நவீன இந்தியாவின் சிற்பி
இந்தியா என்றால் என்ன? ஒரு நாட்டை எப்படி இது தனிநாடு என்று பிரிக்கலாம்? ஒன்று இனம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மதம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மொழி சார்ந்து பிரிக்கலாம், அல்லது பொதுவான எதிரி அடையாளம் காணப்பட்டு அதை சார்ந்து பிரிக்கலாம். ஆனால் இந்தியாவை எப்படி வரையறுப்பது? ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல காலகட்டங்களில் ஏற்பட்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், பொதுவான எதிரி என்று ஆங்கிலேயரைக் கைகாட்டினால் அவர்கள் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரச்னையைத் தூண்டி விடுகிறார்கள், இதை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது? ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்று வரையறுப்பதில் எவ்வளவுக்கெவ்வளவு உலகின் மற்ற நாடுகளுக்கு சுலபமாக இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியாவுக்குக் கடினமாக இருந்தது. ஒருபுறம் 1923-ல் சவர்க்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்துத்துவக் கொள்கை. மறுபுறம் 1937-களில் ஜின்னாவிடம் தோன்றிய மத அடிப்படையிலான இஸ்லாமிய தேசியவாதம், இந்த இரண்டும் உலக வழக்கப்படி ஏதோ ஒன்றைச் சார்ந்த முதன்மையான தேசியவாதங்களாக இந்தியாவில் நிலைபெற்றன.
இப்படி இனம் சார்ந்த, மதம் சார்ந்த தேசியவாதங்கள் தங்களுக்குள் கொள்கை ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் முரண்பட்டுக் கொண்டிருக்க, இந்த இரண்டு கொள்கைளுக்கும் எதிராக, இடையே மகாத்மா காந்தியின் இந்தியம் வளர்ந்துகொண்டிருந்தது. காந்தியின் இந்தியம் இதற்குமுன் இந்த உலகம் கண்டிராத ஒன்று. காந்தியின் இந்தியம் மிகவும் எளிமையானது. இந்தியா என்னும் ஒரு நாட்டிற்குள் இருக்கும் எல்லா மக்களும் இந்தியர்கள், அவ்வளவுதான். காந்தி தன்னுடைய ஆரம்பகால அரசியலில் மதத்தைக் கலந்தாலும் இடையில் அது தவறென்று உணர்ந்து அதனை மாற்றிக் கொண்டவர். இந்தியாவின் பன்முகத்தன்மையை உணர்ந்தவராய் கடைசிவரை இந்தியாவை மதம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ கட்டமைக்க முடியாது, கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இப்படித் தொடர்ந்து 27 வருடங்கள் இந்தியாவில் சமத்துவத்தையும், சகிப்புத்தன்மையையும் போதித்த காந்தியின் தேர்தல் அரசியல் முகமே ஜவகர்லால் நேரு.
ஆரம்பத்தில் மதச்சார்பற்றவராக இருந்த ஜின்னா, இடையில் தன்னை மதச்சார்பற்றவராகத் திருத்திக்கொண்ட காந்தி, காந்தியின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட நேரு, இம்மூவரும் ஒரு காலத்தில் ஒரு பெருங்கனவைக் கொண்டிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியா எப்படிக் கட்டமைக்கப்படவேண்டும் என்ற மாபெருங்கனவு அது. ரபீந்திரநாத் தாகூர் இக்கட்டமைப்பிற்கு, ’The Idea of India’ என்று பெயர் சூட்டினார். பிற்காலத்தில் ஜின்னா தன்னுடைய மனமாற்றத்தால் இக்கனவிலிருந்து வெளியே வந்துவிட்டார். மீதம் இருந்த இரு பெரும் தலைவர்கள் காந்தியும் நேருவும். காங்கிரசுக்குள் சர்தார் வல்லபாய் படேலுக்கு ஏகோபித்த ஆதரவு இருந்தும் நேருவைப் பிரதமராக்க காந்தி தீவிரம் காட்டியது இந்தக் காரணத்தினால்தான். நேருவின் மேற்கத்திய மோகம் குறித்தும் அவரது பொருளாதார நிலைப்பாடு குறித்தும் காந்திக்கு விமர்சனங்கள் இருந்தாலும் நேருவைப் பிரதமராக்க முனைந்தது இந்தக் காரணத்தினால்தான். அந்தக் காரணம், இந்தியாவின் பன்முகத்தன்மையை முழுவதும் அறிந்த, இந்திய மக்களை மதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர்களாக ஏற்றுக் கொண்டு சமமாக அரவணைத்து செல்லக்கூடிய மனப்பக்குவமும் அறிவு முதிர்ச்சியும் இருந்த, அதேசமயம் ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என்று அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருந்த சுதந்திர இந்தியாவின் ஒரே தலைவர் நேரு என்பதுதான்.
இன்று இந்தியா சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு மூலக் காரணம் நேருதான் என்று குற்றம் சாட்டுபவர்கள் உண்டு. பல்வேறு நிர்மாணத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றாலும், சீனாவை நம்பியது, ஆரம்பக் கல்வியை சரியாக கவனிக்காதது, என நேரு செய்த நிர்வாகத் தவறுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசை நேரு கலைத்தது ஒரு மோசமான முன்னுதாரணம். சீன மக்கள் குடியரசை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பதற்காக ஐ.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியை நேரு ஏற்காமல் விட்டது தவறு என்கிறார் சசி தரூர். நாம் இன்று சந்திக்கும் பிரச்னைகளையெல்லாம் பார்க்கும்போது இந்த உண்மைகள் நேருவை சுதந்திர இந்தியாவின் வில்லனாக சித்தரிப்பது இயற்கையே. ஆனால் இதையெல்லாம் மீறி, நேருவின் தலைமை சுதந்திர இந்தியாவிற்குத் தேவைப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
பிரிவினைக்குப் பிந்தைய 1947. ஒருபுறம் இங்கு இஸ்லாமியர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, பாகிஸ்தானில் இந்துக்களின் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பாகிஸ்தானுக்குப் போய்விட்ட மேற்கு பஞ்சாபிலிருந்து, இருந்த கொஞ்ச நஞ்ச உயிரையும் நம்பிக்கையையும் ஆதாரமாக வைத்து ஒருவழியாக இந்திய மண்ணிற்குள் அகதிகளாகக் காலடி எடுத்து வைத்திருந்த இந்துக்களுக்கு, இஸ்லாமியர்கள் மீது தீராத வன்மம். அதேபோல்தான் பாகிஸ்தானுக்குள் நுழைந்திருந்த இஸ்லாமிய அகதிகளின் நிலையும். இருபுறமும் வெறுப்பு உச்ச நிலையை அடைந்திருக்க, பாகிஸ்தானில் தங்களது வீடும் உடைமைகளும் பறிபோனதை ஈடுசெய்வதற்காக, இங்கு உள்ள இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு அவர்களது வீடுகளையும் உடைமைகளையும் எங்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்கள் அகதிகள். இந்தப் பின்னணியில் சர்தார் வல்லபாய் படேலுக்குக் கடிதம் எழுதுகிறார் நேரு. “பாகிஸ்தானில் இந்துக்களை அடித்தார்கள் என்பதற்காக இங்கு இஸ்லாமியர்களை தண்டிக்கவேண்டும் என்ற எண்ணம் இங்கு பலருக்கு இருக்கிறது. அந்த வாதம் எனக்கு அபத்தமாகப் படுகிறது. நமது மதச்சார்பற்ற கொள்கை, முக்கியமாக இஸ்லாமிய இந்தியர்களின் பாதுகாப்பிற்கு நம்மைப் பொறுப்பாக்கியுள்ளது”, என்று எழுதுகிறார். அவர்தான் நேரு.
நேரு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று இந்தியா ஒரு இந்து பாகிஸ்தானாக மாறியிருக்க வாய்ப்புகள் உள்ளன என்ற வாதத்தை நம்மால் புறந்தள்ளி விட முடியாது. அதுவும் இந்தியா இந்துக்களுக்கே என்ற கோஷத்துடன் பாகிஸ்தானின் பிரதிபலிப்பாக ஒரு இந்து தேசத்தை உருவாக்க முனைந்த இந்து தேசியவாத சக்திகள் காந்தியின் இந்தியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருந்த காலகட்டம் அது. அரசியல் சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் ஆகி கிட்டத்தட்ட அமைதி திரும்பியிருந்தாலும்கூட இன்னமும் இந்துத்துவம் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால், அப்பொழுது கலவரம் மிகுந்த காலகட்டத்தில் இந்து தேசியவாதம் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்று இன்று யோசித்துப் பார்க்கும்போது, நேரு என்கிற ஒற்றை ஆளுமை இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகக் கட்டமைக்கக் காட்டிய முனைப்பும் தீவிரமும் பிரமிக்க வைக்கிறது. இன்று இந்தியா இந்துஸ்தானாக இல்லாமல் காந்தி கனவு கண்ட ’இந்தியா’விற்குக் கொஞ்சமாவது அருகில் இருப்பதற்கு நேருவுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு. ஏனெனில் காந்தியின் அப்பெருங்கனவை நடைமுறைப்படுத்த நேரு எதிர்கொண்ட சவால்கள் உலகில் இதற்குமுன் வேறெந்த தலைவரும் எதிர்கொள்ளாதது.
இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் செயல்பாடுகளையும் அதற்குப் பிந்தைய பிரதமர்களின் செயல்பாடுகளையும் ஒரே தராசில் வைத்து எடைபோடுவது அநியாயமானது, பாரபட்சமானது. உயிருடன் இருந்தவரை காந்தியால் கொண்டுவர முடியாத அமைதியை அவரது இறப்பு கொண்டு வந்து சேர்த்தது. பெரும் கலவரம் ஒன்றை நிகழ்த்திவிட்டு ஓய்ந்து போயிருந்த இந்தியாவைத் தட்டி எழுப்பி, ஒரு மதச்சாற்பற்ற நாடாக இந்தியாவைக் கட்டமைத்து, இந்திய இராணுவத்தை மக்களாட்சியின் கட்டுக்குள் கொண்டு வந்து, இந்தியாவின் பன்முக அடையாளங்களை மதித்து மொழிவாரி மாநிலங்கள் அமைத்து, பனிப் போரின் நடுவில் மாட்டிக்கொள்ளாது இந்தியாவை விலகியிருக்க வைத்து, இணைந்த இந்தியா உடையாமல் காத்து, ஜனநாயகத்தைத் தக்கவைத்து அதை வலுப்படுத்தி, அரசு இயந்திரத்தை வெற்றிகரமாக நிறுவனமயப்படுத்திய நேருவை, அவரது நிர்வாகத் தவறுகளைக் காரணம் காட்டி ஒதுக்கிவிட முடியாது.
சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்தை செதுக்கிய, அது பயணிக்கப் போகும் திசையைத் தீர்மானித்த இந்த நவீன இந்தியாவின் சிற்பியை, அவரது பிறந்த நாளன்று நினைவு கூறவே இந்த நன்றி கலந்த பதிவு.

Comments
Post a Comment