பிரஷருக்கு No... பிளஷருக்கு Yes - பாய்ச்சல் காட்டும் படகுப் பெண்!
மேகனா... இந்திய விளையாட்டின் மகுடத்தை அலங்கரித்துக்
கொண்டிருக்கும் மற்றுமோர் மரகதக்கல். பாய்மரப்படகு செலுத்தும் போட்டியில்,
காற்றின் துணைகொண்டு, அது வீசும் திசையை சாதகமாக்கி, லாகவமாகப் படகை
செலுத்தி, பதக்கங்களை அள்ளும் இயற்கையின் செல்லப் பிள்ளை. பெண்களுக்கான
'ரேடியல்’ பிரிவின் தரவரிசைப் பட்டியலில்... இந்தியாவிலேயே இரண்டாவது இடம்
இப்போது இவரிடம்!
''2010-ல்
இந்திய அளவில் நடந்த 'ஓஷன் ப்ளூ டிராபி' (Ocean Blue Trophy)...
பெண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட 'லேசர் 4.7 (பாய்மரத்தின் பரப்பளவைக்
குறிப்பதுதான் 4.7 என்பது) பிரிவில் வெள்ளி வாங்கினேன். இந்த வருஷம் அதே
பிரிவுல தங்கம் வாங்கியிருக்கேன்!'' என்று சந்தோஷப் புன்னகை பூக்கும்
மேகனாவின் பதக்கப் பட்டியல், 'லேசர் ரேடியல்’ பிரிவில் வெள்ளி, '420'
(படகின் நீளத்தை செ.மீட்டரில் குறிப்பது) பிரிவில் வெள்ளி... என நீள்கிறது.
இத்தனை சாதனைகளையும் மேகனா நிகழ்த்திக் கொண்டிருப்பது ப்ளஸ் டூ படித்துக்
கொண்டே!
''ஒன்பதாவது படிக்கும்போது 'தமிழ்நாடு செயிலிங்
அசோஸியேஷன்'ல சம்மர் கேம்ப் போனேன். அது எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போக,
'இதுதான் நமக்கான விளையாட்டு'னு முடிவு பண்ணினேன். முறையான பயிற்சி, மனசுல
தைரியம், நீச்சல்... இந்த மூணு விஷயங்கள்தான் இதுக்குத் தேவை. சம்மர்
கேம்ப் சேர்ந்த புதுசுல தண்ணிக்குள்ள குதிச்சப்போ கொஞ்சம் பயம்
இருந்துச்சு. இப்போ எல்லாம் பழகிடுச்சு'' என்ற மேகனா, விளையாட்டின்
டெக்னிகல் விஷயங்களையும் சொன்னார்.
''இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது காத்தோட வேகம், அது
வீசுற திசை. இது ரெண்டையும் கரெக்டா கணிச்சுகிட்டே லாகவமா படகு
செலுத்தினோம்னா... மீதியை அதுவே பார்த்துக்கும். என்னோட வெற்றிக்குக்
காரணம் அதான். காத்து வீசுறத கண்டுபிடிக்கறதுதான் சேலஞ்ச்சே.
அதைப்பத்திதான் எந்நேரமும் யோசிச்சுட்டிருப்பேன், அதுக்கேத்த மாதிரி படகை
செலுத்துவேன். அப்பறம் பிராக்டீஸ். வாரத்துல ரெண்டு நாள் ஹார்பர்
போயிடுவேன், மூணு மணி நேரம் படகு விடுவேன்'
- படபடக்கிறது மேகனாவின் பேச்சு.
''மத்த விளையாட்டோட கம்பேர் பண்ணினா... இது கொஞ்சம்
காஸ்ட்லி. பாய்மரப்படகு மூன்றரை லட்சம் ஆச்சு. அதை செலுத்தப் பயன்படுற
துடுப்பு மட்டும் முப்பத்தஞ்சாயிரம் ரூபாய். அதனாலதான் இதுக்கு நடுத்தர
வர்க்கத்தினர்கிட்ட பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. அரசாங்கம் சில உதவிகள் செஞ்சா,
அவங்க மத்தியிலயும் நல்ல ரீச் உண்டாகும்னு நம்பறேன்'' எனும் மேகனாவிடம்,
''போர்டு எக்ஸாமுக்கு நடுவுல இதுக்கெல்லாம் டைம் இருக்கா..?'' என்று கேட்டால்... சிரிக்கிறார்.
''நான் படிக்கிற பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் ஸ்கூல்ல,
எனக்கு நிறைய சப்போர்ட். பாடங்களை நானும் பிக்-அப் பண்ணிடுவேன். கூடவே,
இந்தப் போட்டியில நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கேன்னா, அதுக்குக்
காரணம் என் பேரன்ட்ஸ். 'ப்ளஸ் டூ கூட அடுத்த வருஷம் எழுதிக்கலாம்டா’னு கூலா
சொல்ற அப்பா எனக்கு!'' என்ற மேகனா, அப்பா பத்ரிநாத்தைப் பார்க்க,
''படிப்பு மட்டுமே ஒருத்தரோட திறமைக்கு அளவுகோல் இல்ல.
நாம எதை விரும்பிச் செய்றோமோ, அது நமக்கான அங்கீகாரத்தை வாங்கிக்
கொடுக்கும். மேகனாவுக்கு படகு விடறது பிடிச்சுருந்தது, ஆர்வத்தோட
கத்துக்கிட்டா, ஜெயிச்சா. என்னைப் பொறுத்தவரைக்கும் இனிமேலும் நம்ம பசங்களை
படிப்பு பிரஷரை சொல்லி பயமுறுத்திட்டே இருந்தோம்னா, அப்புறம் விளையாட்டுத்
துறையில நாம காணாம போயிடுவோம்'' என்றார் பத்ரிநாத், தேச அக்கறையுடன்.
''என் தம்பி சித்ரேஷும் படகு விடுறதுல கில்லி. இந்த 11
வயசுலயே இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்துனு போட்டிகளுக்குப் போய்
வந்துட்டு இருக்கான். இன்னும் சில வருஷங்கள்ல பாய்மரப்படகு போட்டி பத்தின
செய்திகள்ல மேகனா, சித்ரேஷ் பெயர்களை நீங்க அடிக்கடி கடப்பீங்க!'' எனும்
மேகனா... படகு விடுவதைத் தாண்டி, பள்ளியின் வாலிபால் டீமில் இருக்கிறார்,
வீணை வாசிக்கிறார், பாடுகிறார், பரதநாட்டியம் ஆடுகிறார்.
''அடுத்த டார்கெட்?''
'2016, ரியோ டி ஜெனிரோ, ஒலிம்பிக்ஸ்!'
- கடல் ராணியிடமிருந்து கம்பீரமாக வருகிறது பதில்!
- வ.விஷ்ணு
படங்கள்: ப.சரவணகுமார்
(அவள் விகடன் - 11/09/12)
Comments
Post a Comment