Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

’பாரதி மறைவு முதல் மகாகவி வரை’

          தனிமனிதன் ஒருவனின் இயக்கத்தைப் பற்றிய மதிப்பீட்டைப் பொதுவாகவே வெற்றி-தோல்வி, ஏற்புடைமை-ஏற்கப்படாமை என்ற எதிர் நிலைகளிலேயே மேம்போக்கு உலகம் குறித்துவைத்துக்கொள்கிறது. பெரும்பாலான இத்தலைமுறை இளைஞர்களுக்கு சுப்பிரமணிய பாரதியைப் பற்றியும் அப்படித்தான் தெரியும். பாரதியார் ஒரு மகாகவி என்று எல்லோருக்கும் தெரியும். பள்ளியில் தமிழ் படித்தவர்களுக்கு அவர் எட்டையபுரத்தில் பிறந்தார் என்று ஆசிரியர் குறிப்பில் இருப்பது தெரியும். முண்டாசும் மீசையும் தெரியும். திருவல்லிக்கேணிக் கோயில் யானை தெரியும். இறுதி ஊர்வலம் பற்றி சிலருக்குத் தெரியும். கொசுறாக மிஷ்கினின் அச்சம் தவிர் பாடலும் சுச்சியின் புதிய இசைத்தட்டும் தெரியும். ஆர்வமுள்ளவர்கள் பாரதியின் வரலாற்றை அறிந்துக்கொள்ளமுடியும். தேடல் சுலபம்தான். ஆனால் அவர் மகாகவி ஆன வரலாறு இன்னும் முக்கியமானது.

          “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?”, என்று பாரதி புலம்புவதாக டாக்டர்.ம.பொ.சி.யின் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ நூலில் வாசித்த போது ஒருகணம் உடம்பு தூக்கிவாரிப்போட்டது. நான் அறிந்த சுப்பிரமணிய சூப்பர் ஹீரோ பாரதி அழ மாட்டாரே? என் அடித்தளத்திலேயே கை வைக்கப்பட, நெஞ்சு நடுங்கியது. மேலும் அதற்கு மேல் அந்தப் புத்தகத்திற்கு அவசியமில்லையாதலால் ம.பொ.சி. முழுவதுமாக சொல்லிவிடவில்லை, இன்னும் பல செய்திகள் இருக்கிறது என்று தெரிந்தபோதுதான் முழுமையாக உரைத்தது, ஒரு மனிதனின் வெற்றிக்கு/தோல்விக்குப் பின்னால் எவ்வளவு வலியும் உழைப்பும் இருக்கிறது என்று. இவையனைத்தையும் மகாகவி என்ற ஒற்றை சொல்லில் கடந்துபோய் இப்போது அவரை மறந்து கிடக்கிறோமே என்று உறுத்தியது. நான் யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் படித்ததில்லை, ஆனால் எதைப் படிக்கிறோமோ இல்லையோ, ஒரு தனிமனிதர் அங்கீகாரம் பெற்ற வரலாற்றை, அல்லது நிராகரிக்கப்பட்ட வரலாற்றை அவசியம் படிக்க வேண்டும் என்று தோன்றியது பாரதியின் புலம்பலைப் படித்தபின்புதான். அவரது வாழ்க்கை வரலாறு எனக்கு இன்றும் தெரியாது. ஆனால் அவரை மகாகவியாகத் தமிழகம் ஏற்றுக்கொண்ட வரலாற்றைத் தெரிந்துக்கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

          பாரதி உயிருடன் இருந்த வரை அவருக்குத் தமிழ் இலக்கிய உலகிலும் வெகுசனப் பரப்பிலும் எந்த ஒரு பெரிய அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை என்று தொடங்குகிறது டாக்டர்.கார்த்திகேசு சிவசுத்தம்பி மற்றும் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ ஆய்வு நூல். பாரதியார் மகாகவியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்றைப் படிக்க ஆரம்பிக்க மிகச் சிறந்த நூல். பாரதி படிப்படியாக அங்கீகாரம் பெற்றதை நிலைகள் வாரியாகச் சம்பவங்கள் நிகழ்ந்த காலக்கட்டங்களோடு அடுக்கும் ஆசிரியர்கள், நாட்டுப்பற்று எழுச்சிப் பாடல்களைத் தாண்டி பாரதியார் எப்படி சிறிது சிறிதாக பாரம்பரிய இலக்கிய ரீதியாக, முற்போக்குக் கருத்து நிலைகள் ரீதியாக, கொள்கை பேதங்களைத் தாண்டி அனைவராலும் மகாகவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பதைத் தகுந்த மேற்கோள்களுடன் விளக்குகிறார்கள்.

          காலக்கட்டாயமான தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, பாரதியின் பெயரால் நடந்த கருத்தரசியல், மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் இலக்கிய அங்கீகாரத்திற்கு ஒரு கருவியாக பாரதி பயன்பட்டமை, அதே மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பாரதியின் சமூக முற்போக்குக் கருத்துகளைக் கவனியாது அவரது கவித்திறமையை மட்டும் முன்னிறுத்தியமை, பாரதியை வேதாந்தக் கவியாகவே முன்னிறுத்திய மூதறிஞர் இராஜாஜியின் ஆதரவு பெற்ற அவர்களை எதிர்த்த வெகுசன இலக்கியக் கர்த்தாக்கள், இறுதியில் எட்டையபுரத்தில் மணிமண்டபத்தோடும் பாரதியின் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டதோடும் முடிந்த பாரதியார் சர்ச்சைகள், இதற்கு நடுவில் எப்படி தோழர் ப.ஜீவானந்தமும் சுயமரியாதை இயக்கத்தின் மூலமாகத் தந்தை பெரியாரும் பாரதியின் சமூக முற்போக்கு மற்றும் பெண்ணியக் கருத்துகளை முன்னெடுத்து சென்றனர், எப்படி பாரதிதாசன் ஒற்றை ஆளாக இறுதிவரை பாரதியின் சமூகக் கண்ணோட்டங்களையும் அவர் விரும்பிய மாற்றங்களையும் மக்களிடையே எடுத்துச் சென்றார், எப்படி அனைத்துத் தரப்பு மக்களும் பாரதியைக் கம்பருக்கு அடுத்த மகாகவியாக ஏற்றுக்கொண்டார்கள், என்று மிக விரிவாகப் பயணிக்கிறது இந்நூல். ’மகாகவி’ சுப்பிரமணிய பாரதி என்னும் தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாயகரின் வரலாறு உண்மையில் அவரது மறைவுக்குப் பின்பே கட்டமைக்கப்படுகிறது. அதைப் பற்றி ஆழமாக அறிய விரும்புபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

பாரதி மறைவு முதல் மகாகவி வரை
கார்த்திகேசு சிவசுத்தம்பி, அ.மார்க்ஸ்
235 பக்கங்கள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ரூ.110/-


Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி