ரோமா
என்னியோ மாரிகோனி வசிக்கும் ஊருக்கு வந்திருக்கிறேன். ரோமாபுரியின் தெருக்களில் அலைகையில் நிறைய வயோதிகர்கள் தென்படுகிறார்கள். இரண்டு பேரைக் குறிப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் அன்டோனியோவின் சைக்கிள் திருடுபோனது. பட்டப்பகலில் கண் முன்னே நடந்த சம்பவம். அன்டோனியோவால் அத்திருடனை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்த சைக்கிள் இல்லாவிட்டால் வேலை போய்விடும். அந்த வேலைக்காகத்தான் படுக்கை விரிப்புகளையெல்லாம் விற்று அந்த சைக்கிளை அடகுக் கடையிலிருந்து மீட்டிருந்தான் அன்டோனியோ. போய்விட்டது. அவனும் அவனுடைய மகனான குட்டிப்பையன் ப்ரூனோவும் அந்த சைக்கிளைத் தேடி ரோமாவை சுற்றியலைந்தார்கள். கிடைக்கவேயில்லை. ப்ரூனோவுக்குப் பசியெடுக்க, அன்டோனியோ வேறு வழியில்லாமல் வேறொரு சைக்கிளைத் திருடப்போக, தப்பிக்கத் தெரியாமல் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொண்டான். ஊரே ஒன்று சேர்ந்து அவனை அடித்துத் துவைத்துவிட்டது. தன் மகனின் கண்முன்னே திருட்டுப்பட்டம் பெற்று அடி வாங்கியதில் அன்டோனியோவுக்கு ஒருபுறம் அவமானம் பிடுங்கித் தின்ன, மறுபுறம் தன்னுடைய திருட்டிற்கான அத்தனை நியாயங்களும் நிழலாடியதில்...