Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹிரோஷிமா மேயர் மட்சூயி கசூமியின் அமைதிப் பிரகடனம் - ஆகஸ்ட் 6, 2020

அமைதிப் பிரகடனம்
மட்சூயி கசூமி,
மேயர்,
ஹிரோஷிமா நகரம்
ஆகஸ்ட் 6, 2020

ஆகஸ்ட் 6, 1945 அன்று, ஒரே ஓர் அணுகுண்டு எங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் அழித்தது. “இந்த இடத்தில் இன்னும் 75 வருடத்திற்கு ஒன்றும் முளைக்காது” என்ற வதந்தியொன்று அப்பொழுது இருந்தது. ஆனால் ஹிரோஷிமா மீண்டது; இன்று அமைதியின் குறியீடாக, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வருகை தரும் இடமாக விளங்குகிறது.

மனிதகுலம் இன்று கொரோனா வைரஸ் தொற்று என்ற புதியதோர் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்தகாலப் பேரழிவுகளிலிருந்து நாம் கற்ற பாடங்களின் மூலம் நம்மால் இதைக் கடந்துவர முடியும்.

சென்ற நூற்றாண்டில் 1918-ல் தொற்று நோய் பரவியபோது அது கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து மனிதகுலத்தையே அச்சுறுத்தியது. காரணம், முதலாம் உலகப்போரில் ஒன்றோடொன்று போரிட்ட நாடுகளால் அத்தொற்றுநோயை ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியவில்லை. அதன் பிறகு நிகழ்ந்த தேசியவாதங்களின் எழுச்சி, இரண்டாம் உலகப்போருக்கும் அணுகுண்டு வீச்சிற்கும் வழிகோலியது.

வலிமிகுந்த இக்கடந்தகாலம் மீண்டும் நம் கண்முன்னே நடைபெற நாம் அனுமதித்துவிடக்கூடாது. குறுகிய நோக்கம் கொண்ட தேசியவாதத்தை சிவில் சமூகம் நிராகரிக்க வேண்டும்; எதிர்வரும் ஆபத்துகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

அணுகுண்டு வீச்சு நடந்த மறுநாள், ஒரு 13 வயது பையன் பார்த்த காட்சி இது: “... பாலத்தில் சடலங்கள் வரிசை வரிசையாக வீழ்ந்து கிடந்தன. பலர் காயமுற்றிருந்தனர். பலர் தங்களின் இறுதி மூச்சை விட்டனர். கிட்டத்தட்ட அனைவரும் எரிந்து போயிருந்தனர், அவர்களின் தோல்கள் உருகித் தொங்கிக்கொண்டிருந்தன. “தண்ணீர்! தண்ணீர்”, என்று பலர் கெஞ்சினர். பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் அக்கோர நினைவுகளைப் பலகாலம் சுமந்த அச்சிறுவன், வளர்ந்து பெரியவனானதும் சொன்னான், “மக்கள் தங்களைப் பற்றியும் தங்களின் நாடுகளைப் பற்றியும் மட்டுமே நினைப்பதால்தான் போர்கள் மூளுகின்றன”

சென்ற நவம்பர் மாதம், எங்கள் நகரத்திற்குப் போப் பிரான்சிஸ் வருகை தந்த போது, மிகவும் முக்கியமான செய்தியொன்றைக் கூறினார்: “நினைவில் கொள்வது, இணைந்து பயணிப்பது, பாதுகாப்பது. இம்மூன்றே நம் தார்மீகப் பொறுப்புகள்”

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் தலைவராக ஒகாட்டா சடாக்கோ இருந்தபோது, அப்பொறுப்பில் தீவிரப் பங்காற்றினார். தன் அனுபவங்களை அவர் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்: “துயரத்தில் உள்ள உயிர்களைக் காப்பதே முக்கியமான பணி. எந்த ஒரு நாடும் தனித்திருந்தபடி அமைதியுடன் வாழமுடியாது. நாம் ஒருவரோடொருவர் பிணைக்கப்பட்டுள்ளோம்.”

இச்செய்திகள் மனிதகுலம் எதிர்கொள்ளும் ஆபத்துகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும், நம் துயரம் மிகுந்த கடந்தகாலத்தின் தவறுகளை நாம் மீண்டும் செய்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகின்றன.

ஹிரோஷிமா இன்றும் இருப்பதற்குக் காரணம், நம் முந்தைய தலைமுறையினர் ஒருவருக்கொருவர் துணை நின்றதால்தான். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கிருக்கும் அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்த்து, திரும்பிச் செல்லும் போது, “இதை எங்களின் சொந்த நிகழ்வாகப் பார்க்கிறோம்” என்றும், “இது மானுடத்தின் எதிர்காலத்திற்கான பாடம்” என்றும் கூறுகின்றனர். அணு ஆயுதங்களை ஒழிக்கவும், உலக அமைதியை நிலைநாட்டவும் உலக மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்ற ஒருமித்த கருத்து சிவில் சமூகத்தில் ஏற்படவேண்டும். அதை ஹிரோஷிமா தன் கடமையாக நினைக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்ட அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தம் (NPT), மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்ட அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம் (TPNW), இவை இரண்டும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முக்கியக் கருவிகளாகும். அவற்றின் சட்டகங்களை நம் எதிர்கால சந்ததியினரிடம் நாம் கொண்டு சேர்க்கவேண்டும். ஆனால் அவர்களின் எதிர்காலமோ கேள்விக்குறியாக இருக்கிறது. இச்சட்டகங்கள் சரிவர இயங்க வேண்டும் என்ற முனைப்பை உலக நாடுகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உறுதியுடன் வெளிக்காட்ட வேண்டும்.
 
எனவேதான் இதை வலியுறுத்துகிறேன். அத்தலைவர்கள் அனைவரும் ஹிரோஷிமா வர வேண்டும். அணு ஆயுதம் எத்துணை பயங்கரமானது என்ற விழிப்புணர்வை அவர்கள் அடைய வேண்டும். மேலும், அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் மறுஆய்வு மாநாட்டில் அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து அவர்கள் பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணு ஆயுதங்கள் சாராத மாற்றுப் பாதுகாப்பு முறைகளை உருவாக்குவது குறித்து அவர்கள் ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தொடர வேண்டும்.

அணு ஆயுத நாடுகளுக்கும் அணு ஆயுதமற்ற நாடுகளுக்கும் இடையே ஓர் பாலமாக இருக்கும் ஜப்பான் அரசு, அப்பொறுப்பை மேம்படுத்த TPNW அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கோருகிறேன். உலகெங்கிலும் உள்ள ஹிபகுஷாக்களின் [அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்] இக்கோரிக்கைக்கு ஜப்பான் அரசு செவிசாய்க்க வேண்டும். மேலும், ஹிபகுஷாக்களுக்கு இன்னும் தாராளமான உதவியை அரசு செய்ய வேண்டும் என்று கோருகிறேன். அவர்களின் சராசரி வயது இப்பொழுது 83-ஐத் தாண்டிவிட்டது. அவர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் துயரமானது. கதிர்வீச்சின் கொடிய விளைவுகளால் இன்றும் மனதாலும் உடலாலும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். "கருமழைப் பகுதிகளை" அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கோரிக்கை விடுக்கிறேன் [அணுகுண்டு வெடித்த பின் அப்பகுதியில் கதிர்வீச்சு நிரம்பிய கருப்பு மழை பொழிந்தது. அப்பகுதியின் எல்லையை விரிவாக்குவதன் மூலம் மேலும் பல மக்களை ஹிபகுஷாக்களாக அங்கீகரிக்க முடியும்].

அணுகுண்டு வீச்சு நிகழ்ந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் குறிக்கும் இந்த அமைதி நினைவேந்தல் நிகழ்வில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற எங்களின் பிரார்த்தனைகளை உளமார சமர்ப்பிக்கிறோம். அணு ஆயுதங்களை ஒழிக்கவும், உண்மையான உலக அமைதியை நிலைநாட்டவும் எங்கள் முழு சக்தியையும் செலவிடுவோம், என்று நாகசாகியின் துணையோடும், உலகெங்கிலும் உள்ள ஒத்த கருத்துடைய மக்களின் துணையோடும் நாங்கள் உறுதிமொழி எடுக்கிறோம்.

PEACE DECLARATION,
August 6, 2020,
Matsui Kazumi,
Mayor,
The City of Hiroshima.

(தமிழில்: வ.விஷ்ணு)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி