"வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு..."
“வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு” என்று பல பதிவுகளைப் பார்த்தேன். அதனால் உந்தப்பட்டு எழுதுகிறேன். “மேற்கத்திய சமூகத்தில் குழந்தையைக் கடத்தி வன்புணர்வு செய்பவர்களை ஊரே சேர்ந்து அடித்துக்கொல்லும்போது எப்படி வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்களோ, அதேபோல அவர்களின் சமூகத்தில் தெய்வ நிந்தனை செய்பவர்களை மக்கள் அடித்துக்கொல்லும்போது வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்கள்.” இஸ்லாமிய ஆய்வறிஞர் அந்தோனி மெக்ராய் எழுதிய வரிகள் இவை. சல்மான் ரஷ்டியின் ‘சாத்தானின் வரிகள்’ புத்தகம் வெளிவந்து மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய பொதுச்சமூகத்தினிடையே பெரும் பண்பாட்டுப் பிளவை ஏற்படுத்தியிருந்த பின்னணியில் இந்த வரிகளை அவர் எழுதினார். அற சார்பியல்வாதம் மற்றும் பண்பாட்டு சார்பியல்வாதம் (Moral & Cultural relativism) குறித்து அங்கிருந்துதான் என் வாசிப்பு துவங்கியது. தனிமனித நீதியுணர்வு என்பது பலவகைகளில் சிக்கலானது. தனக்கான எல்லைக்கோட்டை அது தன்னுடைய பண்பாட்டு விழுமியங்களில் தேடுகிறது. அவ்வாறு தேடிக் கண்டடைகையில் அந்த எல்லைக்கோட்டிற்குக் கீழே உள்ள பிற நீதியுணர்வுகளையெல்லாம் அது காட்டுமிராண்டித்தன...