Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

கோப்பெருந்தேவியும் கோப்பைத் தேனீரும்

”இதற்கு முன்னால் நீ உன் வாழ்க்கையில் அனுபவித்திராத இன்பத்தை உனக்கு நான் தர இருக்கிறேன்”

வீடணன் தாலியைக் கட்டியதும் கோப்பெருந்தேவியின் காதில் கிசுகிசுத்த முதல் வாக்கியம் இதுதான்.

திருமணம் முடிந்தவுடன் வயது பார்க்காமல் ஆண்கள் மாப்பிள்ளையையும் பெண்கள் மணப்பெண்ணையும் ஒரு புதிரான குறும்புடன் பார்ப்பார்களே? “மச்சி, ம்ம்ம், ம்ம்ம்!”, இது வேறு யார்? நண்பனாகத்தான் இருக்கும். ”ஆஸ்திரேலியா போனால் கங்காரு குட்டி. சீனா போனால் பாண்டா கரடி குட்டி. எங்கே போனாலும் சரி, வரும்போது எனக்கு ஒரு குட்டியை எடுத்து வரவேண்டும், ஆமாம்.”, இது பக்கத்து வீட்டு முற்போக்கு அங்கிள்.

வீடணன் யோசித்தான்.  விலங்குகள் அதிகம் இல்லாத குளுகுளு நாட்டிற்கு செல்ல வேண்டும். எங்கு செல்லலாம்?
பெயரிலேயே ஐஸ் இருக்கிறது. ஐஸ்லாந்து போகலாம் என்று முடிவெடுத்தார்கள்.

ஐஸ்லாந்தில் ஐந்து நாட்கள். கேட்க வேண்டுமா? அரசியல்வாதியைப் போல் அல்லாமல் தன் வாக்குறுதியை கணத்திற்குக் கணம் நிறைவேற்றினான் வீடணன். இருவரும் தினம் தினம் அருகருகே அயர்(லா)ந்து போனார்கள். விளைவு. ஐந்தே ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுக்கு உறவானார்கள். இங்கிலன், வேலன், அயர்வடக்கன், ஸ்கடிலன் என்று பெயர் சூட்டி, இவர்கள் நான்கு பேரும் என்றென்றும் இணைபிரியாது ஒன்றுபட்ட சாம்ராஜ்யமாய் வாழ்ந்து செழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான் வீடணன்.

ஆனால் தான் ஒரு குழந்தைப் பேறு இயந்திரமாகவும் இன்பப்பொருளாகவும் மட்டுமே உபயோகப்படுத்தப்படுவதைப் போல் கோப்பெருந்தேவி உணர்ந்தாள். உடல் தளர்ந்து போயிருந்தது. கட்டிலையும் குழந்தையையும் குறிக்கோளாய்க் கொள்ளாத ஒரு தேனிலவை அவள் விரும்பினாள்.

”வீ! மீண்டும் ஒரு முறை எங்காவது செல்லலாமே?”
“இனியுமா?”
”எனக்கு உன்னோடு ஊர் சுற்ற வேண்டும் என்று ஆசை, வீ. ஐஸ்லாந்தில் அறைக்கு வெளியே எதைக் கண்டேன் சொல்?”

சம்மதித்தான். குழந்தைகளை அம்மாவிடம் கொடுத்துவிட்டு இரண்டாம் தேனிலவைத் திட்டமிடத் துவங்கினான்.

பாரிஸ், ஃப்ரான்ஸ். காதல் தேசம்.

”நம் பிள்ளைகள் பார்க்கும் டோரா கார்ட்டூனில் இப்படித்தான் ஊர் சுற்றுவாள் அந்தப் பெண்”, வீடணன் அவளை செல்லமாக இடித்தான்.
“ஏன், டோராதான் ஊர் சுற்ற வேண்டுமா என்ன?”
“நீ என் டோரா கோப்ஸ்!”, அவள் கூந்தலை நுகர்ந்தான்.

ஈஃபிள் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்க்கும்போது உலகத்தின் வளைவே புலப்பட்டது. அந்த வளைவிலிருந்து எதிர்பாராத விதமாக ஒரு நெருப்புப் பந்து இவர்களை நோக்கிப் பறந்து வந்தது.

அது ஒரு விண்கல்!

அதை முதலில் கண்டு கோப்பெருந்தேவி, ”பார்த்து! கல்!”, என்று அலறினாள்.

அவர்களுக்கு மிக அருகே விண்கல் அவர்களைக் கடந்து சென்றது.
அப்பொழுது அக்கல்லிலிருந்து சிதறிய சிறு சிறு நெருப்புத் துண்டுகள் கோபுரத்தின் உச்சியில் நின்றிருந்த கோப்பெருந்தேவியின் உடலில் பட்டு சிதற, அவளுக்கு வலியெடுக்க ஆரம்பித்தது.

ஸ்...பெயின்! வீ!”, நிலைதடுமாறினாள். கற்கள் பட்டதால் தலையில் வீக்கங்கள் ஏற்பட்டன. தலை லேசாக ‘பல்ஜ்’ ஆனது. அதே நேரம் விண்கல் கடந்ததால் ஏற்பட்ட பெருங்காற்று ஒன்று அவளை கோபுரத்திலிருந்து வெளியே தள்ளியது!

”ஆ! நோ!”, வீடணன் அலறினான்.

நல்ல வேளை. சென்னை மெட்ரோ இரயில் போல் அல்லாமல் கோபுரத்தின் கீழே வலை அமைத்திருந்தார்கள். அதில் எசகு பிசகாகப் போய் விழுந்தாள் கோப்பெருந்தேவி. குரல் உடைய பயத்தால் அலறினாள். உடல் கடுமையாக நடுக்கம் கண்டது. அத்தனை உயரத்தில், வலையில், சும்மாவா? தன் லெதர் ஹீல்ஸ் செருப்பு வலையில் மாட்டியிருப்பதைக் கண்டு நா குழற வீடணனிடம், “நெதர், நெதர்”, என்று கத்தினாள். இந்தக் களேபரத்தில் அந்தப் பெருங்காற்று அவள் உடலில் புழுதியை வேறு பூசியிருந்தது.

ஒரு வழியாக அவளைக் காப்பாற்றி அறைக்கு அழைத்து வந்தான் வீடணன்.

”சே! பார்த்து நிற்க மாட்டாயா?”
“நான் என்ன வீ பண்ணுவது? காற்று அப்படி”, குரல் இன்னும் நடுங்கியபடியே இருந்தது.
“சரி சரி. உடல் முழுக்க புழுதியாய் இருக்கிறது. கிருமிகள் இருக்கக்கூடும்.”
“ஆமாம். Germ many. நான் போய் குளித்துவிட்டு வரூகிறேன்.”, குளியலறை நோக்கி நடந்தாள் கோப்பெருந்தேவி.

“ஹேய்!”, வீடணன் கூப்பிட்டான்.
“என்ன வீ?”
”என் உடலிலும் புழுதி படிந்திருக்கிறது. நானும் வருகிறேன்.”

இருவரும் நேரம் மறந்து குளித்தார்கள். அதுவும் கோப்பெருந்தேவிக்குப் பிடித்த லக்ஸ் சோப் வேறா? சோப் கரைந்தது.

குளித்து முடித்ததும் வீடணனுக்கு வெகுவாகப் பசியெடுத்தது. சாப்பிடப் போகலாம் என்று கோப்பெருந்தேவியை அழைத்தான்.

“சாமி கும்பிடாமல் என்ன சாப்பாடு? உயிர் பிழைத்ததற்காக நான் விரதம் இருக்கப்போகிறேன் வீ. மேலும் விரதத்தை வாட்டிகன் சென்றுதான் முடிக்கப்போகிறேன்.” 
“வாட்டிகனா? அது வரை கோப்ஸ் பசி தாங்குவாளா?”
“போகலாமே வீ?”
“சரி. எனக்கும் போகிற வழியில் ஸ்டேன் லீயின் காமிக் புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கிறது. அந்த வேலையையும் முடித்துவிடலாம்.”, என்றான் வீடணன்.
“எத்தனை வாங்கப் போகிறாய் வீ?”
டென் ஸ்டேன் லீ புத்தகங்கள். ஏன்?”
”பிள்ளைகளுக்கும் சேர்த்து ஏதாவது வாங்கு”

வாட்டிகள் தேவாலயத்தில் பிள்ளைகள் நால்வரின் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்தார்கள்.

“இப்பொழுதாவது சாப்பிடுவாயா?”, வீடணன் கேட்டான்.
”கண்டிப்பாக. I'm feeling Hungry", பிரசாதமாக இட்லியும் மொனாக்கோ பிஸ்கட்டும் வழங்கப்பட, பசியில் வாயில் அடைத்துக்கொண்டாள்.
ஸ்லோவே...சீ! ஸ்லோவா சாப்பிடு. ஒன்றும் அவசரம் இல்லை”
“தண்ணீர்!”

தண்ணீரைத் தேடினாள். அருகே ஒரு வெள்ளை திரவம் பாட்டிலில் இருந்தது.

“அட, மோரே இருக்கிறது!”, அது பால்டாயிலின் வகையான மால்டாயில் என்பது தெரியாமல் ஆற்காட்டாரைப் போல் ஒரே மடக்கில் பாட்டிலைத் தீர்த்துவிட்டாள் கோப்பெருந்தேவி. வீடணனும் அதை கவனிக்காமல் விட்டுவிட்டான். கோப்பெருந்தேவி பசி தீர உண்டாள். மேலும் ஆங்கிலத்தில், “Crow, Crow", என்று கத்தி காக்காய்க்கும் ஒரு பங்கு சோறிட்டாள். கோப்பெருந்தேவியின் மழலை செயல்களைக் காதலுடன் கண்டு களித்தான் வீடணன்.

”அடுத்து என்ன? எங்கே?”
“மெரினா செல்ல வேண்டும்”
“அடியே!”
“இங்கே ஒரு மெரினா இருக்கிறது. அட்லஸில் பார்த்தேன். அங்கு போகலாம் வா”
“முதலில் உன்னை ஒரு டாக்டரிடம் கூட்டிப்போக வேண்டும். ஈஃபிள் கோபுரத்திலிருந்து விழுந்திருக்கிறாய். ஏகப்பட்ட சிராய்ப்புகள் இருக்கின்றன...”
ஆஸ்(ப)த்திரியா? அதெல்லாம் வேண்டாம்! எனக்கு ஒன்றும் இல்லை. வா போகலாம்“, அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.

சான் மெரினோ கடற்கரை. கையோடு கைகோர்த்தபடி அலைகளில் கால் நனைத்தார்கள். பட்டாணி சுண்டல் நன்றாக இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் சுண்டலை மடித்த காகிதத்தைத் தூக்கிப் போட யத்தனித்தான் வீடணன்.

”வீ! இரு”, அக்காகிதத்தை வாங்கிப் படித்தாள். அது ஒரு விளம்பரம். வியன்னாவில் திறமைப்போட்டி நடக்க இருப்பதாகவும் உலகில் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

“ஹேய்!”
“கோப்ஸ்! நாம் வந்த வேலை என்ன?”
“வீ! யோசியேன். பல்லாயிரம் மைல்கள் பயணத்திற்கப்பால் எனக்குத் தொடர்பில்லாத ஒரு கடற்கரையில், என்னிடம் ஏன் இந்தக் காகிதம் வர வேண்டும்?”
”பெரிய தத்துவம்! நான் கொடுத்தேன். அதனால் வந்தது.”
“வந்ததா? அப்படியென்றால் சமர்த்தாக உன் மனைவியை வியன்னா கூட்டிக்கொண்டு போ!”, கைகளால் அவன் கழுத்தைச் சுற்றினாள். “என்ன? பதிலையே காணோம்?”
“பதிலா? இதோ!”, அவளை இறுக்கி அணைத்தான்.

வியன்னா போகிற வழியில் கைச்செலவிற்காக சுவிஸ் வங்கியில் செக் மூலம் பணம் எடுத்து, போட்டி நடக்கும் அரங்கத்திற்கு கோப்பெருந்தேவியை அழைத்துச் சென்றான்.

”உங்கள் பெயர் என்ன?”, போட்டியின் நடுவர் கேட்டார்.
சொன்னாள்.
“எங்கள் நாட்டின் தலைநகரத்தின் பெயர் போலவே இருக்கிறது. நான் உங்கள் அப்படியே அழைக்கலாமா?”
பத்து நிமிடங்கள் கழித்து...
”நன்றி மிஸ்.கோப்பென்ஹேகன். ஆனால் உங்கள் திறமைக்கு என்னால் டென் மார்க் மட்டுமே போட முடியும்.”
“என்ன?”
“ஐ ஆம் சாரி!”

நோ வே!”, கோப்பெருந்தேவிக்கு இது மானப்பிரச்னை. சீறினாள். “என்னிடம் என்ன குறை?”
”உங்களுக்கு சரியாக எதுகை மோனையுடன் கவி பாட வரவில்லை மிஸ்.கோப்பென்ஹேகன்”
”அப்படியென்றால்?”
“புரியவில்லை? கோப்பு, உங்களுக்கு வைத்துவிட்டோம் ஆப்பு!”
“வீ! என்ன நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய்?”
“கோப்ஸ்! ரிலாக்ஸ்! போட்டி என்றால் அப்படித்தான்!”
“என்ன? இத்தனை மைல்கள் கடந்து போட்டியில் கலந்துகொண்ட உன் மனைவிக்கு இதுதான் நீ தரும் பதிலா? நீ வீடணன் இல்லை, சொற்களால் சுட்டெரிக்கும் ஸ்வீடணன்!”, அழுது கொண்டே அரங்கை விட்டு வெளியேற யத்தனித்தாள் கோப்பெருந்தேவி.

“வாவ்! ஒரு நிமிடம்! வாட்ட கவிதை!”, கோப்பெருந்தேவியின் திடீர் உரைவீச்சில் நடுவரின் முடி சிலிர்த்தெழுந்திருந்தது. “வாட்ட சொல் நயம் மிஸ்.கோப்பென்ஹேகன்! சொ.சு.ஸ்வீ! வாவ்!”, துள்ளிக் குதித்தார்.

“ஹ்ம்ம்ம். இப்பொழுதாவது புரிகிறதா என் திறமை?”, மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டே கேட்டாள். “கொஞ்சம் தாமதித்திருந்தால் என் திறமையால் இந்நகரையே அழித்திருப்...”

வார்த்தையை முடிக்கவில்லை. திடீரென்று வயிற்றில் கியர் போட்டது போல் ஒரு சப்தம். அடுத்த கணம் மொத்த வானமும் இடிந்து விழும் சப்தத்துடன் கோரமாய் கோப்பெருந்தேவியின் உடல் துவாரங்கள் சப்தமெழுப்ப ஆரம்பித்தன. அரங்கம் அதிர ஆரம்பித்தது. இறுதியில் யாரும் எதிர்பாராத சமயத்தில் கி.பி.2015-ல் ஒரு பிரபஞ்சப் பொழுதில் அந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது.

“சர்ரப்!”

மால்டாயிலின் புண்ணியத்தில் கோப்பெருந்தேவிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட, உடற்வாயுக்கள் சூறைக்காற்றாய்ப் பெருவுருவம் எடுத்து நகரத்தை கமகமவென்று அழிக்க ஆரம்பித்தன.

“அடியே!”, லொக்கு லொக்கென்று இறுமியபடி மூக்கைப் பொத்திக்கொண்டு கத்தினான். ”ஒரு பேச்சுக்கு அழிப்பேன் என்று சொன்னாய் என்று பார்த்தால்...”, வீடணனுக்குக் கோபம் தலைக்கேறியது. “போட்டியில் தோற்றதற்காக இப்படியா? என்னாலேயே தாங்க முடியவில்லை. போலீஸிடம் என்ன சொல்வது?”

போலீஸாவது மண்ணாவது! சிவத்தாண்டவத்தின் எச்சத்தை அந்நகர் நுகர்ந்திருந்தது. ஊரில் ஒருவர் கூட மிஞ்சவில்லை. கடைசியில் ஐ.நா.சபைதான் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தது.

“Fine, Ms.Kopern Davis!"
"Yes, I'm Fine."
"No, you are Fined, Ms.Kopern Davis!"

சுவிஸ் வங்கியிலிருந்து எடுத்த மொத்த காசும் அபராதத்திற்கே செலவானது. வீடணன் கோபத்தின் உச்சத்திற்கே சென்றான். மேலும் அவர்கள் கடைசியாகக் கடந்து வந்த மூன்று வார்த்தைகள் அவன் முப்பாட்டனின் ’ஸ்கந்தன் கடற்படை’ உலவிய இடங்கள் வேறா? அந்தப் புண்ணிய இடங்களில் தன் பரம்பரை மானம் கப்பலேறிவிட்டதே என்ற எண்ணம் அவன் கோபத்தீயில் மேலும் யாகம் வளர்க்க, பல்லைக் கடித்துக்கொண்டு அனைவரும் வெளியேரும் வரை காத்துக்கொண்டிருந்தான். அனைவரும் வெளியே சென்ற அடுத்த கணம்...

“அட வெட்டி முண்டமே வியன்னா போன தண்டமே! ஆ!”

திடீரென்று எங்கிருந்தோ ஒரு சிறு கல் அவன் பின் மண்டையைத் தாக்கியது.

”ஹே! என்னாச்சு வீ?”
எ ஸ்டோன்”, கீழே கிடந்த அக்கல்லைப் பொறுக்கியெடுத்தான். தன் மனைவியை அவன் திட்டியதை சகியாத எந்த ஐ.நா. பெண்ணியவாதி இதை செய்திருப்பார், என்று சுற்றும் முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு மனிதர் நின்றிருந்தார். திடீரென்று அவர் கீழே குனிந்தார். ஒரு கல்லை எடுத்தார். வீடணனை நோக்கி குறிவைத்தார்.

வீடணன் சட்டென்று பாய்ந்து அவர் அருகே சென்று அவர் கைகளைப் பிடித்து அவர் முகத்தைப் பார்த்...

“சார்! ல.....லித்..நீங்களா?”
“ஆமாம். நான் தான்”
“என்ன சார், இந்த இடத்தில்? கிரிக்கெட்டெல்லாம் நடத்தினீர்கள், கடைசியில் இப்படி கல் பொறுக்க வைத்துவிட்டார்களே?”
”எல்லாம் உன்னால்தான்டா! சுவிஸ் பேங்கில் என் அக்கவுண்ட்டிலிருந்து எதுக்கடா பணத்தை எடுத்தாய்?”
“உங்கள் அக்கவுண்டா? சார்? நாங்கள் எங்கள் பணத்தைத்தான் எடுத்தோம்”, வீடணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னடா பாஸ்வேர்டு சொன்னாய்?”, லலித் பிரீமியர் லீகார் சீறினார்.
“நான் எதுவும் சொல்லவில்லை”

“நான் சொன்னேன்!”, கோப்பெருந்தேவிக்குப் புரிந்துவிட்டது. மேனேஜர் அருகில் இருந்தபோது தனக்கு எப்படி சுதந்திரப் பெண்ணாக இருக்க ஆசை என்று வீடணனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அதை நினைவுகூர்ந்தாள்.

“சுதந்திரப் பெண்! மேனேஜர் படுபாவி தவறாகப் புரிந்துக்கொண்டு பணத்தை உங்களிடம் கொடுத்து விட்டான்”, லலித் தலையிலடித்துக்கொண்டார். “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. எனக்கு அந்தப் பணம் வேண்டும். அது என் நேரடி வங்கிக் கணக்கு இல்லை”
“பின்னே?”
“என் பினாமி போலான்தேவி மற்றும் ரசியா பேகம் ஆகியோரின் கணக்கு அது. அவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டால் மூஞ்சியில் பொக்கென்று குத்தி... பொல பொல ரத்தம் தான்!”
“அய்யய்யோ!”
“என்ன நொய்யய்யோ! இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறேன். பணம் வரவில்லையென்றால் உங்களை பினாமியாக்கிவிடுவேன் ஜாக்கிரதை”, கண்களை உருட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து மறைந்தார் மனிதர்.

“சுத்தம்!”, தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, தன் விதியை நொந்தபடி வீடணன் நடைபாதையில் அமர்ந்தான்.
“இப்போது என்ன செய்வது வீ?”
“நாம் பேசாமல் ஊருக்கே திரும்பிப் போய்விடலாம் கோப்பு!”
“நோ! என்ன நடந்தாலும் சரி. ஒரு கை பார்த்துவிடலாம் வீ!”, அவன் தோளில் ஆறுதலாய் கரம் பதித்தாள். “ஐ ஆம் சாரி. இனிமேல் நான் தவறு செய்யமாட்டேன்.”
“இனிமேல் செய்ய என்ன இருக்கிறது?”, வீடணன் அலுத்துக்கொண்டான். “என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை.”
“என்னிடமும் திட்டமேதும் இல்லை. ஆனால் உன்னிடம் தற்போது இல்லாத இரண்டு விஷயங்கள் என்னிடம் இருக்கின்றன.”

“என்ன இருக்கிறது?”, வீடணன் தலை தூக்கினான்.
“ஒன்று, நம்பிக்கை. அதை வைத்து லலித்திற்குத் தேவையான பணத்தைப் புரட்டப்போகிறேன்.”
“கிழிப்பாய்!”, சுரத்தற்று சொன்னான். “எனக்கு நம்பிக்கையில்லை.”
“Exactly! உனக்கு நம்பிக்கை இல்லை. அது என்னிடம் இருக்கிறது"
“சரி, இரண்டு?”
“இரண்டு...”, தன் சட்டைப்பையிலிருந்து அதை வெளியே எடுத்தாள். “ஒரு யூரோ!”
"இதை வைத்து?”, வீடணனுக்குப் புரியவில்லை.
“டாஸ் போடப்போகிறேன். பூ விழுந்தால் பூப்பாதை. சிங்கம் விழுந்தால் சிங்கப்பாதை!”, காசை விரல்நுனியில் வைத்து டிங்கென்று சுண்டினாள்.
நாணயம் ஸ்லோ மோஷனில் மேலெழும்பியது. பிரபஞ்சம் பயணிக்கப்போகும் திசையைத் தீர்மாணிக்கப்போகும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, காரண நிலையிலிருந்து விளைவு நிலைக்கு சென்றதன் அறிகுறியாக, நாணயம் அவள் கைகளில் அடைக்கலமான அந்தக் கணத்தில் வானத்தில் ஒரு பெரும் இடி இடித்தது. நாணயம் இருக்கும் தன் மூடிய கைகளை மெல்லத் திறந்தாள் கோப்பெருந்தேவி.

“என்ன வந்திருக்கிறது?”, ஆர்வத்துடன் வீடணன் கேட்டான்.
“இங்கே பூவும் இல்லை, சிங்கவும் இல்லை. ஒரு வரைபடம்தான் இருக்கிறது”
“அப்படியென்றால்?”
“கால் போகும் போக்கில் சுற்று, மனம் போகும் போக்கில் செயல்படு, வழி தானாய்ப் பிறக்கும் என்று சொல்கிறது”, கோப்பெருந்தேவியின் நம்பிக்கை அவளுள் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.
“சரி, இப்பொழுது உன் மனம் என்ன சொல்கிறதாம்?”, ஆர்வமில்லாமல் கேட்டான் வீடணன்.

மீண்டும் இடி இடித்தது. அடுத்த நொடி சடசட வென்று மழை கொட்டத் தொடங்கியது.

மேலே பார்த்துக்கொண்டே புன்னகைத்தபடி சொன்னாள். “மழைப்பொழுதில் மனம் என்ன கேட்கும்? அருகில் நீயும் ஒரு கோப்பைத் தேனீரும்தான்!”

“என்ன?”

ஸ்லோமோஷனில் திரும்பினாள். ”இனி நான் செல்லப்போகும் பாதை, தேனீர்ப்பாதை!”, டிங்கென்று நாணயத்தை மீண்டும் சுண்டினாள். அது மெல்ல அவ்வரைபடத்தைக் காட்டியபடி மேலெழும்பித் திரும்ப, நாணயத்தின் மறுபக்கத்தில், “இடைவேளை”, என்று பொறிக்கப்பட்டிருந்தது.

(இன்டர்வெல்)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி