Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2

முன்தொடர்ச்சி: காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1

முன்குறிப்பு: லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன்.


(தொடர்கிறது)

          விஜயலட்சுமி பிறகு என்ன செய்தார்? பாஸ்போர்ட் கிடைத்ததா? இவற்றையெல்லாம் பார்க்கும் முன்பாக, பிரிட்டன் அரசு விஜயலட்சுமியின் அமெரிக்கப் பயணம் மீது இத்தனை கண்கள் வைத்தது ஏன் என்று பார்ப்பது அவசியம். அத்தனை முக்கியமானவரா விஜயலட்சுமி? அல்லது அவர் நோக்கங்கள் பிரிட்டனின் பிரம்மாண்ட நோக்கங்களில் தலையிடும் அளவிற்கா அத்தனை வீரியம் மிக்கதாக இருந்தன? இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த சமயம் கூட சர்ச்சிலின் கவனம் விஜயலட்சுமியிடம் இருந்தது என்றால் என்ன காரணம்? பதில்: வெண்டெல் வில்க்கி.

          1940ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரூஸ்வெல்ட்டிற்கு எதிராகக் குடியரசு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டவர்தான் இந்த வெண்டெல் வில்க்கி. சர்வதேச விவகாரங்கள் மீதும் இனவெறிக்கு எதிரான இயக்கங்கள் மீதும் அவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக ரூஸ்வெல்ட் அவரையும் தன் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்ள விரும்பினார். விளைவு, ரூஸ்வெல்ட்டின் வெளிநாட்டு சிறப்புப் பிரதிநிதியானார் வில்க்கி.

          அமெரிக்க முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் அப்பொழுது சூடாகப் விவாதிக்கப்பட்ட விவகாரம் இந்திய சுதந்திரம். உலகளாவிய காலனியாதிக்கத்திற்கும் அதன் உபவிளைவுகளான இனவெறிக்கும் வன்முறைக்கும் தீர்வாக அவர்கள் முன்வைத்தது சுதந்திர இந்தியாவையே. வில்க்கியும் அப்படியே நினைத்தார். இனவெறிப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கத்தோடு ஒரு முறை இந்தியாவிற்கு சிறப்பு தூதராக செல்லலாமே, என்று வில்க்கி ரூஸ்வெல்ட்டிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். ரூஸ்வெல்ட்டிற்குக் கோரிக்கையைப் பார்த்தவுடன் பிடித்துப் போக, உடனே வேலையைத் துவங்கவும் என்று சொல்லிவிட்டார்.

          வெளிநாட்டுப் பயணம் தொடர்பான பணிகள் துரித கதியில் நடந்துக்கொண்டிருந்தபோது வில்க்கிக்கும் ஒரு தடங்கல் வந்தது. அப்பொழுது பார்த்து பிரிட்டனின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக காந்தி ஏதோ கருத்து சொல்லியிருக்க, இந்தியா மீது பயங்கரக் கடுப்பில் இருந்தார் சர்ச்சில். அந்த சமயத்தில் இந்தியாவுக்கு ஒரு தூதரை அனுப்பினால் அது அமெரிக்க-பிரிட்டன் உறவை பாதிக்கலாம் என்பதால் ரூஸ்வெல்ட் பயணத்தை ரத்து செய்ய சொல்லிவிட்டார். உண்மையில் ரூஸ்வெல்ட்டிற்கு இந்தப் பயணத்தின் மீது பிடிப்பு இருக்கவே செய்தது. ஆனால் அமெரிக்க-பிரிட்டன் உறவைக் கருத்தில் கொண்டு அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் வில்க்கிக்கு அப்படி இப்படி ஒரு தீர்வு கிடைத்தது. சில கலந்தாலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு ஏகமனதாக இப்படித் தீர்மானம் செய்யப்பட்டது. வில்க்கியின் தலைமையில் ஒரு அணி உலகின் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்வது, அவர்களுக்கு அமெரிக்கா ஆதரவுக் கரத்தை நீட்டுகிறது என்ற செய்தியைத் தெரிவிப்பது. இப்படியாக அமெரிக்க-பிரிட்டன் உறவுக்கும் பாதிப்பு ஏற்படாமல் வில்க்கியின் நோக்கமும் பெரிதளவில் சிதைவுறாமல் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கிய சில மாதங்களில் தன் வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தைத் துவங்கினார் வில்க்கி.

          சர்ச்சில் வில்க்கியைக் கண்டு அஞ்சவில்லை. ரூஸ்வெல்ட்டின் எதிராளி, அதுவும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர். ஜனநாயக மாண்பும் மனித உரிமை பற்றிய எண்ணங்களும் பெரிதாக இந்த மனிதருக்கு இருக்காது என்று நினைத்தார் சர்ச்சில். ஆனால் அப்போதைய இந்திய வைஸ்ராய் லின்லித்கோ காந்தியையும் நேருவையும் வில்க்கி சந்திப்பது ஆபத்து என்று சர்ச்சிலிடம் எச்சரித்ததும் வில்க்கியின் இந்திய வருகையை சர்ச்சில் நிராகரித்தார்.

          வில்க்கி துருக்கி, சீனா என்று தன் பயணத்தை மேற்கொண்டார். எங்கு சென்றாலும் அங்கு இந்திய சுதந்திரமே பிரதான பேச்சாக இருந்தது. அதே போல் எந்த பிரிட்டன் அதிகாரியை வில்க்கி சந்தித்தாலும் அவர் பேச்சில் பிரிட்டானிய கர்வம் தொனித்ததை கவனித்தார். எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டு நாடு திரும்பினார். முதல் வேலையாகப் பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டினார். இதோ, இதுதான் அவர் சொன்னது.

“உலகப் போரில் நம் நட்பு நாடுகளுக்கு உதவும் அதே நேரத்தில் எதற்காக நாம் உதவுகிறோம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய அமைதி பற்றி நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம். நான் பயணம் மேற்கொண்ட அத்தனை நாடுகளிலும் ஒரே குரல்தான் ஒலித்தது, ‘ஏன் அமெரிக்க ஐரோப்பிய அமைதி மட்டும்? ஆசிய அமைதி வேண்டாமா? ஆப்பிரிக்க அமைதி வேண்டாமா? உலக அமைதி வேண்டாமா? அமைதி என்பது வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் உரித்தான சொத்தா என்ன?’, என்று சரமாரியாகக் கேள்விக் கணைகள் பறந்தன. குறிப்பாக இந்திய சுதந்திரத்தை அவைவரும் ஏக மனதாக ஆதரித்தனர். தற்போதைய உலக வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம் காலனியாதிக்கம். அது மறையாமல் உலக அமைதி சாத்தியமில்லை. அப்படிப்பட்ட உலக அமைதிக்குத் தற்போதைய முக்கிய இடையூறு, காலனியாதிக்க இந்தியாதான்!”

          சர்ச்சில் இதனை எதிர்பார்க்கவே இல்லை. வில்க்கியை இரண்டு முறை சந்தித்ததை வைத்து அவரைத் தப்பாக எடை போட்டிருந்தார் மனிதர். வில்க்கிக்கு உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் பாராட்டுகள் குவிந்தன. தன்னுடைய ஐம்பது நாள் பயணத்தில் தான் சந்தித்த மனிதர்கள், கண்ட அனுபவங்கள், அதன் மூலமாக உலக அமைதி சாத்தியமாகக் கிடைத்த பரிந்துரைகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் போருக்குப் பிந்தைய உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய தன்னுடைய யோசனைகள் போன்றவற்றையெல்லாம் எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார். ’One World’ என்ற பெயருடன் அந்தப் புத்தகம் உலகளாவிய கவனத்தைப் பெற்றது. அமைதியை விரும்பும் அத்தனை நாட்டுத் தலைவர்களும் அப்புத்தகத்தைப் படித்துப் பாராட்டித் தீர்த்தனர். அப்புத்தகம் துருக்கி சென்றது. சீனா சென்றது. அப்படியே இந்தியா பக்கம் திரும்பி சிறையில் இருந்த நேருவின் கைக்கும் சென்றது.

          புத்தகத்தைப் படித்து முடித்ததும் இதற்கு முன் இல்லாத அபார நம்பிக்கையைப் பெற்றார் நேரு. தன்னைப் போல் சிந்திக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதுவும் பெரிய இடத்தில் இருக்கிறார்கள். ஒன்று பட்ட உலகம் சாத்தியமே, என்று மேலும் தன் சிந்தனைகளைத் தொடரலானார்.

          உலகமே காலனியாதிக்கத்திற்கு எதிராகத் திரும்பியது போன்ற தோற்றம் உருவானதால் சர்ச்சில் எச்சரிக்கையானார். இந்தியா வராமலேயே வில்க்கியால் இந்திய சுதந்திரத்தைப் பற்றிப் பேசி உலகலாவிய கவனத்தைப் பெற முடிந்தது என்றால் நாளையே வேறொருவர் இந்தியாவுக்கே வந்து விட்டால்? வந்து காந்தியையும் நேருவையும் சந்தித்து விட்டால்? அல்லது இந்தியாவிலிருந்து யாராவது வெளிநாடு சென்று இந்தியா குறித்து உலக அரங்கில் பற்ற வைத்துவிட்டால்? சிக்கல்தான். சர்ச்சில் யோசித்தார். காந்தியும் நேருவும் பலவீனமாக இருந்தார்கள். உலக அரங்கில் வேறு யாரால் பிரிட்டனுக்குத் தொந்தரவு ஏற்படலாம்? அப்பொழுது வங்கத்தில் நிவாரண உதவிகளைத் திறம்பட செய்ததற்காக உலகின் கவனத்தைப் பெற்றிருந்தார் விஜயலட்சுமி. சர்ச்சிலின் கவனம் அவர் மீது திரும்பியது.

          பாஸ்போர்ட் இல்லையென்றால் ஏது வெளிநாடு, ஏது பயணம்? மீண்டும் வங்கத்திற்கே சென்றார் விஜயலட்சுமி. பத்திரிகைகள் தந்த புகழ் வெளிச்சத்தினால் அமெரிக்கப் பயணம் ஏற்பாடாகி, தன் கவனம் திசை திரும்ப ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று அகமகிழ்ந்த விஜயலட்சுமிக்குப் பயணம் ரத்தானது ஏமாற்றமாகவே இருந்தது. வங்கத்தில் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சில நாட்கள் கழிந்தன.

          ஒருநாள், சீனத் தூரகத்திலிருந்து விஜயலட்சுமிக்கு மர்மமான முறையில் ஒரு அழைப்பிதழ் வந்தது. கல்கத்தாவில் ஒரு இரவு உணவு விருந்திற்கான அழைப்பிதழ் அது. என்ன மர்மம் இது என்று உடனடியாக அழைப்பை நிராகரித்தார் அவர். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டு அவர் விருந்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். முதலில் பிடிவாதமாக மறுத்தவர் இறுதியாக அரை மனதோடு சம்மதித்தார்.

          விருந்து தடபுடலாக இருந்தது. அத்தனை பிரம்மாண்டங்களுக்கும் மத்தியில் விஜயலட்சுமி தன்னை சுற்றிலும் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் சூழ்ந்திருந்ததை கவனித்தார். லேசாகப் பொறி தட்டியது. அவரை மேடையேறிப் பேச சொன்னார்கள். அவரும் மேடையேறி, தனக்கு அமெரிக்க நாட்டைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது என்றும் ஆனால் அந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தனக்கு விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார். எல்லாவற்றையும் ஒரு ஓரமாக நின்று கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் அமெரிக்க விமானப்படைத் தலைவர் ஜெனரல் ஸ்ட்ரேட்மேயர். ரூஸ்வெல்ட்டின் நேரடி மேற்பார்வையின் கீழ் வருபவர். அவர் மூலம் விஜயலட்சுமியின் விருப்பம் ரூஸ்வெல்ட்டிற்குப் போய் சேர்ந்தது. அவர் யோசித்தார். கையை அசைத்தார். அனைத்தும் முன்னமே திட்டமிடப்பட்டது போல் காரியங்கள் மளமளவென்று நடந்தன.

          சில வாரங்களில் நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு இராணுவ விமானத்திற்குள் இருந்தார் விஜயலட்சுமி்.

(தொடரும்)

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3 
காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 4

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி