என்னியோ மாரிகோனி
சில பாடல்களைக் கேட்கும்போது, சில படங்களைப் பார்க்கும்போது டைம் டிராவல் செய்ய வேண்டும் என்ற இச்சை கட்டுக்கடங்காமல் வரும். ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் டைட்டில் கார்டை என் 15 இன்ச் லேப்டாப்பில் பார்த்தபோது என்னத்துக்குடா லேட்டா பொறந்த என்று கடுப்பாக இருந்தது. 1968ல் பெரிய திரையில் அந்த டைட்டில் ஓடும்போது கூட்டத்தோடு கூட்டமாக நானும் வாயைப் பிளந்தபடி நுகர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல் சில பாடல்களைக் கேட்கும்போது "இதை ரிக்கார்டிங் ரூமில் நூறு வாத்தியங்கள் முழங்க உருவாக்கும்போது கூட இருந்திருக்க வேண்டும்" என்று தோன்றும். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் 'நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா' பாடலை எப்பொழுது கேட்டாலும் டைம் டிராவல் செய்து அதன் ரிக்கார்டிங்கைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கமாக இருக்கும். அதேபோல்தான் இந்தப் பாடல் . பேரரக்கன் என்னியோ மாரிகோனி போட்ட இசை. கில்பில் படத்தின் என்ட் கார்டில் 'நவஜோ ஜோ' என்று ஒரு படத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கவே, சரி பார்ப்போமே என்று பார்த்தேன். அது நவஜோ இல்லை, நவஹோ என்ற தகவலைத் தவிர அத்திரைப்படத்தில் எனக்கு வேறு எத...