Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சம்பாரணும் காந்தியும்

          26/10/16 அன்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் ஜாக் புஷ்பதாஸ் எழுதிய “Champaran and Gandhi: Planters, Peasants and Gandhian Politics" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. திரு. அண்ணாமலை அவர்கள் மிக அருமையாக செலுத்திச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்ட ஒரு விஷயத்தை என் நினைவில் உள்ளவரை, என் நடையில் தருகிறேன்.




          “காந்தி வழிநடத்திய இந்திய தேசிய காங்கிரஸினால் எல்லாம் சுதந்திரம் வந்துவிடவில்லை. இரண்டாம் உலகப்போரினால் பிரிட்டனுக்கு பொருட்சுமை ஏறியது, அது தாங்காமல்  ‘போராடுகிறார்கள், கொடுக்கிறோம்’ என்கிற சாக்கை வைத்து நாசூக்காக வெளியேறிவிட்டார்கள், அவ்வளவுதான்”, என்று சிலர் சொல்கிறார்கள். ஒரு அரை நூற்றாண்டு வரலாறைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் ஒரு மாபெரும் இயக்கம் சந்தித்த ரணங்களையும் செய்த சாதனைகளைகளையும் இப்படி ஒரே வாக்கியத்தில் எளிதாகக் கடந்து போய் விடுகிறார்கள்.

          பல கல்லூரிகளுக்கும், குறிப்பாக வட மாநிலங்களில் அண்ணாமலை அவர்கள் உரையாற்றச் செல்லும்போது அங்குள்ள மாணவ மாணவிகள் அவரிடம் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி, “சுதந்திரப் போராட்டத்தில் காந்தி போராடினார், காந்தி போராடினார், என்று ஏன் காந்தியை மட்டும் முன்னிலைப்படுத்துகிறீர்கள்? வேறு தலைவர் யாரும் போராடவில்லையா?”, என்பதே. காந்தியின் இறப்பை எடுத்துக்கொள்வோம். ஜனவரி 30, 1948 மாலை 5:17 மணிக்கு காந்தி இறந்தார். அவர் இறந்த செய்தி மிக விரைவில் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் சென்றுவிட்டது. இன்று ஒரு தலைவர் இறந்து போனாலே இந்தியாவின் அனைத்து கிராமத்திற்கும் செய்தி உடனே போய்விடுமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒரு கிராமம் விடாமல் உடனே செய்தி பரவியது எப்படி. செல்போன் வசதி எல்லாம் இல்லாத காலகட்டத்தில் இது எப்படி சாத்தியமானது? காந்தி மக்களோடு வைத்திருந்த connectivity அப்படிப்பட்டது. விறுவிறுவென்று காற்றில் செய்தி பரவிவிட்டது. வேறெந்த தலைவரும் சம்பாதிக்காத ஒன்று இது. இந்த மக்கள் சக்தியை காந்தி வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார். அவர் இந்தியாவை மேலிருந்து காணவில்லை, ஒரு top-down அடையாளத்தைக் கொடுக்கவில்லை. அவர் மக்களோடு இயங்கினார். அவர் இதுதான் இந்தியா என்று எந்தக் கலை வடிவத்தையும் முன்னிறுத்தவில்லை. சாதி, மதம், இனம், மொழி, கடந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் அவதியுறும் இதோ இந்த மக்கள்தான் இந்தியா என்று அடையாளப்படுத்தினார். அதன் அடிப்படையிலேயே போராடினார். அமைதி வழியில் சுதந்திரத்தை சாதித்தார். எனவேதான் காந்தியை முன்னிலைப்படுத்துகிறோம். காந்தியின் இறப்பை ஆகாசவாணியில் தழுதழுத்த குரலில் அறிவிக்கும் நேருவை இங்கு கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=DH68tmqNhBE

          காந்தியின் சம்பாரண் இயக்கத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ நன்றாகத் தன் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். காந்தி தன்னுடைய சத்தியாகிரக முறையை ஏற்கனவேயே தென் ஆப்பிரிக்காவில் பரிசோதித்து வெற்றியைக் கண்டு வந்திருப்பார். அப்படி சம்பாரணில் ஒரு யானையின் மேல் அமர்ந்து வலம் வரும்போது ஒருவர் ஒரு லெட்டரை நீட்டி, “இந்த மாவட்டத்தை விட்டு வெளியே போ, அரசாங்க உத்தரவு”, என்றார். இதற்குத்தான் காந்தி காத்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் எதிர்ப்பு வரும் இடத்தில்தான் அவருடைய முறை வர்க் அவுட் ஆகும். காந்தி விரித்த வலையில் அரசாங்கம் மாட்டிக்கொண்டது. “போக முடியாது, இது என் நாடு”, என்று சொல்லிவிட்டார். கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். வழக்கமாக எல்லாரையும் போல் காந்தியும் “தவறுக்கு மன்னியுங்கள்”, என்று சொல்வார் என்று நினைத்து, “செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறாயா?”, என்று நீதிபதி வழக்கமாகக் கேட்க, காந்தி “முடியாது. என்னை தண்டியுங்கள்”, என்றிருக்கிறார். இதுதான் authority-ஐக் கேள்வி கேட்பது. “நம்ம என்ன அவன் தப்பு செஞ்சான்னு சொல்றதுக்கு? நாம மட்டும் என்ன யோக்கியவான்களா?”, என்ற கேள்வியை ஆங்கிலேயக் குடிகளின் மனதில் வரவைப்பதுதான் காந்தியின் டெக்னிக். அதன்மூலம் அரசாங்கத்தின் தவறுகளைத் திருத்தலாம் அல்லவா? நீதிபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “தள்ளிவைக்கப்படுகிறது, மதியம் கூடலாம்”, என்று சொல்லிவிட்டார். மதியம் வந்து “ஜாமீன் அப்ளை செய்தால் விடுகிறேன்”, என்றார். “ஜாமீன் எல்லாம் வாங்க முடியாது என்னை தண்டியுங்கள்”, என்றுவிட்டார் காந்தி. நீதிபதி மீண்டும் அவையைத் தள்ளி வைத்துவிட்டார், தன் மேலதிகாரிகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று. இறுதியில் சாயங்காலம் ஒரு தண்டனையும் கொடுக்காமல் காந்தியை அனுப்பி வைத்தார்கள்.

          இப்படிப்பட்ட ஒரு வினோத ஜந்துவை அந்த மாவட்டத்தில் யாரும் பார்த்ததில்லை. அதிகாரத்திற்கு எதிராக ஒரு ஒல்லியான, பலமற்ற மனிதன் எளிமையான ஆடைகளை உடுத்தியபடி, தண்டனை கொடுக்கும் நீதிபதியை நேருக்கு நேராகப் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரித்தால், அந்த நீதிபதியே வெலவெலக்கும்போது சுற்றியுள்ள பாமர மக்களுக்கு? இந்தாள் நமக்காகவே இங்கு வந்த தெய்வம் என்று முடிவு செய்து விட்டார்கள். கிராமத்தில் ஒன்று சொன்னால் அது பத்தாகப் பரவும் என்பார்களே, அப்படி காந்தி பற்றிய கதைகள் வாய்வழியாக சம்பாரன் மாவட்ட கிராமங்கள் அனைத்திற்கும் போய்ச் சேர்ந்தது. காந்தியைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் உருவானது.

          சம்பாரண் போராட்டத்திற்கு ‘தீன் கதியா’ முறை மட்டும் காரணம் அல்ல(நிலத்தில் 20-இல் 3 பங்கு அவுரி விளைவிக்க வேண்டும்). அதற்கும் அப்பால் பல பிரச்னைகள் இருந்தன என்று ராஜேந்திர பிரசாத் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். மற்ற நாடுகளிலும் அவுரி விளைவிக்க ஆரம்பித்துவிட்டதால் சந்தைப் போட்டி அதிகமானது, எனவே உற்பத்தி செலவைக் குறைத்தால்தான் விலையைக் குறைக்க முடியும் என்று சில அடக்குமுறைகளை அந்தத் தொழிலதிபர்கள் அவிழ்த்து விட்டார்கள்:

1. இனிமே உனக்கு சம்பளம் கம்மிதான்.
2. “வர்ற தண்ணீருக்கு வரி கட்டணும்”...“அய்யா தண்ணியே வரலைங்கய்யா”...“பரவால்ல வராத தண்ணீருக்கு வரி கட்டு”
3. உன் தந்தை இறந்ததற்காக வருந்துகிறேன் நண்ப. உன் தந்தை இறந்துவிட்டதால் அவர் சார்பில் அவர் மகனாகிய நீ அவர் இறப்பிற்கு ஒரு வரியைக் கட்டிவிடு.
4. கல்யாணமா? வாழ்த்துகள்! அதுக்கு ஒரு வரியக் கட்டு.
5. விதவை மறுமணமா? எங்க சட்டத்தால்தான் உனக்கு மறுமணம் நடக்குது. அதனால அதுக்கு ஒரு வரி கட்டு.
6. ஆஸ்பத்திரி செலவுக்கு வரி கட்டு.
7. நீ அவுரி விளைவிக்கலேன்னாலும் தப்பிக்க முடியாது. நீ விளைவிக்காததனால எங்களுக்கு நஷ்டமாகுது. அதனால அந்த விளைவிக்காத அவுரிக்கு நீ காசு குடு.

          பல வருடங்கள் இவற்றிற்கு எதிராகக் குமைந்துக்கொண்டிருந்த எதிர்ப்பெல்லாம் சேர்ந்துதான் சம்பாரண் இயக்கமாக வெடித்தது.

          இந்த இயக்கம் வெற்றி பெற்றால் போதாது, நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதற்காக காந்தி volunteer-களை அழைத்தார். பலர் வந்தனர். குஜராத்திலிருந்து கணிசமானோர் வந்தனர். அப்படி வந்தவர்களுள் ஒருவர்தான் மகாதேவ் தேசாய். அதற்கு அடுத்த நாள் அவர் எழுத ஆரம்பித்த டைரியை, அவர் 1942-ல் இறப்பதற்கு முதல் நாள் வரை தினமும் தொடர்ந்து எழுதினார். அதன்மூலம் காந்தியை நாம் அருகிலிருந்து காணும் வாய்ப்பு கிடைத்தது.

          ஜே.பி.கிருபளானியிடம் ஏற்கனவே ஆகியிருந்த அறிமுகம், சம்பாரண் இயக்கத்தினால் நட்பாக வலுப்பெற்றது. முதன் முதலில் சம்பாரண் வந்தபோது ராஜேந்திர பிரசாத் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அவர் வீட்டில் இல்லை. அங்கு இருந்த வேலைக்காரர்கள் காந்தியின் உடையைப் பார்த்து அவரைக் கீழ்த்தரமாக நடத்தியிருக்கிறார்கள். “நீங்கள் எப்போது இங்கே வந்தாலும் என் வீட்டில்தான் தங்க வேண்டும்”, என்று ராஜேந்திர பிரசாத் எழுதிய கடிதத்திற்கு பதிலாக மேலே உள்ள சம்பவத்தைக் குறிப்பிட்டு, “இப்படியெல்லாம் என்னை நடத்தினால் என்னால் அங்கு சரியாகப் பணியாற்ற முடியாது”, என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

          சம்பாரண் சத்தியாகிரகம் என்பது வெறும் விவசாயப் போராட்டம் மட்டுமல்ல. இந்திய தேசிய காங்கிரஸ் பயணிக்கப் போகும் திசையை அறைகூவியது காந்தியின் நடவடிக்கைகள். அதுவரை வெகுமக்கள் இயக்கமாகப் பெரிதளவில் காங்கிரஸ் இயங்கவில்லை. சுதேசி இயக்கத்தில் மக்கள் பங்களிப்பு இருந்தாலும் அதில் தலைவர்கள் மேலிலிருந்து ஒருங்கிணைத்தார்கள். ஆனால் இங்கு காந்தியோ, “எல்லோரும் மக்களோடு மக்களாக இருந்து போராட வேண்டும்” என்றுவிட்டார். ராஜேந்திர பிரசாத் தன் வேலைக்காரர்களோடு வந்து முகாம் அமைத்தார். “என்ன இதெல்லாம்? உங்கள் துணியை நீங்களே துவையுங்கள். தனி உணவு எல்லாம் கிடையாது. Common food சமைக்கிறோம், கலந்து அடிக்கிறோம்”, என்று சொல்லிவிட்டார் காந்தி. காங்கிரஸ் பக்கம் புதிய காற்று வீசப்போகிறது, இது ஒரு பெரும் திருப்புமுனை, என்று அப்பொழுது அந்தத் தலைவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

Comments

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி