ரோமா
என்னியோ மாரிகோனி வசிக்கும் ஊருக்கு வந்திருக்கிறேன். ரோமாபுரியின் தெருக்களில் அலைகையில் நிறைய வயோதிகர்கள் தென்படுகிறார்கள். இரண்டு பேரைக் குறிப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் அன்டோனியோவின் சைக்கிள் திருடுபோனது. பட்டப்பகலில் கண் முன்னே நடந்த சம்பவம். அன்டோனியோவால் அத்திருடனை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்த சைக்கிள் இல்லாவிட்டால் வேலை போய்விடும். அந்த வேலைக்காகத்தான் படுக்கை விரிப்புகளையெல்லாம் விற்று அந்த சைக்கிளை அடகுக் கடையிலிருந்து மீட்டிருந்தான் அன்டோனியோ. போய்விட்டது. அவனும் அவனுடைய மகனான குட்டிப்பையன் ப்ரூனோவும் அந்த சைக்கிளைத் தேடி ரோமாவை சுற்றியலைந்தார்கள். கிடைக்கவேயில்லை. ப்ரூனோவுக்குப் பசியெடுக்க, அன்டோனியோ வேறு வழியில்லாமல் வேறொரு சைக்கிளைத் திருடப்போக, தப்பிக்கத் தெரியாமல் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொண்டான். ஊரே ஒன்று சேர்ந்து அவனை அடித்துத் துவைத்துவிட்டது. தன் மகனின் கண்முன்னே திருட்டுப்பட்டம் பெற்று அடி வாங்கியதில் அன்டோனியோவுக்கு ஒருபுறம் அவமானம் பிடுங்கித் தின்ன, மறுபுறம் தன்னுடைய திருட்டிற்கான அத்தனை நியாயங்களும் நிழலாடியதில் விரக்தியும் இயலாமையும் சூழ்ந்துகொள்ள, மகனின் முன்னே உடைந்து அழுதான். ப்ரூனோ அவன் கைகளைப் பிடித்து தேற்றினான். கலைந்த கூந்தலை சரிப்படுத்தினான். கிழிந்துபோன ஆடையில் படிந்திருந்த தூசியைத் தட்டிவிட்டு அப்பாவை எழுப்பினான். இருவரும் தங்களின் தேடலைத் தொடர்ந்தார்கள். ரோமாவின் மக்கள் நெரிசலில் சைக்கிளோடு சைக்கிளாக அவர்களும் என் பார்வையிலிருந்து தொலைந்து போனார்கள். அவர்களைத்தான் இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றும் அந்த இருவரும் ரோமாவின் ஏதோவொரு மூலையில் அந்த சைக்கிளைத் தேடிக்கொண்டிருப்பார்களோ, அவர்கள் தேடும் பாதையில் நான் தற்பொழுது இருக்கிறேனோ, அவர்களை சந்திப்பேனோ என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த எண்ணத்தை உடனே கலைத்துவிட்டு நான் என்னைக் கடந்து செல்லும் கார்களை நோக்கத் துவங்குகிறேன். உலகப்போருக்குப் பிந்தைய பத்தாண்டுகள் கால வளர்ச்சியில் அன்டோனியோ தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு காசு சேர்த்திருப்பான். அந்த திருடுபோன சைக்கிளை மறந்துபோகும் அளவிற்கு சம்பாதித்து இரண்டு கார்களை வாங்கியிருப்பான். அதில் தன் மனைவியை அழைத்துப்போய் மகிழ்வித்திருப்பான். ப்ரூனோவை நன்றாகப் படிக்கவைத்துக் கரை சேர்த்திருப்பான். கைத்தடியின் தேவையின்றி கால்களை அழுத்தி ஊன்றி பேத்தி பேரன்களின் கைப்பிடித்து மகிழ்ச்சியாக நடைபயிற்சி செய்திருப்பான். அவையெல்லாமும் நடந்திருக்க வேண்டும், அந்த வாழ்வு அன்டோனியோவுக்குக் கிட்டியிருக்க வேண்டும் என்று பெருமூச்சு விடுகிறேன். என்னைத் தாண்டி செல்லும் ஏதோவொரு காரில் பேத்தி ஓட்ட, அருகே கொள்ளு பேரன்கள் ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருக்க, பின்னிருக்கையில் 105 வயது அன்டோனியோவும் 80 ப்ரூனோவும் நிம்மதியுடன் அமர்ந்துகொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியை எப்படியாவது கண்டுவிடவேண்டும் என்று கண்ணிமைக்காமல் நிற்கிறேன், ரோமாவின் மக்கள்சூழ் தெருக்களில். (Today Rome is celebrating its 2771st birthday, with the annual event 'Natale di Roma')
Comments
Post a Comment