Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சிங்காரவடிவேலு சார்




          எஸ்.எஸ்.என். கல்லூரிக்கு வந்து போகிறவர்களுக்கு சிங்காரவடிவேலு சாரைத் தெரியாமல் இருக்காது. ஏராளமான உடம்பின் மேல் அளவெடுத்துத் தைத்த அரைக்கைச் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு தரையைப் பார்க்கிறாரா நம்மைப் பார்க்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாதபடி முகத்தை வைத்துக்கொண்டு மெதுவாக, மிக மெதுவாக நம் கல்லூரி வளாகத்திற்குள் வளைய வருபவர். கைகளை எப்பொழுதும் ஒரு தடிமனான புத்தகமும் மூக்குக்கண்ணாடிப் பெட்டியும் சாக்பீஸ் டப்பாவும் அலங்கரிக்க அதை ஒரு சுமையாகக் கருதாமல் சாதாரணமாக சுமந்துக்கொண்டு செல்வார். சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும், ஆனால் அது தெரியாதவாறு கொழுப்பு அடுக்குகள் மறைத்துவிட அதனால் அவர் கன்னம் அடையும் விசாலத்தில் அவரது இருபது ஆண்டுகால ஆசிரிய அனுபவம் பெரிதும் பயன்தராமல் அவரிடமே தேங்கி நிற்பதுபோல் தோன்றும். ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் புனித இயற்பியலைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மாணவர்கள் இருப்பது இயற்கையே, இது அவருக்கும் தெரிந்துதான் இருக்கிறதோ என்னவோ, அவரைத் தேடி யார் வந்தாலும் அருகில் உட்கார வைத்து சந்தேகங்களைப் பொறுமையாகத் தீர்த்து வைப்பார். உலகத்தில் சில கடினமான இயற்பியல் புதிர்கள் விடுவிக்கப்படும்போது புன்னகைப்பார், அப்பொழுது மட்டும் அபூர்வமாகக் கன்னக்குழிகள் தெரியும், அந்த அளவுக்கு இயற்பியலைக் காதலிப்பவர்.

          ஆராய்ச்சிக்கூடத்திற்குள் இருக்கும்போது அவர் பார்வையில் ஒரு குறும்பு தெரியும். வெண்ணை உறியைக் கண்டுபிடித்ததும் குட்டிக்கிருஷ்ணன் ஒரு லுக் விடுவானே, அந்தப் பார்வை ! அங்கே இருக்கும் கருவிகள் மற்றும் இன்னபிற இயற்பியல் டமாரங்களை அடிக்கடி தொட்டுத் திருப்பிப் பார்ப்பார். “ஃபெர்ரோமேக்னெட்டிக்” என்ற வார்த்தையைக் கேட்டால் போதும், அந்த சப்தம் வந்த திசையை நோக்கி மலரமலர விழிப்பார். அந்த ஃபெர்ரோ வகை க்றிஸ்டல்களுக்குள் ஒளியை ஊடுருவச்செய்தல் அவரது பொழுதுபோக்கு ! கூடத்தில் உருவாக்கப்படும் செயற்கை ஒலி அலைகளோடு தன் அய்கிரி நந்தினி ரிங்டோனைக் கலக்கவிட்டு ஒருமாதிரி இயற்பக்தியியல் பாடம் நடத்துவார். கேட்டுக்கொண்டே இருக்கலாம் ! தமிழகத்துக் காப்ரா போல் அடிக்கடி “சிவத்தாண்டவமும் செர்ன் கொலைடரும்” என்று டப்பிங் செய்த ஹாலிவுட் பட டைட்டில் சாயலில் எனக்கு மட்டும் சொற்பொழிவு நடத்துவார். அதற்காகக் கெமிஸ்ட்ரி வகுப்புகளைக் கட் அடித்த சமயங்கள் கூட உண்டு !

          பித்தகோரஸுக்கு முன்னாலேயே முக்கோண சமாசாரத்தைக் குத்துமதிப்பாகக் கண்டுபிடித்த நம்ம ஊர் போதையனாரை ஒருநாள் நானும் தமிழ்மணியும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தோம்.

"ஓடும் நீளம் தனை ஒரே எட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே", என்று பேப்பரில் பாடிக் காட்டினார் போதையனார்.

“ஓடும், கூறு, தள்ளி, பாதி...ஓவர் வன்முறையா இருக்கே மச்சான்...”
“ஒரு நிமிஷம்...சி ஈக்வல்டு ஏ மைனஸ் ஏ பை எய்ட் ப்ளஸ் பி பை டூ.... அட ஆமாம் !”, என்றார் புருவத்தை உயர்த்தியபடி.
“ஆமாம் சார், வருவது கர்ணம் தானே, வந்துருச்சு சார் !”, என்றோம் காலரை உயர்த்தியபடி.
“இதே மாதிரி அதர்வண வேதத்துல ஏகப்பட்ட கெமிஸ்ட்ரி இருக்காம் ! ஹிட்லர் கூட அதத்தான் யூஸ் பண்ண நெனச்சதா சொல்றாங்க சார்”
“ஹிட்லர் இருக்கட்டும், நாம ஏன் யூஸ் பண்ணல ?”
அன்றே எங்கள் போதையனார் போதையை இறக்கிவிட்டார். இது தேற்றமே இல்லை, உபயோகப்படாது என்று நிரூபித்துவிட்டார்.
“நம்மகிட்ட ஒரு காலத்துல நல்ல ஞானம் இருந்திச்சு விஷ்ணு. இந்த போதையனார் ஒரு ஜீனியஸ்தான் நான் மறுக்கல. அப்டி இப்டி ஆன்சர் வருது. சரி, ஜீனியஸ்தான், அதுக்கு இப்ப என்ன பண்ணலாம் ? நாங்கதாண்டா ஒசத்தினு சொல்லணுமா ? அப்பறம் ? உலகத்தை ஒத்துக்கவெக்கணுமா ? சரி, ஒத்துக்கவெச்சு ? ஒத்துக்கவெச்சு என்ன சாதிக்கப்போறோம் ? உங்க சயின்ஸ விட எங்க சயின்ஸ் பழசுடானு நிரூபிக்கப்போறோமா ? சரி, நிரூபிச்சு ? பழசா இருக்கறதா முக்கியம் ?”, பஞ்சர் கூட ஒட்ட முடியாதபடி டியூப்பை வெடித்துவிட்டார்.

          ஆனால் உண்மையில் ரொம்ப சாதுவான மனிதர். யாரையும் வா போ என்று ஒருமையில் விளிக்க மாட்டார். என்னைப் பார்த்து “சொல்லுங்க என்ன விஷயம் ?”, என்று அன்புடன் அவர் கேட்கும் போது எனக்கும் அவருக்கும் இடையே இருக்கும் அந்த ஆசிரியர்-மாணவர் உறவு சரக்கென்று அறுந்துவிடும். என் இரண்டாம் இல்லத்தில் ஒரு தந்தையாக, என் இயற்பியல் தேடலுக்கான பயணத்தில் ஒரு ஊன்றுகோலாக, கல்லூரியில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகளில் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிக்கும்போது ஒரு நண்பனாக, என்று எல்லா தருணங்களிலும் அவர் எனக்கு இனியவராகவே தெரிந்துகொண்டிருக்கிறார்.

          கல்லூரியில் 2008-ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர். ஒரு வள்ளலாரின் செய்யுளை வைத்துக்கொண்டு எங்களுக்கு க்வாண்டம் மெக்கானிக்ஸை அவர் புரிய வைத்த விதத்தை மறக்கவே முடியாது ! பலமுறை மெட்டா பிசிக்ஸின் கடைக்கண் பார்வையை எங்கள்மேல் விழவைத்தவர், மெட்டா பிசிக்ஸின் மேலும் எங்கள் கடைக்கண் பார்வையை விழச்செய்தவர் ! இயற்பியல், வேதியியல், கணிதம் என்று பிரித்துப் படித்தே பழக்கப்பட்ட எங்களுக்கு பொறியியலில் இது அனைத்தும் ஒரு கட்டத்தில் சங்கமிக்கும் சூழலை சமாளிக்கும் மன உறுதியை எங்களுக்கே தெரியாமல் உட்செலுத்தியவர். இவரை நாங்கள் நடத்திய விதத்தால் இரண்டாவது செமஸ்டரில் “உங்களுக்குப் பாடம் நடத்த இஷ்டமில்லை”, என்று சொல்லிவிட்டார். அதனால் எங்களுக்கு விளைந்த நஷ்டத்தை என் வகுப்புத்தோழர்கள் புரிந்து கொள்வதற்குப் பலகாலம் ஆனது. பட் டூ லேட் ! இனி தனியே இயற்பியல் என்றொரு பாடம் கிடையாது, எனவே இனி அவர் எங்கள் வகுப்பிற்கு வரமாட்டார், நாங்கள் மார்க் வாங்கவும் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகவும் இனி இவர் தேவைப்படமாட்டார் ! ஆகவே இவரை மறந்தாகிவிட்டது ! ஆனால் இப்பொழுதும் அவரை வழியில் பார்க்கும்போதெல்லாம் என்னை அவர் சாந்தமாகப் பார்த்து சிரிக்கும் அந்த நொடி அப்படியே என் மனத்தில் உறைந்துபோய் என் இதயத்தை என்னமோ செய்துதான் விடுகிறது. அவர் நூறாண்டு வாழவேண்டும்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி