மறதி விதி!
நீங்கள் ஒரு மாநகரப் பேருந்திற்காக உச்சிவெயிலில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேருந்தைத் தவிர மற்ற எல்லா பேருந்துகளும் வருவதுபோல் என்றாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எல்லாவற்றிற்கும் மேலாக வரிசை வரிசையாக உங்கள் பேருந்து எதிர்த்திசையில் வந்து உங்களைக் கடுப்பேற்றும். எல்லாம் தலைவிதி என்று நொந்துகொள்வீர்கள். அது தலைவிதி இல்லை, மர்ஃபி விதி!
உங்கள் பைக்கை மிதியோ மிதி என்று மிதிக்கிறீர்கள். ஊஹும், வண்டி ஸ்டார்ட் ஆகக் காணோம். நேராக வண்டியை ஒரு பைக் மெக்கானிக்கிடம் எடுத்துக்கொண்டு போகிறீர்கள். அவர் ஒரே மிதி மிதிக்க, பைக் ஒரு பெரும் உறுமலுடன் ஸ்டார்ட் ஆகி விடுகிறது. அப்பொழுது அந்த மெக்கானிக் உங்களை ஒரு மாதிரி பார்க்க, அந்தப் பார்வைக்குள்ளே ஒரு நமட்டுச்சிரிப்பு தென்படுமே, அந்த நமட்டுச்சிரிப்புதான் மர்ஃபி விதி!
ஆம், நம்மைச் சுற்றி இருக்கும் உயிரற்ற பொருட்களுக்குத் தன் சூழ்நிலையை வசீகரிக்கும் தன்மை உள்ளதா என்கிற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்துக் கொண்டு இருக்கிறது. "எதிலெல்லாம் தவறு நடக்கலாமோ, அதிலெல்லாம் தவறு நடந்தே தீரும்", என்பதுதான் மர்ஃபி விதியின் சாராம்சம். "இங்கதானே என் மூக்குக்கண்ணாடிய வெச்சேன்?", என்று தேடும் பல தாத்தாக்களை நாம் சந்தித்திருப்போம். மூக்குக்கண்ணாடி வேண்டுமென்றே சதி செய்து ஒளிந்துகொள்கிறதா என்ன?
யோசித்துப் பாருங்கள், ரொம்ப நாள் கழித்து கிரிக்கெட் விளையாட கையுறைகள் அணிந்திருப்பீர்கள். அப்பொழுது பார்த்து மூக்கு பயங்கரமாய் அரிக்கும். இது எப்படி ஸ்விட்சு போட்டாற்போல் நடக்கிறது? இது என்ன மர்ம விதி? உலகையே மறந்து நிம்மதியாய் ஆனந்தக் குளியல் போட்டுக்கொண்டிருப்பீர்கள். அப்பொழுது பார்த்து யாராவது ஃபோன் பண்ணுவார்கள்! உங்கள் குளியறையில் கேமரா ஒன்றும் இல்லையே? "இந்த சனியன் புடிச்ச டூத்பேஸ்ட் இப்ப பார்த்து தொலஞ்சு போகணுமா?", என்று உயிரற்ற பொருட்களைப் பங்காளி போல பாவித்து உரிமையுடன் திட்டுவீர்கள். அதற்கு என்ன கேட்கவா போகிறது?
அது எப்படி நாம் வெளியே சென்றிருக்கும் நேரம் பார்த்து கேஸ் சிலிண்டர்காரன் கதவைத் தட்டுகிறான்? நமக்கென்று ஒரு காரியம் ஆகவேண்டும் எனும்போது வாட்ச்மேன் இருக்கமாட்டான். நமக்கு வேண்டப்பட்டவருக்கு ஃபோன் செய்யும்போதெல்லாம், "நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும்...", என்று ஒரு இனியவள் கூறுவாள். ஆனால் தெரியாமல் ராங்க் நம்பரை அடித்துவிடுங்கள், உடனே மறுமுனையில் யாராவது ஃபோனை எடுத்துவிடுவார்! கொடுமையிலும் கொடுமை, கரெக்டாக காலைக்கடனின் போது தண்ணி சப்ளை நின்று போவது!
நமக்கென்று ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் இந்த மர்ஃபி விதி. இது ஆப்டிமிஸ்டுகளை ஏனோ தொந்தரவு செய்வதில்லை. அதனாலேயே மர்ஃபி விதியை அவநம்பிக்கையின் உச்சம் என்று நம்பிக்கைவாதிகள் அடித்துக்கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த விதி எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாய்ப் பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அவரவர் பார்வையில் எல்லாமே தப்புத் தப்பாய் நடப்பது போலத் தோன்றும். சம்பவங்களை சம்பவங்களாகப் பார்க்காமல் தவறான சம்பவம், சரியான சம்பவம் என்று பிரித்துப் பார்ப்பதால்தான் மர்ஃபி விதி பிறக்கிறது என்பது இவர்களின் வாதம்.
ஃபேஸ்புக்கில் மர்ஃபி விதி பற்றிய நிலைத்தகவல் ஒன்றிற்கு நண்பர் ஒருவர் அளித்த பின்னூட்டம், "அது மர்ஃபி விதி இல்லை பாஸ், மறதி விதி!"
Comments
Post a Comment