பாரிக்கின் காந்தி
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்கு பாரிக்கின் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை மீள்வாசிப்பு செய்தேன். காந்தியின் மீது ஒரு மிக முக்கியமான விமர்சனத்தை பாரிக் வைக்கிறார். திலகர், அரவிந்தர், சாவர்க்கர் போல் இந்து மதத்தின் அடிப்படையில் இந்திய ஒற்றுமையைக் கற்பனை செய்யாமல், காந்தி இந்தியாவை பன்முக வரலாற்றுப்பார்வையோடு அணுகினார். பல்வேறு மத, இன, மொழியடையாளங்களின் கூட்டுத்தொகுப்பாகத்தான் இந்தியாவை அவர் கண்டார். ஆனால் அந்தக் கூட்டுத்தொகுப்பின் இயல்பை விளக்கும்போது அவரிடம் இந்துச் சாய்வு இருந்தது என்கிறார் பாரிக். அதாவது இந்தியாவின் பன்முகத்தன்மையை இந்து மதத்தின் சாதனையாகவும் இந்து சகிப்புத்தன்மைக்கான எடுத்துக்காட்டாகவும் காந்தி புரிந்துகொண்டார். இஸ்லாமியர்களுக்கான பண்பாட்டு வெளி காந்தியின் இந்தியாவில் இருந்தது, ஆனால் அது ஓர் இந்து சட்டகத்திற்கு உள்ளேதான் அமைக்கப்பட்டது என்கிறார் பாரிக். அதாவது இந்து அடிப்படைவாதிகளைப்போல் இந்தியாவை இந்துமயமாக்காமல் காந்தி இந்துமதத்தை இந்தியமயமாக்க முயன்றார், அந்த முயற்சியின் போக்கில் இந்துமதத்தில் உள்ள இஸ்லாமியத் தாக்கங்களை அங்கீகரித்தார். ஆனால் இவை அனைத்தைய...