பாரிக்கின் காந்தி
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்கு பாரிக்கின் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை மீள்வாசிப்பு செய்தேன். காந்தியின் மீது ஒரு மிக முக்கியமான விமர்சனத்தை பாரிக் வைக்கிறார். திலகர், அரவிந்தர், சாவர்க்கர் போல் இந்து மதத்தின் அடிப்படையில் இந்திய ஒற்றுமையைக் கற்பனை செய்யாமல், காந்தி இந்தியாவை பன்முக வரலாற்றுப்பார்வையோடு அணுகினார். பல்வேறு மத, இன, மொழியடையாளங்களின் கூட்டுத்தொகுப்பாகத்தான் இந்தியாவை அவர் கண்டார். ஆனால் அந்தக் கூட்டுத்தொகுப்பின் இயல்பை விளக்கும்போது அவரிடம் இந்துச் சாய்வு இருந்தது என்கிறார் பாரிக். அதாவது இந்தியாவின் பன்முகத்தன்மையை இந்து மதத்தின் சாதனையாகவும் இந்து சகிப்புத்தன்மைக்கான எடுத்துக்காட்டாகவும் காந்தி புரிந்துகொண்டார். இஸ்லாமியர்களுக்கான பண்பாட்டு வெளி காந்தியின் இந்தியாவில் இருந்தது, ஆனால் அது ஓர் இந்து சட்டகத்திற்கு உள்ளேதான் அமைக்கப்பட்டது என்கிறார் பாரிக். அதாவது இந்து அடிப்படைவாதிகளைப்போல் இந்தியாவை இந்துமயமாக்காமல் காந்தி இந்துமதத்தை இந்தியமயமாக்க முயன்றார், அந்த முயற்சியின் போக்கில் இந்துமதத்தில் உள்ள இஸ்லாமியத் தாக்கங்களை அங்கீகரித்தார். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி காந்தியின் இந்தியா ஓர் இந்து அடித்தளத்தில் அமைந்த ஒன்றாக, இந்து அரவணைப்பை வெறும் பெரும்பான்மை அடிப்படையில் மட்டும் கோராமல் பண்பாட்டு அடிப்படையிலும் கோரிய இயக்கமாக இருந்தது. காந்தி இரண்டு செயல்களின் மூலம் அதைத் தவிர்த்திருக்கலாம், அதன் மூலம் இந்திய வரலாறு குறித்து இன்னும் துல்லியமான பார்வையை அடைந்திருக்கலாம் என்கிறார் பாரிக்:
முதலாவது, இஸ்லாமின் வருகைக்கு முந்தைய இந்தியாவை “இந்து இந்தியா” என்று கற்பனை செய்யாமல், அப்போதே அது பன்முக அடையாளங்கள் கொண்ட நிலப்பரப்பாக இருந்தது என காந்தி கற்பனை செய்திருக்கலாம்; அதன்மூலம் இரண்டு விஷயங்களை காந்தி சாதித்திருக்கலாம். ஒன்று, இந்தியாவின் பண்பாட்டு வளர்ச்சிக்கு மற்ற மதங்களோடு மதங்களாக “இந்து” மதமும் முக்கியமாகப் பங்களித்தது என்ற சமத்துவப் பார்வை. இரண்டு, இவ்வாறு அணுகுவதன்மூலம் இந்துக்கள் இந்தியாவை சொந்தம் கொண்டாடும் இயல்பைக் கேள்விக்குட்படுத்தியிருக்கலாம். பாரிக் இதனை “Hindu Possessiveness” என்கிறார். இதைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் இந்தியக் கட்டமைப்பை இன்னும் விரிவாக்கி இந்துக்களல்லாதோரும் தங்களைப் பண்பாட்டு இந்தியர்களாக உணர வழிவகை செய்திருக்க முடியும், அதை காந்தி செய்யத் தவறிவிட்டார் என்கிறார் பாரிக்.
இரண்டாவது, இந்து மதத்தை ஒற்றைச் சட்டகமாகக் கற்பனை செய்யாமல், எண்ணற்ற உலக நாகரிகங்களின் நம்பிக்கைகளின், சடங்குகளின் படிமங்களாக, தொடர்ந்து தாக்கங்களையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளும் ஒரு பண்பாட்டு உரையாடலாக காந்தி அணுகியிருக்க வேண்டும். காந்தி அதை செய்தார், ஆனால் அதில் போதாமை இருந்தது என்பது பாரிக்கின் விமர்சனம். இப்பார்வையின் மூலம், “யார் இந்து?”, “இந்துவின் இயல்பு என்ன?” போன்ற கேள்விகளுக்கு விடை காணவே முடியாது. மேலும் “இதுதான் இந்துவாக இருப்பது” என்று யாரும் பண்பாட்டுத் திணிப்பும் செய்ய முடியாது. அப்படியென்றால் இந்தியாவை ஓர் இந்துவாகத்தான் காந்தியும் சொந்தம் கொண்டாடினாரா, அதனால்தான் அவர் இவற்றையெல்லாம் செய்யத் தவறிவிட்டாரா என்றால், இல்லை. காந்தியின் போதாமைக்கு பாரிக் இரண்டு காரணங்களை சொல்கிறார். ஒன்று, இந்திய வரலாறு குறித்த ஆழமான பார்வையும் கற்பனைத் திறனும் அவரிடம் இல்லை (அவரின் இளமைக் காலத்திய ஓரியெண்டல் பார்வைகள் இந்தியாவை எளிமைப்படுத்தின, அல்லது அதீதமாக உயர்த்தின). இரண்டு, காந்திக்கு முந்தைய தலைவர்கள் அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தவில்லை. காந்தி இந்தியா திரும்பியபோதே இந்து எழுச்சி இந்திய எழுச்சியாக நிலைபெற்றுவிட்டது. காந்திக்கு முன்பும் காந்திக்குப் பின்பும் காந்தியும் செய்யத் தவறிய இவ்விஷயங்களுக்கு காந்தியின் மீது பழி சுமத்த முடியாது என்கிறார் பாரிக்.
பேசிக்கலி அவர் காந்திக்குப் பிந்தைய தலைமுறையினர் மீது மிகப்பெரும் பொறுப்பை வைக்கிறார்; காந்தியால் செய்ய முடியாதவற்றை செய்யும் பொறுப்பு. நாடு போகும் போக்கிற்கு இன்றைக்கான காந்தியாக நான் பாரிக்கின் காந்தியைத்தான் பார்க்கிறேன்.
உலக அகிம்சை தினம்.
Ref: Bhikhu Parekh (1989), Gandhi's Political Philosophy: A Critical Examination. pp: 190-191
Comments
Post a Comment