திருவாதிரை
(1 - ஆணுறுப்பில் விழுந்த பல்லி ) === “அடிக்கடி சுவரோடு சுவராக ஒட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது டாக்டர்” என்றேன் கவலையுடன். “நான் கொடுத்த மருந்தைத் தடவினீர்களா?” “வலியோ தடிப்போ எதுவுமே இல்லையே டாக்டர்? மருந்து வேலை செய்ததா என்று எப்படித் தெரியும்?” “தடவினீர்களா இல்லையா?” “தடவினேன். இன்னும் கொஞ்சம் இருக்கிறது.” “சரி. இப்போதைக்கு ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது என்றால் வாருங்கள்.” என்று அனுப்பிவைத்தார். மீண்டும் நான் சொன்னதை நம்பியதுபோல் தெரியவில்லை. அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை நானே தனித்துவப்படுத்திக்கொள்ளும் ஒற்றைத் தருணத்தை அதன் மதிப்பு தெரியாமல் உதாசீனப்படுத்தி, பிறகு அதுவும் நிராகரிக்கப்பட்டு மீண்டும் திரளோடு திரளாகக் கலந்திருந்தேன். தோள்பட்டை அழுத்தியது. ஆபீசில் வேறு ஆட்குறைப்பு நடக்கப்போகிறது என்ற வதந்தியால் மனது அமைதியற்று இருந்தது. பல்லி விழுந்த நிகழ்வைக் கொண்டாடச் சொன்னார் அந்தத் தத்துவ அறிஞர். அவர் சொன்ன சில விஷயங்கள் புரியவில்லை. ஆனால் எதையோ தீர்க்கமாக சொல்வது போலவே சொன்னார். அப்பொழுதே கேட்டிருக்கவேண்டும். குறைந்தபட்சம் பத்து நிம...