ஷெர்லாக்கின் கடிதம்
நான் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவனாகவே என்னை என்னிடம் நடத்திக்கொள்கிறேன். அதற்கு முக்கியக் காரணம், நான் பெரிதும் மதிக்கும் நபர்கள் அந்த உணர்வுகளாலேயே கொஞ்சம் கொஞ்சமாக அரித்துத் தின்னப்படுவதைப் பார்க்கிறேன். ஆனால் என்னுடைய கபடமற்ற தனிமைப் பொழுதுகளில், நான் இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்குக் காரணம், காதல்(வேறு நல்ல வார்த்தை கிடைக்கவில்லை) என்னும் மாய விளையாட்டை நான் புரிந்துக்கொள்வதில் தோல்வியுறுகிறேன் என்பதுதானோ, என்று தோன்றுகிறது. அதனால்தான் அந்த விளையாட்டை விளையாட நான் மறுக்கிறேனோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அடிப்படையில் என் கடந்தகால செயல்பாடுகள் மீது எனக்கு அப்பழுக்கற்றத் தெளிவுகள் இருந்திருந்தால், நான் செய்த பல செயல்களுக்கு இன்று நான் வருந்திக்கொண்டிருக்க மாட்டேன். மேலும் என்னுடைய மேம்பட்ட உள்ளுணர்வுகளை மீறி பிடிவாதத்துடன் உனக்கு எழுதிக்கொண்டிருக்கவும் மாட்டேன்.
நான் உன்னை ஒரு சவாலாகப் பார்க்கிறேன்; நீ எனக்கு செய்த எல்லா கொடுமைகளையும் தாண்டி, உன்னால் நான் தூண்டப்படுகிறேன். எனவேதான் நம் உரையாடல், இதுவரை பயனற்று இருந்தாலும், இன்னும் தொடர்ந்தபடி இருக்கிறது. நாம் வியப்புக்குப் பஞ்சமற்ற, பதில்களற்ற வெளியில் மிதக்கிறோம். நம் மனதைக் குடைந்துக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு நாம் விடை காணுவதில் தோல்வியடைந்துவிட்டோமா? அல்லது அக்கேள்விகளுக்கு விடையே கிடையாதா? அதிர்ஷ்டவசமாக, நம் இருவரின் இச்சிந்தனையை இடைமறிக்க எதையேனும் இந்த உலகம் தொடர்ந்து வைத்திருக்கும். நம்மைத் தொந்தரவு செய்யும் இக்கேள்விகளிலிருந்து நம்மைத் திசை திருப்ப, இந்த உலகம் புதிய புதிர்களை நமக்கு அளித்தபடி இருக்கும்...
- SH
(CBS தொலைக்காட்சியின் 'Elementary' ஆங்கிலத் தொடரில் வரும் ஒரு கடிதத்தின் மொழிபெயர்ப்பு)
by SheenaBeresford |
Comments
Post a Comment