அந்த வலைப்பதிவாளனுக்கு ஒரு பழக்கம். வானம் கறுத்துத் தன் இருளைப் படறவிடும் வேளையில் தான் மதிக்கும் வயதான ஆளுமைகளுக்கு அஞ்சலிப் பதிவை எழுத ஆரம்பிப்பான் அவன். ஆசையொன்றும் இல்லை அவனுக்கு. ஆனாலும் அந்த வலைப்பதிவாளனுக்கு இப்படி ஒரு பழக்கம். “அவர் சொன்னதுபோல், அரசிலைகளின் ஆதிக் குலவைக்குக் காதுயர்த்தித் திரும்பிப் பார்க்கும் காமதேனு நான்”, இது ஒரு கவிஞருக்கான பதிவில். “அதிகாலையில் சோம்பல் முறித்தபடி கடிகார ஒலியை அணைக்கும் முன் தலையங்கத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கும் என் தலைவனின் நினைவு எனக்கு வரும்”, இப்படி சேமித்து வைத்திருந்தான். “இதோ எனக்குப் பிடித்த இவரின் பத்து பாடல்கள்”, பட்டியலிட்ட பிறகு ஒருபடி மேலே போய் பதிவிற்குத் தலைப்பும் வைத்தான். இப்படித் தன் கணினியில் சேமித்து சேமித்து சமயம் வந்தபின் தன் வலைப்பதிவில் பதிவிட வைத்திருந்த அவன், ஒரு நாள் பாவம் இறந்தே போனான். அவனின் சில பதிவுகள் இன்னமும் பதிவிடப்படாத நிலையில், அவன் கணினியை நான் எடுத்துக்கொண்டு வானம் கறுத்துத் தன் இருளைப் படறவிட்ட வேளையில் அவனுக்காக சேமித்து வைத்திருந்த “மறுபிறப்பெடுத்த வலைப்பதிவாளன்” என...