Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

கிராம சபைகள் - ஒரு பார்வை

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் 80 சதவீத மக்கள் கிராமப்புறத்தில் இருந்தனர். தற்பொழுது 70 சதவீதம் இருக்கின்றனர். திட்டக்குழுவின் படி 47.4 சதவீத பழங்குடியினரும் 42.3 சதவீத ஒடுக்கப்பட்டோரும் வறுமையில் உள்ளனர். மக்கள்தொகை ஏற ஏற கிராம இந்தியாவின் பிரதான வாழ்வாதாரமான விவசாயத்தின் மீதான அழுத்தமும் அதிகரித்தபடி உள்ளது. 2001 கணக்கெடுப்புப்படி கிராமபுறப் பெண்களில் 46.6 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், சில மாநிலங்களில் மூன்றரை வருடங்களுக்கும் குறைவாகவே பள்ளிக்கூடம் செல்பவர்கள். மகப்பேறு இறப்பு விகிதம் பற்றி சொல்லவே தேவையில்லை. 2004-06 வருடங்களில் உத்தரப் பிரதேசத்தில் 1000 பிறப்பிற்கு 440 தாய்மார்கள் இறந்த சோகம் உண்டு.

கிராமப்புறங்களில் மக்கள் தினம்தோறும் சந்திக்கும் சிக்கல்கள் முக்கியமாக இரண்டு. ஒன்று, பொருளாதார ஏற்றத்தாழ்வு. நில உரிமைக்காரர்களுக்கும் கூலி விவசாயிகளுக்கும் இடையே உள்ள பொருளாதார இடைவெளி பல மாநிலங்களில் அகலம். விளைவு, அடிக்கடி இவர்களது வேற்றுமைகள் மோதல்களில் முடிவதுண்டு. இரண்டு, சமூக வாழ்வு இன்றும் சாதியமைப்பினால் சில குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் சமூக பொருளாதார நன்மைகளை எடுத்துக்கொள்ளும் நிலையால் நலிவாக உள்ளது. காலனிய ஆதிக்க காலத்தில் கிராமப்புறங்களில் பணம் மட்டும்தான் பிழிந்தெடுக்கப்பட்டதே ஒழிய அங்கு மனித வள மேம்பாடு நடைபெறவில்லை. சுதந்திர இந்தியத் தலைமை இதற்குத் தீர்வாக தொழிற் புரட்சியையும் நவீனமயத்தையும் முன்வைத்தது.

ஆனால் நவீன இந்தியா குறித்த மகாத்மா காந்தியின் கனவு கிராம சுயாட்சி பற்றியது. அவரைப் பொறுத்த வரை அரசியல் மற்றும் பொருளாதார வலைகளால் பின்னப்பட்ட தற்சார்பு கொண்ட கிராமக் குடியரசுகளால் மட்டுமே மக்களின் அத்தியாவசிய தேவைகளைத் திறம்பட பூர்த்தி செய்ய முடியும். அடிப்படைத் தேவைகளை ஒரு கிராமம் தன்னிறைவாகப் பூர்த்தி செய்து, பிற தேவைகளுக்கு மற்ற கிராமங்களை அணுகி, இப்படி இந்தியா முழுக்க விரிந்துக்கொண்டே போகும் வட்டங்களாக கிராம அமைப்புகளை காந்தி அணுகினார். கிராம நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைக்கும் தனிமனிதர்களை அவர் கனவு கண்டார். கிராமங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி பிரதேச அரசுகளும் மத்திய அரசும் குறைந்த, பிரதேச, தேசிய அளவிலான பணிகளை செய்தால் போதுமானது என்பது காந்தியக் கொள்கை.

காந்தியின் கிராமக் குடியரசு சிந்தனைக்கு நல்ல மதிப்பு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. காந்தி அதனுள்ளே புகுத்திய மனிதம், அகிம்சை ஆகியவை நல்ல நோக்குடையவையாகவே இருந்தன. ஆனால் இறுதியாக ஏற்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சியையும் வலுவான மத்திய அரசையுமே அங்கீகரித்தது(பல்வேறு வரலாற்று, சமூகக் காரணங்களுக்காக. நாடு முதலில் ஒன்றாக இருக்க வேண்டுமே?). காந்தியக் கொள்கை நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆயினும் கிராம சபைகளைக் கோரிய காந்தியவாதிகளையும் இணைத்துக்கொள்வதற்காக வழிகாட்டும் நெறிகளில் மத்திய அரசு கிராம சபைகளை உருவாக்கி தேவைக்கேற்ப சுயாட்சிகளை வழங்க முயற்சிகளை எடுக்கலாம் என்று ஒரு வரியை சேர்த்தது. அரசமைப்புச் சட்டம் இருக்கிற அமைப்புகளுக்கு மாற்றாக கிராம சபைகளைப் பார்க்கவில்லை, மாறாக இருக்கிற கூட்டாட்சி பாராளுமன்ற அமைப்புகளுக்கு உட்பட்ட ஒரு அமைப்பாகவே அதைக் கருதியது.

கிராமக் குடியரசுகள் இந்தியாவின் அழிவுக்கே வழிவகுக்கும் என்று அம்பேத்கர் உறுதியாக நம்பினார். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் உயர்த்திக்கொண்ட சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சமூக-பொருளாதார ரீதியாக மேலும் கடுமையாக ஒடுக்குவார்கள் என்றார். காந்தியவாதிகள் இதற்கு மாற்றாக இந்தியாவை கிராமங்கள் அழிக்கவில்லை, காலனிய ஆதிக்கமே கிராமங்களை அழித்தது என்று வாதிட்டனர். அம்பேத்கர் தன் கருத்தில் உறுதியாக நின்றார். ‘பஞ்சாயத்தி ராஜ்’ என்னும் இரண்டு சொற்களைக் கூட அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக்கூடாது என்று நினைத்தார். இறுதியில் வழிகாட்டும் நெறிகளில் அவ்வார்த்தைகள் இடம்பெற்றது காந்தியவாதிகளுக்கு அம்பேத்கரியர்களுக்கும் இடையே இறுதியாக நிகழ்ந்த சமரசத்தின் விளைவே. காந்தியின் இறப்பிற்குப் பின்னரும் பூதான இயக்கம் போன்ற இயக்கங்கள் மூலமாக காந்தியவாதிகள் தீவிரமாக இயங்கினார்கள்.

1957-ல் ராஜஸ்தானில் ஒரு மாவட்டத்தில் நேருவால் பெரிய ஆரவாரங்களுக்கிடையில் துவக்கப்பட்ட கிராம சபை அமைப்பு ஐந்தே வருடங்களில் படுதோல்வி அடைந்தது. கிராமங்களின் மேல் அரசும் காந்தியவாதிகளும் கொண்ட நம்பிக்கைகளை அது பொய்யாக்கியது. காந்தியவாதிகள் கிராமங்களைத் தூய்மையான முழுமைவாத அமைப்புகளாகக் காண்பித்த பிம்பத்தை அது கிழித்தெறித்து கிராமங்கள் அமைதியானவை அல்ல, அவை போட்டியும் பிரிவினையும் நிறைந்த ஒரு ஒழுங்கற்ற அமைப்பு என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது. காந்திய கிராம சபை அமைப்புகளால் ஒருமனதாக முடிவுகளை எடுக்க முடியாது என்பதும் கிராம வளர்ச்சிக்குப் பயன்படாமல் உயர்த்திக்கொண்ட சாதியினர் அதிகாரத்தில் நீடிக்க உதவும் ஒரு கருவியாகவே அது இருக்கும் என்பதும் தெரிய வந்தது. கிடைத்த தகவல்களை வைத்து அரசு மறு ஆய்வு செய்வதற்குள் சீனப்போர், உணவுப் பஞ்சம் என்று பிற தலைவலிகள் அரசுக்கு வர, கிராம சபைத் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.

1977-ல் ஜனதா அரசு வந்தபோது மீண்டும் இதன்பால் கவனம் சென்றது. அப்பொழுதுதான் அவசர நிலையை நாடு அனுபவித்திருந்ததனால் அதிகாரப் பரவல் நடைபெற்றே தீரவேண்டும் என்ற கருத்தில் பலர் உறுதியாக நின்றனர். கிராம சபைகளை சுயாட்சியதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்றாவிட்டாலும் கிராமங்களுக்கான திட்டங்களை உள்ளூர் அளவிலேயே வரையும் விதத்தில் அதற்கு அதிகாரமளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. அஷோக் மேத்தா அறிக்கை மத்திய, மாநில அதிகார மையங்களுக்கு அடுத்தபடியாக ஊராட்சி மண்டலங்களை ஆட்சியளவிலும் திட்டங்களை வகுக்கும் அளவிலும் பரிந்துரைத்தது. சில மாநிலங்களில் இவை நடைமுறைக்கு வந்தாலும் மாநில அரசுகள் இதனை அதிகாரப் பகிர்வாகப் பார்க்காமல் ஓட்டு வங்கியை பலப்படுத்தும் கருவியாகவே பார்த்தன.

இதன் தொடர்ச்சியாக ராஜீவ் காந்தி ஆட்சியில் 64வது அரசமைப்பு சட்டத்திருத்தம் முன்வைக்கப்பட்டது. அது கிராம சபைகளை சுயாட்சி அமைப்புகளாக அங்கீகரித்தது. ஆனால் மசோதா மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டதால் அது சட்டமாகவில்லை. சில திருத்தங்களோடு நரசிம்மராவ் ஆட்சியில் அது நிறைவேற்றப்பட்டு 1993-ல் கிராம சபைகளுக்கு சட்ட அங்கீகாரம் தரப்பட்டது. வழிகாட்டும் நெறிகளில் வெறும் வார்த்தைகளாக இருந்த கிராம சபைகள் 43 ஆண்டுகள் கழித்து இப்படித்தான் சட்ட அங்கீகாரம் பெற்றன.

இச்சட்டத்தின் மூலம் (20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள) அனைத்து மாநிலங்களிலும் கிராம சபைகள்(கிராம, தாலுகா மற்றும் மாவட்ட அளவில்) அமைவதைக் கட்டாயமாக்கியது. ஆனால் அதிகாரத்தை எவ்வளவு தூரம் பகிர்ந்தளிக்கலாம் என்ற அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டது இச்சட்டம். அதாவது, பதினோராவது அட்டவணையை உருவாக்கி எதுவரை கிராம சபைகளுக்கு அதிகாரமளிக்கலாம் என்ற வரையரையை இச்சட்டம் தந்தாலும், அது தரப்படும் அதிகாரத்தையும் தரும் விதத்தையும் செயல்படும் முறையையும் மாநில அரசின் முடிவுக்கே விட்டது.

ஆனாலும் இச்சட்டம் ஒரு பாய்ச்சலே. இச்சட்டத்தின்படி,
  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் கட்டாயம் நடந்தாக வேண்டும்.
  • 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு(பீகாரில் 50 சதவீதம்!). ஒடுக்கப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு. மேலும் ரிசர்வ் தொகுதிகள் சுழற்சி முறையில் அனைத்து தொகுதிகளிலும் இருக்கும் (Rotation of constituency).
  • மாநில திட்டக்குழுவும் மாவட்ட திட்டக் குழுவும் சட்ட அங்கீகாரம் பெற்றது. மாநில திட்டக்குழு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கூடி கிராம சபைகளுக்குத் தேவையான நிதியுதவியை ஒதுக்கப் பரிந்துரைக்க வேண்டும்.
ஆக இந்த சட்டத்தின் மூலம் கிராம சபைகள் வெறும் திட்டங்களை செயல்படுத்தும் கருவியாக மட்டும் இல்லாமல், அது கிராமங்களையும் இந்திய ஜனநாயகத்திற்குள் கொண்டு வரும் ஊடகமானது. அது கிராம அளவில் ஜனநாயகம் வேர் விட, அது சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட வழிவகுத்தது.

இந்த ஜனநாயகப் புரட்சியின் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் 30 லட்சம் கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் 10 லட்சம் உறுப்பினர்கள் பெண்கள். 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் ஒடுக்கப்பட்டவர்கள்.

ஒருபக்கம் கிராம சபைகள் தருகிற நம்பிக்கைகள் அசாத்தியமானவை என்றாலும், அரசமைப்புச் சட்டம் எவ்வளவுதான் சட்ட அங்கீகாரம் தந்தாலும் மறுபக்கம் சமூக அமைப்பு மாறும் வரை ஒரு ஜனநாயகத்தில் மாற்றம் சாத்தியமில்லை என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டும் அதே கிராம சபைகள்தான். சாதனைக் கதைகள் உண்டு என்றாலும் இன்று கிராம சபைகள் சந்திக்கும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

கிராம சபைகளிடம் நிதியே இல்லை என்ற வாதம் தவறு. நிறைய இருக்கின்றன. ஆனால் கிராம சபைகள் தங்களுக்கான உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான நிதி தரப்படுவதில்லை. அவை சுயாட்சி பெற்றதாக அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்தாலும் இன்றும் அவை மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றப் பயன்படும் கருவியாகவே இருக்கின்றன. ராஜீவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், ஊரக சாலையமைப்புத் திட்டம், மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் ஆரம்பக்கல்வி திட்டம், இந்திரா வீட்டு வசதித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மட்டும் 2009-10 ஆண்டில் கிராம சபைகளுக்கு நேரடியாக 95,000 கோடி ரூபாய் தரப்பட்டதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. இது ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது. மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற நிதியுள்ள கிராம சபைகளிடம் தங்களால் அடையாளம் காணப்பட்ட, தங்களின் சுயாட்சி அதிகாரத்தால் இதை செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்ட எளிமையான உள்ளூர் பணிகளை நிறைவேற்ற நிதி இல்லை. ஆக இவை மீண்டும் மத்திய அரசின் கருவிகளில் ஒன்று என்ற அளவிலேயே முடங்கிப் போகின்றன.

இதற்கு மறுவாதமும் இருக்கத்தான் செய்கிறது. மத்திய அரசின் இயந்திரங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைத்தன. 1960-களில் புதிய விவசாயக் கொள்கையை மத்திய அரசு இயந்திரங்கள் வெற்றிகரமாக கிராமங்கள் வரை கடத்தின. எழுபதுகளில் ‘வறுமையை ஒழிப்போம்’ முழக்கத்தின்போது மத்திய அரசு இயந்திரங்களின் நேரடிப் பார்வையில் திட்டங்கள் நிறைவேற்றபட்டன. இதனால் இந்த அமைப்பே நடைமுறையில் ஒத்துவரும் என்ற மனப்பான்மை அரசு அதிகாரிகளுக்கு இயல்பாகவே வந்துவிட்டன. அதனால்தான் சுயாட்சி அமைப்பாக சட்ட அங்கீகாரம் கிடைத்தாலும் பழைய பாணியிலேயே கிராம சபைகள் நடத்தப்படுகின்றன. பெரும் நிதியும் மாற்றமும் தொடர்புள்ள திட்டங்களில் மத்திய அரசு ‘ரிஸ்க்’ எடுக்க விரும்புவதில்லை. அதனால்தால் இன்றும் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வருடத்திற்கு 25 லட்சம் ரூபாய் தரப்படுகிறது. இதை செய்யத்தானே கிராம சபைகள்?

பெண்களுக்குப் பாராளுமன்றத்தில் தரப்படாத இடஒதுக்கீடு 1993 முதல் அடிப்படை ஜனநாயக அமைப்பான கிராம சபைகளில் தரப்பட்டுள்ளது. கண்டிப்பாக வரவேற்கத்தக்கது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு, பள்ளிப்படிப்பு பாதியிலேயே நிறுத்தப்படும் அவலம் அதிகம், இறுக்கமான ஆணாதிக்க சமூகம், இவையனைத்தும் பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிரானவை. இந்தப் பின்னணியில்தான் பெண்களுக்கு கிராம சபைகளில் இடஒதுக்கீடு. பாலின சமத்துவத்திற்கான நீண்ட பயணத்தை கிராம சபைகளால் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையே இதன் அடிப்படை. பீகாரில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு தரப்படுகிறது. சிக்கிம் 40 சதவீதமாக ஏற்றியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தத் தேர்தலிலிருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வந்துவிடும். இடஒதுக்கீடு பெண்களின் ஜனநாயக அடித்தளத்தை வலுவாக்கியுள்ளது. பல பெண்கள் தேர்தலில் நிற்கவும் அரசியலில் பங்குபெறவும் ஊக்குவித்துள்ளது. ஆனால் இதிலும் சிக்கல்கள் உள்ளன.

ஒன்று. ரிசர்வ் தொகுதிகளில் சுழற்சி முறை என்பது தேவையே என்றாலும் இந்த முறையால் முதல் தேர்தலில் இடஒதுக்கீட்டினால் இடம் கிடைத்த ஒரு பெண் என்னதான் மக்களுக்கு விழுந்து விழுந்து சேவை செய்தாலும் அடுத்த தேர்தலில் அவரால் ஆண்களோடு போட்டி போட்டு வெல்வது குதிரைக்கொம்பான காரியம். இதனால் வளரும் பெண் அரசியல்வாதிகள் உள்ளூர் அளவில் மிக மிகக் குறைவு. ஒடுக்கப்பட்டோருக்கும் இது பொருந்தும். இரண்டு, சில மாநிலங்களில் ஒரு பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவரால்(இந்த விதி ஆணுக்கும் பொருந்தும்) தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி இருக்கிறது. இல்லற வாழ்விலும் குழந்தைப் பேறிலும் பெண்கள் முடிவெடுக்க வாய்ப்பேயில்லாத சமூக சூழலில், சொந்தக் கணவனாலேயே வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிற நிலையில் இந்த விதி கிராம சபைகளில் பெண்களின் பங்களிப்பிற்குத் தடையாகவே இருக்கிறது.

மூன்றாவதாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராகக் கடுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. ரிசர்வ் தொகுதியின் மூலமாக இடம் கிடைத்த பெண்களையும் ஒடுக்கப்பட்டோரையும் எப்படி வெளியேற்றலாம் என்று காத்திருந்து அழகாக வெளியேற்றுகிறார்கள் (சுழற்சி முறை இருப்பதால் மறுதேர்தலில் ரிசர்வ் இடம் கிடைப்பது சந்தேகமே). கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதற்குத் தீர்வாக ஒரு பெண் உறுப்பினருக்கு மாற்றாக மீண்டும் இன்னொரு பெண்ணே வர வேண்டும் என்று சட்டமியற்றப்பட்டிருக்கின்றன.

நான்காவது, பிரதிநிதியாக இருப்பது வேறு, பங்களிப்பது வேறு. பல இடங்களில் பெண் உறுப்பினர்களைப் பின்னாலிருந்து இயக்குவது அவரது கணவரோ அல்லது தந்தை, தமையன் போன்ற வேறு ஒரு ஆண் உறவினரோதான். இதனால் பல இடங்களில் ஒப்புக்கு பெண்களையும் கிராம சபைகளில் பொம்மை போல் சேர்த்துக்கொள்ளும் பிம்பமே ஏற்படுகிறது. அது ஒருபுறம் இருந்தாலும் வீடே உலகமாக இருக்கும் பல பெண்களுக்கு கிராம சபை உறுப்பினர் பதவியால் உலகம் விசாலமடைகிறது, புது தைரியம் பிறக்கிறது. அவர்களின் பணிக்காலம் முடிந்த பிறகும் அவர் வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் ஒரு தனி மரியாதை ஏற்படுகிறது. வீட்டிலும் அவர் குரலுக்கு மதிப்பு தரப்படுகிறது. இப்படி கிராம சபைகள் சமூகத்தில் பெண்கள் குறித்த பார்வையை மாற்றவே செய்கிறது.

பெண்களுக்கு இப்படி சிக்கல்கள் என்றால் ஒடுக்கப்பட்டோருக்கு வேறு வித சிக்கல்கள். சட்டங்கள் மூலமாகவே எப்படி உயர்த்திக்கொண்டோர் மக்களை ஒடுக்குவார்கள் என்பதற்கு குஜராத் கிராம சபை சட்டம் ஒரு உதாரணம். இச்சட்டத்தின்படி ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபைகள் ஒரு சமூக நலக்குழுவை உருவாக்க வேண்டும். இறந்த மிருகங்களின் மிச்சத்தை அகற்றி கிராமத்தின் தூய்மையைக் காப்பது இக்குழுவின் பணிகளுள் ஒன்று. இப்பணியை செய்ய யாரை அனுப்புவார்கள் என்று சொல்லத் தேவையில்லை. சட்டப்படி தீண்டாமையைக் கடைபிடிக்கும் இப்போக்கை எதிர்த்து நீதிமன்றம் செல்லாமல் இல்லை. ஆனால் இவ்விஷயத்தில் அங்கு எந்த அரசியல் கட்சியும் முனைப்பு காட்டவில்லை என்பதுதான் சோகம். காதல் விஷயங்களில் சமூக நலக்குழு தலையிட்டு உயர்த்திக்கொண்டோருக்கு ஆதரவாக செயல்படுவதும் நடக்கிறது. பல கிராமங்களில் இக்குழு அது உருவாக்கப்பட்டதற்கான பணியை செய்யக்கூட இயங்குவதில்லை. மேலும் தான் பதவிக்கு வந்தால் ஊர் என்ன சொல்லும் என்று பல ஒடுக்கப்பட்டோர் தேர்தலில் போட்டியிடத் தயங்குவதும் நடக்கிறது. சமூக-பொருளாதாரத் தளங்களில் அடுத்த பத்து வருடங்களில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றனவோ அதைப் பொருத்துதான் கிராம சபைகளின் எதிர்கால செயல்பாடுகள் அமையும் என்றது அஷோக் மேத்தா அறிக்கை. அதுதான் நடந்திருக்கிறது. ஆதிக்க சாதியினர் பலமாக இருக்கும் கிராமங்களில் ஒடுக்கப்பட்டோர் பதவியில் இருந்தாலும் தேவையான எந்தப் பணியையும் செய்ய முடிவதில்லை. அங்கங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களை தாக்குவதும், கொல்வதும் நடக்கின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த கிராம சபைகள் ஒடுக்கப்பட்டோரை உள்ளூர் ஜனநாயகத்திலும் முடிவெடுப்பிலும் பங்கேற்க வைக்கிறது என்பது நல்ல அம்சமே.

சுதந்திரப் போராட்டக் காலங்களில் கூட தேசிய இயக்கங்கள் பழங்குடியினரை தேசிய நீரோட்டத்தில் இணைக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. 1996-ம் ஆண்டு Pachayat Extension to Scheduled Areas(PESA) என்ற சட்டத்தின் மூலம் பழங்குடியினரையும் ஜனநாயக ஏற்பாட்டிற்குள் இணைக்கும் முயற்சி நடந்தது. சிறு வனப் பொருட்களுக்கான உரிமை, தடை அமலாக்கம், நில உரிமை மாற்றத் தடுப்பு, உள்ளூர் தேவைகளுக்கான திட்டமிடல், பழங்குடியினருக்கு வழங்கப்படும் கடன் விவகாரங்களில் அதிகாரம் போன்ற அம்சங்களில் சுயாட்சி வழங்கலாம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை வளங்கள் சார்ந்து அவர்களின் வாழ்வாதாரம் இருப்பதால் அந்த வளங்களின் பால் அவர்களுக்கு இருக்கும் உரிமை ஆகியவற்றை அவர்களே முடிவு செய்துக்கொள்ளும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்கியது. அதாவது அவர்களின் பாரம்பரிய உரிமைகளைக் காத்துக்கொள்ளவும் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே நிர்ணயித்துக்கொள்ளவும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது இச்சட்டம். ஆனால் சோகம் என்னவெனில், பல மத்திய அரசு கொள்கைகளுடன் இச்சட்டம் வெகுவாக முரண்பட்டது.

ஒன்று, பழங்குடியினர் சுயாட்சி இந்திய அரசியலின் மைய நீரோட்டத்தில் விவாதிக்கப்படாத ஒன்று. மத்திய மற்றும் மாநில அரசுகள் இயற்றிய சுரங்கம், வனப் பொருட்கள், தண்ணீர், முக்கியமாக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்கள் பழங்குடியினரின் வாழ்வாதாரத்திற்கும் பாரம்பரிய உரிமைகளுக்கும் எதிரானவையாகத்தான் இருக்கின்றன. விளைவு, ஒடிசாவில் செய்த ஆராய்ச்சியின் முடிவில் கிராம சபைகள் அங்கு ஏற்படுத்தப்பட்ட நோக்கங்கள் ஒன்றாகவும் விளைவுகள் வேறொன்றாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. பழங்குடியினர் வாழும் பகுதிகள் இயற்கை வளங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதிகள். இயற்கை வளங்களுக்காக அதிகாரம் மிக்க தொழிலதிபர்களின் தொடர் அழுத்தத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆளாவது ஒருபுறம்(பிளாச்சிமாடா கோக கோலா விவகாரம்), எண்ணிக்கையில் ஏறுமுகத்தில் செல்லும் இந்திய மக்கள்தொகையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற அழுத்தம் மறுபுறம். இவை இரண்டும் சேர்ந்து பழங்குடியினருக்கான கிராம சபைகளை அர்த்தமில்லாதவையாக ஆக்குகின்றன. இப்படி தங்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக ரீதியான குறை களையும் இயந்திரம் செயல்பாடற்று பயனற்று இருக்கும் நிதர்சனம் அவர்களுக்குத் தெரிய வருகிறது. விளைவு, போராட்டமும் வன்முறையும் வெடிக்கிறது. மாவோயிஸ்டுகளின் வலைக்குள் சுலபமாக விழுந்து விடுகிறார்கள்.

கிராம சபைகள் சந்திக்கும் மற்றொரு சிக்கல் ஊர் அளவில் இயங்கும் பல அதிகார மையங்கள். பண பலத்துடன் கிராமங்களுக்கு வந்திறங்கும் அரசு சாரா நிறுவனங்கள்(அவைகளின் ஆதரவும் ஆலோசனையும் பெற்ற கிராம சபைகள் கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவருகின்றன என்கிறது ஒரு ஆராய்ச்சி), மத்திய அரசுத் திட்டங்களுக்கு மாவட்ட அளவில் உருவாக்கப்படும் ஆணையங்கள், இப்படி. அப்படியே ஆணையங்கள் இல்லாவிட்டாலும் நேரடியாக அவற்றை செயல்படுத்தக்கோரி கிராம சபைகளுக்கு உத்தரவுதான் வருகிறதே தவிர அவர்களுக்கு உள்ளூரில் என்ன தேவை என்ற அவர்களின் கருத்து காது கொடுத்துக் கேட்கப்படாத சூழலே உள்ளது. ஆக கிராம சபைகளுக்கு வெளியேதான் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுகின்றன. அது அவைகளின் ஜனநாயக வேர்களைப் பலவீனப்படுத்துகிறது. இதுபோக மாவட்டங்களில் நிகழும் அனைத்து அலுவல்களும் மாவட்ட ஆட்சியரின் அதிகார வரம்பிற்குள்ளேதான் வருகின்றன. கிராம சபைகள் என்ன திட்டங்களை வகுத்தாலும் இறுதியில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் இல்லாமல் அங்கு ஒன்றும் நடைபெறாது. மாவட்ட ஆட்சியருக்கான அந்த அதிகாரத்தை விட்டுத்தர எந்த மாவட்ட ஆட்சியரும் விரும்பவும் மாட்டர். வரி வசூலிக்கவும் சட்டம் ஒழுங்கைப் பேணவும் காலனிய காலத்தின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பதவி ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நேரடியாக வந்தவுடன் பல நிர்வாகப் பணிகளைப் பெற்றது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசின் பல வளர்ச்சித் திட்டங்களைத் திறனுடன் செயல்படுத்தும் இயந்திரமாக இப்பதவி மாறி சுதந்திர இந்தியாவில் அழுத்தமாக நிலைபெற்றது. ஆனால் முரண்பட்ட கொள்கைகளினால் கிராம சபைகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் இடையே உள்ள உறவு தெளிவற்றதாகத்தான் உள்ளது. பழங்குடியினப் பகுதியில் இது இன்னும் மோசம். ஒரு பக்கம் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இன்னொரு பக்கம் அங்குள்ள பழங்குடியினர் நலனுக்கும் மாவட்ட ஆட்சியர்தான் பொறுப்பு. என்னதான் செய்ய?

இவற்றைவிட ஆபத்தான ஒரு அதிகார மையம், சாதியமைப்புகள். ஒருபுறம் கிராம சபைகள் செயல்படுகின்றன என்றால் காப்(Khap) பஞ்சாயத்துகள் போன்ற அமைப்புகள் மறுபுறம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு கிராமத்திற்கு என்ன தேவை என்பதை அவையே பெரும்பாலும் முடிவு செய்கின்றன. சாதியமைப்பின் பாரம்பரியத்தைக் காரணம் காட்டி கிராமத்திற்கான தேவையை முடிவு செய்யும் அதிகாரத்தை உயர்த்திக்கொண்டோர் தாங்களாகவே எடுத்துக்கொள்கின்றனர். கிராம சபையின் முடிவுகளை எதிர்த்து வேறு முடிவுகளை இந்த அமைப்புகள் தன்னிச்சையாக எடுத்து அதை கிராமங்களில் விதியாகத் திணித்து பல மாவட்டங்களில் ஜனநாயக அமைப்பிற்கே சவால் விடுகின்றன. ஒருபுறம் இறுக்கமான சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் அமைப்புகள். மறுபுறம் சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தும் நோக்குடன் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட கிராம சபைகள். விளைவு, முரண்பட்ட நோக்கங்கள் வன்முறையில் முடிகின்றன.

இப்படி குறைகள் பல இருந்தாலும் இது ஒரு நீண்ட நெடிய பயணமே. காந்தியின் கனவாகப் பிறந்து, அரசமைப்புச் சட்டத்தில் வழிகாட்டும் நெறியாக சுதந்திர இந்தியாவில் தோன்றி, 73-வது அரசமைப்புச் சட்ட சீர்திருத்தத்தின்மூலம் சட்ட அங்கீகாரத்தைப் பெற்று இன்று குறைகள் இருந்தாலும் கிராம அளவில் இந்திய ஜனநாயகத்தை முழுமையாகத் தாங்கிப் பிடிக்கும் அமைப்பாக ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து விதைத்தபடி வருகின்றன கிராம சபைகள். 73-வது அரசமைப்புச் சட்ட சீர்திருத்தம் நிச்சயமாக ஒரு ஜனநாயகப் புரட்சி. 10 லட்சம் பெண் உறுப்பினர்கள், 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் ஒடுக்கப்பட்டோர், சாதாரண விஷயம் இல்லை இது. 2008-ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின் முடிவில் இடஒதுக்கீடு அம்மக்களின் வாழ்வில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்ற உண்மை புலனானது. இறுக்கமான ஆணாதிக்கத்தின் பிடியில் சரியான கல்வி இல்லாமல், உடல் நலம் இல்லாமல், முடிவெடுப்பில் பங்களிப்பு இல்லாமல் இருந்த பல பெண்களுக்கு கிராம சபைகள் பல்வேறு புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றன. பல பெண் உறுப்பினர்கள் குழந்தைகளின் கல்விக்கும், அடிப்படை சுகாதாரத்திற்கும், கழிப்பறை வசதிகளுக்கும் போராட்டங்களுக்கு இடையே பங்களிப்பை நிகழ்த்திய சாதனைக் கதைகள் இந்தியா முழுக்க எழுதப்பட்ட வண்ணம் இருக்கின்றன. ஒருமுறைதான் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் இருந்தாலும் அந்த ஐந்தாண்டு பதவிக்காலத்தின் முடிவில் அரசியல் அறிவும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் அப்பெண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன. அவை கிராம சமூகங்களில் குறிப்பிடத்தகுந்த நெடுநாள் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியன.

பெண்களும் ஒடுக்கப்பட்டோரும் கிராம சபைகளுக்குள் நுழைந்த பிறகு உயர்த்திக்கொண்டோர் தங்களின் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் நூற்றாண்டுகளாக நிறுவப்பட்ட சமூக அமைப்புகளை சிதைய விடாமல் காப்பதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிரமாக இறங்கி பல இடங்களில் வன்முறைக்கு வழிவகுக்கின்றனர். இந்த நிகழ்வுகள் கிராம சபைகளினால் கிராமங்களில் மாறிவரும் power equation-இன் நேரடி விளைவுகள். இந்த வன்முறைகள் கிராம சபைகளில் ஒடுக்கப்பட்டோரின் பங்களிப்பைக் குறைக்கவில்லை, மாறாக அவர்களும் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையில் தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தை சார்ந்து மாற்றங்களை சாத்தியமாக்கியபடி இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் இந்த அதிகாரப் பரவலால் முன்னேற்றத்திற்கான அர்த்தத்தை மத்தியிலோ மாநிலத்திலோ ஒரு தலைவர் முடிவு செய்யாமல், அந்த முன்னேற்றத்தினால் நேரடியாகப் பயன்பெறும் மக்களே முடிவு செய்யும் முறையை நிறுவியதில், கிராம சபைகள் குறிப்பிடத்தக்க தூரத்தை அடைந்துள்ளன, இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றாலும். இந்த அதிகாரப் பரவல் இந்திய ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் முதல் முயற்சி. அதை இந்திய சூழலில் மேலிருந்துதான் நடைமுறைப்படுத்த முடியும் என்றாலும், அப்பாதையில் சிக்கல்களும் சவால்களும் அதிகம் என்றாலும், சுதந்திர இந்தியாவில் கிராம சபைகளின் இதுவரையிலான பயணங்கள் நெடுங்கால கிராம நம்பிக்கைகளையும் சமூக வழக்கங்களையும் அந்த மக்களே மறுஆய்வு செய்ய உதவியிருக்கின்றன.
-----------------------------------------------
Notes taken from ‘Panchayati Raj’ by Kuldeep Mathur (Oxford)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி