Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடிதம் - யுட்டா ப்யோனிஷ்

அன்புள்ள விஷ்ணு,

ஹராரியின் கட்டுரையை அனுப்பியமைக்கு நன்றி. ஆங்கிலம் தெரிந்த என் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

உனக்கே தெரிந்திருக்கும். சில அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மருந்தக மருத்துவமனைகளைத் தவிர பெர்லினில் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. முற்றிலும் புதியதோர் வாழ்க்கை முறைக்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறோம். குடும்பத்தினரோடு, நண்பர்களோடு, அண்டை வீட்டாரோடு நெருங்கிப் பழக முடியவில்லை. நல்லவேளையாக இதுவரை எனக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை. தள்ளாத முதுமையின் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கை நிலை எனக்குப் பல சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. வீடு இருக்கிறது, தோட்டம் இருக்கிறது, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கப்பட இருக்கின்றன. இப்போதைக்குப் பிரகாசிக்கும் சூரியன், இப்போதைக்கு நீல வானம், இப்போதைக்குக் குயில் சத்தம்.

ஆனால் என்னைப் போல் எல்லோருக்கும் இது அமையவில்லையே? உலகின் பல நகரங்களில் சிறுசிறு அறைகளில் நெருக்கியடித்துக்கொண்டு வாழும் மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளியே விளையாட வேண்டும் என்று ஆசைப்படும் குழந்தைகள், வீட்டிற்கு உள்ளேயே முடங்கி முடங்கி எரிச்சல், ஆவேசம் போன்ற உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாகப்போகும் எண்ணற்றக் குடும்பங்கள்… இந்த உளவியல் நெருக்கடிகள் உருவாக்கப்போகும் சிக்கல்கள் வைரசின் தாக்கத்தை விட மோசமானதாக இருக்கலாமோ என்று அவ்வப்போது தோன்றுகிறது. யார் கண்டது? மீண்டும் ஒரு முறை நாங்கள் இரண்டாகப் பிளவுபடலாம். ஏற்கனவே கிழக்கு-மேற்கு என்று பிளவுபட்டோம். இடது-வலது என்று பிளவுபட்டிருக்கிறோம். அடுத்து இளையோர்-மூத்தோர் என்று பிளவுபட ஆரம்பித்துவிட்டோம். நோயுற்றோர்-ஆரோக்கியமானோர் என்று பிளவுபட்டாலும் படுவோம். எல்லையற்ற சாத்தியங்கள். சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம் என்று தீர்மானத்துடன் இருக்கும் உன்னைப் போன்ற இளைய தலைமுறையினர் இதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது.

நேரம் கிடைத்தால், அவ்வப்போது என்னிடம் பேசு. உன் வாழ்வில் நிரம்பியிருக்கும் மனிதர்களைப் பற்றி சொல், உன் நினைவுகளைப் பகிர்ந்துகொள். வாழ்வில் நெருக்கடி சூழும்போதுதான் சக மனிதரின் அருகாமையும் கதகதப்பும் நம் கண்ணுக்குத் தெரிகிறது.

அன்புடன்,
யுட்டா ப்யோனிஷ்
(நண்பர்)
பெர்லின்

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி