Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கெட்டக் கனவு

“டேய் பக்ஸு! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவேன், ஆனா நீ எமோஷனல் ஆகக் கூடாது”, நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பி எதையோ சொல்ல வந்தான்.

“சொல்லு டூட், என்ன விஷயம்?, அமைதியாகக் கேட்டேன்.

“இல்லடா வேண்டாம்”

“எனக்கு ஏலியன் நெஞ்சுடா, நீ சொல்லு”, தைரியமூட்டினேன். பையன் வேறு டீனேஜர் ஆகிவிட்டானா, எப்போது என்ன சொல்வான் என்று தெரியாது. பக்குவமாக, தோழமையாக டீல் பண்ணியாகவேண்டும்.

”ஹூம்ம்ம்”, ஒரு நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டான். “அன்னிக்கு ஒரு கனவு வந்துதுடா. நீயும் நானும் எதையோ வாங்கக் கடைக்குப் போயிட்டிருக்கோம். ஜாலியா பேசிக்கிட்டே மெதுவா நடந்து போயிட்டிருக்கோம்”

“ஓக்கே?”

”ரோடு கிராஸிங் வருது. நம்ம தேவநாதன் ரோடுதான். ஒன்வே. நீ ஏதோ ஒரு ஞாபகத்துல சைடுல பாக்காம ரோடைக் கிராஸ் பண்ற, சடன்னா ஒரு ஹாரன் சத்தம், 21G ஏ.சி. பஸ் ஒன்னு ஃபுல் ஸ்பீட்ல…”

எனக்குப் புரிந்தது. கெட்டக் கனவு.

தம்பி நடுங்கியபடித் தொடர்ந்தான். “ஃபுல் ஸ்பீட்ல உன்னைப் பாத்து வருது. பிரேக் அடிச்சு ரோடைத் தேய்க்கற சத்தம் கூசுது. எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே தெரியல. ஆனா உடனே சுதாரிச்சுட்டேன். அப்படியே “அண்ணாஆஆஆ…!”னு உன்னைப் பாத்து ஓடி வர்றேன்!”

“டேய் நீ ஏண்டா வர்ற?”, இவன் என்ன லூசுத்தனமா பண்றான்?

“கேளு, அங்கதான் மேட்டரே. நான் ஓடி வர்றேன். இருக்கற பவரையெல்லாம் வெச்சு உன்னை ரோடுலேர்ந்து வெளியே தள்ளி விட்டுடறேன். பஸ் கரெக்டா உன்னை ஏத்தப் பாக்கவும் நான் கரெக்டா உன்னைத் தள்ளி விடவும் சரியா இருக்கு. பஸ் அப்படியே என் மேல ஏறுதுடா, ஏறிடுச்சுடா!”

பதறிவிட்டேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் இவன் இதன்மூலம் ஏதேனும் கற்பனை செய்துகொள்கிறானா என்கிற சந்தேகம், இன்னொரு புறம் இதனால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறானா என்கிற பயம், பின்புறம் இப்படி ஒரு பாசக்காரத் தம்பியா என்கிற அல்பப் பெருமிதம்.

“இது சும்மா கனவு டூட். நத்திங் டு வர்றி”, சமாதானப் படுத்த முயன்றேன்.

“இருடா, இன்னும் கனவு முடியல”

“எப்டிடா?”

“எப்டினா? கனவுனா அப்டிதான். பஸ் ஏறிடுச்சு, சாகப்போறேன், ஆனா அண்ணனைக் காப்பாத்திட்டேன்னு ஒரு சேட்டிஸ்ஃபேக்ஷன், நீ நன்றியோட அழுதுட்டே என்னைப் பாத்துட்டு இருக்க. அதைப் பாத்துக்கிட்டே நான் கடைசி தடவையா கண்ணைக் கொட்டறேன், இது போதும் எனக்குன்னு நான் கண்ணை மூடப் பாக்கறேன்…”

“அப்புறம்?”

“நான் உன்னைப் பாத்துட்டே கண்ணை மூடப்போறேன், கரெக்டா ராங்க் சைடுல ஒரு ஆட்டோ வந்து உன்னை ஏத்திடுச்சு!”

“டேய்!”

”அப்பதான்டா புரிஞ்சுது பக்ஸு. இந்த ஊர்ல எதை நம்பியும் அடுத்தவன் உசுரைக் காப்பாத்த முடியாதுடா. அப்படியே காப்பாத்தினாலும் ராங்க் சைடுல வர்றவன் அவனை ஏத்திட்டுப் போயிட்டே இருப்பான்!”

வாயடைத்துப்போய் விட்டேன். ஊமைக் குசும்பன் இப்பொழுது மூச்சு வாங்கக் கூட விருப்பமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான். இத்தனை நேரம் என்னை ஓட்டியிருக்கிறான், அது கூடத் தெரியாமல் ஏதோ டீனேஜ் அது இது என்று நாட்டாமை பண்ணப்போய் இப்போது பங்கப்பட்டுக் கிடக்கிறேன்.

”ஏமாந்தியா?”

“ஏன்டா ஏன்?”

“போடா லூசுப்பயலே! ஆண்டனி ஹாரோவிட்ஸோட நாவல் படிச்சுட்டு இருக்கேன்டா. ட்விஸ்டு மேல ட்விஸ்டு! அதான் என்னாலயும் அப்படிப் பண்ண முடியுமான்னு டிரை பண்ணேன்”

”அடங்கொய்யால… உனக்கு ஈவு இரக்கமே கிடையாதாடா?”, கண்கள் இருட்டிக்கொண்டு வர அப்படியே டேபிளில் சாய்ந்தேன்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி