Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பப்ஜி

தம்பியின் நண்பர் ஒருவர் தீவிர பப்ஜி ரசிகர். PlayerUnknown's Battlegrounds என்பதன் ‘சிறுபெயர்’தான் பப்ஜி. ஆண்டிராய்டில் இலவசமாகக் கிடைக்கும் துப்பாக்கிச்சூடு விளையாட்டு அது. ஒரே நேரத்தில் பலர் அதில் விளையாடலாம். நூறு பேர் ஒருவரையொருவர் சுட்டுக்கொல்ல வேண்டும், இறுதியில் எவர் எஞ்சியிருக்கிறாரோ அவரே கெலித்தவர். தமிழ்க்கீச்சுலகம் கடந்த சில மாதங்களாக அந்த விளையாட்டினால்தான் கோமாவில் கிடக்கிறது. நிற்க.

அந்த நண்பர் ஒரு மரண கேமர். பாத்ரூமில் ஒரு கையால் பப்ஜியாடிக்கொண்டேதான் மைக்ரோநீர் கழிப்பார். நெர்ட் மாணவராக மாறுவேடம் பூண்டு கல்லூரி நூலகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்னும் தடிபுக்கை எடுத்துக்கொண்டு அதற்குள் மொபைலை வைத்து விளையாடுவார். இவற்றையோ இவற்றிற்கு ஒப்பானவற்றையோ செய்தால்தான் அவர்கள் மரண கேமர்கள். அன்னாரின் மொபைல் ஒருகட்டத்தில் விளையாடி விளையாடி களைத்துப்போய் ஸ்லோ ஆகிவிட்டது. இவருக்கோ விரலால் திரையை வலித்து வலித்துக் காத்திருந்து பொறுமை போய்விட, சுற்றியிருந்தவர்களிடம் எரிந்து விழ ஆரம்பித்தார். பிறகு கை நடுக்கம் வந்துவிட, லஸ் கார்னரில் ஒரு சர்வீஸ் சென்டருக்குப் போயிருக்கிறார். மொபைல் ஆறேழு வினாடிகளுக்குப் பிறகுதான் என்ன என்று கேட்கிறது என்று கடைக்காரரிடம் கொடுத்ததும், அந்தக் கடைக்காரரும் மேலதிக விவரங்களைக் கேட்டுவிட்டு, “ஒரு இருபது நிமிசத்துல ரெடியாகிடும்பா”, என்று அந்த மொபைலைத் தன் பட்டறைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். நான்கு வலிப்பு வலித்து நேராக கூகுள் ப்ளே ஸ்டோருக்குப் போய், அங்கிருந்து க்ளீன் மாஸ்டர் என்னும் இலவச செயலியைத் தரவிறக்கம் செய்து ஐந்தே நிமிடங்களில் மொபைலை பூஸ்ட் செய்துவிட்டார். மீண்டும் பழைய பிரக்ஞையை அடைந்துவிட்ட அந்த மொபைலை அன்னாரின் கைகளில் படைத்து, “எல்லாம் சரி பண்ணியாச்சுப்பா, எண்பது ரூபா ஆச்சு”, என்று சொல்ல, மட்டற்ற மகிழ்ச்சியில் அந்த மரண கேமரும் காசைக் கொடுத்துவிட்டார். “அடிக்கிற வெயிலுக்கு நிறைய பேருக்கு இப்படி ஆகுதுப்பா, ஒரு நாளைக்கு நாலஞ்சு பேர் இப்படி வர்றாங்க, ஏதாவதுன்னா திரும்ப எடுத்துட்டு வா என்ன, சரி பண்ணிர‌லாம்”, என்று அந்தக் கடைக்காரர் முக‌மலர்ந்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்து இது என்ன புதிதாக ப்ளூ ஐக்கான் என்று துப்பறிந்தபோதுதான் தான் பப்ஜியாக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கிறது. தம்பிக்கு ஃபோன் போட்டு, “தொன்னூத்தி ஒன்பது பேரை சுட்டு மலை மேல ஒத்தைல நின்னவன்டா நானு. என்னையே இப்படிப் பண்ணிட்டானுகடா” என்று புலம்பித் தள்ளியிருக்கிறார். அந்த கேமை நீக்கிவிடு, நான் வேறு சில சாத்வீகமான விளையாட்டுகளைப் பரிந்துரைக்கிறேன் என்று தம்பி சிரித்துக்கொண்டே ஆறுதல்படுத்திருக்கிறான்.

பப்ஜி வெறியர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்லவும். சமூக நலன் கருதி வெளியிடுவோர் Fortnite தென்சென்னை மரணகேமர் கிளை.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி