Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சாரல் கூத்துப் பட்டறை



          SSN கல்லூரியில் சேர்ந்த பிற்பாடான இந்த மூன்று வருடங்களில் நான் சாரல் தமிழ் மன்றத்திற்குச் செய்த முதல் உருப்படியான வேலை கல்லூரித் தமிழன்பர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து நனவாக்கிய நாடக அரங்கேற்றத்தை ஒருங்கிணைத்ததுதான். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் என் சீனியர்கள் கனவு கண்டு மேற்கொண்ட பெருந்தவம் இது.

          சீனியர்கள் நடிகர்களைத் தேர்வு செய்தபின் நாடகத்திற்கான அதிகாரப்பூர்வ செயல்முறைகளை வகுத்து, அவற்றைப் படிப்படியாக செயல்படுத்தி, பலரின் தூக்கமில்லாத இரவுகளின் துணையோடு நாடகத்திற்குக் கதை வசனம் எழுதி, இயக்கி, நொடிக்கு நொடி அநியாயத்திற்கு விளம்பரங்கள் செய்து, அறிவியல் பூர்வமாக ஆடியோ டீசர் எல்லாம் வெளியிட்டு என் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களைத் திணறடித்து, இறுதியாக சாரல் தமிழ் மன்றத்தின் நாடக உட்பிரிவான ‘சாரல் கூத்துப் பட்டறை’யை ’டமால் டுமீல் டமில்’ மற்றும் ‘கலாட்டா சம்பந்தம்’ ஆகிய இரு நாடங்கங்களின் அரங்கேற்றம் மூலம் பலத்த ஆரவாரத்தின் நடுவே விதைத்தபோது, இதை இதோடு விடக்கூடாது என்ற எண்ணமே மிஞ்சியது. இந்த ஒரு மாத ஓய்வற்ற பகல்களும் தூக்கமற்ற இரவுகளும் நான் முதன் முதலாக இந்தப் பிரபஞ்சத்தில் ‘வாழ்ந்தேன்’ என்பதற்கான அடையாளம். இப்பேரண்டத்தில் நான் என் இருப்பைப் பதிவு செய்த அனுபவம்.

          இந்த மாபெரும் தவத்தின்போது என்னுடன் இறுதி வரை உடனிருந்து கூட்டாக முன்னெடுத்த நண்பர்கள் அனைவரிடமும் என்னால் வெளிப்படுத்த முடிந்தது ஒரு அழுத்தமான கைகுலுக்கல் மட்டுமே. வார்த்தைகளற்ற உணர்ச்சிகளும் வெளிக்காட்ட முடியாத நன்றிகளும் நெஞ்சமெங்கும் நிறைந்து திகட்டுகின்றன. ‘சாரல் கூத்துப் பட்டறை’ – ஒரு சிறு விதை விதைக்கப்பட்டிருக்கிறது. பல நல்நெஞ்சங்களின் கனவு இது. ஒரு மாபெரும் திட்டத்தின் ஆரம்பப்புள்ளி இது. இதைத் துவக்கி வைத்த சிலருள் நானுமொருவன் என்னும்போது பொறுப்பு கூடுகிறது. இன்னும் ஒரு வருடம் எனக்கு மிச்சமிருக்கிறது. அந்த இடைவெளியில் இதன் அடித்தளத்தை இன்னும் பல மடங்கு பலப்படுத்தி, என் தம்பிகளிடமும் தங்கைகளிடமும் இதன் மேல் ஒரு கோட்டையை எழுப்ப ஒப்படைத்து வெளியேற எண்ணம். பார்ப்போம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்