நவீன இந்தியாவின் சிற்பி
இந்தியா என்றால் என்ன? ஒரு நாட்டை எப்படி இது தனிநாடு என்று பிரிக்கலாம்? ஒன்று இனம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மதம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மொழி சார்ந்து பிரிக்கலாம், அல்லது பொதுவான எதிரி அடையாளம் காணப்பட்டு அதை சார்ந்து பிரிக்கலாம். ஆனால் இந்தியாவை எப்படி வரையறுப்பது? ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல காலகட்டங்களில் ஏற்பட்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், பொதுவான எதிரி என்று ஆங்கிலேயரைக் கைகாட்டினால் அவர்கள் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரச்னையைத் தூண்டி விடுகிறார்கள், இதை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது? ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்று வரையறுப்பதில் எவ்வளவுக்கெவ்வளவு உலகின் மற்ற நாடுகளுக்கு சுலபமாக இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியாவுக்குக் கடினமாக இருந்தது. ஒருபுறம் 1923-ல் சவர்க்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்துத்துவக் கொள்கை. மறுபுறம் 1937-களில் ஜின்னாவிடம் தோன்றிய மத அடிப்படையிலான இஸ்லாமிய தேசியவாதம், இந்த இரண்டும் உலக வழக்கப்படி ஏதோ ஒன்றைச் சார்ந்த முதன்...