Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஜெர்மன் அதிபரின் யத் வாஷெம் உரை - ஜனவரி 23, 2020

பிராங்க்-வால்டர் ஷ்டைன்மையர்,
குடியரசுத் தலைவர், ஜெர்மனி
நாள்: ஜனவரி 23, 2020
இடம்: யத் வாஷெம், யெருசலேம்/இஸ்ரேல்

“என்னை இங்கு வரவைத்த ஆண்டவனின் முன்பு என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்துக்கொள்கிறேன்."

இன்று யத் வாஷெம்மில் உங்களிடையே உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்.

யூத இன அழிப்பில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு அணையாச் சுடர் இங்கே யத் வாஷெம்மில் எரிந்துகொண்டிருக்கிறது.

இந்த இடம் அவர்கள் அனுபவித்த சித்திரவதையை நினைவூட்டுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்த சித்திரவதையை.

இந்த இடம் அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது - ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கையையும்.

இந்த இடம் சாமுவெல் டைடெல்மானை நினைவுகூர்கிறது. டைடெல்மான் மக்காபி வார்சா அணிக்காகப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர். அவருடைய சகோதரி ரேகா, சப்பாத் அன்று அவருடைய அம்மாவுக்கு சமையலில் ஒத்தாசை செய்வாள். அவளை இந்த இடம் நினைவுகூர்கிறது.

இந்த இடம் இடா கோல்ட்பிஷ்ஷை நினைவுகூர்கிறது, அவருடைய மூன்று வயது சிறுவன் விலியை நினைவுகூர்கிறது. அக்டோபரில் அவர்கள் சிசினாவோ கெட்டோவுக்கு அனுப்பப்பட்டார்கள். ஜனவரியில் ஒரு குளிர்மிகுந்த பொழுதில் இடா அவளுடைய பெற்றோர்களுக்குத் தன்னுடைய இறுதிக் கடிதத்தை எழுதினாள்: “உங்களை விட்டுக் கிளம்பும்போது அந்த நொடியின் முக்கியத்துவத்தை நான் உணரவில்லை, என் மனதின் அடியாழத்திலிருந்து அதற்காக நான் வருந்துகிறேன், […] உங்களை ஒரே ஒரு முறையேனும் இறுகக் கட்டிப்பிடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.”

ஜெர்மானியர்கள் அவர்களைக் கடத்தினார்கள். ஜெர்மானியர்கள் அவர்களின் கைகளில் நெருப்பிட்டு எண்களைப் பொறித்தார்கள். ஜெர்மானியர்கள் அவர்களை சக மனிதர்களாகப் பார்க்க மறுத்தார்கள். அவர்களை வெறும் எண்களாக சுருக்க முயன்றார்கள், வதை முகாம்களில் அவர்களின் நினைவுகளை அழிக்க முயன்றார்கள்.

அவர்கள் அதில் வெற்றி பெறவில்லை.

சாமுவெல்லும் ரேகாவும் இடாவும் விலியும் மனிதர்கள்.

அவர்கள் இன்று மனிதர்களாக நம் நினைவுகளில் வாழ்கிறார்கள்.

இசையாஹ் புனித நூலில் சொல்லப்பட்டதுபோல, யத் வாஷெம் அவர்களுக்கு ஒரு நினைவிடத்தையும் பெயரையும் தந்துள்ளது.

இந்த நினைவிடத்தின் முன்னே நான் நிற்கிறேன். அவர்களின் பெயர்களை வாசிக்கிறேன். அவர்களின் கதைகளைக் கேட்கிறேன்.

ஆழ்ந்த துக்கத்தில் நான் தலை கவிழ்கிறேன்.

சாமுவெல்லும் ரேகாவும் இடாவும் விலியும் மனிதர்கள்.

ஒன்றை இங்கு சொல்லியே ஆகவேண்டும். இக்கொடுஞ்செயலைப் புரிந்தவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் ஜெர்மானியர்கள். இவர்களைக் கொன்றவர்கள், இவர்களைக் கொல்லத் திட்டம் போட்டவர்கள், இவர்களைக் கொல்ல உதவியவர்கள், இக்கொடுமையைக் கண்டு அமைதியாக இருந்தவர்கள், அவர்கள் ஜெர்மானியர்கள்.

மனித வரலாற்றில் இப்படி ஒரு கொடுஞ்செயல் நடந்ததில்லை. அறுபது இலட்சம் யூதர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். அந்த இன அழிப்பை நடத்தியது என்னுடைய தேசத்துக்காரர்கள்.

ஐந்து கோடி உயிர்களைப் பலி வாங்கிய அந்த உலகப் போர், என்னுடைய தேசத்திலிருந்துதான் துவங்கியது.

ஆஷ்விட்ஸ் நகரம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள் கழிந்துள்ள இந்த தினத்தில், ஜெர்மனி நாட்டின் குடியரசுத் தலைவராக உங்கள் அனைவரின் முன்பும் நிற்கிறேன். ஒரு மிகப்பெரும் வரலாற்றுப் பாவத்தை நிகழ்த்திய குற்ற உணர்ச்சியில் பெரும் பாரத்தைச் சுமந்தபடி நிற்கிறேன். அதே வேளையில், என் இதயம் நன்றியையும் சுமக்கிறது. இன அழிப்பில் தப்பிப்பிழைத்தவர்கள் எங்களை நோக்கி நேசக் கரங்களை நீட்டினார்கள், மீண்டும் ஜெர்மனியில் யூதர்களால் வாழமுடியும் என்று எங்கள் மீது புதியதொரு நம்பிக்கையை இஸ்ரேலும் உலகமும் வைத்தது. அதற்காக என் நன்றியை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். நம்மிடையே ஏற்பட்ட நல்லிணக்கம் எனக்கு சிலிர்ப்பைத் தருகிறது. அந்த நல்லிணக்கத்தின் ஆன்மா ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே, ஜெர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே, ஜெர்மனிக்கும் உலகத்திக்கும் இடையே ஒரு புதிய, அமைதியான வழியை ஏற்படுத்தித் தந்தது.

யத் வாஷெம்மில் எரிந்துகொண்டிருக்கும் இந்தச் சுடர் என்றுமே அணையாது. ஜெர்மனியின் மீது உள்ள பொறுப்பு என்றுமே மறையாது. அந்த பொறுப்பை நாங்கள் சுமக்கவே விரும்புகிறோம். அந்தப் பொறுப்பின் அடிப்படையிலேயே எங்களை நீங்கள் மதிப்பிட வேண்டும்.

இந்த அற்புதமான நல்லிணக்கத்தை சாத்தியப்படுத்தியதற்காக உங்கள் முன்பு நன்றியுடன் நிற்கிறேன். இந்த நினைவு எங்களைத் தீய எண்ணங்களிலிருந்து காக்கிறது என்று சொல்ல எனக்கு ஆசையாகத்தான் இருக்கிறது.

ஆம், ஜெர்மானியர்களாகிய நாங்கள் எதையும் மறக்கவில்லை; நினைவுகூர்ந்தபடிதான் இருக்கிறோம். ஆனால் நிகழ்காலத்தை விட கடந்தகாலத்தைத்தான் நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்கிறோமோ என்று அவ்வப்போது தோன்றுகிறது.

எங்களைத் தவறாக வழிநடத்திய அந்த தீய சக்தி இப்பொழுது ஒரு புதிய வடிவில் எங்கள் முன்னே நிற்கிறது. இன்றைய பிரச்னைகளுக்கான தீர்வாக மீண்டும் யூத வெறுப்பு, இன வெறி, சர்வாதிகாரம் போன்ற பதில்களைத் தருகிறது, அதையொட்டியே சிந்திக்கிறது.
ஜெர்மானியரான நாங்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது.

ஆனால், மீண்டும் வெறுப்பு மேகம் ஜெர்மனியை சூழும் வேளையில், என்னால் அதை சொல்ல முடியாது.

இன்று பள்ளிகளில் யூதக் குழந்தைகள் மீது எச்சில் உமிழப்படும் சூழலில், என்னால் அதை சொல்ல முடியாது.

இஸ்ரேலின் கொள்கைகளை விமர்சிக்கிறோம் என்ற போர்வையில் யூத வெறுப்பு மீண்டும் தெளிவாக வெளிப்படுகிறது. இந்த சூழலில் என்னால் அதை சொல்ல முடியாது.

யாம் கிப்புர் தினத்தன்று ஹால்லே நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டுத் தலத்தில் வலதுசாரித் தீவிரவாதி ஒருவன் ஒரு ரத்தவெள்ளத்தை ஏற்படுத்த முனைந்தான். அவனுக்கும் அந்த வெறிச்செயலுக்கும் இடையே ஒரே ஒரு வலுவான மரக்கதவுதான் இருந்தது.

ஜெர்மானியரான நாங்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுவிட்டோம் என்று எப்படி நான் சொல்வது.

நிச்சயமாக, நாம் வாழும் காலம் முன்பைப் போல் இல்லை; வித்தியாசமானதுதான்.
நிச்சயமாக, இன்று உதிர்க்கப்படும் சொற்கள் வேறுதான்.

நிச்சயமாக, இன்று கொடுஞ்செயல்களை நிகழ்த்துபவர்கள் வேறு நபர்கள்தான்.
ஆனால், இரண்டுமே ஒரே தீமை.

நம்மிடையே மிச்சமிருப்பது ஒரே ஒரு பதில்தான்: மீண்டும் வேண்டாம்! இனியும் வேண்டாம்!

இதனால்தான் நினைவுகூர்தலுக்கு முடிவே ஏற்படாது.

புதிய ஜெர்மன் குடியரசின் முதல் நாளிலிருந்து இப்பொறுப்பு அதன் ஆன்மாவில் ஆழமாகப் பதியப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நாள் வரை எங்களை அது சோதித்துக்கொண்டே இருக்கிறது.

ஜெர்மனிக்குத் தனக்குத் தானே நிரூபித்துக்கொள்ள ஒன்று உண்டு என்றால், அது இந்த வரலாற்றுப் பொறுப்பை சுமந்து அதற்கு ஏற்றால்போல நடந்துகொள்வதுதான்.

யூத வெறுப்பை நாம் எதிர்ப்போம்!

தேசியவாதம் என்னும் நஞ்சை நாம் தடுப்போம்!

யூத உயிர்களை நாம் காப்போம்!

இஸ்ரேலுடன் நாம் நிற்போம்!

இன்று யத் வாஷெம்மில், உலகத்தின் பார்வைக்கு முன்னே, எங்களின் சத்தியத்தை மீண்டும் பதிவுசெய்துகொள்கிறேன்.

என் குரல் தனியானது இல்லை என்று எனக்குத் தெரியும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முழங்குவோம்: யூத இன வெறுப்பு ஒழிக! மனித வெறுப்பு ஒழிக!

ஆஷ்விட்ஸ் வதைமுகாமில் நிகழ்ந்த கோரத்திலிருந்து மனித இனம் ஒருமுறை பாடம் கற்றுக்கொண்டுவிட்டது.  சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும் மனித உரிமைகளின் அடிப்படையிலும் உலக நாடுகள் புதியதோர் உலகை உருவாக்கின. அமைதிகான இந்த உலகைக் காக்க உங்களோடு கைகோர்த்து ஜெர்மனியும் உறுதியோடு நிற்கிறது. ஏனெனில் எங்களுக்குத் தெளிவாய்த் தெரியும்: அமைதி குலைக்கப்படலாம். மக்களின் தலையில் நஞ்சு ஏறலாம்.

"யூத இன அழிப்பை நினைவுகூர்ந்தபடியே இருக்கும் ஒரு உலகு. இன அழிப்பே நடவாத ஒரு உலகு." மரியாதைக்குரிய உலகத் தலைவர்களே, அரசாங்கங்களே! நாம் அனைவரும் இணைந்து இந்த உறுதிமொழியை ஏற்பதை நன்றியுடன் நோக்குகிறேன்.

"வாழ்வு என்னும் அற்புதமான சப்தத்தை மீண்டும் கேட்போமா? யார் அறிவார்?
நித்தியத்தோடு நம்மைப் பின்னிக்கொள்வோமா? யார் அறிவார்? யார் அறிவார்?”

சால்மென் கிரடோவ்ஸ்கி ஆஷ்விட்ஸில் இருந்தபோது எழுதிய வரிகள் இவை. இவற்றை எழுதி ஒரு தகர டப்பாவில் அடைத்து, சுடுகாட்டில் புதைத்தார்.

இன்று யத் வாஷெம்மில் அவர்கள் நித்தியத்தோடு பின்னப்பட்டிருக்கிறார்கள். சால்மென் கிரடோவ்ஸ்கி, சாமுவெல் டைடல்மேன், ரேகா டைடல்மேன், இடா கோல்ட்பிஷ், விலி கோல்ட்பிஷ் அனைவருமே.

அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். கட்டற்ற வெறுப்பின் முன்பு அவர்களின் உயிர்கள் தோற்றுப்போயின.

ஆனால் வெறுப்பின் காரிருளை நம் நினைவேந்தல் தோற்கடிக்கும்.

வெறுப்பை நம் செயல்கள் முறியடிக்கும்.

இதுவே என் நிலைப்பாடு.

இதுவே என் நம்பிக்கை.

என்னை இங்கு வரவைத்த ஆண்டவனின் முன்பு என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

Federal President Frank-Walter Steinmeier
at the Fifth World Holocaust Forum
"Remembering the Holocaust: Fighting Antisemitism"
at Yad Vashem
in Jerusalem/Israel,
on 23 January 2020
(தமிழில்: வ.விஷ்ணு)
மூலம்: http://www.bundespraesident.de/SharedDocs/Reden/EN/Frank-Walter-Steinmeier/Reden/2020/01/200123-World-Holocaust-Forum-Yad-Vashem.html;jsessionid=8861BBA81DF8748407CF97C204144B61.1_cid371

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி