நன்றி சோ
இன்று காலை எழுந்ததும் சோ காலமானார் என்ற செய்தி அலைபேசியில் வந்ததும் ஒரு கணம் ‘முனுக்’கென்று இதயத்தில் வலித்தது. இதற்கு முன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குஷ்பு தவறுதலாக சோ இறந்துவிட்டார் என்று சொன்னபோது ஏற்பட்ட வலி. அதற்குப் பிறகு ஒன்றரை வருடம் கழித்து இப்பொழுதுதான் சோவின் நினைவே வந்தது. சோவின் சிந்தனையை விட்டு வெகு தூரம் தள்ளி வந்து, மற்ற பிற கருத்தாக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டு காலம் சோ அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதெல்லாம் அவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு சோவைப் பற்றிய நினைப்பு முடிந்து போனது. ஆனால் தற்போது நினைத்துப் பார்த்தால் இன்று ஒரு மாணவனாக நான் தொடர்ந்து அரசியலை வாசித்தபடி இருப்பதற்குக் காரணம் சோ தான்.
சென்ற வாரம் என் உறவினர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்தபோது பன்னிரண்டு வயது நிரம்பிய என் மாமா பையன் என்னிடம், “யப்பா எப்படித்தான் பாலிடிக்ஸ் பேசுறீங்களோ, போரடிக்குது”, என்று கிசுகிசுத்தான். அவனிடம் நான், “அரசியலை மொத்தமா வெறுக்காம அதை சுவாரசியமா தெரிஞ்சுக்க ஆரம்பிக்கிறதுதான் சரி. உனக்கு அரசியல் ஆர்வம் வரணும்னா முதல்ல ஃபேஸ்புக்குல அரசியல் தலைவர்களைக் கலாய்ச்சு வர்ற மீம்களை புரிஞ்சு சிரிக்க முயற்சி பண்ணு. கொஞ்சம் கொஞ்சமா உனக்கு அதுல இண்ட்ரெஸ்ட் வரும். இப்போ அதோட நின்னா பிரச்னை. மேலும் சீரியசா அப்போ படிக்க ஆரம்பி. கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கோ. இல்ல, முதல்லயே எனக்கு அரசியல் தெரியணும்னு கண்ட புக்கைப் படிச்சு சுத்தாத”, என்றேன். சோ இறந்தவுடன் இந்த சம்பவத்தை நான் நினைத்துப்பார்த்தபோது, நான் அப்படி சிந்தித்ததற்கும் சோவிற்கும் இடையே உள்ள உறவு புரிந்தது.
1999 கிரிக்கெட் உலகக்கோப்பைக்குப் பிறகு என் எட்டாவது வயதில் செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்தேன். வெறும் விளையாட்டுச் செய்திகள்தான். பிறகு நான் தமிழில் நன்றாக வாசிக்கிறேன் என்று, பள்ளியில் வாரத்திற்கு ஒருமுறை காலை வணக்கத்தின்போது செய்திகள் வாசிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்காக இன்ன பிற செய்திகளை மெல்லப் புரட்ட ஆரம்பித்தேன். மூன்று தலைப்புச் செய்திகள், மதுரையில் நடக்கும் ஒரு விபத்து செய்தி, ஒரு கிரிக்கெட் செய்தி, இப்படித்தான் வாரா வாரம் போகும். வாசிக்க வாசிக்க வாசிக்கும் வேகம் அதிகரித்தது. வெள்ளிக்கிழமை ஏழரைக்கு எழுந்து எட்டே முக்காலுக்குப் பள்ளிக்கு கிளம்புவதற்குள் சிறுவர் மலரை வாசித்துவிடுவேன். அப்பொழுது மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் நாளன்று சுட்டி விகடன் வந்ததாக நினைவு. அதையும் அன்றே, அல்லது அடுத்த நாளே வாசித்துவிடுவேன். இப்படி சிறுவர் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம்தான் இருந்ததே தவிர அப்பொழுது புத்தகம் எதையும் வாசிக்கவில்லை.
முதல் முறையாக ஏழாவது படிக்கும்போது அப்பா என்னிடம் ஒரு புத்தகத்தைத் தந்தார். சோவின் ‘இறைவன் இறந்து விட்டானா’ நாடகம். வாசித்துவிட்டு நல்லா இருக்குப்பா என்றேன். பரணிலிருந்து தன் பழைய புத்தகங்கள் பலவற்றை வெளியே எடுத்தார். அதில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, இதைப் படி என்றார். சர்க்கார் புகுந்த வீடு. வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டாவது பக்கத்திலேயே டரியல் துவங்கிவிட்டது.
“அப்பா யாருப்பா இந்த பா.ரா.?”
“பா.ராமச்சந்திரன். கவர்னரா இருந்தவரு”
இப்படித்தான் ஒவ்வொரு தலைவராக எனக்கு அறிமுகம் ஆனார்கள். இன்னொரு பக்கம் துக்ளக்கை வாசிக்க ஆரம்பித்தேன். கருணாநிதி, ஜெயலலிதா எல்லோரும் அறிமுகமானார்கள். அடிக்கடி கருணாநிதி மீதான விமர்சனங்களைப் படித்துப் படித்து இந்தக் கருணாநிதி என்றாலே இப்படித்தான் என்றொரு எண்ணம் வந்துவிட்டது. சர்க்கார் புகுந்த வீடு முடிந்ததும், அதன் சீக்வலான கூவம் நதிக்கரையினிலே மூன்று பாகங்களை வாசித்து முடித்தபோது கிட்டத்தட்ட 80-கள் அரசியலிலிருந்து அப்பொழுது வரை இருந்த பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள் எனக்கு அறிமுகமாகிவிட்டார்கள். 'உடன்பிறப்பே', என்று கலைஞர் எழுதுவதுபோல் அவர் நையாண்டிக் கடிதங்கள் எழுதியபோது தானாக சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஐந்து எண்ணிக்கைதான் ராசி என்று முதல்வர் எம்.ஜி.ஆர். குத்து விளக்கில் ஐந்து திரிகளை வைக்க, ‘அந்த அதிர்ஷ்டத்தைக் கெடுக்கிறேன்’ என்று சத்தமில்லாமல் ஆறாவது திரியை வைத்தார் பகுத்தறிவாளர் கலைஞர், என்று சோ எழுதியது எனக்கு நகைச்சுவையாக இருந்தது. புதுக்கவிதைகளைக் கிண்டலடிக்கும் சோ, ‘அம்மா’ என்ற தலைப்பில் கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் கவிதை வாசிப்பதாக எழுதிய கவிதை:
//கவிஞர் மேலும் கவிதை சொன்னார்:
“அம்மா பெரிதா
அப்பா பெரிதா
என்ற சர்ச்சைக்கே
இடமில்லை.
அம்மாவாசை உண்டு
அப்பாவாசை உண்டா?”
(சிரிப்பான சிரிப்பு)
ரஸிகர்: கொன்னுட்டார்... கொன்னுட்டார்...
அரஸிகர்: ஆமாம்... நான் செத்துட்டேன்...//
நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தேன்.
இப்படி வாசிப்பு படு ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தது. கூவம் நதிக்கரையினிலேவிற்குப் பிறகு அவரின் வந்தே மாதரத்தைக் கையில் எடுத்தேன். அதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் அர்த்த சாஸ்திர வரிகளை எழுதி அவற்றின் பொருள் தந்து, அதை அத்தியாயத்தில் எங்கோ பயன்படுத்தியும் இருப்பார். ஆனால் புத்தகத்தின் முடிவுரையில், ‘அர்த்த சாஸ்திரம் என்ற பெயரில் தானே ஏதோ எழுதியதைக் கண்டுபிடிக்க முடியாமல், இன்னும் சொல்லப்போனால் மிக நன்றாக இருக்கிறது, சாணக்கியனா கொக்கா போன்ற கடிதங்களைப் பார்க்கும்போது, நமது சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் மீது தனக்குப் பெரும் மரியாதையே ஏற்பட்டுவிட்டது’, என்கிற ரீதியில் அவர் எழுதியிருந்ததைப் படித்ததும் கலவையான உணர்ச்சிகளுக்கு உள்ளானேன். “யாருய்யா இவரு? கோமாளியா, பண்டிதரா? கேட்டா நான் கண்ணாடிங்குறாரு, நீ என்னைப் பாத்தா உன் பிம்பம்தான் பிரதிபலிக்கும்ங்கிறாரு”, என்று மலைப்பாக இருந்தது. இப்படி இருந்தால் யாரால்தான் அவரை ரசிக்க முடியாது? உடனே அதோடு தொடர்ந்து அவரின் வாஷிங்டனில் நல்லதம்பி, காமராஜரை சந்தித்தேன், அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்று வாசிக்கத் துவங்கினேன். சிறுவயதிலேயே சோவின் ‘ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு’ மற்றும் ‘முகம்மது பின் துக்ளக்’ நாடகங்களை ஆடியோ கேசட்டில் பல முறை கேட்டிருந்ததனால் அவரின் எழுத்துகளை வாசிக்கும்போது அவரது குரல் எளிதாக மண்டையில் ஒலித்தது. துக்ளக் ஆண்டு விழாவிற்குச் செல்ல ஆரம்பித்தேன்.
இது பன்னிரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தது. சோவின் நையாண்டி மூலம் அரசியல் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது என்றாலும், சோவின் எழுத்தை வாசிக்க வாசிக்க அவர் சார்ந்த கொள்கை மீது கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்பு வர ஆரம்பித்தது. மொத்தம் இத்தனை கொள்கைகள் இருக்கின்றன, அவை இவற்றை சொல்கின்றன என்று தெரிந்தால்தானே ஒரு முடிவெடுப்பது? படித்தது ஒரே ஒரு கருத்தாக்கம் என்னும்போது, அவர் சொல்வதுதான் சரி என்ற மனப்பான்மை வளர ஆரம்பித்தது. மாறுபடுபவர்கள் ஏன் மாறுபடுகிறார்கள் என்று சிந்திக்கவில்லை. இது கல்லூரி முதல் வருடத்தின் முடிவு வரை தொடர்ந்தது.
இரண்டாம் வருடம் துவங்குவதற்கு முன்னால் இருந்த விடுமுறையின்போதுதான் மாறுபட்ட கருத்தாக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களோடு உரையாட ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் மற்ற கொள்கைகளைப் பற்றியும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனக்கு சோவின் மூலம் அரசியல் அறிமுகமாகாமல் இருந்திருந்தால் இன்று என்னால் அவற்றை சிரமம் பெரிதுமின்றி வாசித்துக்கொண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டுமல்லவா? அப்படி அரசியல் அறிவு என் மூளைக்குள் புக ஒரு நுழைவாயிலாக இருந்தவர் சோ. இடது சாரி, வலது சாரி, அதற்குள்ளே திராவிட இயக்கம், ஒடுக்கப்பட்டோர் அரசியல், பொருளாதார அடிப்படைகள், பெண்ணியம், என்று கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பு விரிந்துக்கொண்டே செல்ல செல்ல, சோவின் எழுத்தால் அடித்தளமிடப்பட்டிருந்த என் அரசியல் அறிவு ஆட்டம் காண ஆரம்பித்தது. அவர் ஒரு மிதவாத இந்துத்துவவாதி என்று நான் புரிந்துக்கொண்டிருந்தாலும், அவருடைய அரசியல் கொள்கையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தெரிந்தும் தெரியாமலும் நான் உட்கொண்டிருக்கிறேன் என்று அப்பொழுதுதான் புரிந்தது. பலதரப்பட்ட கருத்துகளைப் படித்து அதில் என் சுயபுத்தியைப் பயன்படுத்தி ஒரு கருத்துக்கு வராமல், சோ சொல்வதையே வாக்காக எடுத்துக்கொண்டு இத்தனை வருடங்களை நான் இருந்ததை உணர்ந்தேன். இது சோ மட்டுமல்ல, வெறும் ஒருவரை மட்டும் படித்துக்கொண்டிருந்தால் ஒருவருக்கு என்ன ஆகுமோ அதுவே எனக்கும் ஆனது. ஆக, அந்த விடுமுறையில் உரையாடல்களுக்கு நடுவே நான் அரசியல் கருத்தாக்கத் தளத்தில் எங்கு இருக்கிறேன், நான் என்னை அறியாமல் உட்செலுத்திக்கொண்ட கருத்துகள் என்னன்ன என்று சுயபரிசோதனை செய்துக்கொள்ள ஆரம்பித்தேன். மேலும் பலதரப்பட்ட கருத்துகளை வாசிக்க வாசிக்க மெதுவாக சோவின் கருத்துகளோடு மாறுபட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சோவின் கருத்துகளிலிருந்து விலக ஆரம்பித்து, அதனால் சோவிடமிருந்தும் விலக ஆரம்பித்தேன்.
ஆனால் சோவின் நையாண்டியை மட்டும் என்னால் கடைசி வரை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவசர நிலைப் பிரகடனத்தின்போது வேண்டுமென்றே அட்டையைக் கறுப்பாக்கி அதிகாரிகளைக் குழப்பியது, “தே.மு.தி.கவில் தி.மு.கவின் சொற்கள் இருக்கின்றன”, என்று கலைஞர் கூட்டணிப் பாலம் அமைக்க முயன்றபோது, “அப்போ டெசோவுல கூடத்தான் சோ இருக்கு, அதுக்காக?”, என்று கூறியது, “பேர்ல இன்னாபா கீது? எதானா ஜி.கா.பு.க.-னு வை, சரியா இருக்கும்”, என்று ஜக்கு சொல்வது, ‘ட்ரம்மர்’ என்று பத்திரிகையைத் துவக்கிய நல்லதம்பியின் கட்சியை உடைத்து “கென்னடி அமெரிக்க முன்னேற்றக் கழகம்”, என்று ரிச்சர்ட் பர்ட்டன் புதுக்கட்சி துவங்குவது, கஜபதியை ஆனைமணாளன் ஆக்கியது, டமுக்கடிப்பான் டியாலோ பாடலை வைத்து ஒரு அரசு திட்டத்தையே உருவாக்கியது, என்று அரசியல் நையாண்டி என்றால் சோவின் எழுத்து ஒரு அளவுகோலாக என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு துக்ளக் ஆண்டுவிழாவின்போது, வழக்கமான உடையில் வராமல், மேலே ஸ்வெட்டர் அணிந்தபடி தலையில் ஒரு குல்லாயுடன் மெல்ல மெல்ல நடந்து வந்தார். பார்ப்பதற்கு மிகவும் பரிதாபகரமாக இருந்தார். அரங்கில் இருந்த நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சியடைந்தோம். மைக்கின் அருகே அவர் வந்ததும் ஸ்வெட்டர், குல்லாயைக் கழட்டி விட்டு பழைய பச்சை சஃபாரி சூட்டுக்கு மாறி, “அது சும்மா, அனுதாப ஓட்டுக்காக. எப்படி வேஷம்?”, என்றார் பாருங்கள்.
இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவருடன் எதில்தான் ஒத்துப்போகிறேன் என்று தேட வேண்டியிருக்கிறது. பெண்கள் குறித்த அவர் கருத்துகளை எதிர்க்கிறேன்; இந்துத்துவாவை நிராகரிக்கிறேன்; ஆன்மீகக் கருத்துகளிலும் மதங்களிலும் அமைப்பு ரீதியாகவும் நடைமுறையிலும் சிக்கல்களைப் பார்க்கிறேன்; திராவிட இயக்கத்தின் அப்போதைய வரலாற்றுத் தேவையை உணர்கிறேன்; சோவின் செயல்களை தர்மம், நடுநிலை என்று அவரது ஆதரவாளர்கள் நியாயப்படுத்துவதை ஏற்பதில் எனக்கு சிக்கல்கள் இருக்கின்றன; மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அவர் தரும் தீர்வை நிராகரிக்கிறேன்; அவர் கட்சிகளுக்குக் கொடுக்கும் ஆதரவோடு முழுவதும் ஒத்துப்போகவில்லை; அவர் வைக்கும் விமர்சனங்களிலும் பல இடங்களில் உடன்பாடு இல்லை; அவர் கொள்கை ரீதியாக நெருக்கமாக இருக்கும் குருமூர்த்தி போன்ற மனிதர்களோடும் இப்பொழுது எனக்குக் கருத்தொற்றுமை இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வர சோவின் எழுத்துகள்தான் எனக்கு நுழைவாயிலாக இருந்திருக்கின்றன என்று யோசிக்கும்போது சோவின் மீதும், அவரின் எழுத்துகளை அறிமுகப்படுத்திய அப்பாவின் மீதும், நல்ல காலமாக ஒற்றைக் கருத்தாக்கச் சுழலிலிருந்து என்னை மீட்ட நண்பர்கள் மீதும் எனக்கு நன்றியுணர்ச்சிதான் மேலிடுகிறது. அவருடைய 72-வது வயதில் அவருடைய பேரன் தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் அவரின் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்து அரசியலோடு அறிமுகம் ஆகிறான். பத்து வருடங்கள் கழித்து தற்போது அவன் ஒரு மாணவனாக அரசியலைத் திறந்த அறிவோடு கற்கத் தொடர்ந்து முயற்சித்தபடி இருக்கிறான்.
என் எழுத்தின் மீது என் அண்ணன் ஒருவர் வைக்கும் விமர்சனம், “உன்னை அறியாமல் இப்பவும் சோ உனக்குள் இருக்கிறார்”, என்பதுதான். அவரை என்னுள்ளேயிருந்து அகற்ற வேண்டும் என்று நான் நினைக்கும் நிலையில்தான் இன்று எனக்கும் சோவுக்குமிடையேயான கருத்துறவு இருக்கிறது. மிகவும் நன்றி கலந்த மரியாதையுடனே அப்பெரும்பணியை செய்துக்கொண்டு வருகிறேன். சோவுக்கும் இதில் பிரச்னை இல்லை; “சரிதான் போடா”, என்று தன் வேலையைப் பார்க்கப் போய்விடுவார். அந்த வாசிப்பு உறவின் நினைவாக இன்று அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலைக் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வந்தேன். இனி வருடத்திற்கு ஒருமுறையாவது அவரைப் பற்றி நான் நினைக்குமாறு செய்துவிட்டுப் போய்விட்டார். அவர் இறப்பு எனக்குள் ஏற்படுத்திய கடுந்துயரைக் கடக்க முயற்சிக்கிறேன்.
Thank you and goodbye, dear Cho! I will miss your clownery.
well articulated :)
ReplyDelete
ReplyDeleteவாஷிங்க்டனில நல்லதம்பி தேடி - கூகுள் இந்த கட்டுரையை வாசிக்க வழி தந்தது. நீண்ட கட்டுரை, உங்கள் கருத்து அது உங்களுடன் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இது அவரை நிந்திக்க அவரின் கொள்கைகளை நிந்தித்து உங்களை அறிஞன் ஆக காட்டிக்கொள்ள விழையும் ஒரு சிறுபிள்ளைதனம் தெரிந்தது.
ஆனால் உங்களுக்கு தென்பட்டு இருந்தால் கட்டுரை எடிட் செய்யப்பட்டு இருக்கும். ஒருவிதத்தில் சரிதான் - சோ ராமசாமி போடா என்று சொல்லிவிட்டு போய் இருப்பார் - எல்லோரையும் போல (இதோ என் பதிவை போட்டுவிட்டு நானும் அப்படியே).
மீண்டும் கூகுள் உங்கள் தளத்தை சுட்டிக்காட்டது என பிரார்த்திக்கும் ஒருவன்