வாழ்க்கை ஒரு போர்க்களம்!
''போராட்டங்கள், இடையூறுகளால் பாதி வழியில் சிக்கிச் சின்னா பின்னமான அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது...
மதன் கார்க்கி, பாடலாசிரியர்: ''எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். ராத்திரி நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு வீட்டுக்குள்ள சிதறிச்சு. என்ன நடக்குதுன்னே புரியல. அப்பா உடனே எங்களை உள்ளேபோய் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு போலீஸுக்கு போன் பண்ணி விசாரிச்சாங்க. 'ராஜீவ் காந்தியைக் கொலை பண்ணிட்டாங்க. அதுக்காக தி.மு.க. ஆதரவாளர்களை அடிக்கிறாங்க. நாங்க உடனே உங்க வீட்டுக்குப் பாதுகாப்பு தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா, ஊர் முழுக்க இந்த மாதிரி நிறையக் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததால போலீஸால் நேரத்துக்கு வரமுடியலை. அதுக்குள்ள எங்க கார் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க. அந்த ராத்திரி முழுக்க திக் திக்குன்னு பயந்துகிட்டே இருந்தோம். அதை இப்போ நினைச்சாலும் பயமா இருக்கும்!''
சேகர், ஆட்டோ ஓட்டுனர்: ''6 மாசத்துக்கு முன்னாடி கத்திப்பாராவுல போலீஸ்காரங்க எங்களை நிறுத்தி வெச்சுட்டாங்க. பாலத்துக்கு அந்தப் பக்கம் பிரச்னைனு சொன்னாங்க. வண்டி முழுக்க ஸ்கூல் குழந்தைங்க இருக்கிறதால, நான் சந்து பொந்து வழியா குறுக்குப்பாதையில் போய்ட்டேன். அப்படியும் நாலு மணி நேரம் ஆகிடுச்சு. குழந்தைங்க எல்லாம் தவிச்சுப் போய்ட்டாங்க. வழியில நிறுத்தி அவங்களுக்கு டீ, பிஸ்கெட் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். ஆனாலும் குழந்தைங்களோட அம்மாகிட்ட செம திட்டு வாங்கினேன்!''
தீப்தா ஸ்ரீதர், கல்லூரி மாணவி: ''அமெரிக்க தூதரகம் முன்னாடி போராட்டம் நடந்தப்ப, அதுக்குப் பக்கத்துலேயே மாட்டிக்கிட்டேன். ஒரு பக்கம் போராட்டம் பண்றவங்க, கூச்சல் போடுறாங்க, இன்னொரு பக்கம் போலீஸ்காரங்க அவங்களைத் தள்றாங்க. நான் ஏதோ போராட்டம் நடத்த வந்தவனு நெனைச்சு போலீஸ்காரங்க என்னை விரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அவங்ககிட்ட என் ஐ.டி. கார்டை காட்டி அங்கே இருந்து எஸ்கேப் ஆகி வந்தேன்.போதும்டா சாமீனு ஆகிடுச்சு!''
எஸ்.வி.சேகர், நடிகர்: ''பத்து வருஷத்துக்கு முன்னாடி யாரோ ஒரு அரசியல் தலைவரைக் கைது பண்ணிட்டாங்கனு சென்னை முழுக்க ஒரே ஆர்ப்பாட்டம். எனக்கு ராத்திரி பத்தரை மணிக்கு கோவை போறதுக்கு ட்ரெய்ன். ராணி சீதை ஹால்ல ஒன்பதரை மணிக்கு டிராமாவை முடிச்சுட்டு சென்ட்ரல் கிளம்பறேன். வழி முழுக்க போலீஸ். எல்லா பக்கமும் டிராஃபிக்கை திருப்பி விட்டுட்டாங்க. நான் சென்டரல் போறதுக்குள்ள ட்ரெய்ன் நகர ஆரம்பிச்சிடுச்சு. ஓடிப்போய் கடைசிப் பெட்டியில் ஏறினேன். அந்த ட்ரிப்பை மறக்கவே முடியாது!''
சாய் பிரமோதிதா, தொலைக்காட்சி நடிகை: ''போன வருஷம் ஃபேமிலியோட பெங்களூருக்கு டூர் போய்ட்டு திரும்பி வந்துட்டு இருந்தோம். அப்போ தமிழ்நாடு -கர்நாடகா பார்டர்ல எங்களை ஒரு கும்பல் நிறுத்தினாங்க. டிரைவர் வண்டியை ஸ்லோ பண்ணியதும் கார் மேல கல் வீச ஆரம்பிச்சுட்டாங்க. டிரைவர் வண்டியை வேகமா ஓட்ட ஆரம்பிச்சதும், உருட்டுக்கட்டையால் வண்டிக் கதவை அடிச்சு உடைச்சு டேமேஜ் பண்ணினாங்க. ஒருவழியா தப்பிச்சு ஊர் வந்து சேர்ந்தோம்!''
- வ.விஷ்ணு
என் விகடன் - 12/10/12
Comments
Post a Comment