அன்புமிக்க விஷ்ணுவுக்கு வண்ணதாசன் எழுதிக்கொள்வது
627007 27.07.08 அன்புமிக்க விஷ்ணுவுக்கு, வணக்கம். உங்களுடைய கவிதைகள் 01.04.08ல் அனுப்பப்பட்டு 02.04.08ல் எனக்குக் கிடைத்தன. இந்த மூன்று மாதங்கள் இருபத்தேழு நாட்கள் குறைந்தது நான்கு முறைகளும், இந்த தாமதமான பதிவை எழுதுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை அவற்றைப் படித்தாயிற்று. முதலில் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். * பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புக்கு இப்போது வந்திருப்பீர்கள். வகுப்பு அல்ல, இந்த வயதுதான் முக்கியம். வயது என்பதைவிட இந்தப் பதின்பருவத்தை-Teen age-ஐச் சொல்லலாம். இந்த வளரினம் பருவத்தில்தான், உடல்சார்ந்த விழிப்புக்களும் மனம் சார்ந்த விழிப்புக்களும் நிகழ்கின்றன. இந்தப் பருவத்தில் நாம் எவ்வளவு வெளிச்சத்தில் அல்லது வெளிச்சத்துடன் விழிக்கிறோமோ, அந்த வெளிச்சம்தான் கடைசிவரை நம்மை வழிநடத்தும், கூட வரும். எல்லாக் கலைஞனும் இந்த adolescent பருவத்திலேயே உருவாகிறான். நீங்களும் உருவாகியிருக்கிறீர்கள். உங்கள் கலை கவிதை. அல்லது உங்களது வெளிப்பாடு கவிதை. சிலர் ஓவியம் மூலம், சிலர் இசை மூலம், சிலர் இடுகிற கோலங்கள் மூலமாகக் கூட வெளிப்படுகிறார்கள். ஒவ்வொரு ஊடகமும் ஒரு வாசல...