Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3

முன்தொடர்ச்சி: 

முன்குறிப்பு: லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன்.



(தொடர்கிறது)

          பகலிரவு பாராமல் முழுக்க முழுக்க விழாக்கோலம் பூண்டிருக்கும் அமெரிக்கத் தூங்கா நகரமான நியூயார்க்கின் நூறு மாடிக் கட்டிடங்களையும் செல்வத்தையும் சுத்தத்தையும் நுனி நாக்கு ஆங்கிலத்தையும் கண்ட யார்தான் தன்னிலை இழக்காமல் இருப்பார்கள்? ஆனால் விஜயலட்சுமிக்கு இது அனைத்துமே எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. மாளிகைகளைப் போல் வீடுகளைப் பார்த்தபோது வீடற்ற இந்தியர்கள் நினைவிற்கு வந்தார்கள். தெருவுக்கு ஒரு உணவகத்தைப் பார்த்தபோது வங்கத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கிடந்த பல்லாயிரக்கணக்கானோரின் கண் வரண்ட முகங்கள் நினைவிற்கு வந்தன. மனம் கனத்த நிலையில் மேலும் இந்த ஆடம்பரங்களைக் காண முடியாமல் நியூயார்க்கிலேயே மிகவும் சிறிய விடுதிக்குச் சென்றார் விஜயலட்சுமி. பார்த்தால் அதுவும் செல்வச் செழிப்புடன் இருந்தது.

          முதல் மாதம் முழுவதும் அமெரிக்க இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை சந்தித்து இந்திய நிலைமையையும் அதன் சுதந்திரத்தின் அவசியத்தையும் எடுத்துச் சொல்வதில் செலவானது. காந்தி, நேருவின் புகழ், மற்றும் வெண்டெல் வில்க்கியின் பேச்சு, போன்றவையால் உலக அரங்கில் இந்திய சுதந்திரம் விவாதப்பொருளாகியிருந்த நேரம் அது. அமெரிக்க வெகுஜனத்தைப் பொருத்தவரை விஜயலட்சுமி என்னும் பெயர் அப்பொழுதுதான் அவர்களுக்கு அறிமுகம். சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த முதல் சொற்பொழிவுக் கூட்டத்தின் முடிவிலேயே அந்த நிலை வெகு விரைவாக மாறியது. காந்தி தனக்கு இட்ட பணியைத் துளியும் தாமதிக்காது துவங்கினார் விஜயலட்சுமி.

          நாட்கள் செல்ல செல்ல விஜயலட்சுமி நிறைய நண்பர்களை சம்பாதித்தார். அவர்கள் மனமுவந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஒவ்வொரு மாநிலமாக விஜயலட்சுமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய சுதந்திரத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் உரையாடினார். ஒரு நண்பர் அவரிடம் அமெரிக்க மக்களுக்கு இந்தியா என்றாலே நினைவுக்கு வருவது இரத்தினங்கள்தான் என்றும் நீங்கள் ஏன் ஆடம்பரமாக உடையணிந்து, நகையணிந்து பேசக்கூடாது, என்றும் கேட்டார். இந்தியாவின் வறுமை நிலையைப் பற்றியும் அங்கு சோற்றுக்குக் கூட வழியில்லாத பிரிட்டன் அரசால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களைப் பற்றியும் பொதுவாக பிரச்னைகளற்ற அமெரிக்க மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. தனக்கு நகைகள் எதுவும் வேண்டாம் என்றும் தான் உடுத்துவதற்காக எளிமையான சீலைகளைத் தானே வைத்திருப்பதாகவும் புற வெளிப்பாடை தான் பொருட்படுத்துவதில்லை என்றும் விஜயலட்சுமி பதிலளித்தார். ஆனால் அவரே ஆச்சரிப்படும்படி அவரின் எளிமை பெரிதும் அமெரிக்காவில் பாராட்டப்பட்டது. சுற்றிலும் ஆடம்பரம் இருக்க தான் மட்டும் எளிமையாகத் தனித்துத் தெரிவதால்தான் இந்தப் புகழ் என்றும் இதனுள் விழுந்துவிடக்கூடாது என்றும் விஜயலட்சுமி தெளிவாக இருந்தார்.

          வர்ஜினியாவில் போருக்குப் பிந்தைய ஆசியாவின் எதிர்காலம் பற்றி விவாதிக்க மாநாடு ஒன்று கூடியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சிறப்புப் பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட அந்த மாநாட்டில்தான் முதன்முதலில் அதிகாரப்பூர்வ(என்று மாநாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட) இந்தியப் பிரதிநிதியாக விஜயலட்சுமி கலந்துக்கொண்டார். அவர்களே இவர்களே என்று வணக்கம் சொல்வதில் நேரத்தை விரயமாக்காமல் தன் முதல் அதிகாரப்பூர்வ பேச்சிலேயே நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விஜயலட்சுமி. “இனிமேலும் நாம் உள்நாட்டுப் பிரச்னைகள் என்று பேசுவதில் அர்த்தமில்லை. அப்படிப் பேசிப் பேசிதான் காலங்காலமாக நாம் சண்டையிட்டு அழிந்து போய்க்கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நமக்குப் பிரச்னைகளைக் குறித்த இன்னும் விரிவான பார்வை வேண்டும். இந்த உலகமே நம்முடைய குடும்பம்தான் என்ற உணர்வுடன் நாம் பிரச்னையை அணுக வேண்டும். சர்வதேசக் கருத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பண்பும் மனத்தெளிவும் பார்வையும் வேண்டும்.”, என்று முழங்கினார். அட்லாண்டிக் பத்திரத்தை வெகுவாக பாராட்டிய அவர் இன்னொரு பக்கம் சர்ச்சிலைக் கடுமையாக விமர்சித்தார். இந்திய சுதந்திரம் மற்றும் ஒற்றுமையான உலக அமைப்பு இவையே நிரந்தர அமைதிக்கு வழி என்று கர்ஜித்து அமர்ந்தபோது ஒட்டுமொத்த அரங்கமும் அவரைத் திரும்பிப் பார்த்தது. பலத்த கைதட்டல்களை எழுப்பியது. இவர் சமூக சேவகர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளர் மற்றும் சிந்தனையாளரும் கூட என்று மற்ற பிரதிநிதிகள்  கண்டுகொண்டனர்.

          அந்த மாநாட்டுக்குப் பின்னர் பல்வேறு அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேசும் வாய்ப்பும் சர்வதேச பிரச்னைகள் குறித்த மாநாடுகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பும் விஜயலட்சுமிக்குக் கிடைத்தது. மாநாடுகளில் “ஐரோப்பியர்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ’பின்தங்கிய’ மக்களுக்கு உதவ வேண்டும்” என்ற குரல்கள் நிறைய ஒலித்தன. ஆனால் அத்தனைக் குரல்களுக்குப் பின்னாலும் நாம்தான் இந்த உலகத்தைக் காப்பாற்றப்போகிறோம் என்ற திமிர் ஒளிந்து கிடப்பதை விஜயலட்சுமி கண்டுகொண்டார். எல்லா மாநாடுகளிலும் பெரும்பாலான பிரிதிநிகளின் கருத்துகள் என்னதான் மிதமாக இருந்தாலும் அவை கட்டக்கடைசியில் ஏகாதிபத்தியத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவே இருந்தன. ஏகாதிபத்திய சிந்தனைகளை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றுகிறார்கள் என்பதை உடனே உணர்ந்துக்கொண்டார் விஜயலட்சுமி. விளைவு, அவர் கலந்துக்கொண்ட விவாதங்கள் அனைத்திலும் அனல் பறந்தன. ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக யார் பேசினாலும் முதல் ஆளாக எழுந்து நின்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். தன் தரப்பு வாதத்தை நிதானமாகவும் ஆதாரத்தோடும் எடுத்து வைத்தார். ஒரு அடிமை தேசத்திலிருந்து வந்து ஏகாதிபத்தியத்தை ஒற்றை ஆளாக எதிர்க்கும் விஜயலட்சுமியின் தைரியமும் தன்னம்பிக்கையும் அனைவரையும் கவர்ந்தன. அல்லது கவரப்பட்டதுபோல் காட்டிக்கொண்டனர். குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள் விஜயலட்சுமிக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தன. அரசியல் பத்திரிகைகள் அவரது கருத்துகளைப் பிரசுரம் செய்தன என்றால் வெகுஜன மூன்றாம் தர இதழ்கள் அவர் அணிந்து வந்த உடையென்ன அவர் நளினமென்ன என்று பொறுப்பற்று எழுதின. மொத்தத்தில் அமெரிக்கா முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தார் விஜயலட்சுமி.

          அன்று விஜயலட்சுமிக்கு முக்கியமான நாள். அமெரிக்காவின் மிகப் பிரபலமான பத்திரிகையான ரீடர்ஸ் டைஜஸ்ட் ஒரு வானொலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நியூயார்க் நகர டவுன் ஹாலில் பிரதிநிதிகள் விவாதம் செய்வார்கள். அதை நேரடியாக மக்கள் அரங்கில் நின்று காண்பார்கள். அவர்களும் கேள்வி கேட்கலாம். நிகழ்ச்சி வானொலியிலும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். (இன்று இதேபோன்ற நிகழ்ச்சிகள் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. அதிபர் தேர்தலின்போது வேட்பாளர்கள் விவாதித்துக் கொள்வது இப்படிப்பட்ட ஒரு அரங்கில்தான்). அன்று விவாதப்பொருள் இந்தியா. இந்தியா சார்பாக பேசப்போவது விஜயலட்சுமி.

          அந்த விவாத நிகழ்ச்சியைக் கேட்கத் தயாராக இருப்பதோ எண்பது லட்சம் அமெரிக்கர்கள். இத்தனை வெகுஜனப் பரப்பு இருக்கும் ஒரு அரங்கில் சொதப்பினால் இந்திய சுதந்திரம் குறித்த அமெரிக்க மக்களின் பார்வையே மாறலாம் என்ற நிலை. தன்மீது இருக்கும் அழுத்தத்தை உணர்ந்தார் விஜயலட்சுமி. ஆனால் அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் தன் தரப்பு நியாயமான வாதத்தை எடுத்து வைக்கத் தயாரானார். விவாதம் துவங்கியது. அவர்தான் முதல் பேச்சாளர். அவரது முதல் வாக்கியமே எப்படி ஒரு விவாதத்தை அவரால் திறமையுடன் துவங்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. “உலகப் போர் ஆரம்பித்து ஆறு ஆண்டுகள் கழிந்த பின்பும் இப்படியொரு விவாதப்பொருளை வைக்கிறோமே, இது நமக்கே அபத்தமாகத் தோன்றவில்லை?”

          அதன் பின்னர் ஒரு வாக்கியத்தைக் கூட வீணடிக்கவில்லை. அடித்து ஆடினார் விஜயலட்சுமி. நேருவின் வெள்ளையனே வெளியேறு அறிக்கையை வாசித்து இதில் எந்த இடம் நியாயமற்று இருக்கிறது என்று கேட்டார். அனைத்து ஐரோப்பிய சக்திகளும் தங்களுடைய காலனிகளை விடுவிக்க வேண்டும் என்றார். இறுதியாகப் “போருக்குப் பிந்தைய உலகம் மீண்டும் பழைய கெட்டுப்போன அடிவாரத்திலேயே கட்டப்படக்கூடாது. அனைத்து மக்களையும் சரிசமமாகப் பார்க்கும், வேற்றுமைகளை அனுசரிக்கும் ஒரு அமைப்பின் மீதே புதியதோர் உலகம் கட்டமைக்கப்பட வேண்டும். இராணுவ நடவடிக்கையின்மை மட்டும் அமைதிக்கு உத்திரவாதம் அளித்திடாது, அரசியல் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒன்றுபட்ட உலகின் வெற்றிக்கு ஆசியாதான் பரிசோதனைக் களம். இனிமேலும் காலனியாதிக்கம் தொடரும் பட்சத்தில் உலக அமைதியும் மனித கூட்டு முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பே இல்லை”, என்று முடித்தார். பலத்த கைதட்டல்கள். மக்களின் ஏகோபித்த ஆதரவைத் தன் அறிமுகப் பேச்சிலேயே தன்வசமாக்கியிருந்தார் விஜயலட்சுமி.

          எதிர் தரப்பு திரு.இராபர்ட் பூத்பை. சர்ச்சிலின் முன்னாள் பாராளுமன்ற செயலாளர். அப்பொழுது அமெரிக்காவில் இருந்தார். ஹிட்லரையே சந்தித்து அவருடன் உரையாடிவர். விஜயலட்சுமியின் வாதத்திற்கு சும்மா இருப்பாரா என்ன? அவருடைய பேச்சும் பலத்த கைதட்டல்களைப் பெற்றது. ஆனால் நேருக்கு நேர் விவாதத்தில் ஆரம்பத்திலிருந்தே பூத்பையை நொறுக்க ஆரம்பித்தார் விஜயலட்சுமி. ஒரு கட்டத்தில் விஜயலட்சுமியின் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலேயே மொத்த நேரத்தையும் செலவிடும் நிலைமைக்கு வந்தார் பூத்பை. இறுதியாகத் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கே படாதபாடு படும் நிலைக்கு விஜயலட்சுமி அவரை இறக்கினார். விவாதம் முடிந்தது. மக்களின் மத்தியில் விஜயலட்சுமி வெற்றியாளராக வலம் வந்தார். ’மேடம் பண்டிட்’ என்று உலக அரங்கில் விஜயலட்சுமி அழைக்கப்பட ஆரம்பித்தது அதன் பிறகுதான். இந்திய சுதந்திரம் குறித்த அமெரிக்க மக்களின் எண்ணங்கள் ரூஸ்வெல்ட்டிடம் அதிகமாகப் பிரதிபலிக்க ஆரம்பித்ததும் அதன் பிறகுதான்.

          இந்த செய்தியெல்லாம் சர்ச்சிலுக்குப் போனது. ஏற்கனவேயே உலகப்போரினாலும் இந்தியா கொடுத்த தலைவலியினாலும் எரிச்சலின் உச்சத்தில் இருந்தார் அவர். மூன்றாவது பிரச்னையான விஜயலட்சுமியின் புகழ் பெரிதாகாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அவர் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அதையும் மீறி அவர் அமெரிக்கா சென்றார் என்றால் அதில் ரூஸ்வெல்ட்டின் கை இல்லாமல் இருக்காது என்று சர்ச்சிலுக்குத் தெரிந்தே இருந்தது. வேண்டாவெறுப்பாக அமெரிக்காவில் விஜயலட்சுமியின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வந்தார். உச்சக்கட்டமாக அந்த விவாதத்தில் விஜயலட்சுமி பிரிட்டனின் முகத்திரையைக் கிழித்ததும் அவருக்கு ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வந்துவிட்டது. அமெரிக்க மக்களின் பொதுக்கருத்தில் பிரிட்டனின் பிம்பம் நொறுங்கியாகிவிட்டது. இனிமேலும் என்னத்திற்காக இந்த பூத்பை அந்த நாட்டில் தண்டத்திற்கு இருக்க வேண்டும்? விளைவு, அமெரிக்காவில் கிழித்தது போதும் நாடு திரும்பவும் என்ற உத்தரவு.

          விஜயலட்சுமி இனிமேல்தான் தன் முக்கியப் பணியே துவங்கப்போகிறது என்பதை அறிந்திருந்தார். இன்னும் சில தினங்களில் உலக அளவில் பெரிய சக்திகளான பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் சோவியத் ரஷ்யாவின் பிரதிநிதிகள் சான் ஃப்ரான்சிஸ்கோவில் கூடப் போகிறார்கள். உலக அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு உலகளாவிய அமைப்பைத் துவங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்கள். அந்தப் புதிய அமைப்பு நியாயமான ஒரு அடித்தளத்தில் எழுப்பப்பட்டால்தான் இத்தனை ஆண்டு கால ஆசிய ஆப்பிரிக்கப் போராட்டத்திற்கும் இரண்டாம் உலகப் போரில் உயிர் துறந்த பல லட்சக்கணக்கான வீரர்களின் தியாகத்திற்கும் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும். இல்லையென்றால் அந்தக் கூட்டமும் வெறும் கண்துடைப்பாகத்தான் முடியும். அந்தக் கூட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் அப்பொழுது மிகுந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வைத்திருந்தது விஜயலட்சுமியின் மேல்தான்.

          தயாரானார் விஜயலட்சுமி.

(தொடரும்)

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 4

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி