Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மகிழ்வன், மகிழினி

“இந்தியாவில் 60-120 மில்லியன் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்”, என்ற அதிர்ச்சித் தகவலுடன் முடிந்தது அத்திரைப்படம். சராசரி எடுத்தால் கிட்டத்தட்ட தமிழகத்தின் ஜனத்தொகைக்கு நிகராக இருக்கும் அவர்களைப் பற்றி நாம் எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருக்கிறோம்? உங்கள் பக்கத்துவீட்டு நபரோ, உங்களது நெருங்கிய நண்பரோ, ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏன், இதைப் படிக்கிற நீங்கள் கூட உங்களது பாலியல் விருப்பத்தை இந்த சமூகத்திடம் மறைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஓரினச் சேர்க்கையாளர்களையும் திருநங்கையரையும் இந்தியச் சமூகம் எந்த இடத்தில் வைத்திருக்கிறது?

LGBT(Lesbian Gay Bisexual Transgender) என்றழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் திருநங்கையர் குழுவான ‘சென்னை தோஸ்த்’ சென்னையில் மூன்று நாட்கள் ரெயின்போ திரைப்பட விழாவினை நடத்தியது. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், அவர்களது முன்னேற்றத்தில் பங்கு கொள்ள நினைப்பவர்கள், ஆகியோர் பல்வேறு மொழிகளில் இயக்கிய சிறந்த குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடனக் கலைஞரான அனிதா ரத்னமும் ஊடகவியலாளர் அப்சரா ரெட்டியும் விழாவினைத் துவக்கி வைத்தனர்.

விழாவினைத் தொடக்கி வைத்ததும் பேசிய அனிதா ரத்னம் “ஒருவர் திருநங்கை என்றோ ஒருபால் ஈர்ப்புள்ளவர் என்றோ தெரிந்தால் அவரின் மீதான சமூகத்தின் பார்வை முற்றிலும் மாறிவிடுகிறது. முதலில் நார்மல் என்பதற்கான பொது அர்த்தத்தில் மாற்றம் வரவேண்டும். எது நார்மல் எது அப்நார்மல் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், அவர்களின் உளவியலைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூட முயற்சிக்காமல், இந்த சமூகம் அவர்களை அப்படியே ஒதுக்கிவிடுகிறது. நம் நாட்டில் எது எதற்கோ போராடும் சமூகப் போராளிகள் ஏனோ திருநங்கைகள் மற்றும் ஒருபால் ஈர்ப்புள்ளவர்கள் விஷயத்தில் மட்டும் மவுனத்தையே பதிலாகத் தருகின்றனர். அனுதினமும் இவர்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளைக் கண்டும் தரும் மவுனத்தை விட இவர்களுக்கு அநீதி இழைக்கும் செயல் உலகத்தில் இல்லை”, என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சென்னை தோஸ்த் அமைப்பின் இயக்குனர் வெங்கட், “சமீபத்தில் பிரான்ஸ் நாடு ஒருபால் ஈர்ப்புள்ளவர்களின் திருமணத்தைச் சட்டப் பூர்வமாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இருபது நாடுகள் மட்டுமே அத்திருமணத்தை ஏற்றுக் கொண்டு அவர்களை இந்த சமூகத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அது நம் மீது கொண்டிருக்கும் பார்வையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஒன்று மட்டும் புரிகிறது, நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.”, என்றார்.

தங்களை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று விளக்கிய சென்னை தோஸ்த்தின் நிறுவனர் விக்ராந்த் பிரசன்னா, “சமூகத்தில் இனி திருநங்கைகளையை அலி என்றோ ஒன்பது என்றோ அழைக்கமுடியாத காலம் அருகே வந்துவிட்டது. ஆனால் ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்களை ‘அவனா நீ’, என்று கேலியாக சித்தரிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை. ’ஓரினச் சேர்க்கையாளன்’ என்னும் சொல் ஏற்புடையதாகத் தெரிந்தாலும், அது எப்பொழுதும் உடலுறவைப் பற்றி சிந்திப்பவர்கள் என்று பொருள்படும்படியும் இருக்கிறது. எங்களைப் புண்படுத்தாத, எங்களைக் குறிக்கும் சொல்லாக, ’ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்கள்’ என்று சொல்லலாம். இன்னும் அழகு தமிழில் ‘மகிழ்வன்’ என்றும் ’மகிழினி’ என்றும் சொற்களை உருவாக்கி இருக்கிறோம்”, என்று சொன்னபோது, ஒரு அடையாள வார்த்தை கிடைத்த மகிழ்ச்சியில் அங்கு கூடியிருந்தவர்கள் ஏற்படுத்திய கரகோஷம், பணமிருந்தும் படிப்பிருந்தும் இத்தனை நாள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட அந்த விளிம்பு நிலை மனிதர்கள் அனுபவித்த வலிகளையும் வேதனைகளையும் சொல்லாமல் சொல்லியது. இனி நாமும் ஒருபால் ஈர்ப்புள்ளவர்கள், மகிழ்வர்கள், மகிழினியர் என்ற சொற்களையே உபயோகிப்போமே?

திரையிடப்பட்டத் திரைப்படங்களுள் ஒன்றின் ஸ்டில்
திரையிடப்பட்ட திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நம் மனசாட்சியைப் பார்த்து ஒவ்வொரு கேள்வியைக் கேட்டது. நாம் நம் தினவாழ்வில் சந்திக்கும் திருநங்கைகளின் நடை, உடை, பாவனைகள் எதனால் அதீத பெண்மைத்தனத்துடன் செயற்கையாக நமக்குப் படுகிறது என்பதை ‘Between the two’ என்னும் ஆவணப்படம் சினேகா பிரபா என்னும் திருநங்கையை வைத்துத் தெளிவாக விளக்கியது. திருநங்கைகளுக்கும் சமூகத்தில் ஒரு இடம் வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும் சமூகம் திருநங்கைகளை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. விளைவு, தங்களைப் பெண் என்று நிரூபித்துவிட்டால் சமூகம் ஏற்றுக்கொண்டுவிடுமா என்கிற உச்சக்கட்ட ஆதங்கம் அவர்களுக்குள் மேலிடுகிறது. காலம் காலமாகப் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சமூகத்தின் சித்தாந்தங்கள் இன்று உடைபட்டு பெண்களின் இயல்பும் சிந்தனையும் மாறிவிட்டது. ஆனால் சமகாலப் பெண்ணின் உளவியலைப் பற்றி முழுமையாகத் தெரியாத திருநங்கைகள், பெண் என்பதற்கான இலக்கணத்தை பழைய கலாச்சாரங்களில்தான் தேடுகின்றனர். எனவேதான், பழைய வழக்கங்கள் மாறிவிட்ட இன்றைய சூழலில், கண்ணில் மை பூசி, நெற்றியில் குங்கும வட்டம் இட்டு, அதிகமாகப் பூ வைத்து, உதட்டுச் சாயம் சிவக்க, நளினமாக நடந்து வரும் திருநங்கைகளைக் கண்டால் நமக்கு அவர்களது செயல் வித்தியாசமாகத் தோன்றுகிறது. திருநங்கைகளின் ஆதங்கத்தின் அளவை இந்த சமூகத்தின் புறக்கணிப்பே தீர்மானிக்கிறது என்ற அடிப்படைப் புரிதல் இருந்துவிட்டால் நாம் திருநங்கைகளை ஒருமாதிரி இனி பார்க்க மாட்டோம், என்று உணர்த்தியது அத்திரைப்படம்.

இந்தியாவில் ஒருபால் ஈர்ப்பு உள்ளாவதை உளவியல் ரீதியாக அணுகாமல் மேற்கத்திய நாகரிகத்தினால் விளைந்த கலாசார சீரழிவு, என்றே அணுகப்படுகிறது. இவர்கள் இப்படித்தான் என்ற முன்முடிவும், இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கிற பிடிவாதமும்தான் நம் சமூகத்தின் மிகப் பெரிய பிரச்னை.
ஒருபால் ஈர்ப்பு என்பது இருபது வருடங்களாகத்தான் இருக்கிறது என்பதுபோன்ற எண்ணம் இருந்தாலும், உண்மையில் இது நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் வருடங்களாக இருந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அன்றைய சமூகக் கட்டுப்பாடுகளால் இது வெளியே தெரியாமல், இன்றுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது, என்றது மற்றொரு குறும்படம்.

மகிழ்வர்கள் மற்றும் மகிழினியர் உரிமை ஆர்வலரான ராஜபிப்லா இளவரசர் மன்வேந்திர சிங் கோஹில் பற்றிய ஆவணப்படம் அவரது முப்பது ஆண்டுகால வலியையும் மனப்போராட்டத்தையும் படம்பிடித்துக் காட்டியது. ராஜ பரம்பரையிலிருந்து விலக்கப்பட்டு, தன் சொந்த மக்களால் வெறுக்கப்பட்டு, சமூகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில், வெறும் தன்னம்பிக்கை மூலமாக மீண்டு எழுந்து, ‘ஆம், நான் ஒரு மகிழ்வன்!’, என்று தைரியமாக உலக ஊடகங்கள் மூலமாக அறிவித்தவர் இளவரசர் மன்விந்தர்.

இரண்டாவது நாளன்று மகிழ்வர்கள், மகிழினியர் மற்றும் திருநங்கையரரை இந்த சமூகமும் எப்படிப் பார்க்கிறது, இந்த சமூகத்தை ஊடகங்கள் எப்படி பாதிக்கின்றன, என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரோஸ் வெங்கடேசன், செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, மற்றும் சென்னை தோஸ்த் நிறுவனர் விக்ராந்த் பிரசன்னா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

முதலில் பேசிய சாரு நிவேதிதா, “சிறு வயதில் என்னைத் திருநங்கை என்றுதான் சுற்றியிருந்தவர்கள் நினைத்தார்கள். என்னை வேற்று மனிதனாகவும் வெறுக்கப்பட வேண்டிய பொருளாகவும்தான் இந்த சமூகம் பார்த்தது. இதைப் பற்றிப் பேசினாலே, ’உனக்கு மனதளவில் ஏதோ கோளாறு இருக்கிறது, போய் மனநல மருத்துவரைப் பார்’, என்கிறது. நீ நார்மல் இல்லை என்று ஒதுக்குவதைவிட என்ன பெரிய வன்முறை இருக்க முடியும்? சரி, என்று மனநல மருத்துவரைப் போய் பார்த்தால் அவர் இவர்களுக்கு மேல் இருக்கிறார். ஒருபால் ஈர்ப்பும் திருநங்கைத்தனமும் நார்மல்தான் என்று இந்த சமூகத்திற்குப் புரிய வைக்கக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. ஒரு பெண் பாருக்குச் சென்று குடித்தாலே மத அடிப்படைவாதிகள் அவரை அடித்து இழுத்துப்போகிற அளவிற்கு இந்தியாவில் நிலைமை இருக்கிறது. பெண்களுக்கே இந்த நிலைமை என்றால், நான் ஒரு மிடில் கிளாஸ் கே என்று யாராவது வெளியே சொல்ல முடியுமா? திருநங்கைகளுக்குச் சுகாதாரமான கழிப்பிடம்கூட இந்தியாவில் கிடையாது. ரோஸ் இந்தியாவிற்கு வந்த புதிதில் என் வீட்டிற்கு வந்திருந்தார், அப்பொழுது நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி, இந்த நாட்டிற்கு ஏன் வந்தீர்கள் என்பதுதான். அதற்கு அவர் சொன்ன பதில், ’நான் போராட வந்திருக்கேன்’, இன்று வரை போராடிக் கொண்டு இருக்கிறார்”, என்றார்.

ரோஸ் வெங்கடேசன் பேசியபோது, “அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு நான் இந்தியா வந்த பிறகுதான் என்னுள்ளே மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. குடும்பத்தினராலும் சமூகத்தாலும் ஒதுக்கப்படவும் ஒடுக்கப்படவும் நேர்ந்தது. அப்பொழுதுதான் திருநங்கைகளைப் பற்றிய ஒரு நல்லதொரு பார்வை இல்லாத இந்தியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது. மேலும் அலி, ஒன்பது போன்ற வார்த்தைகளை இந்த சமூகம் ஊடகத்திலிருந்துதான் எடுக்கிறது என்று தெரிந்தபின், ஊடகத்துறையில் திருநங்கைகள் கால்பதித்தாலே ஒழிய இந்த நிலையில் மாற்றம் வராது என்று உணர்ந்தேன். ஒரு தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்திற்குச் சென்றேன். ரோஸ் என்றதும் ஒரு அழகான பெண் என்று நினைத்து நிகழ்ச்சி மேலாளர் எனக்கு அப்பாயின்மெண்ட் அளித்தார். உள்ளே சென்று என்னுடைய யோசனையை அவரிடம் தெரிவித்தபோது, என்னை மேலும் கீழும் பார்த்து, “உங்களை யார் உள்ளே விட்டது?”, என்றார். ஒரு பெண் என்றால் காது கொடுத்துக் கேட்பவர், திருநங்கை என்றவுடன் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார். திருநங்கைகளை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கான என்னுடைய சொந்த உதாரணம் இது.”, என்றார் நியாயமான கோபத்துடன்.

சமூகம் தங்களை எப்படி கேலிப்பொருளாக அணுகுகிறது என்று விளக்கிய விக்ராந்த் பிரசன்னா, “என் பாய் பிரண்டுடன் கோவா படம் பார்க்கச் சென்றிருந்தேன். அதில் இரண்டு ஆண்களுக்கு இடையே ஒரு உணர்வுப்பூர்வமான காட்சி வரும். ஆனால் வந்திருந்த பார்வையாளர்களோ, அதை நகைச்சுவை என்று எண்ணி விசிலடித்தார்கள். சமூகம் எங்களை இப்படித் தவறாகப் பார்க்கிற நிலையில் எங்களைப் பற்றி ஊடகம் பேசும்போது அதற்குப் பொறுப்பு அதிகரிக்கிறது. எங்களைப் பற்றி சொல்லபடாத விஷயங்களை, எங்களது உளவியலை தைரியமாகச் சொல்லும் கடமை ஊடகத்திற்கு இருக்கிறது. நான் ஒரு மகிழ்வன் என்று தைரியமாக ஒருவன் வெளியே சொல்லும் காலத்தை ஏற்படுத்த ஊடகம் எங்களுக்குக் தோள் கொடுக்க வேண்டும்”, என்று வேண்டுகோள் விடுத்தார்.

பாத்திமா பாபு பேசும்போது, “தன்னை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்று முடிவு செய்து, தன்னுள் ஏற்றிக்கொண்ட வன்முறைதான் நடுரோட்டில் மக்களை வழிமறித்துப் பணம் கேட்பது. பல திருநங்கைகள் இரந்து வாழும் தொழிலிலிருந்து வெளியே வரவேண்டும், அதுவே அவர்களது முன்னேற்றத்திற்கும், அவர்களின் மீதான் சமூகத்தின் பார்வை மாறுவதற்கும் பெரும் பங்கு வகிக்கும். சினிமாவில் திருநங்கைகள் என்றாலே, ‘ஏய், ஆங்’, என்று பக்கத்தில் வந்து உரசுவது மாதிரியே காட்சிப்படுத்தப்படுகிறார்கள். திருநங்கைகளுக்கு 24 மணிநேரமும் இதுதான் வேலையா? திருநங்கைகளும் ஒருபால் ஈர்ப்புள்ளவர்களுக்கும் இயல்பாகவே ஒரு பாடி லாங்வேஜ் இருப்பது போலவும் அவர்களுக்கென்று வித்தியாசமான நடை, உடை, பாவனைகள் இருப்பதுபோலவும் அவர்களுடைய பாலியல் தேர்வை அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டுவார்கள் என்று நகைச்சுவைக்காகப் பிம்பப்படுத்துவதும் சமூகத்தை தவறான பாதையில் அழைத்துச் செல்லும். குழந்தை உண்டாதல் மூலம் மனித இனம் அழியாமல் இருப்பதுதான் ஆண்-பெண் சேர்க்கையின் அடிப்படையே தவிர உடலுறவு என்பதே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. சினிமா மீது விமர்சனம் இருந்தாலும் ஊடகம்தான் முதல்முறையாக ‘திருநங்கைகள்’, என்னும் பதத்தை அறிமுகப்படுத்தியது. விவேகானந்தா சொன்னதுதான் தற்போது நினைவிற்கு வருகிறது. எந்த ஒரு செயலும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். எதிர்க்கப்படுதல், ஏளனம் செய்யப்படுதல். ஆனால் இந்த இரண்டு நிலைகளையும் அவர்கள் தைரியமாக எதிர்கொண்டுவிட்டால், உங்களை ஏற்றுக்கொள்வதைத் தவிர இந்த சமூகத்திற்கு வேறு வழியில்லை.”, என்று முடித்தார்.

பிறகு காஞ்சனா திரைப்படத்தில் நடித்த சரத்குமார், நர்த்தகியில் நடித்த அஷ்வின், திருநங்கைகளைப் பற்றித் தொடர்ந்து எழுதிய பத்திரிகையாளர் ப்ரியா மேனன், திருநங்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர் சனோபார் சுல்தானா, ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. சர்ப்ரைஸ் விருந்தினராக வருகை தந்திருந்த எஸ்.வி.சேகர், “சினிமா ஏன் ஒருபால் ஈர்ப்புள்ளவர்கள் மற்றும் திருநங்கைகள் பற்றி அதிகம் பேசுவதில்லை, என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. சினிமா என்பது ஒரு தொழில். முதல் படத்தின் வெற்றிதான் அடுத்த படத்திற்கான வாய்ப்பைத் தீர்மானிக்கிறது. சரத்குமார் ஒரு தைரியமான நடிகர், செய்திருக்கிறார். ஆனால் எல்லோரும் அதை செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஆக, நாம் முன்னேறுவது நம் கையில்தான் உள்ளதே ஒழிய இன்னொருவர் கையில் இல்லை. சினிமாவை சினிமாவாகவும் அனுதாபப்பட ஒரு கருவியாகவும்தான் மக்கள் பார்ப்பார்கள். ஒருபால் ஈர்ப்புள்ளவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் அனுதாபம் தேவையில்லை. சமூகத்தில் அவர்களுக்கு அங்கீகாரம்தான் வேண்டுமே தவிர அனுதாபம் அல்ல”, என்றார்.

தொடர்ந்து திரையிடப்பட்ட பல்வேறு திரைப்படங்கள் நம் சமூகத்தை சாட்டையால் அடித்தன. மகிழ்வர்கள் உரிமைக்காக இந்தியாவில் நடந்த ஊர்வலத்தில், “நான் என் மகனுக்குத் துணை நிற்கிறேன்”, என்கிறார் ஒரு தாய். அக்காட்சியைப் பார்த்த எவருக்கும், தன் வீட்டில் இதுபோல் ஒருவர் இருந்தால், அவரை வெறுக்ககூடாது என்று சிந்திக்க வைக்கும். ‘The Apple tree’ என்னும் குறும்படத்தில், தன் துணையை இழந்த பின் மகிழ்வரான ஒரு முதியவர், முதியோர் இல்லத்தில் சேர்கிறார். அவர் ஒரு மகிழ்வர் என்று தெரிந்தபின் முதியவர் என்றும் பார்க்காமல் சக மனிதர்கள் அவரைக் கேலி செய்கிறார்கள். சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்புக் கேள் என்று மிரட்டுகிறார்கள். முதியவர் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, “நானும் மனிதன்தான். இந்த அறையில் இருக்கும் மற்றவர்களைப் போல்தான் நானும்”, என்று கதறுகிறார். கடைசியில் தன் இளமைக் காலப் பொழுதுகளைத் தன் துணையுடன் கழித்த அந்த ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்து, வானத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்தவாறே ஆதரவற்று இறந்து போகிறார். பார்ப்பவரின் மனதை பாதிக்கச் செய்யும் ஆழமான திரைப்படம் அது.

The Apple Tree
இறுதி நாளன்று யாரும் எதிர்ப்பார்க்காதவாறு இயக்குனர் பாலு மகேந்திரா வருகை தந்தார். “நம் சமூகத்தின் தலையாயப் பிரச்னையைப் பற்றிப் பல இளைஞர்கள் குறும்படங்களின் மூலம் பேச ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமா என்னும் ஆயுதத்தை முறையாகப் பயன்படுத்தினால் எந்த ஒரு நல்ல சமூக மாற்றத்தையும் கொண்டு வரமுடியும். மேலும் பல திரைப்படங்கள் திருநங்கைகளைப் பற்றியும் ஒருபால் ஈர்ப்புள்ளவர்களைப் பற்றியும் பேசும், பேச வேண்டும்”, என்றவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

சமூகத்தால் வெறுக்கபடுவதை விடக் கொடுமையானது, தன் சொந்த வீட்டிலிருந்து விரட்டப்படுவது. ‘The missing colours’, என்னும் மலையாளக் குறும்படம் கார்த்தி என்னும் திருநங்கையைப் பற்றிப் பேசுகிறது. சிறுவயதில் விரட்டப்பட்ட கார்த்தியைப் பற்றி அறிந்துகொண்டு, அவரைத் தேடிப் புறப்படுகிறார்கள் இரண்டு மாணவர்கள். கடைசியில் கூவாகத்தில் ஒரு மரத்தடியில் நெற்றிக்கண் ஒன்றை வரைந்துவிட்டு அனாதையாக செத்துப்போய்க் கிடப்பார் ஓவியரான கார்த்தி. இருவரும் சோகத்தின் உச்சியில் அவரது கண்களை மூடுவர். கண்கள் மூடிய நிலையில் நெற்றிக்கண் மட்டும் திறந்திருக்கும்! நம் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் காட்சி அது.

The Missing Colours (Nasthavarnangal)
விழா முடிந்து வெளியே வந்த பின்னும் மகிழ்வர்கள் மற்றும் திருநங்கைகள் கதறிய அந்த வரிகள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து மனதை பாதித்தது. “எனக்குத் தெரியவேண்டும், என்னை ஏற்றுக்கொண்டால் எப்படி இருக்கும் என்று, என்னை சமமாக மதித்தால் எப்படி இருக்கும் என்று, நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டால் எப்படி இருக்கும் என்று, நான் நானாக இருக்க அனுமதித்தால் எப்படி இருக்கும் என்று.”

சன்னலோரக் காக்கைக்கு சோறு வைக்கும் நாம் எப்பொழுது இவர்களை சகமனிதர்களாக நடத்தப்போகிறோம்?

- வ.விஷ்ணு
(2013)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி