Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

திருவாதிரை

(1 - ஆணுறுப்பில் விழுந்த பல்லி)

===

“அடிக்கடி சுவரோடு சுவராக ஒட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது டாக்டர்” என்றேன் கவலையுடன்.

“நான் கொடுத்த மருந்தைத் தடவினீர்களா?”

“வலியோ தடிப்போ எதுவுமே இல்லையே டாக்டர்? மருந்து வேலை செய்ததா என்று எப்படித் தெரியும்?”

“தடவினீர்களா இல்லையா?”

“தடவினேன். இன்னும் கொஞ்சம் இருக்கிறது.”

“சரி. இப்போதைக்கு ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது என்றால் வாருங்கள்.” என்று அனுப்பிவைத்தார். மீண்டும் நான் சொன்னதை நம்பியதுபோல் தெரியவில்லை.

அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை நானே தனித்துவப்படுத்திக்கொள்ளும் ஒற்றைத் தருணத்தை அதன் மதிப்பு தெரியாமல் உதாசீனப்படுத்தி, பிறகு அதுவும் நிராகரிக்கப்பட்டு மீண்டும் திரளோடு திரளாகக் கலந்திருந்தேன். தோள்பட்டை அழுத்தியது. ஆபீசில் வேறு ஆட்குறைப்பு நடக்கப்போகிறது என்ற வதந்தியால் மனது அமைதியற்று இருந்தது. பல்லி விழுந்த நிகழ்வைக் கொண்டாடச் சொன்னார் அந்தத் தத்துவ அறிஞர். அவர் சொன்ன சில விஷயங்கள் புரியவில்லை. ஆனால் எதையோ தீர்க்கமாக சொல்வது போலவே சொன்னார். அப்பொழுதே கேட்டிருக்கவேண்டும். குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாவது தனித்துவமாக உணர்ந்திருக்கலாம். இப்பொழுது அதற்கும் வழியில்லை.

இரவு ஒன்பதரை மணிக்கு வாசல் கேட்டைப் பூட்டச் சென்றபோது அவர் வீட்டின் மொட்டை மாடியில் லைட் எரிந்தது. தினமும் பார்ப்பதுதான், ஆனால் ஏனோ இன்றுதான் அது மனதில் புதிதாய்ப் பதிந்தது. யாரோ இருப்பதுபோலத் தோன்றியது. ஆர்வம் மேலிடவே கேட்டைத் திறந்து அவர் காம்பவுண்டுக்குள் நுழைந்தேன். படிக்கட்டு வெளியேவே இருந்தபடியால் காலிங் பெல் எதையும் அழுத்தத் தேவையின்றி அப்படியே மேலே ஏறிவிட்டேன்.

குழந்தையைப் படுக்கவைத்துக் குளிப்பாட்டும் பிளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றில் முட்டியை மடக்கி உட்கார்ந்துகொண்டு தத்துவ அறிஞர் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் வேறு இரண்டு மனிதர்கள், ஒருவர் ஏராளமான சதையுடன் தரையில் கால் நீட்டிப் பின்புறம் கை ஊன்றியிருந்தார். இன்னொருவர் சற்றே மெலிந்தவர், வழுக்கை தலை; ஓர் இரும்பு நாற்காலியில் அமர்ந்து தாடையில் கைவைத்தபடி எதையோ யோசித்துக்கொண்டிருந்தார். இன் செய்த சட்டை வழியாகத் தொப்பை துருத்திக்கொண்டிருந்தது. அந்தக் காட்சியே ஓர் ஓவியம் போல் என்னை ஈர்த்தது. “திரும்பிப் போய்விடு” என்று மனது சொல்ல, ஓரடி முன்னே எடுத்து வைத்தேன்.

“யாரது?”, நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் தன் மூக்குக் கண்ணாடியை சரிசெய்தார். தத்துவ அறிஞர் திரும்பிப் பார்த்து,

“அடடே, கம்
ப்ரோ!”

“இல்லை ஒன்றும் இல்லை, கேட்டைப் பூட்டச் சென்றேன், லைட் எரிந்தது… யூ கண்டின்யூ, நான் வருகிறேன்”

“நோ நோ கம். கடல் ஆமைகள் இப்படித்தான் லைட்டைப் பார்த்து ஈர்க்கப்படும்.
கம்... சார்! நான் சொன்னேனே, இவர்தான் அவர். பக்கத்து வீட்டுக்காரர்.”

“எது? பல்லி? இவர்தான் அந்தத் தம்பியா?”, நாற்காலியில் இருந்தவரின் கண்கள் விரிந்தன.

“ஆமாம்! கம்
ப்ரோ!”

சற்றே சங்கடமாய்த்தான் இருந்தது. என்னை இப்படியா அறிமுகப்படுத்துவது? ஆனால் இவ்வுலகில் வேறு யாரை இவ்வாறு அறிமுகப்படுத்திவிட முடியும் என்ற எண்ணமும் வர, அதில் ஒரு மாதிரி கூச்சப் பெருமிதமும்.

“வணக்கம் தம்பி! உங்களைப் பற்றி நிறைய சொன்னான். இப்பொழுது எப்படி இருக்கிறது?”

“சார் உடம்பிற்கு ஒன்றும் இல்லை சார், நார்மலாகத்தான் இருக்கிறேன்”

“ம்ம்ம். இவன் தகவலைச் சொன்னதிலிருந்து உங்களைப் பார்க்கவேண்டும் என்று அவ்வளவு ஆவல்”

“நன்றி சார், எதேச்சையாக நடந்துவிட்டது”, எதற்கு நன்றி சொல்கிறோம் என்று எனக்கே அசிங்கமாக இருந்தது. ஆனால் அந்த சூழல் என்னை சட்டென்று ஒரு போக்கிற்குள் இழுத்துக்கொண்டுவிட்டது.

“ஒரே பெருமை ப்ரோ இவருக்கு. ஆணுறுப்பில் பல்லி விழுந்தவரின் பக்கத்து வீட்டுக்காரரின் டிபார்ட்மெண்ட் ஹெட் என்று”

“ஓ! ஹெச்சோடியா சார்?”, என்று நிரப்பினேன். “என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று தத்துவ அறிஞரிடம் கேட்டேன்.

“மனிதகுலத்தின் முழுமுதற் பொழுதுபோக்கு. சுயம் குறித்த உள்முகப் பிரக்ஞையும் மானுடத் தத்துவமும் ஆரம்பித்த இடம். செக்சுக்கு அடுத்தபடியாக மனிதர்களை ஒன்றிணைக்கும் பெருந்தவம்.”

“ஏஹ்? என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?”

“திருவாதிரை”

“பீட்டல்காய்ஸ்!”, என்றார் தரையில் அமர்ந்திருந்தவர். அப்பொழுதுதான் அவரைத் திரும்பிப் பார்த்தேன். எங்களை நோக்கித் திரும்பாமல் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“உட்காருங்கள் ஏன் நிற்கிறீர்கள்?”

“யெஸ் உட்காருங்கள் ப்ரோ” என்று தத்துவ அறிஞர் செம்மண் தரையைத் தட்டினார். “ஒட்டாது உட்காருங்கள். இதோ அவர் உட்கார்ந்திருக்கிறாரே”

“திருவாதிரை என்ன ஸ்பெஷல்? பூமிக்கு அருகே வருகிறதா என்ன?”, ‘ப்பாடா’ என்றபடி அமர்ந்தேன்.

“நோ. சூப்பர்நோவா. வெடிக்கப்போகிறது.”

“வெடிக்கப்போகிறதா!”

“அதெல்லாம் வெடிக்காது தம்பி”, என்றார் துறைத்தலைவர். “இவன் இப்படித்தான்...”

“சார் வெடிச்சா என்னாகும் சார்?”

“அது எங்கோ இருக்கிறது தம்பி. சும்மா லைட் எரியும், சில வாரங்கள் வானத்தைப் பார்க்க நன்றாக இருக்கும், அவ்வளவுதான்”

“பிறகு எதற்காகப் பார்க்கிறீர்கள்? அதுதான் சில வாரங்கள் தெரியுமே? இண்ட்ரோ வேறு பலமாக இருந்தது?”

“அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் உறுப்பில் பல்லி விழுந்ததோ, எனக்கும் தனித்துவமாக ஏதேனும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான்”

“ஒற்றைக்காலெல்லாம் இல்லை.
ப்ரோ, திருவாதிரை வெடிப்பைப் பார்த்த முதல் மனிதன், எப்படி?”, என்று ஆர்வம் பொங்க மலர்ந்தார்.

நான் அவரைப் பார்த்தேன். ‘ஙே’ என்று இருந்தது கேட்க. இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுபோக இதெல்லாம் எல்லோருக்கும் அமைந்துவிடுமா? அடக்க முடியாமல் முதல் கேள்வியைக் கேட்டேவிட்டேன்.

“இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுபோக இதற்கென்றே டெலஸ்கோப் எல்லாம் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பார்களே?”

“அது அவர்களின் பணி. நான் அப்படியல்ல”, என்றார். “நான் ஓர் ஆதிக்குறும்புத்தனத்துடன், இருத்தலில் உள்ள ஓர் அப்பாவித்தனத்துடன் பார்க்க விழைகிறேன். சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் மாம்மோத்துகளை வேட்டையாடிக்கொண்டிருந்தபோது, வானத்தில் ‘பிளுக்’கென்று வெலா சூப்பர்நோவா தோன்றியதே. அப்பொழுது தலையுயர்த்திப் பார்த்ததுபோல் நான் பார்க்க விரும்புகிறேன்.”

“அந்த மனிதர்கள் பார்த்ததுபோலவா?”

கழுத்தைத் திருப்பினார், “அந்த மாம்மோத்துகள் பார்த்ததுபோல்”

‘பளா’ரென்று பல்பு எரிந்தது. “எப்படியென்றாலும் வெடித்தவுடன்தானே மேலே பார்க்க வேண்டும்? நீங்களோ வெடிப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே?”, என்றேன் புத்திசாலித்தனத்துடன்.

“நான் எங்கே காத்துக்கொண்டிருக்கிறேன்? என் தலை மேல்நோக்கித் திரும்பியிருக்கிறது, அவ்வளவே”, என்று முறுவலித்தார்.

“இதோ! இவன் இப்படித்தான் விதண்டாவாதம் செய்வான்”, துறைத்தலைவர் இடைமறித்தார். “கேளுங்கள். நீங்கள் கன்சர்ண்ட் பார்ட்டி என்பதால் சொல்கிறேன்.”

“என்னது?”

“சென்ற ஆண்டு திடீரென்று திருவாதிரை ஒளிமங்க ஆரம்பித்தது தம்பி. கேளுங்கள். பெரிய விஷயம். சென்ற ஆண்டு திடீரென்று ஒளிமங்கியதா? உடனே எல்லோரும் திருவாதிரை வெடிக்கப்போகிறது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள், நான் உட்பட. ஆனால் சில மாதங்களிலேயே அது மீண்டும் ஒளிர ஆரம்பித்துவிட்டது, அதாவது பழைய மாதிரியே. அதாவது திருவாதிரையைச் சுற்றி தூசு மறைத்தது, அதனால்தான் நமக்கு ஒளி மங்கியது, சூப்பர்நோவாவெல்லாம் இல்லை என்று கேசை மூடிவிட்டார்கள். உங்கள் உறுப்பில் பல்லி விழுந்ததோ, இப்பொழுது இவன் அந்தக் கேசைத் திறந்துவைத்திருக்கிறான்.”

“ஒரு வேளை அது சூப்பர்நோவாவாக இருந்தால்? பத்திரம் எழுதித் தருவீர்களா?”, தத்துவ அறிஞர் இடைமறித்தார்.

“சூப்பர் நோவாவாக இருந்தாலுமே கூட அது இன்று வெடிக்கலாம், நாளைக்கு வெடிக்கலாம், மில்லியன் ஆண்டுகள் கழித்து கூட வெடிக்கலாம். என் பத்திரமெல்லாம் கரித்துண்டாகிக் கிடக்கும் பரவாயில்லையா?”

“எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? இருந்துதான் பார்ப்போமே?”

“இப்படி இருந்தால் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாது. பல்லி விழுந்த அனுபவத்தில் சொல்கிறேன்” என்று விவாதத்தில் கலந்துகொள்ள முயன்றேன்.

ப்ரோ இவர் சும்மா ஏற்றி விடுகிறார். அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், அவ்வளவுதான். நான் பகலில் யுனிவர்சிட்டியில் இருக்கும் சமயத்தில் வெடித்தால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்? ஒன்றும் செய்ய முடியாது. பகலில் வெடித்தால் என்ன மில்லியன் ஆண்டுகள் கழித்து வெடித்தால் என்ன, இரண்டுமே ஒன்றுதான். நான் என்ன செய்கிறேன் என்றால், என்ன செய்கிறேன் என்றால், மியர்லீ என்னுடைய சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துகிறேன், அவ்வளவே”

“அது இன்சிக்னிபிகண்ட் என்கிறேன் நான்”, என்று துறைத்தலைவர் குறுக்கே வந்தார்.

“இயற்கையின் போக்கில் மானுட வாழ்க்கையே இன்சிக்னிபிகண்ட்தான். அதற்காக லாண்டாவர் சொல்வதுபோல் கூட்டாகத் தற்கொலையா செய்துகொள்ள முடியும்?
ப்ரோ, இந்தாண்டில் என்னன்னவோ நடக்கிறது. திருவாதிரை வெடிப்பும் தெரியப் போகிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சிங்கிஸ் கானின் வழியில் தெமிர்லான் ஆசியாவைக் கதிகலங்க அடித்துக்கொண்டிருந்த காலகட்டம். அந்த சமயத்தில் சுமார் எண்ணூறு ஒளிதூரத்தில் பால்வீதிக்குள்ளே ஒரு நட்சத்திரம் வெடித்திருக்கிறது. அது நம்மை வந்து சேர இத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்கின்றன. இசிண்டிட் அமேசிங்? ஒரு பேச்சுக்கு நாம் திருவாதிரை வெடித்த நேரத்தில் அங்கிருந்து டெலஸ்கோப் வழியாகப் பார்த்தால் தெமிர்லானின் அட்டூழியங்களைப் பார்க்கலாம். ப்ளேக் நோயில் கோடிக்கணக்கான மக்கள் செத்தது, மாலி சாம்ராஜ்யம் எல்லாவற்றையும் பார்க்கலாம். கிருஷ்ணதேவராயரையும் தெனாலி ராமனையும் பார்த்து நம் குழந்தைப் பருவம் எப்பேர்ப்பட்டப் பொய்களால் ஆனவை என்று மனதுடைந்து போகலாம். சாத்தியங்கள் எல்லையற்றவை! என்ன, யதார்த்தத்தில் நாம் அந்தக் காலவெளிக்குள் போக முடியாது, இது வரலாறு என்று நாம் உணர்ந்துகொள்ள முதலில் அது நடைபெற வேண்டியிருக்கிறது… எனிவே! ஒரு சூப்பர்நோவா பல நூற்றாண்டுகளை இணைக்கிறது ப்ரோ! அதை நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஆதிக்குறும்புத்தனத்துடன், இருத்தலில் உள்ள அப்பாவித்தனத்துடன் பார்க்க விரும்புகிறேன். இது எப்பேர்ப்பட்ட சவால் தெரியுமா? சும்மா ஜிப்பு அவிழ்ந்ததோ பல்லி விழுந்ததோ என்ற கதை இல்லை ஆமாம்”, என்று பொரிந்தார்.

“சரி, ஆனால் இதெல்லாம் திருவாதிரை அப்பொழுது வெடித்திருந்தால்தானே? ஒருவேளை சார் சொல்வதுபோல் வெடிக்கவில்லை என்றால்?”, முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டு கேட்டேன், என் அமைதி அவரைக் கடுப்பேற்றுகிறதா என்று. ஆனால் மனிதர் நிலையாகத்தான் இருந்தார்.

“எல்லாம் ஒரு நம்பிக்கைதான். நம்புவதுதான்
ப்ரோ என் வேலையே” என்று புன்னகைத்தார். “சரி, ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. தினமும் க்ரீன் டீ போடுவேன், எங்களோடு இணைந்துகொள்கிறீர்களா?”

“க்ரீன் டீயா? எனக்கு ஓக்கேதான், ஆனால் நீங்கள் க்ரீன் டீ போட சென்ற நேரம் பார்த்து திருவாதிரை வெடித்துவிட்டால் என்ன செய்வது?”

“ஒன்றும் செய்ய முடியாது. நொந்துகொள்ள வேண்டியதுதான். அதுதான் ப்ரோ சொல்கிறேன், மியர்லீ ஒரு மணிநேரம் வானத்தைப் பார்த்து எனக்கிருக்கும் சாத்தியக்கூற்றை அதிகரித்துக்கொள்கிறேன், தட்ஸ் ஆல். சார் சொல்வதுபோல் நான் கண்மூடித்தனமாகவெல்லாம் தவம் செய்யவில்லை” என்றுவிட்டு, “எனக்கான பல்லி அமையாமலா போகும்?”, என்று முகத்தைத் தூக்கினார். “சரி, டீ எப்படி? சர்க்கரை போடாமலா தேன் போடாமலா? சார் வழக்கமாகத் தேன் போடாமல் சாப்பிடுவார். உங்களுக்கு சர்க்கரை போடாமல் எடுத்து வரவா?”

“எதுவென்றாலும் ஓக்கே.”

“சூப்பர்!” என்றபடிக் கீழே இறங்கினார். அவர் தலை மறையும் வரை மலைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“ப்ரில்லியண்ட் பாய் யூ நோ?”, துறைத்தலைவர் பேச்சுக்கொடுத்தார். “கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. சாகும்வரை வானத்தையேவா பார்த்துக்கொண்டிருப்பது?”

“சார், இது என்னால்தான் என்று வேறு சொல்கிறீர்கள். என் பல்லி விழுந்த சம்பவத்திற்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா? இதை நினைத்து சிரிப்பதா, அல்லது உங்கள் அளவிற்கு நான் ஆழமாக இறங்கமாட்டேன் என்கிறேனா?”

“அது தத்துவவாதிகள் எங்களின் சாபக்கேடு தம்பி. வரவேண்டாம்.”

“யாருமே நம்பவில்லை என்றவுடன்தான் இவரிடம் சொன்னேன் சார். அதுதான் முதல் சந்திப்பு. சொன்னதும் இவருக்கு அப்படி ஓர் ஈடுபாடு வந்துவிட்டது. ஒரு வகையில் எனக்கு அது மகிழ்ச்சிதான். ஆனால் சமயத்தில் இவர் சொல்வது புரிந்துவிடுமோ என்று பயமாகவும் இருக்கிறது” என்றேன். சிரித்தார். “நார்மல்தான். என்ன செய்கிறீர்கள்?”

“சும்மா ஐ.டி.தான் சார், பெரிதாக ஒன்றும் இல்லை. எப்போதாவது எழுதுவேன்.”

“நல்லது. இதோ இருக்கிறானே...”, என்று தரையில் அமர்ந்திருந்தவரைக் காட்டினார். என் பக்கம் அதுவரை அவர் தலைதிருப்பக்கூட இல்லை. எனக்கென்ன என்று அமர்ந்திருந்தார். “அசோசியேட் ப்ரொபசர். இன்னும் மூன்று மாதங்களில் நான் ரிட்டயர் ஆகிறேன். அடுத்தது இவன்தான். கல்லூரியில் எனக்கு இரண்டு வருடம் ஜூனியர். முப்பது வருடப் பழக்கம்”

“நானும் வந்ததிலிருந்து கவனிக்கிறேன் சார். இவரும் வானத்தை முரட்டுத்தனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். யார் முதலில் பார்ப்பது என்று போட்டியோ?”

