Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

"வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு..."

“வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு” என்று பல பதிவுகளைப் பார்த்தேன். அதனால் உந்தப்பட்டு எழுதுகிறேன்.

“மேற்கத்திய சமூகத்தில் குழந்தையைக் கடத்தி வன்புணர்வு செய்பவர்களை ஊரே சேர்ந்து  அடித்துக்கொல்லும்போது எப்படி வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்களோ, அதேபோல அவர்களின் சமூகத்தில் தெய்வ நிந்தனை செய்பவர்களை மக்கள் அடித்துக்கொல்லும்போது வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்கள்.”

இஸ்லாமிய ஆய்வறிஞர் அந்தோனி மெக்ராய் எழுதிய வரிகள் இவை. சல்மான் ரஷ்டியின் ‘சாத்தானின் வரிகள்’ புத்தகம் வெளிவந்து மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய பொதுச்சமூகத்தினிடையே பெரும் பண்பாட்டுப் பிளவை ஏற்படுத்தியிருந்த பின்னணியில் இந்த வரிகளை அவர் எழுதினார். அற சார்பியல்வாதம் மற்றும் பண்பாட்டு சார்பியல்வாதம் (Moral & Cultural relativism) குறித்து அங்கிருந்துதான் என் வாசிப்பு துவங்கியது. தனிமனித நீதியுணர்வு என்பது பலவகைகளில் சிக்கலானது. தனக்கான எல்லைக்கோட்டை அது தன்னுடைய பண்பாட்டு விழுமியங்களில் தேடுகிறது. அவ்வாறு தேடிக் கண்டடைகையில் அந்த எல்லைக்கோட்டிற்குக் கீழே உள்ள பிற நீதியுணர்வுகளையெல்லாம் அது காட்டுமிராண்டித்தனம் என்ற பிரிவில் அடக்குகிறது, இதுதான் அடிப்படை. மேலும் இந்த நீதியுணர்வு பல சமயங்களில் நான்கு பேரைக் கைகாட்டிவிட்டுத் தான் தப்பித்துக்கொள்ளவும் த‌ன்னிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. சட்டத்தைப் பெரிதும் மதிக்கும் ஒருவருக்கு எல்லைக்கோடு என்பது ஒரு நிர்பயாவாக இருக்கலாம். அஜ்மல் கசாப்பாக இருக்கலாம். சென்னை சிறுமியாக இருக்கலாம். இந்த வெவ்வேறு எல்லைக்கோடுகளின் முரண்பாடுகளால்தான் சட்டம் என்பதே வரையறுக்கப்படுகிறது.

ஒரு குற்றத்திற்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனையை வழங்கவேண்டுமென்றோ, சட்டத்திற்கு உட்பட்டு கொல்ல வேண்டுமென்றோ மனித மாண்பினால் உந்தப்பட்டு, அருவெறுப்பில், பரிதாபத்தில், ஒத்துணர்வில், கையறு நிலையில், பல்வேறு உணர்ச்சிகளின் கலவையில் கொதிப்பது நிச்சயம் புரிந்துகொள்ளக்கூடியதே. உலகின் அனைத்து மனிதர்களுக்கும் இந்த நீதியுணர்வு ஏதோவொரு பரப்பில் உண்டு. ஆனால் இதில் சிக்கல், எப்பொழுது இந்த உணர்வெழுச்சியை நாம் நீதியாக நினைக்க ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுது இரண்டு இடங்களில் நாம் ஒரு சமூகமாக சறுக்குகிறோம். ஒன்று, பிற சமூகங்களின் அநீதிகளாக நம் நீதியுணர்விற்குப் படுவனவற்றைக் கண்டிக்கும் அருகதையை நாம் இழந்துவிடுகிறோம். நீதி குறித்த உரையாடல் பண்பாட்டு ஏசலாக வீழ்ச்சியடைகிறது. "உனக்கு இந்தக் குற்றத்திற்குக் குறியை வெட்ட வேண்டும் என்று தோன்றினால் அப்பொழுது எனக்கும் இந்தக் குற்றத்திற்குக் கல்லால் அடிக்க வேண்டும் என்று தோன்றக்கூடாதா, நம் அளவுகோல்கள்தான் வெவ்வேறானதாயிற்றே" என்று மிக எளிதாக உரையாடல் முடங்கிவிடும். இதன் அடுத்தக்கட்டம் அவரவர் மாற்றுத்தரப்பைக் காட்டுமிராண்டிகள் என்று முத்திரை குத்துவது மட்டுமே. இரண்டு, ஒரு சுயநிர்ணய எல்லைக்கோட்டை மீறும் குற்றம் நடக்கையில் நாம் மனித மாண்பின் பாதுகாவலராகத் தன்னிச்சையாக பாவித்துக்கொண்டுவிடுகிறோம். "நான் யோக்கியன் எல்லாம் இல்லை, அதற்காகக் கொடுங்குற்றவாளிகளையெல்லாம் கொல்லாமல் இருக்க முடியாது" என்பது தன்னைக் குற்ற உணர்ச்சியிருந்து விலக்கிக்கொள்வதுதானே தவிர‌, அல்லது இயல்பான‌ உணர்வெழுச்சியில் கொதிப்பதுதானே தவிர அது நீதி ஆகாது (இந்த வாதமே நீதி சார்பியல்வாதத்திற்கு உட்பட்டதுதான். இதிலிருந்தே இந்த சிக்கலின் ஆழத்தைப் புரிந்துகொள்ளலாம்). சந்தேகமில்லை, இந்த அற உணர்வு மனிதம் தோய்ந்தது, எளிய குரல்களால் நிறைந்தது, பல சமயங்களில் அதிகாரம் மறுக்கப்பட்ட இடங்களிலிருந்து, நசுக்கப்பட்ட குரல்வளைகளிலிருந்து வருவது, அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் இதே உணர்வு நூறு குற்றவாளிகளோடு ஒரு நிரபராதியையும் தெரியாத்தனமாக சேர்த்து கொன்றுவிடக்கூடியது. அந்த ஒரு காரணம் போதும் இந்த அறவுணர்வை நீதியில்லை என்று நிராகரிக்க‌. அதுதான் நீதி என்று நினைத்துக்கொண்ட சமூகங்களில்தான் இவற்றின் நீட்சியாகப் பல்வேறு மனித உரிமை மீறல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நீதி என்பது குற்றம் சாட்டப்பட்டவருக்காக வருந்தும் அந்த‌ சிலரால்தால் காக்கப்படுகிறது. அந்த வருத்தம் குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான பரிதாபத்தில் வருவது இல்லை. மாறாக இந்தக் குற்றத்தை வைத்து பொதுச்சமூகம் சட்டத்தைக் கைவிட்டுவிடுமோ என்ற எச்சரிக்கை உணர்வில் ஏற்படுவது. அந்த எச்சரிக்கையால்தான் குற்றம் சாட்டப்பட்டவரை சட்டப்போக்குகளுக்குள் அழைத்துவந்து சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைப்படி தண்டனையோ விடுதலையையோ வாங்கித்தருகிறார்கள். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி இருக்கிறது என்று நிரூபிப்பவர்கள் கசாப்பிற்காக வாதாடிய அப்பாஸ் கஸ்மி போன்றவர்கள்தான். நீதியின் பரிமாணங்கள் அளவு கடந்தது. அதனால்தான் நீதி என்பது ஒற்றைப் பரிபாலனமாக இல்லாமல் ஒரு பயணமாக ஆக்கப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் நீதிக்கான அந்தப் பயணம் நீதி மறுக்கப்பட்டவர்களின் நெடிய யாத்திரையாகத்தான் இருக்கிறது. எண்ணற்ற சீர்திருத்தங்கள் நிலுவையில் இருக்கின்றன. அப்படியே அந்தப் பயணத்தை மேற்கொண்டு நீதியின் வாயிற்கதவைத் தட்டினாலும், அதன் சாசனங்கள் குரூரமாகவும், சார்புகள் நிறைந்ததாகவும், ஆதிக்க சக்திகளுக்கு உதவுவதாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இருப்பதிலேயே குறைந்த அளவு பாரபட்சம் உள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாகவும், சீர்திருத்தம் செய்ய பெரும்பாலும் அனைவருக்கும் வாய்ப்பிருக்கும் வெளியாகவும் அது மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் விளிம்பு நிலை மக்களுக்காக‌ச் செயல்படுபவர்கள் மீண்டும் மீண்டும் தங்களை வஞ்சிக்கும் நீதிமன்றத்திடமே செல்கிறார்கள். நீதிமன்றத்திற்கான‌ மாற்று இன்னும் மோசமானது என்பதும் நிலையற்றது என்பதுமே அதற்குக் காரணங்கள்.

இன்று வக்கீல்கள் கும்பலாக சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிப்பதும் வாதாட‌ மறுப்பதும் நமக்கு உவப்பான‌தாக இருக்கலாம், ஆனால் இதே கூட்டம் நாளை நீதி பரிபாலனம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஒரு வாட்சப் வதந்தியை நம்பி நம்மை வீட்டிலிருந்து தரதரவென்று இழுத்துக்கொண்டு செல்லும். அப்பொழுது நாம் பெருங்குரலெடுத்து அழைக்கப்போவது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வருந்தும் அந்த சிலரைத்தான். ஏனெனில் நீதி என்பது அவரவர் மனதில் தோன்றுவது மட்டும் இல்லை. நம் மனித‌ மாண்பிற்கிடையே, கொதிக்கும் உள்ளத்திற்கிடையே, விம்மியழும் தருணத்திற்கிடையே அதையும் ஒரு ஓரமாக‌ நினைவில் வைத்திருப்போமாக.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி