Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சேப்பாக்க செருப்பு வீச்சு

இந்தப்பக்கம் போராட்டத்தை ஆதரித்தால் வன்முறைக்கான ஆதரவு உண்டோ, மஞ்சள் சட்டைகளை அடிப்பதும் பாம்புகளை விடுவோம் என்று மிரட்டுவதும்தான் போராட்டமோ என்று‌ விமர்சிக்கப்படுகிறது. அந்தப்பக்கம் மைதானத்திற்கு வந்தால் அது இனத்துரோகம், காவிரி குறித்து அக்கறை இல்லை என்று இன உணர்வு அதீதமாக வெளிப்படுத்தப்படுகிறது. காவிரியை இப்படியா பெறுவது என்று போராட்டக்காரர்களின் வன்முறை மீது பலர் வைக்கும் விமர்சனத்திற்கு இணையாக, CSK-வுக்கு இந்த முறையிலா ஆதரவளிப்பது என்று ஒரு குறிப்பிட்ட விமர்சனம் எனக்கு இருக்கிறது: Mob mentality என்று போராட்டத்தைப் புறம் தள்ளியவர்களோ மைதானத்திற்குள் செருப்பு வீசப்பட்டதும் mob mentality-யில் CSK CSK என்று கத்திய விதம் எனக்கு அருவெறுப்பைத் தந்தது.

என் குரல் உலகத்தில் எப்படியாவது கேட்கப்படவேண்டும் என்று கையறு நிலையில் உணர்வுகளால் உந்தப்பட்டு உலகமெங்கும் செருப்புகள் தனிமனிதர்களால் வீசப்பட்டிருக்கின்றன. மைதானம் நோக்கி எறியப்பட்ட செருப்பு ஏதோ ஜடேஜா டூப்ளசி மீது எறியப்பட்டதுபோல நினைத்துக்கொண்டு, டூப்ளசி நாட்டின் தலைநகரான கேப் டவுனிலும் தண்ணீர் இல்லை என்றெல்லாம் பாடம் புகட்டப்படுகிறது. செருப்பு வீசியது பிடிக்கவில்லையென்றால் அமைதியாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் அங்கோ பார்வையாளர்கள் கருத்தியல் இருமைக்குள் சிக்கிக்கொண்டு உணர்வெழுச்சியில் CSK கோஷம் போட்டபோது வெளியே போராடியவர்கள் ஒப்பீட்டளவில் தெளிவானவர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள்.

போட்டியைக் காணுவதும், காணாமல் புறக்கணிப்பதும்‌ அவரவர் தேர்வு‌. போட்டியைக் காண ஆவல், ஆனால் அடிப்பார்களோ என்று பயமாக இருக்கிறது என்பவர்கள் பக்கமே என்னுடைய சாய்வு. ஆனால் ஒன்றே ஒன்று. முட்கல் கமிட்டியின் முன்பு பச்சையாகப் பொய் சொன்ன ஒருவரை, ஊழலை மூடி மறைப்பதும் ஊழலில் சேர்த்திதான் என்று வழக்கறிஞரால் சட்ட ரீதியாக விமர்சிக்கப்பட்ட ஒருவரை, "நம்ம தல தோனி ரிட்டர்ன்ஸ்" என்று கேள்வியின்றி அணைத்துக்கொள்வது போன்ற, பெட்டிங்கில் ஈடுபட்டு இரண்டு வருடம் தடை வாங்கி இன்னும் அதே நிறுவனத்திடம் இருக்கும் ஒரு அணியைக் கண்மூடித்தனமாகக் கொண்டாடுவது போன்ற அறிவு மழுங்கிய செயல் வேறு எதுவும் இல்லை. போராட்ட உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத வரை தீர்வு குறித்தும் உணர்ச்சி குறித்தும் அறிவுரை சொல்லும் யோக்கியதையை அந்தத் தரப்பு இழந்துவிடுகிறது. ஒரு சமூகமாக சுயவிமர்சனமும் உரையாடலும் நாம் நிறைய செய்யவேண்டியிருக்கிறது. இவையாவும் ஜனநாயகமாக்கலின் ஒரு குழப்ப அங்கமும் கூட.

கேளிக்கை, விளையாட்டு என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும். ஆனால் செருப்பு வீசப்பட்டதும் CSK CSK என்று வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவித்தது ஆயிரம் செருப்பு வீச்சுகளுக்கு சமம் நன்நெஞ்சே. அவை யார் பக்கம் வீசப்பட்டன என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். மைதானத்திற்கு உள்ளே இருந்தவர்கள்தான் இன்னும் அதிகமாக அரசியல் பழக வேண்டியிருக்கிறது.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி