அன்புமிக்க விஷ்ணுவுக்கு வண்ணதாசன் எழுதிக்கொள்வது
627007
27.07.08
அன்புமிக்க விஷ்ணுவுக்கு,
வணக்கம்.
உங்களுடைய கவிதைகள் 01.04.08ல் அனுப்பப்பட்டு 02.04.08ல் எனக்குக் கிடைத்தன. இந்த மூன்று மாதங்கள் இருபத்தேழு நாட்கள் குறைந்தது நான்கு முறைகளும், இந்த தாமதமான பதிவை எழுதுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை அவற்றைப் படித்தாயிற்று.
முதலில் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
*
பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புக்கு இப்போது வந்திருப்பீர்கள். வகுப்பு அல்ல, இந்த வயதுதான் முக்கியம். வயது என்பதைவிட இந்தப் பதின்பருவத்தை-Teen age-ஐச் சொல்லலாம்.
இந்த வளரினம் பருவத்தில்தான், உடல்சார்ந்த விழிப்புக்களும் மனம் சார்ந்த விழிப்புக்களும் நிகழ்கின்றன. இந்தப் பருவத்தில் நாம் எவ்வளவு வெளிச்சத்தில் அல்லது வெளிச்சத்துடன் விழிக்கிறோமோ, அந்த வெளிச்சம்தான் கடைசிவரை நம்மை வழிநடத்தும், கூட வரும்.
எல்லாக் கலைஞனும் இந்த adolescent பருவத்திலேயே உருவாகிறான். நீங்களும் உருவாகியிருக்கிறீர்கள். உங்கள் கலை கவிதை. அல்லது உங்களது வெளிப்பாடு கவிதை. சிலர் ஓவியம் மூலம், சிலர் இசை மூலம், சிலர் இடுகிற கோலங்கள் மூலமாகக் கூட வெளிப்படுகிறார்கள். ஒவ்வொரு ஊடகமும் ஒரு வாசல் திறக்கிறது. வாசல் என்பது உள்ளிருந்து வெளியே செல்லவும், வெளியிலிருந்து உள்ளே வரவும்தான். உங்கள் கவிதைகளின் மூலம் வெளியேயும் உள்ளேயும் சென்று வந்திருக்கிறீர்கள்.
உள்ளே செல்வதைவிட, உள்முகமாகச் செல்வதுதான் உங்களின் சிறப்பு. அதுவும் இந்த வயதில் அது ஒரு ஆச்சரியம் அல்லது ஆச்சரியமான முரண்.
இறைவாழ்த்தாக எழுதப்பட்டிருக்கிற இரண்டு கவிதைகளின் வார்த்தை ஒழுங்கு-WORD ORDER-வித்தியாசமாக இருக்கிறது. உபயோகப்படுத்துகிற வார்த்தைகளும் அவற்றை இடம்பெயர்க்கிற விதமும் கூட யோசிக்க வைக்கிறது - ஒரு முதிர்ந்த சாயல் இருக்கிறது - Fancy Dress Competitionகளில் மூன்று அல்லது நான்கு வயது முகங்களில், திருவள்ளுவர் தாடியை அல்லது பாரதியார் மீசையை ஒட்டிவிடுவார்களே அது மாதிரி.
பிரமித்து அனுபவிக்க யாது செய்கேனோ
மதியோ பூரணமாகி மாந்தரெல்லாம் பரவசமாக
இந்த அடிக்கோடிட்டவை எல்லாம் ஒரு பதின்வயது மனதின் அகராதியில் இருப்பது அபூர்வம்.
*
அதேபோலத்தான் மகளிர்தினச் சிறப்புக் கவிதைகளும். தாயும் பாட்டியும் தமக்கையும் மட்டுமே உலவுகிற வயதில், உங்களால் தோழியையும் மனைவியையும் இணைத்துக்கொள்ள முடிகிறது. தேன் போன்று இனியவள், மான் போன்று துள்ளுபவள் என்று ஒரு இருபதுக்குரலில் எழுதியிருப்பதும் அப்படித்தான். உங்களுடைய வயதுக்கு முன்னால் செல்கிற வரிகளை எழுத முடிகிறது உங்களுக்கு.
*
அந்த மறுமலர்ச்சி ஆத்திச்சூடிதான் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஒருவிதமான ஆழ்ந்த எதிர்க்குரல் அல்லது எதிர்ப்புத் தெரிகிறது ஒவ்வொன்றிலும். மிகக் கூர்மையான ஒரு எதிர்மறை விளிம்புடன் அவை பளபளக்கின்றன. உங்களை மகிழ்ச்சியுடனும், அதே சமயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் அணுகச் சொல்கிற குரல் அவற்றில் உண்டு.
*
நான் உங்களுடைய பதினைந்தாவது வயதில், தலைமை ஆசிரியருக்கு, கரும்பலகை துடைப்பான் வேண்டும் என்று ஒரு சீட்டுக் கவி எழுதின ஞாபகம். கல்லூரிக் காலத்தில், இரண்டாம் ஆண்டு இறுதியில், பறவைகள் பறக்கிற மாலை நேர வானத்தைப் பற்றி எழுதியதுண்டு.
உங்களுடைய கவிதைகள் அப்படி இல்லை. வேறொரு புதிய இடத்தில், புதிய தடத்தில் இருக்கின்றன. இவற்றைப் படித்தால் சிலருக்கு இயற்கையாக இல்லையென்றும் ஒருவேளை தோன்றலாம். இன்னும் சிலருக்கு, காலத்தின் சுவடுகளை எழுத்தில் பதியவிடாத, ஒரு நீளத்தாவல் என்று தோன்றலாம். இந்த ஏழு கவிதைகளை மட்டும் வைத்துக்கொண்டு, உங்களை அப்படியெல்லாம் எடைபோட முடியாது.
கல்யாணவீட்டு வாசலில் கட்டப்பட்டிருக்கிற வாழைமரங்களை வைத்து, வாழைத் தோப்பு விளைச்சல் என்ன என்று எப்படிச் சொல்ல முடியும்.
*
இதன் பின் உங்களின் பெற்றோரும், அவர்களது வழிபாடுகளும், புத்தகங்களும், பார்வைகளும் இருக்கும். அல்லது உங்களின் தந்தை தாயின் வழித் தாத்தா பாட்டிகளின் இறைத் துதி இருக்கலாம்.
உங்கள் மொழியும், வார்த்தை ஒழுங்கும் எவரிடமிருந்து பெறப்பட்டவையெனினும், அவையே இந்தக் கவிதைகளின் சிறப்பும், சிறப்பின்மையும் ஆகும்.
உங்களுக்குத் தோன்றுகிறது போல எழுதிச்செல்லுங்கள். பூ மலர்வது போலவும், பூ உதிர்வது போலவும் எழுத்து, சொல், பொருள் எல்லாம் அதனதன் காரியத்தைச் செய்யும்.
ஒரு புல் எவ்வளவு அழகோ, ஒரு தாமரை எவ்வளவு அழகோ, அவ்வளவு அழகுதான் ஒரு கூழாங்கல்லும் மலையும். எது அழகு என உங்களுக்குத் தோன்றுகிறதோ அதன் அழகைச் சொல்லிச் செல்லுங்கள்.
எல்லாம் அழகு என்பதுதானே இறுதி உண்மை.
*
நீங்களும் உங்கள் எண்ணங்களும் அழகு.
நன்றாகப் படியுங்கள்.
நல்வாழ்த்துக்களுடன் -
கல்யாண்ஜி (கையொப்பம்)
Comments
Post a Comment