“இல்லை இல்லை. எப்படி சொல்வது… இதை அடக்கத்தில் சொல்லவில்லை தம்பி, என்னை விட விஷயம் தெரிந்தவன்தான். என்ன ஆயிற்று என்றால், ஆறு வாரங்களுக்கு முன்பு யூர்கன் ஹாபர்மாஸ் என்ற அறிஞரின் புதிய ஆய்வுக்கட்டுரை வெளியானது தம்பி. அதிலிருந்து இவன் போக்கு சரியில்லை. ஒரு 91 வயது ஆசாமி இன்னமும் ஃபார்மல் செமாண்ட்டிக்ஸ், ட்ரான்செண்டெண்டல் ப்ராக்மேட்டிக்ஸ் என்று பேப்பர் போட்டுக்கொண்டிருக்கிறார், தினமும் நாலாயிரம் வார்த்தைகள் எழுதுகிறார் என்று ஒரு திடீர் உத்வேகம் வந்துவிட்டது. தானும் அவரைப்போல் கரைத்துக்குடிக்க வேண்டும் என்று சாப்பாடு தூக்கம் மறந்துவிட்டான்.”

“அவ்வளவு பெரிய ஆளோ?”

“எளிமையாக சொல்லவேண்டுமென்றால், முன்னூறு பருத்திவீரர்கள் படம் தெரியுமல்லவா?”

“ஆமாம்?”

“ஹாபர்மாஸ்தான் கடைசி பருத்திவீரர். வெட்டி வீழ்த்தப்படப்போகிறார், ஆனால் அது அல்ல வரலாறு. கடைசி வரை நிற்கிறாரே, அதுதான்... எனிவே, கமிங் டு த பாயிண்ட். இவனுக்குப் பொதுவாகவே நேம் டிராப்பிங் செய்யும் கெட்டப் பழக்கம் உண்டு. அதாவது கருத்தை நேரடியாக எதிர்கொள்ளாமல் வெறும் ஆட்கள் பேராக சொல்லி அதன் மீது சவாரி செய்வது. ஹொர்க்ஹைமர் சொல்லியிருக்கிறார், பிரதித்யசமுத்பாதம் சொல்லியிருக்கிறது, என்று பட்டம் விடுவான். ஆறு வாரங்களாக இந்தக் கெட்டப் பழக்கம் அதிகமாகி இப்பொழுது வாயிலிருந்து வார்த்தையே வரமாட்டேன் என்கிறது. வெறும் ஒற்றை வார்த்தைகளைத்தான் சொல்கிறான்.”

“டாக்டரிடம் போகலாமே சார்?”, என்றேன்.

“மருத்துவரிடம் போவதில் ஒன்றும் பிரச்னையில்லை. ஒன்று, நான் சொல்வதை அவர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.”

“அந்த வலி எனக்குத் தெரியும் சார். அனுபவித்து வருகிறேன்.”

“இரண்டு, அப்படியே நம்பினாலும் இவன் ஒத்துழைக்க வேண்டுமே? நம் அகத்தை மருத்துவரிடம் முழுவதுமாக ஒப்படைக்க வேண்டும். இவன் பிழைப்பே குறுக்கு விசாரணைதான். மருத்துவரைப் பிடித்து ழாக் லக்கான், அனலிஸ்ட் டிஸ்கோர்ஸ் என்று முறையிட்டால் என்ன செய்வது? ஆழ்மனதைச் சுற்றி வேலி கட்டி வைத்திருக்கிறான். மருத்துவரால் உள்நுழைய முடியவில்லை. இது மருத்துவர்கள் சந்திக்கும் சவால்தான், ஆனால் இவன் அதீதமாகத் தன்னைத் தற்காத்துக்கொள்கிறான். எப்பொழுதும் எல்லாவற்றிலும் விமர்சனப் பார்வை வேண்டும் என்று தீர்மானமாக நம்புகிறான். எனவே ஜோசியரிடம் சென்றோம்.”

“ஜோசியரா?”, திடீரென்று மருத்துவர் தளத்திலிருந்து ஜோசியர் தளத்திற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

“ஆமாம், இவனோடு தினமும் கூட இருந்து, இப்பொழுது இந்த அவலங்களுக்கு வேறு நான் சாட்சியாக இருக்கிறேன். ஜோசியரிடம் விமர்சனத்திற்கு வேலை இல்லை. திருவாதிரை வெடிப்பைப் பாருங்கள், சரியாகிவிடும் என்று காசை வாங்கி அனுப்பிவிட்டார்.”

“வசதியாகப் போய்விட்டது.” என்றேன் யோசிக்காமல்.

“என்ன வசதியாகப் போய்விட்டது? விவாதமே அதனால்தான். வெடிக்காது என்கிறேன் நான்.”

“வெடிக்கும்!”, கைகளில் இரண்டு கோப்பைகளுடன் தத்துவ அறிஞர் “லல்லல்லா” என்றபடி வந்தார்.

“ஹியர்! சர்க்கரை அதன் இல்லாமையில் ஒளிர்கிறது”, கோப்பையை என்னிடம் நீட்டினார்.
 
“ஹியர்! தேன் அதன் இல்லாமையில் ஒழுகுகிறது”, துறைத்தலைவர் தன் கோப்பையைப் பெற்றுக்கொண்டார்.

“தேர்! திருவாதிரை அதன் இல்லாமையில் மிளிர்கிறது”, காற்றில் பெருமையுடன் சிம்பனி வாசித்தார்.

“ஹப்பிள்!”

“என்ன சொல்கிறார்?”

“மூடிக்கொண்டு வானத்தைப் பாருங்கள் என்கிறார்.”

விருட்டென்று மேலே பார்த்தோம். திருவாதிரை அப்படியே இருந்தது. நானும் துறைத்தலைவரும் தேனீரை ஸ்ர்ரப் ஸ்ர்ரப் என்று உறிஞ்சியபடி அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்கள் கழிந்தன. கழுத்தை மெல்ல இறக்கி அவர்களைப் பார்த்தேன். துறைத்தலைவர் மீண்டும் ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்றிருந்தார். மற்ற இருவரும் பரம சிரத்தையுடன் கண்ணிமைக்காமல் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதிசயமாக இருந்தது. கோப்பையை மெல்லக் கீழே வைத்து எழுந்தேன். என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. உரையாடல் மீண்டும் சட்டென்று முடிந்துவிட்டது. படியிலிருந்து கீழிறங்கி, ஒரேயொருமுறை திரும்பி அவர்களை எட்டிப் பார்த்தேன். அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தனர், அவர்களை முன்னர் பார்த்ததுபோலவே. காலத்தை சுழிந்துகொண்டு மீண்டும் ஓவியமாக மாறிவிட்டிருந்தனர். பெருமூச்சுடன் கீழிறங்கி கேட்டைப் பூட்டி வீட்டிற்குள் வந்தேன்.

ஹாலில் சுவரில் ஊர்ந்தவாறு தம்பி செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். மனதிற்குள் பொருமிக்கொண்டே அவனை நெருங்கினேன்.

“டூட்”

“என்ன?”, முகத்தைத் தூக்காமல் கேட்டான்.

“ஏதேனும் வித்தியாசமாக உணர்கிறாயா?”

“இல்லையே? நார்மலாகத்தான் இருக்கிறேன், ஏன்?”

“ஒன்றுமில்லை. சரி… பல்லி விழுந்ததே? வெளியே யாரிடமும் சொல்லிவிடவில்லையே?”

தலையைத் தூக்கினான். “கருமம். அதையெல்லாம் யாராவது வெளியே சொல்வார்களா?”

“குட். அப்படியே இருக்கட்டும்”, என்றபடி என் அறைக்குச் சென்றேன்.

அன்றிரவு ஆரம்பித்தப் பழக்கம். தினமும் சுமார் ஒன்றரை மணிநேரம் திருவாதிரையைத் தனியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

Comments

  1. ஹா ஹா... பட்டாசா இருக்கு 💥🔥

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி