Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

W.E.B. டுபாய்சின் எழுத்துகள் தற்பொழுது மின்வடிவில்

 https://leminhkhai.files.wordpress.com/2013/01/web-du-bois.jpg 

 

கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அமெரிக்க எழுத்தாளரும் சிந்தனையாளரும் பத்திரிகையாளருமான W.E.B. டுபாய்சின் பேச்சுகளும் எழுத்துகளும் தற்பொழுது மின் வடிவத்தில் கிடைக்கின்றன. Collected Works of Gandhi-யை இணையத்தில் பதிவேற்றியதைப் போன்ற பெரும் பணி இது. காந்தியும் டுபாய்சும் ஒருவருக்கொருவர் சில கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். காந்தி குறித்து டுபாய்ஸ் எழுதிய, ஆனால் பிரசுரமாகாமல் போன எழுத்துகளும் இம்மின்வடிவில் அடக்கம். அம்பேத்கர் ஜூலை 1946-ல் டுபாய்சுக்கு எழுதிய கடிதமும் நம் பார்வைக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலைக்கும் இந்தியாவில் தீண்டத்தகாதார் என்று கருதப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்றும், கறுப்பின மக்கள் ஐ.நா. சபைக்கு அனுப்பிய மனுவின் இரண்டொரு பிரதியைத் தனக்கு அனுப்பி வைக்க முடியுமா, அதே போன்றதொரு மனுவை இந்தியாவின் தீண்டத்தகாதோரும் அனுப்ப உத்தேசித்திருக்கிறோம் என்றும் எழுதியிருக்கிறார். முழு கடிதத்தின் சுட்டி கீழே. அதே மாதத்தில் டுபாய்ஸ் அம்பேத்கருக்கு பதில் கடிதம் எழுதி, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான இயக்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

1. அம்பேத்கரின் கடிதம் - https://credo.library.umass.edu/view/full/mums312-b109-i132
2. டுபாய்சின் பதில் கடிதம் - https://credo.library.umass.edu/view/full/mums312-b109-i133
3. டுபாய்ஸ்-காந்தி தொடர்பான ஆவணங்கள் - https://credo.library.umass.edu/search?q=gandhi&fq=FacetCollectionID%3A%22mums312%22&search=

காந்தி-டுபாய்ஸ் தொடர்பு குறித்து UCLA பேராசிரியர் வினய் லால் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 1913-ல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டல் மாகாணத்தில் காந்தி ஒருங்கிணைத்த தொழிலாளர் போராட்டம் குறித்து டுபாய்ஸ் பதிவு செய்திருக்கிறார் என்றும், அப்பொழுது காந்தி யார் என்று அவருக்குத் தெரிந்திருக்காத காரணத்தினால் காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், ஆனால் அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே 1911-ல் காந்தி டுபாய்ஸ் பற்றி எழுதியிருக்கிறார் என்றும் வினய் லால் 2019 நவம்பரில் தில்லியில் நடந்த கருத்தரங்கின்போது சொன்னார், ஆனால் அந்த ஆவணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு 1919-ல் NAACP அமைப்பின் Crisis பத்திரிகை ஜலியன் வாலாபாக் பற்றியும் ஹண்டர் கமிஷன் அறிக்கை பற்றியும் மிக விரிவாக எழுதியது, ஆனால் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் உருவாக்கிய மாற்றுக் கமிட்டி குறித்து எழுதவில்லை. 1921-ல் டுபாய்ஸ் காந்தியைக் குறிப்பிடுகிறார். பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 1929-ல் முதன் முதலாக காந்திக்குக் கடிதம் எழுதுகிறார் (அதற்கு இடைப்பட்ட காலத்தில் காந்தியின் போராட்ட வழிமுறைகள் குறித்து டுபாய்ஸ் சிலருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்). டுபாய்சும் C.F.ஆண்டிரூசும் சரோஜினி நாயுடுவும் அதற்கு முன்பே சந்தித்துவிட்டனர், ஆண்டிரூசுக்கு எழுதிய கடிதத்தில் தன் பத்திரிகையில் காந்தியும் தாகூரும் எழுதவேண்டும் என்று கோருகிறார். காந்திக்கு எழுதிய கடிதத்தில் டுபாய்ஸ் தன்னையும் தன் இயக்கத்தையும் தன் கறுப்பின வாசகர்களையும் அறிமுகம் செய்கிறார். காந்தி தன் பதில் கடிதத்தில் “கட்டுரை எழுத இயலாது, ஆனால் உங்கள் இயக்கத்திற்காக ஒரு சிறு அன்புச் செய்தியை அளிக்கிறேன்” என்று எழுதினார். “அடிமைகளாக இருக்க நீங்கள் வெட்கப்படக்கூடாது, அடிமைகளாக உங்களை வைத்திருக்க அவர்கள்தான் வெட்கப்படவேண்டும்” என்ற ரீதியில் அக்குறிப்பு செல்கிறது (தரக்நாத் தாசுக்கு டால்ஸ்டாய் அளித்த செய்தியின் அதே சாயல் டுபாய்சுக்கு காந்தி அளித்த செய்தியில்… காந்தி-டால்ஸ்டாய், காந்தி-ஐரோப்பா என்று வெள்ளையின அறிவியக்கத்தைச் சுற்றியே ஆராய்ச்சிகளின் கவனம் செல்கின்றன, ஆனால் காந்திக்கும் அமெரிக்கக் கறுப்பின மக்கள் இயக்கத்திற்கும் இடையே இப்படி ஒரு தொடர்பு மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் வருவதற்கு முன்பே இருந்திருக்கிறது). காந்தியின் செயல்பாடுகளை டுபாய்ஸ் உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறார். “Mohandas Karamchand Gandhi, the greatest colored man in the world, and perhaps the greatest man in the world...” என்று 1929-ல் தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் டுபாய்ஸ். அமெரிக்காவில் ஒரு நீக்ரோ காந்தி வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி காந்தியைப் பற்றி மட்டும் பல்வேறு கட்டுரைகளைத் தன் அரை நூற்றாண்டு காலப் பொதுவாழ்க்கையில் எழுதியிருக்கிறார் டுபாய்ஸ்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி