எட்டாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - நிறைவேறிய நோக்கம்?
சாரல் தமிழ் மன்றத்தின் ’புத்தகத் திறனறிதல் சந்திப்’பிற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, புத்தகம் வாசிக்கத் தூண்டுவது. இரண்டாவது, நம்மைச் சுற்றியுள்ள அரசியல்/சமூக/பொருளாதார/இன்னபிற பிரச்னைகளைக் குறித்த ஒரு தெளிவான பார்வையையும் புரிதலையும் என்றும் முடிவு பெறாத ஒரு சிந்தனை ஓட்டத்தையும் உருவாக்குவது.
சென்ற வாரம் நடந்த ‘பார்த்திபன் கனவு’ புத்தகத் திறனறிதலின்போது முதல் நோக்கம் சற்றே நிறைவேறியது. நிறைய மாணவர்கள் அப்புத்தகம் வாசிக்கக் கிடைக்குமா என்று கேட்டனர். நேற்று முன்தினம் நடந்த ‘இந்தியப் பிரிவினை’ புத்தகத் திறனறிதலின்போது இரண்டாவது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சி ஏற்பட்டது. நண்பன் கே.ஆர்.விக்னேஷ் கருத்துப் பகிர்வை நிறைவு செய்த பிறகு, “ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?”, என்று கேட்டதுதான் தாமதம், கேள்விக்கணைகள் முழுவீச்சில் பறந்தன. புத்தகத் திறனறிதல் நிறைவு பெரும்வரை வரிசையாக அமர்ந்திருந்த மாணவ மாணவிகள், நிறைவு பெற்ற அடுத்த நொடி வட்டமாக அமர்ந்துகொண்டு விவாதிக்க ஆரம்பித்தனர். மிகவும் ஆரோக்கியமான முறையில் எந்தவித தனிமனிதத் தாக்குதலும் இல்லாமல், அதே சமயம் சூடாகவும் காட்டமாகவும் இருந்தது விவாதம். மாணவர், மாணவி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அறிவுசார்ந்து, அதேசமயம் உணர்வுப்பூர்வமாகவும் பிரச்னையை அணுகி, கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணிநேரம் விவாதம் செய்த விதத்தைப் பார்த்தபோது சாரல் தமிழ் மன்றம் ஒரு புதிய திசையை நோக்கிப் பயணப்படத் துவங்கியிருக்கிறதோ, என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட உணர்வெழுச்சி அந்த எண்ணத்தினாலா அல்லது வயிற்றுப் பசியினாலா என்று தெரியவில்லை. ஆனால் மிகுந்த அறிவு மற்றும் மனநிறைவோடு அன்றைய புத்தகத்திறனறிதல் சந்திப்பு முடிவுற்றது.
மாணவ மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியப் பிரிவினையில் காந்தியின் பங்கு பற்றி விவாதிக்கும்போது நேதாஜி-காந்தி அரசியலை எல்லாம் உள்ளே இழுத்தார்கள். கோட்சே உள்ளே வந்தார். திடீரென்று மண்டல் எங்கிருந்தோ வந்து உட்கார்ந்துக்கொண்டார். அவர்களிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன. நிறைய தகவல்களை அரசல் புரசலாகவோ ஆழமாகவோ அறிந்து வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கோர்வையாக்கி, அங்கங்கு வதந்திகளை நீக்கிவிட்டு, ஒரு முழு நீள வரலாற்று சம்பவமாகவோ காலமாகவோ ஆக்கி, அதோடு நிற்காமல் தொடர்ந்து தேடலை மேற்கொள்ள வைப்பதுதான் ஒரே வேலை. நிகழ்ச்சி முடிந்த பிறகு தனியாகப் பேசும்போது அசீமானந்தா, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், மாலேகான் போன்ற சில வார்தைகளை அறிமுகப்படுத்தினேன். ”இந்தியாவைப் பொறுத்தவரை கண்ணை மூடிக்கொண்டு பயங்கரவாதி பற்றி நினைத்தால் உடனே ஒரு குல்லா அணிந்த குறுந்தாடிக்காரர் உங்கள் மனதில் தோன்றுகிறாரே, அந்த உளவியலை சாத்தியமாக்கியதுதான் பெரும்பான்மை மத தேசியத்தின் வெற்றி. நம்மை அறியாமல் நம் மீது ஒரு கருத்தாக்கம் திணிக்கப்படுகிறது என்னும்போது நாம் எல்லோரும் பாதிக்கப்படும் விக்டிம்கள்தான். எதையும் நம்பிவிடாதீர்கள், நான் சொல்வதை உட்பட. கொஞ்சம் விஷயம் தெரிய ஆரம்பித்துவிட்டால் உங்களை ஏதாவது ஒரு ‘இஸ்ட்’ ஆக்க இந்த உலகம் துடிக்கும். எதையுமே முழுமையாக ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யாமல் திறந்த அறிவோடு அனைத்தையும் அணுகுங்கள்.”, என்றேன். வழக்கம்போல், ”கடைசி வரை தேடுவதை நிறுத்தாதீர்கள்”, என்று ஒரு மனப்பாடம் செய்த டைலாக்கை உதிர்த்திருக்கிறேன். பார்ப்போம்.
Comments
Post a Comment