Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கெக்க பிக்க, கிக்கிலி பிக்கிலி


சீரியஸ் மோடு ஆன்: குழந்தைகளின் உலகம்தான் எத்தனை சுதந்திரமானது! கனவுகளும் கற்பனைகளும் எல்லையின்றி, விஞ்ஞானச் சுவர் இன்றி, காலமின்றி நேரமின்றி முடிவில்லாத அருவியாகப் பாய அதன் அடிவாரத்தில் பூத்துக் குலுங்கும் வெள்ளந்தி மலர்கள் நம்மை வரவேற்க, அதை முழுமையாய் அனுபவிப்பதற்காகவே நம் வாழ்க்கை இருந்திருக்கக்கூடாதா என்று சில சமயம் ஏங்க வைக்கும் வயது அது. குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணல் மீது ஏறி விளையாடி அதைக் கலைத்துப் போடும் அந்த ஜென் குருக்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இனி திரும்பவும் அந்தக் கவலையற்ற சிரிப்பின் ஊடே தெரியும் கற்பனை உலகத்தில் நம்மால் வாழ முடியாது என்கிற ஏக்கத்தில் என் நண்பன் ஒருவன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “சிறுவயதில் நாம் அனைவரும் பெரியவர்கள் ஆகவேண்டும் என்று நினைத்தோம். எதை வைத்துத்தான் அப்படி ஆகவேண்டும் என்று நினைத்தோமோ.“

ஜாலி மோடு ஆன்: அப்படி இப்படி என்று ’சின்னப் பசங்க’ என்ற வட்டத்திலிருந்து சமூகம் எங்களை வெளியே இழுத்துக்கொண்டாகிவிட்டது. ஒவ்வொருவரின் தலையிலும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்தாகிவிட்டது. ஏதாவது விளையாட்டுத்தனம் பண்ணினால் ‘சின்னப் பசங்க மாதிரி பண்ணாத’, என்று வசனம் வரும் என்று எங்களுக்குத் தெரியப்படுத்தியாகிவிட்டது. வாழ்க்கை ஒரு போர்க்களம், வேட்டையாடிப் பார்க்கோணும், போராடி வெல்லடா, போட்டி போட்டுக் கொல்லடா!

          நாங்கள் ஆறாவது படிக்கும்போது ஒருவன் ‘நோஸ் கட்’ ஆனால் நாங்கள் எல்லோரும் அவனருகில் சென்று, கைகளைக் குவித்து வைத்துக்கொண்டு, “பல்..பு!”, என அவன் முகத்தினருகே ஹாரனடிப்போம். எட்டாவது ஒன்பதாவது படிக்கும்போது ‘பொல்லாதவன்’ ரிலீசாகியிருந்தது. “அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்”, என்று ’பல்பு’ வாங்கினவனைப் பார்த்துக் கத்துவோம். பத்தாவது படிக்கும்போது ’அசிங்கப்பட்ட ஆட்டோக்கார’னின் கதையை, “செம பங்கம் மச்சான் அவனுக்கு”, என்போம். பதினோராவது படிக்கும்போது, எவனாவது எங்களிடம் ‘பங்கம்’ வாங்க மாட்டிக்கொண்டுவிட்டால் அவ்வளவுதான். ”துச்சாதனா! அவு! அவு!”, என்று கூவுவோம் (அமெச்சூர் நாடகம் ஒன்றிற்கு நாங்கள் போனபோது அதில் ’துச்சாதனன்’ சரியாக நடிக்கவில்லை. இதைக்கண்டு முன்வரிசையில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் கொதித்தெழுந்து, “டேய்! ஒழுங்கா உருவுடா! மானத்தை வாங்காத! அவு! அவு!” என்று கத்தினார்).
“பல்..பு!”
          பொதுவாகவே சிற்சில சொற்கள் அல்லது வாக்கியங்கள் திடீரென்று பரவலாகப் பேசப்பட்டு, டிரெண்டாக மாறுவதுண்டு. சில மாதங்களிலிருந்து சில வருடங்கள் வரை அவை புழக்கத்தில் இருக்கும், பிறகு க்ளிஷே ஆகிவிடும். மணந்தால் மகாதேவியிலிருந்து மேட்டர் வரை சினிமாவிலிருந்து இவை நிறைய உருவாகியிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கணவன்-மனைவி ஒன்லைனர் மாதிரி அவை போரடித்துவிடும். நமக்கு ஒரு காலத்தில் செம வார்த்தையாக இருந்த ஒன்றை இப்பொழுது சொன்னால் சின்னப் பசங்க நம்மை ஒரு ஏலியன் போல் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதைவிட மோசம், இதையெல்லாம் இப்பொழுது உபயோகித்தால், நம்மளை அங்கிள் என்று கூப்பிட்டு விடுகிறார்கள். “டேய் இங்க பாருடா, நானும் சிறுசுதாண்டா”, என்று போராட வேண்டியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் இந்த ‘பல்பு’ எப்படியெல்லாமோ பரிணமித்துவிட்டது. ’குங்காங்கோ’வை ’குங்காங்ஸ்’ ஆக்கிவிட்டார்கள் மாபாவிகள்! ’பிம்பிலிக்கா பிலாப்பி’ ’பிம்பிலிக்ஸ்’ ஆகிவிட்டது. இப்படியே ஐயோடக்ஸ் மெடிமிக்ஸ் என்று ஆக்கிக்கொண்டிருந்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் இதற்காகவே ஒரு மொழிப்போர் புரிந்தாக வேண்டிய காலக்கட்டாயத்துக்கு 2011 ஸ்கூல் பேட்ச் ஆகிய நாங்கள் தள்ளப்பட்டுவிடுவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

          நமக்குப் புரியாத மொழியில் பேசிக் கூடிச் சிரித்தால் எதை வைத்துக் கலாய்த்தார்கள் என்பதைத் தாண்டி, அது புரியாமல் போய் விட்டதே என்கிற வருத்தம் வருவது இயற்கைதானே? எங்களுக்குள் இருந்த/இருக்கிற குழந்தையை வெளிக்காட்டாமல் இருக்க நாங்களும் பழகிக்கொண்டு வருகிறோம், காலப்போக்கில் வெளிக்காட்டுவதற்கு ஒரு குழந்தை இன்னும் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் போய்விடும். ஆனால் இதையெல்லாம் கண்டு வருத்தப் பட முடியுமா? இதெல்லாம் சப்கான்ஷியஸ் புலம்பல்கள்தான். வெளியே செம ஜாலியாக ஊர் சுற்றி, சைட் அடித்து, படிப்பை முடித்து, சம்பாதிக்க ஆரம்பித்து, கண்ணாலம் கட்டி, அப்பாம்மா ஆகி, வீடு வாங்கி, செட்டில் ஆகி, செத்துப் போயி, அடக்கம் ஆகிறவரை எங்களுக்கு எங்கள் முந்தைய தலைமுறையினர் ஸ்கெட்சுப் போட்டுக் கொடுத்துவிட்டதால், எங்களுக்கு எவ்வளவு கடமைகள் இருக்கின்றன என்று தெரியாமல் இல்லை.

சீரியஸ் மோடு ஆன்: ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் தொக்கி நின்றுக்கொண்டே இருக்கிறது. வளர்ச்சியடைந்தவன் மனிதன் என்று பள்ளியில் படித்துவிட்டு, வளர்ச்சியடைந்து பார்த்தால் எனக்குள் இருக்கிற மனிதன் செத்துப்போய்க் கிடக்கிறான். குழந்தைப் பருவத்தில்தான் ஒருவன் மனிதனாக இருக்கிறான் என்ற மாபெரும் உண்மை அப்பொழுதுதான் உறைக்கிறது. சட்டென்று அடுத்து யோசிப்பதற்குள், காசு, கல்யாணம், கடமை, கல்யாண சாவு, கண்ணீர் அஞ்சலி!


          இந்த வடிவமைப்புக்கு நடுவே அவ்வப்போது குழந்தைகள் மோடுக்குத் தாவ வேண்டிய கட்டாயம். இதற்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர்கள் என்று பெயர் சூட்டியாகிவிட்டது. குழந்தையாக இருந்த மனிதனைக் கொன்றுவிட்டு, ப்ரோக்ராம் செய்யப்பட்ட மனிதனிடம் குழந்தை மோடுக்கான ப்ரோக்ராம் தரும் சாகசம். வாட் எ மாஸ்டர் பிளான்!

          குழந்தைகளின் கண்களை எப்பொழுதாவது உற்றுப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு innocence, அறியாமை அதில் தெரியும். நெருப்பைத் தொட்டால் ஏன் சுடுகிறது என்கிற அறியாமை, சுவிட்சு போட்டால் ஃபேன் ஏன் சுற்றுகிறது என்கிற அறியாமை, தண்ணீரில் விழுந்தால் ஏன் மிதக்கிறோம் என்கிற அறியாமை, என்று கண்ணில் பட்டவைக்கு எல்லாம் விளக்கம் தெரியாத, தேடுகிற அந்தக் கண்களை நீங்கள் எப்பொழுதாவது ரசித்திருக்கிறீர்களா? அந்தப் பார்வை குழந்தைகளிடம் மட்டும்தான் இருக்கும், நான் அப்படி முயற்சித்துப் பார்த்தேன், திருட்டு முழி மாதிரி இருந்தது. அப்பொழுதுதான் தெரிந்தது, எனக்குள் இருந்த குழந்தை செத்துவிட்டது என்று. நெருப்பைத் தொட்டால் ஏன் சுடுகிறது என்பதை தெரிந்துகொண்டதால் என் குழந்தை விழிகள் போய்விட்டது என்றில்லை. அறிவு என்பது வேறு முதிர்ச்சி என்பது வேறு. அறிவைத் தேடிப் போய் என் குழந்தைத்தனத்திடம் இருந்த முதிர்ச்சியைக் கொன்றுவிட்டேனோ என்று தோன்றவைத்த நிகழ்வு அது. குழந்தைகள் உலகில் அறிவு முதிர்ச்சி என்பது ஆக்சிமோரான். அறிவற்ற முதிர்ச்சி குழந்தைகளுக்கே உரித்தான ஒரு அழகியல். முதிர்ச்சியற்ற அறிவுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர்கள் தேவைப்படுகிறது. சரி, என்னிடம் அறிவும் இருக்கிறது முதிர்ச்சியும் இருக்கிறது என்றால் நம்மை மகாத்மாவாக்கிவிடுகிறார்கள். பிறகு சாகடித்துவிடுகிறார்கள்.
Innocence, அறியாமை
          இருபது வயசு யூத்து, உலகின் டிரெண்டை செட் பண்றதே நாங்கதான், என்ற எங்கள் வயதின் இசங்களும் இதங்களும் நிறைய இருந்தாலும், என்னற்ற கனவுகளையும் கூட எங்கள் பெற்றோரின் கனவுகளையும் கூடுதலாக சுமந்துக்கொண்டு, வாழ்க்கையின் உச்சக்கட்ட மகிழ்ச்சிப் பருவத்தில் மிதந்துகொண்டிருந்தாலும், இந்த வயதிலேயே எக்ஸ்பயர் ஆனது போன்ற ஒரு உணர்வு. திடீரென்று ஸ்கூல் பசங்க பொசுக்கென்று கண்டுக்கொள்ளாமல் சென்றால் பலூன் ’புஸ்ஸ்’ என்றாகிவிடுகிறது. என் நண்பன் செம பாசிட்டிவ்வானவன். பலபேருக்கு ஆலோசனைகள் கொடுப்பதிலிருந்து நிகழ்காலத்தில் வாழ்வதுவரை எல்லாவற்றையும் அதனதன் போக்கில் எதிர்கொண்டு சிக்சர் அடிப்பவன். ஒருநாள் அவனே படுத்துவிட்டான். “சின்ன வயசுல இருக்கும்போது பெரியவனாகணும்னு ஆசைப்பட்டோம். எதை நினைச்சுடா அப்படி ஆசைப்பட்டோம்?”, என்று புலம்பினான். “எங்களுக்கெல்லாம் கஷ்டம் வந்தா முதல் ஆளா வந்து நிப்ப. இப்ப உனக்கே கஷ்டம்னா, சொல்லு மச்சான், என்ன சொல்லனுமோ அதை அப்படியே வெளிய கக்கிடு. என்ன ஆச்சு?”, என்று கேலியும் கிண்டலுமாக விசாரித்தோம். ”பங்கப்பட்டுட்டேன்டா மச்சி! பொடிப்பையன்டா அவன். தம்மாத்தூண்டுதான் சைஸு. யோவுன்றான்டா! அய்யன்றாண்டா! உண்மைய சொல்லு, அங்கிள் மாதிரியா இருக்கேன் நான்?”

          எங்கள் அப்பாம்மா காலத்தில் இருபது இருபத்தியைந்து வயதிலேயே கல்யாணத்தை முடித்துவிடுவார்கள். அடுத்த வருடத்தில் நாங்கள் பிறந்திருப்போம். இப்பொழுது எங்களுக்கும் இருபது வயது ஆகிவிட்டது என்று நினைத்துப் பார்க்கிறபொழுது இளவயது ஆசைகளைத் தாண்டி ஒன்றே ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. அடுத்த தலைமுறை பிறக்க ஆரம்பித்துவிட்டது. இனியும் நாங்கள் சின்னப் பசங்க இல்லை. கடைக்குட்டிக் கவனிப்புக்கு அடுத்த செட் தயாராகிக் கொண்டிருக்கிறது, அனேகமாகக் கொஞ்சுவது நாங்களாகத்தான் இருப்போம். ஏற்கனவேயே நான் மாமா ஆகிவிட்டேன். பிறகு பக்கத்து வீட்டுக் குட்டிப் பெண் என்னை முதல் முறை பார்த்ததும் அங்கிள் என்றுவிட்டாள். இன்னும் ஆறு மாதங்களில் இன்னொரு உயிருக்கு மாமா ஆகப்போகிறேன். நான் பழகிக்கொண்டு விட்டேன். நான் அழுவலியே, நான் அழுவலியே.
“ஏன் மாமா அழுவுறீங்க?”
          ஒரு கல்யாண வீட்டில் ஒரு குழந்தை நம்மிடம் ‘பெப்பே’ காட்டிவிட்டுச் சென்றால் மனசுக்கு இதமாக இருக்கும் அதே வேளையில் அதே மனசின் அடிவாரத்தில் ஒரு மிகப்பெரும் எரிமலை வெடித்துக் கிளம்பும், வெளியே ஒரு புன்சிரிப்பைத் தவிர எதுவும் வெளிப்படாது. ஒரு பச்சிளம் குழந்தை நம்மைப் பார்த்து பயந்து அழுதால் இந்த உலகமே நம்மை நிராகரித்துவிட்டதுபோல் நமக்கும் உள்ளே அழுகை வரும். நிராகரிப்பின் வலியை யார் கொடுத்தாலும் மனசு தாங்கிக் கொள்ளும். ஆனால் ஒரு குழந்தை நம்மை நிராகரித்தால் மட்டும் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டதுபோல் ஒரு வலி. குழந்தையாக இருந்த மனிதன் வளர்ந்து பெரியவனாகிறேன் பேர்வழி என்று ஒரு வைரசாக மாறியதை ஒரு குழந்தையின் நிராகரிப்பு நமக்குச் சட்டென்று உணர்த்திவிடும்.

”என்னடா சின்னப் பசங்க மாதிரி புலம்பிகிட்டு, போய் வேலையப் பாருடா”, உண்மையில் யார் யாரை நிராகரிக்கிறார்கள் என்று யோசித்தால் உலகமே தலைகீழாகிறது.
"When the world turns its back on you, you turn your BACK on the world!" Timon

குழந்தை மோடு ஆன்:
.
.
.
.
குழந்தை மோடு ஆன்: (பட்டனை எவ்வளவு தட்டியும் வேலை செய்ய மாட்டேன் என்கிறது)

மறுபடியும் போச்சா! அடப்போங்கடா! ஜாலி மோடு ஆன்:
“இது என் பால்! தர மாட்டேன் போ!”
“பெரியவளா ஆகித்தான் தீரணுமோ?”
“ப்ச்! சும்மா கடுப்பக் கெளப்பிக்கிட்டு!”

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி