பயணச்சீட்டுகளை மரியாதையுடன் நடத்துங்கள்.
பயணச்சீட்டுகளை மரியாதையுடன் நடத்துங்கள்.
மூன்றரை நிமிடங்கள் மென்று சுவரோரம் துப்பிக் கடக்கப்
பெட்டிக்கடையின் முன்னே நின்று சில்லறையைத் தேடுகையில்
அகப்படும் அந்தத் துண்டுச் சீட்டைக்
காணாமல் கசக்கி எறியும்போது
புகை இழுக்கப்பட்ட சிறுபீடித் துண்டின் முனையில்
தினம்தினம் கருகுகின்றன
தாய்ப்பால் அழுகைகளும் சகஉடல்வாசனைகளும்
நிறைந்த நம் பயணங்கள்.
ஒரு குப்பைத் தொட்டி போதும்.
அடுத்தமுறை ஒரு குப்பைத்தொட்டியின் முன் நின்று
உங்களது மகத்தான பயணத்தின் நினைவை சுமந்தபடி
உங்களது மகத்தான பயணத்தை சாத்தியப்படுத்திய அப்பயணச்சீட்டை
குப்பைமேட்டுக் காற்றில்
இறகென மிதக்கவிடுங்கள்.
- வ.விஷ்ணு
Comments
Post a Comment