நக்கீஸ்: ஒரு ஊடக நெறியாளரின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலிலிருந்து
#நூலிலிருந்து_சீரிஸ்

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி