Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ரஸ்டின் கோலின் அவநம்பிக்கைவாதம்

(அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்கமுடியாத கதாபாத்திரங்களுள் ஒருவன் ரஸ்டின் கோல். அவனை உருவாக்கியவர் நிக் பிட்சொலாட்டோ. அவனுடைய தனித்துவமான தத்துவ நிலைப்பாட்டை நீட்ஷேவின் பாதிப்பாக சிலர் கருதுகிறார்கள். சிலர் அவனைப் பைத்தியம் என்பார்கள். ரஸ்டின் கோல் தன்னைத் தத்துவார்த்த அளவில் அவநம்பிக்கைவாதி என்கிறான். 2014-ல் HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான True Detective தொடரின் முதல் சீசனில் ரஸ்டியாக மேத்யூ மெக்கானகீ பேசிய தத்துவார்த்த வசனங்களைத் தொகுத்து, அதை ஒரு கட்டுரையாக மொழிபெயர்க்க www.genius.com வலைதளம் பெரும் உதவியாக இருந்தது.)

------------------------------------------------------------------------------------------------------------------------

          இப்பிரபஞ்சத்தில் பூமியின் இருப்பிற்குப் பெரிய நோக்கமெல்லாம் இல்லை. பூமி ஒன்றும் தனித்துவமானதும் அல்ல. நாம் சந்திரனிலும் பிறந்திருக்கலாம். எல்லாம் ஒரே கழிவுதான். பிரபஞ்சவெளியில் ஒரு பெரும் குப்பைமேடு, அவ்வளவே. தத்துவம் என்னை அவநம்பிக்கைவாதி என்று சொல்லும். ஆனால் நான் என்னை யதார்த்தவாதி என்றே கருதிக்கொள்கிறேன். என்னைப் பொருத்தவரை பிரக்ஞை என்பது பரிணாம வளர்ச்சியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட ஒரு தவறு. நாம் அதீத விழிப்பு பெற்றுவிட்டோம். இயற்கை தன்னுடைய அம்சமொன்றைத் தனியாகப் பிரித்துவைத்து விட்டது. இயற்கை விதிகளின் படி நாம் இங்கு இருக்கவே கூடாது.

          நமக்கென்று ஒரு சுயம் இருக்கிறது என்ற மாயையில் உழலும் பொருட்கள்தான் நாம். நம் புலனனுபவங்களும் உணர்வுகளும் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக்கொண்டு, நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவர், தனித்துவமானவர் என்ற நம்பிக்கையை ஏற்கனவேயே திட்டமிட்டதுபோல் நமக்குள் விதைக்கின்றன. ஆனால் நாம் எவருமில்லை என்பதே உண்மை. எது நிஜம்? உங்களுடைய ‘நிஜ’த்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எதற்குமே விடை காண முடியாத உலகம் இது.

          என்னைப் பொறுத்தவரை மனிதன் செய்ய வேண்டிய மாண்புமிகு காரியம் என்று ஒன்று இருக்குமானால், இந்தத் திட்டமிடலை நிராகரிப்பதுதான். நாம் இனப்பெருக்கம் செய்வதை நிறுத்திவிட்டு அழிவை நோக்கிக் கை கோர்த்து நடக்க வேண்டும். எதற்காக ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழுந்திருக்கிறோம்? இந்தக் கூத்திற்கு சாட்சியாக வேறு நான் நிற்கிறேன். ஏற்கனவேயே திட்டமிடப்பட்டதுதான் இதற்கான விடை என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், தற்கொலை செய்துக்கொள்ளவும் எனக்குக் கடினமாக இருக்கிறது.

          நான் என்னைச் சுற்றியுள்ள மக்களை அவதானிக்கிறேன். பருமனாக, ஏழையாக, தேவதைக் கதைகளுக்கு ஏங்கும் போக்கு அவர்களிடம் இருக்கிறது. அவர்களால் முடிந்த சில்லறையை துஷ்ட உண்டியலில் போட்டுவிட்டு நம்பிக்கையுடன் நகர்கிறார்கள். ஆனால் இவர்கள் யாரும் எந்த அணுவையும் பிளக்கப்போவதில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் உலகில் வன்முறை அதிகமாகிவிடும் என்பது உண்மையா என்ன? ஒரு மயிரும் கிடையாது. இப்போது என்ன செய்கிறார்களோ அதையேதான் அப்போதும் செய்வார்கள். என்ன, இப்போது இருளில் செய்வதை அப்போது வெட்டவெளியில் செய்வார்கள், அவ்வளவே. இறை வெகுமதிக்கான எதிர்பார்ப்புதான் ஒருவனை ஒழுக்கமானவனாக ஆக்குகிறது என்றால் நான் சொல்கிறேன், அவன் ஒரு கழிசடை. அப்படிப்பட்டவர்களை என்னால் முடிந்தவரை அம்பலப்படுத்தவே பார்ப்பேன்.

          வாழ்க்கையைப் பற்றி இறை நம்பிக்கை என்ற சொல்கிறது? அனைவரும் ஒன்றுகூடி, பிரபஞ்ச விதிகளை மீறும் பொய்க்கதைகளைக் கட்டி, அதை நம்பினால்தான் ஒவ்வொரு நாளையும் நம்மால் கடக்க முடியும் என்றால் என்ன வாழ்க்கை அது? நாம் அனைவரும் உயிர் பொறி என்ற ஒன்றில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இன்று போல் நாளை இருக்காது, அது வித்தியாசமாக இருக்கும் என்று நமக்குள் ஆழமாக ஒரு நிச்சயத்தன்மை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறோம்? நான் வேறொரு நகரத்திற்குக் குடிபோகிறேன், அங்கு புதிய மனிதர்களைப் பார்ப்பேன், அவர்கள் எனக்கு வாழ்நாள் நண்பர்கள் ஆவார்கள், காதலில் விழுவேன், வாழ்க்கை நிறைவாக இருக்கும். நிறைவாம் நிறைவு, மண்ணாங்கட்டி நிறைவு. பிறகு ஒருநாள் இது எல்லாவற்றிற்கும் முடிவாக இறப்பு. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே என்ன இருக்கிறதோ இல்லையோ, நிறைவு மட்டும் நிச்சயமாக இல்லை. எதுவும் என்றும் நிறைவடைவதில்லை.

          மெய்ப்பொருள் ஆய்வின் பெரும் ஏமாற்று வேலையே குகையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்ற நம்பிக்கையை விதைப்பதுதான். சாமியார், மனநல ஆலோசகர் இருவரும் அதைத்தான் செய்கிறார்கள். சாமியார் என்ன செய்கிறார்? உங்களிடம் இருக்கும் அதீத கற்பனைத் திறனை ஊக்குவிக்கிறார். அதை நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான் அறம் என்கிறார். அவருக்குப் பணம் வருகிறதோ இல்லையோ, எது அறம் என்று போதிப்பதில்தான் அவருக்கு நம் மீது எவ்வளவு உரிமை வந்துவிடுகிறது? சரி சாமி, நான் உங்கள் சொல்படி கேட்கிறேன். இதோ, வானத்தைப் பார்க்கிறேன். அடடா! என்ன ரம்மியமான காட்சி! இது அனைத்தும் எனக்காகவே படைக்கப்பட்டதா? எனக்காக, எனக்காக! நான் மிகவும் முக்கியமானவன் அல்லவா! நான்! நான்! போய் சப்புங்கள்!

by gagatun

          ஒரு போலீஸ்காரனாக என் வாழ்நாளில் நான் பல்லாயிரம் இறப்புகளைப் பார்த்திருக்கிறேன். இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள். அவர்களின் இறுதித் தருணங்களில் நான் அவர்களோடு இருந்திருக்கிறேன். அவர்களின் உண்மைத் தன்மையை அப்போது அவர்கள் மிக தீர்க்கமாகக் கண்டுகொள்கிறார்கள். அவர்களின் புலனனுபவங்கள்தான் தான் ஒரு தனித்துவத் தனிநபர் என்ற தோற்றத்தை உருவாக்கின, என்று அவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். இருப்பிற்கான குறிக்கோள், வாழ்வின் அர்த்தம் போன்றவற்றில் போதியடைகிறார்கள். அவர்கள் அந்த உயிரியல் கைப்பாவையையும் தாண்டியவர்கள் என்ற மிக நிச்சயமான உண்மை அவர்களை வந்தடைகிறது. கைப்பாவையைப் பிணைத்திருக்கும் கயிற்றை இறப்பு அறுத்ததும் அந்த உண்மையை நாம் அனைவரும் அறிந்துகொள்வோம்.

          இறந்தவர்களின் புகைப்படங்களை நான் அலுவல் பணி நிமித்தமாக அடிக்கடி பார்க்கிறேன். அந்த உடல்களைப் பார்த்தால் அவற்றைச் செலுத்திய உயிர் தன் இறுதிக்கணங்களில், தான் உயிரியல் உந்துதல்களின் தொகுப்பு மட்டுமல்ல, அவற்றிற்கும் அப்பாற்பட்டது என்று நிச்சயமாக நம்பியதைப்போல் இருக்கின்றன. இந்த வாழ்க்கைச் சுற்றுலா, களைப்படைந்த சிந்தனை, மோதல், ஆசை, அறியாமை எல்லாமே அர்த்தமற்றது போல் அந்தக் கண்கள் என்னைப் பார்க்கின்றன. நீங்களும் அந்தக் கண்களைப் பாருங்களேன். உடம்பில் உயிர் இருக்கிறதோ இல்லையோ, நேரிலோ புகைப்படத்திலோ, நீங்களும் ஒருமுறை பாருங்களேன். உங்களால் அவற்றை வாசிக்க முடியும். நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்று உங்களால் உணர முடியும்.

          அவர்கள் அனைவரும் இறப்பை வரவேற்றிருக்கிறார்கள். துவக்கத்தில் இல்லை என்றாலும், தவறுக்கு இடமில்லாமல் இறுதிக் கணத்தில் சாவில் ஒரு நிம்மதியை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த நொடிப்பொழுதில், முதன் முதலாக அவர்கள் யார் என்று கண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் திமிறலை நிறுத்துவது அவர்களுக்கு எளிதாக இருந்திருக்கிறது. நான், நீங்கள், இந்தப் பெரும் நாடகம், இவை யாவும் வெறும் யூகங்களின் தொகுப்பும் முட்டாள்தனமான விருப்பங்களும்தானே தவிர வேறொன்றும் இல்லை என்பதை உணர்ந்ததும், எந்தப் புகாரும் இன்றி அவர்களால் உயிரை விட முடிந்திருக்கிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளத் தேவையில்லை என்ற ஞானத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். இந்த வாழ்க்கை, விருப்பு, வெறுப்பு, நினைவு, வலி, இது அனைத்தும் ஒன்றுதான்! இது அனைத்தும் ஒரே கனவுதான்! ஒரு மனிதராக வாழ்வதுபோல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் காணும் கனவு. இதை உணர்ந்த கணத்தில் அவர்கள் சாவை இறுகத் தழுவியிருக்கிறார்கள்.

          எல்லா கனவுகளைப் போல் இந்தக் கனவின் முடிவிலும் ஒரு பூதம் இருக்கிறது. ஒருமுறை என்னிடம் ஒருவர் காலம் என்பது ஒரு தட்டையான வட்டம் என்றார். அதாவது, நாம் இதுவரை செய்த, இனி செய்யப்போகும் அனைத்தையும் நாம் மீண்டும் மீண்டும் செய்துகொண்டேதான் இருப்போம் என்றார். மெம்பிரேன் தியரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது என்ன சொல்கிறதென்றால், இப்பிரபஞ்சத்தில் நாம் காலத்தை நேராக, முன்நோக்கி உணர்கிறோம். ஆனால் காலவெளிக்கு வெளியேயிருந்து நான்காம் பரிமாணத்தில் நோக்கினால் இங்கு காலம் இருக்காது. அங்கிருந்து என்ன தெரியும் தெரியுமா? நம் காலவெளி ஒரு தட்டையான சிற்பம் போல் தெரியுமாம். பொருட்கள் ஆக்கிரமித்திருந்த இடம் அனைத்தும் ஒன்றோடொன்று மேற்படிந்து காணப்படுமாம். வட்டத் தண்டவாளத்தில் ஓடும் ரயிலைப்போல், நம் உணர்வு நம் வாழ்வைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்குமாம். நாம் காணும் பரிமாணத்திற்கு வெளியே இருப்பதுதான் நித்தியம். அதுவே முடிவற்றது. நித்தியம் அங்கிருந்து நம்மை நோக்குகிறது. நமக்குதான் இது கோளம்; அதற்கு இது வட்டம். அந்த நித்தியத்தில் காலமில்லை. அங்கு எதுவும் வளராது; எதுவும் உருவாகாது; எதுவும் மாறாது.

          எனவே பொருட்களை வளர்த்து, அவற்றை அழிப்பதற்காகத்தான் இறப்பு காலத்தை உருவாக்கியது. அழிந்ததும் நாம் மீண்டும் பிறக்கிறோம். ஆனால் மீண்டும் அதே பிறவியைத்தான் எடுக்கிறோம். இந்த உரையாடலை நாம் இதற்கு முன் எத்தனை முறை நடத்தியிருக்கிறோம்? யாருக்குத் தெரியும். நம்மால் நம் வாழ்வை நினைவில் வைத்திருக்க முடியாது, வாழ்வை மாற்றவும் முடியாது. இந்த மோசமான விதிதான் உயிரின் இரகசியம். நாம் அனைவரும் இந்தக் கெட்ட கனவிற்குள் சிக்கிக்கொண்டு, மீண்டும் இந்தக் கனவிலேயே கண்முழிக்கிறோம்.

          நாம் உழலும் இந்த மாயையில் பிற உயிர்களும் உணரப்பட்டு ஒரு கூட்டு மாயை உருவாகிறது. இந்த மாயையின் வெளிப்பாடாக சமூகம் என்று ஒன்று கட்டமைக்கப்பட்டு, கடமை, உரிமை, ஒப்பந்தம் போன்ற கருத்தாக்கங்கள் பரந்து விரிகின்றன. இந்தத் தினசரி கூத்துகளில் அதிகம் பங்கெடுக்காமல், ஒரு போலீஸ்காரனாக சாவுடன் நெருங்கிப் பயணித்தபடி இருந்த நான், ஒரு நாள் சுடப்பட்டு சாவின் விளிம்பிற்கு வந்தேன். அப்போது ஒரு கணம் வந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இருளின் ஆழத்தில் எதுவாகவோ நான் குறைக்கப்பட்டிருந்தேன். அதை பிரக்ஞை என்று கூட சொல்ல முடியாது. அதற்கும் குறைவாக, ஒரு தெளிவற்ற விழிப்புணர்வு மட்டும் இருந்தது. என் அடையாளங்கள் மறைந்து போவதை என்னால் உணர முடிந்தது. அந்த இருளின் ஆழத்தில், எனக்கடியில் மற்றொரு இருள் இருந்தது; அது இன்னும் ஆழமாக இருந்தது. அது ஒரு பொருளைப்போல் கதகதப்பாக இருந்தது. அந்த ஆழத்தில், சகோ, என் மகள் காத்துக்கொண்டிருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது. நம்புங்கள், என்னால் அவளை உணர முடிந்தது. அப்படியே என் அப்பாவின் ஒரு மிச்சத்தையும் என்னால் உணர முடிந்தது. இதுவரை நான் நேசித்த எல்லாவற்றின் ஒரு பகுதிதான் நான் என்பதுபோல் அப்போது இருந்தது சகோ. (அழுகிறான்)

          அங்கு நாங்கள் மூவரும், கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறோம். நான் அப்போது செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான்; உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளாமல் விடுவது. நான் விட்டேன். “இருளே, என்னை ஏற்றுக்கொள்”, என்று சொல்லியபடி விட்டேன். நான் மொத்தமாக மறைந்து போனேன். ஆனால் என்னால் என் மகளின் அன்பை மட்டும் இன்னும் உணர முடிந்தது. இதுவரை இல்லாத பெரும் அளவில் உணர முடிந்தது. அந்த அன்பைத் தவிர அங்கு வேறொன்றுமே இல்லை. ஆனால்... துரதிஷ்டவசமாக, நான் கண்விழித்தேன். முழித்துக்கொண்டேன்! (விம்மி விம்மி அழுகிறான்)
 
by GeoKorf

          நான் அலாஸ்காவில் வளர்ந்தேன். என்னுடைய பதினேழாவது வயது வரை நான் தொலைக்காட்சியைப் பார்த்ததில்லை. எனவே அங்கும் இங்கும் ஊர் சுற்றுவது போக மிச்சமிருக்கும் நேரத்தில் பெரிதாக செய்ய வேலை எதுவும் இருக்காது. அப்போது இரவு நேரங்களில் நான் வானத்தைப் பார்ப்பேன். பார்த்துக்கொண்டே இருப்பேன். அதில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்துப் பல கதைகளை எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். இதோ, இப்போது மருத்துவமனையில் முழிப்பு வந்து படுத்திருக்கிறேனே? ஒவ்வொரு இரவும் அந்த ஜன்னலின் வழியே வெளியே பார்த்து எண்ணியபடி இருக்கிறேன். என்னுடைய இத்தனை வருட சிந்தனைகள் எனக்கு உணர்த்தியது ஒன்றுதான். நம் வாழ்க்கை அனைத்தும் ஒரே ஒரு கதைதான் தெரியுமா? இருப்பதிலேயே பழமையான, தொன்மையான கதை அது. வெளிச்சம் vs இருள் - இதுதான் கதை. உங்கள் வேலைகளை விட்டுவிட்டு ஒரு நிமிடம் இரவு வானத்தைப் பாருங்கள். வெளிச்சம் குறைவாகவும் இருள் அதிகமாகவும் இருப்பதுபோல்தானே தோன்றும்? ஆம், உங்களுக்குத் தோன்றுவது சரிதான். ஆனால் இக்கதையை நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். சரியான கண்ணோட்டம் எதுவென்று நான் சொல்லவா?

          ஒரு காலத்தில் வெறும் இருள் மட்டும்தான் இருந்தது. என்னைக் கேட்டால், வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வென்று கொண்டிருக்கிறது.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி