Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சாப்ளினின் கல்லறை

Corsier-sur-Vevey. வாழ்வில் என்றைக்காவது ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று நினைக்கவில்லை. சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட்டைப் பிரிண்ட் எடுத்து ஒரு மலர்ச்செண்டுடன் சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் துணைக்கு வந்திருந்தார்.

சாப்ளின்பால் நான் மொத்தமாக விழ சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட் ஒரு காரணம். சக மனிதர்களுடன் பழகுகையில் நாம் பல முகமூடிகளை அணிகிறோம், வேடங்களைப் போடுகிறோம், பாத்திரங்களை ஏற்கிறோம். நம்முடைய சுயம் என்று நாம் நினைக்கும் அந்தரங்க இயல்புகளை நாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் காட்டிவிடுவதில்லை. தொடர்ந்து ஓர் இடைவெளியுடனே பயணிக்கிறோம். ஆனால் ஒருசில மனிதர்களிடம் பழகுகையில் ஒரு குறிப்பிட்ட பொழுதில் நம் பாசாங்குகளைக் களைந்துவிட யத்தனிக்கிறோம். சில நொடிகளுக்கு நம் சுயத்தை அப்பட்டமாகத் திறந்துகாட்டத் துணிகிறோம். மிகவும் அவஸ்தையான சூதாட்டத் தருணங்கள் அவை. “இதுதான் நான். அழகாக இருக்கிறதா? உனக்குப் பிடித்திருக்கிறதா? விலக வேண்டும் போல் தோன்றுகிறதா? உன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? பிடிக்கவில்லையா? இந்த அசிங்கம் இனி வெளியே யாருக்கும் தெரியவே கூடாதா? ஏற்கும்படி இருக்கிறதா? என்னை நானே தேவையில்லாமல் மூடிக்கொள்கிறேனா? அழகாகத்தான் இருக்கிறதா?” என்று எண்ணங்கள் படபடவென்று விரையும். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருப்போம். அந்தப் பக்கம் இருப்பவர் நம்மை எடைபோட்டு, நம் சுயத்தை அங்கீகரித்து, நம் இயல்பை ஏற்றுக்கொண்டு ஒரு புன்னகையை உதிர்ப்பதற்குள் நமக்கு உயிர் போய் உயிர் வரும். சாப்ளினின் அந்த இளிப்பில் இந்தப் பதைபதைப்பைக் கண்டேன். அப்போதிலிருந்து சாப்ளின் மீது ஒரு இது.

சென்ற வருடம் ஜெர்மனியில் ஒரு பாட்டி உறவாகக் கிடைத்தாள். கிளம்புவதற்கு முன்பு என்னைக் காத்திருக்கச் சொல்லிப் பரண் மீது ஏறினாள். கையில் ஒரு கூடையுடன் வந்து, என் கையில் ஒரு பொருளைத் திணித்தாள்.

“என்ன இது?”

“என்னவென்று தோன்றுகிறது?”

“கல்?”

“என்னக் கல்?”

“தெரியவில்லையே. சில்லு சில்லாக அங்கங்கே ஏதோ கறுப்பாக இருக்கிறதே?”

“ஆமாம்”

“ஏதாவது விண்கல் கிண்கல் தோட்டத்தில் விழுந்ததா? அதுவா?”

சிரித்தபடி மண்டையில் குட்டினாள்.

“இல்லையே, கான்கிரீட் போல் இருக்கிறதே?”, என்றேன்.

“அரசியல் அறிவியல் படித்துக்கொண்டு இதுகூடத் தெரியவில்லையா? 29 ஆண்டுகள் கழித்து உனக்காக இதை வெளியே எடுத்திருக்கிறேன்”, என்று என்னை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களை நோக்கினேன். கண்சிமிட்டினாள். அப்பொழுதுதான் உறைத்தது.

சராலென்று பின்வாங்கினேன். “நோ நோ நோ!”, கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. என் படபடப்பைக் கண்டு உரக்க சிரித்தாள். “ஓ விஷ்ணு!”

“யுட்டா! பெர்லின் சுவரா இது?”

“Ja!”, என்று சிரித்தாள். “நானும் அப்பாவும் கையில் சுத்தியலோடு சென்றோம். நினைவுக்காகக் கொஞ்சம் வெட்டியெடுத்துக்கொண்டோம்”

“மை காட்!”

“உன் கையில் இருப்பதை நீயே வைத்துக்கொள். என் பரிசு”, என்று என்
கையை அவள் கைகளால் மூடினாள்.

“நிஜமாகவா? நான் வைத்துக்கொள்ளலாமா?”

“Ja!
உனக்குத்தான்”, என்று அணைத்துக்கொண்டாள். “பத்திரமாக இந்தியா சென்று சேர்”

அந்தக் கல்லை நான் சாப்ளினின் கல்லறைக்கு எடுத்து வந்திருந்தேன். என்னுடன் துணைக்கு வந்திருந்த நண்பரிடம் கையை நீட்ட சொல்லி, அக்கல்லை அவர் கையில் வைத்தேன்.

“என்ன இது?”

“என்னவென்று தோன்றுகிறது?”

“கல்?”

“என்னக் கல்?”

“தெரியவில்லையே?”

“என் ஜெர்மன் பாட்டி கொடுத்தது. 29 ஆண்டுகள் கழித்து வெளியே எடுத்தாள்”

“29 ஆண்டுகளா?”

“இப்பொழுது முப்பதாண்டுகள் ஆகிவிட்டன. நாளை மறுநாள் முப்பத்தி ஒன்று துவங்கப்போகிறது”

“தெரியவில்லையே?”

“அரசியல் அறிவியல் படித்துக்கொண்டு இதுகூடத் தெரியவில்லையா என்று கண்சிமிட்டினாள்”

ஒரு வினாடி யோசித்தார். சராலென்று மின்சாரம் பாய்ந்ததுபோல் பின்வாங்கினார். “நோ வே!”

“Yup!”, என்று சிரித்தேன்.

“Are you kidding me?”

“நோப்!”

“வோ!”, கையை இறுக மூடிக்கொண்டார். “வோ வோ!”

“ரிலாக்ஸ்”, என்று சிரித்தேன். “இதே ரியாக்‌ஷன்தான் நானும் கொடுத்தேன். பெர்லின் சுவரின் பாகங்கள் அரிதல்ல, ஆனால் பெர்லினின் கடைகளில் கிடைக்கும் சந்தைப் பொருள் இல்லை இது”

“ம்ம். வாஷிங்டன் டி.சியில் பெர்லின் சுவரை வைத்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறேன்”, என்றார் அக்கல்லை
ஆச்சரியத்துடன் உற்று நோக்கியபடி. சாப்ளினின் கல்லறைக்கு முன்பு போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்தோம். சிறிது நேரம் கல்லறையை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“இப்பொழுது ஒரு காரியம் செய்யப்போகிறேன் நான்”, என்றேன்.

“என்ன காரியம்?”

“இதை செய்யலாமா வேண்டாமா என்று சஞ்சலமாக இருந்தது. அப்சர்டிஸ்ட் மூளை வேண்டாம் என்று சொல்கிறது. அப்சர்டிஸ்ட் மனது செய் செய் என்று உந்தித்தள்ளுகிறது”

“என்னது?”

“அந்தக் கல்லைக் கொடு”, என்று எழுந்தேன். சாப்ளினின் புகைப்படம் இருந்த காகிதத்தில் சில வார்த்தைகளை எழுதி அவர் கல்லறையின் முன்பு வைத்தேன். கொண்டுவந்திருந்த மலர்ச்செண்டை அதன் அருகே
கிடத்தினேன். இறுதியாக அந்த பெர்லின் சுவரின் பகுதியை அக்காகிதத்தின் மீது வைத்தேன்.

“கல்லை வைத்து எடுக்கிறாயா?”

“இல்லை,
தை இங்கே விட்டுவிட்டுப் போகப்போகிறேன்”

“வாட்!”

“யப்”

“யோ! மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள் இல்லையா அது?”

“யா. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அதை இங்கே வைத்தால் நாளை கல்லறையை சுத்தம் செய்ய வருபவர் என்னக் கல் இது என்று எடுத்துத் தூக்கி வீசிவிடுவார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை இது ஒரு சாதா கான்கிரீட் கல் என்பதும். I think we are facing the absurd”

“Okay? Are you sure?”

“I’ve decided, yes”, என்று எழுந்தேன். மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம் அது. சாப்ளினின் கல்லறையை இறுதியாக ஒரு முறை பார்த்து, எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். “வாழ்வில் என்றைக்காவது ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று நினைக்கவில்லை. துணைக்குக் கூட வந்ததற்கு நன்றி”, என்றேன். இந்நேரம் கல்லறைப் பணியாளர் அக்கல்லைத் தூக்கி வீசியிருப்பார். Corsier-sur-Vevey இடுகாட்டில் சாப்ளினின் கல்லறைக்கு அருகே ஏதோவொரு புதருக்குள் பெர்லின் சுவர் ஒளிந்துகொண்டிருக்கிறது. சாதா கான்கிரீட் கல்.

Comments

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி